நானும் FCID

  • 17

இணையதள மோசடி பற்றி கற்பனைக் கதை

தெற்கே; மாணிக்க கல் அகழ்வில் பிரபலமாகி இன்று மக்களின் குப்பைகளையும் எச்சில்களையும் கொட்டி முதலைகளின் பிரபல வசிப்பிடமாகிய நிள்வள கங்கையும், வடக்கே; பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் காட்சியளிக்கும் வயல் வெளிகளையும், அடுத்து இறப்பர், தேயிலைத் தோட்டங்களையும் கொண்ட இயற்கை வளமுள்ள ஓர் கரையோர கிராமமாகும். இன்று கொரோனாவின் கோரம் அந்த ஊரையும் விட்டுவிடவில்லை தான்.

கடந்த ஆண்டு குண்டுத்தாக்குதலின் மத்தியிலும் ஸபர், ரபிஉல் அவ்வல், ரபிஉல் ஆகிர் என தொடர்ந்து மூன்று மாதம் கந்தூரியில் விழாக் கோலம் பூண்ட அவ்வூர் மீண்டும் கொரோனாவின் இடைவெளியில் கந்தூரி விழாக்கோலம் செய்ய முற்பட்டாலும், கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்கி வழமையாக சிங்கள முஸ்லிம் மக்களால் நிரம்பி வழியும் பள்ளிவாசலும் ஊரின் மத்தியில் மூடப்பட்டே கிடக்கிறது.

என்னதான் இயற்கை வளமுள்ள கிராமம் என்றாலும் அபிவிருத்தியில் சளைத்தவர்கள் அல்ல என்பது போல, ஊரின் நடுவே பல மூடப்பட்ட கடைகளைக் கொண்டு கொங்றீட் வனாந்தரமாக மாறிவரும் தெற்கின் வளர்ச்சியைடந்துவரும் ஒரு கிராமமே அக்கிரமாகும். மேலும் தகவல் தொழில்நுட்ப துறையிலும் ஒரளவு வளர்ச்சியைந்து வருகின்ற ஒரு கிரமாகும்.

அவ்வூரின் நிள்வள நதியின் கரையொரத்தில் அமைந்துள்ள வீடே ரிழ்வானின் வீடாகும். கொரோனா காலத்தில் தலை நகரில் பல பாகங்கள் முடக்கப்பட்ட நிலையில் பலரும் தொழிலின்றி வாடுவதைப் போல தொழிலை இழந்த ஒருவனே ரிழ்வானாகும்.

காலத்திற்கு ஏற்ப தகவல் தொழில்நுட்ப அறிவு நிறைந்த அவனும் பல ஆண்டுகளாக இயங்கலை மூலம் வியாபாரம் செய்ய முயற்சி செய்து, அதில் எதிர்பார்த்தளவு வருமானங்கள் இன்றி இருக்கவே, மேலும் இரு ஆண்டுகள் ஊரடங்கில் உறங்க வேண்டிவருமே என்று ஊருக்குள் ஒரு மரக்கறித்தோட்டம் செய்து விவசாயத்துறையில் கொரோனா காலத்தில் காலடி வைக்க சிந்தித்துக் கொண்டிருந்தான்.

இந்நிலையில் ஒருநாள் தனது முகநூல் பக்க நண்பியொருத்தியிடமிருந்து மெஸ்ஸன்ஜிரில் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில்,

“ஹெலோ அன்புக்குரியவரே! எனது பெயர் ஜூலியட் எனக்கு உன்னுடன் சில முக்கியமான விடயங்களை கலந்துரையாட வேண்டும். அதற்கு என்னை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.”
எனது மின்னஞ்சல் முகவரி: majuliet46@gmail.com
என்றிருந்தது.

பல ஆண்டுகள் முகநூல் பாவித்தாலும், இவ்வாறு என்னுடன் இரகசியமாக கலந்துரையாட தெரியாத யாரும் வருவதில்லையே, என எண்ணியவனாக, நான் அவளை தொடர்பு கொள்ளாமல் அவளுக்கு தேவையெனின் என்னை தொடர்பு கொள்ளட்டும் என்று பதிலாக தனது மின்னஞ்சல் முகவரியை ரிழ்வான் அனுப்பினான்.

இருநாட்களாக ரிழ்வானும் தன் மின்னஞ்சல், மெஸ்ஸன்ஜர் என்பவற்றை பரிசீலித்துப் பார்த்தான். ஆனால் எவ்வித பதிலுமில்லை.

ஏதோ ஏமாற்று வேலைதான் ஆனால் உலகறிந்த எனது மின்னஞ்சல் முகவரியை அவள் பெறுவதால் எவ்வாறு ஏமாற்றலாம் என சிந்தித்தவனாக விடயத்தை மறந்து விட்டான்.

ஆனால் மூன்றாம் நாள் ரிழ்வான்; வீட்டில் மின்னஞ்சல் பரிசோதிக்கையில், “புது நண்பன், உங்களை வாழ்த்துகிறோம்” என்ற தலைப்பில் மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. என்னதான் அதில் இருக்கும் என எண்ணியவனாக பார்த்தான். அதில்,

“வணக்கம்! உங்கள் முகநூல் சுயவிவரத்தைப் பார்த்த பிறகு உங்களைத் தொடர்புகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நாம் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்வது எமது எதிர்கால திட்டங்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

எனது பெயர் ஜூலியட். எனக்கு 29 வயதாகிறது. நான் இஸ்ரேலிய இராணுவ வீராங்கனை. ஈரானின் அணு ஆயுத விஞ்ஞானி மொஹ்சின் பாக்ரிஜாதே ஐ கொலை செய்த கும்பலில் நானும் பணியாற்றினேன்.

என்னிடம் மிகவும் முக்கியமான ஒரு விடயம் உள்ளது. அது பற்றிய ஆலோசனைகளை பெறவே உங்களுடன் தொடர்பு கொண்டேன். இவ்விடயம் தொடர்பாக நான் அனைவருடன் கலந்துரையாட விரும்பவில்லை. உங்களைப் போன்ற நம்பிக்கையான ஒருவருடனே கலந்துரையாட விரும்புகிறேன்.

தயவுசெய்து உங்களைப் பற்றி சொல்லுங்கள். எனக்கு மெஸ்ஸன்ஜரில் பதிலளித்ததற்கு நன்றி.

எமது படையணி வேலைகளுக்கு மத்தியிலும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.”

என்ற மின்னஞ்சலுடன் ஈரானின் அணு ஆயுத விஞ்ஞானி மொஹ்சின் பாக்ரிஜாதே வாகனப் பேரணியில் சுட்டுக் கொல்லும் காணொளியொன்றையும் இணைத்து அனுப்பி வைத்திருந்தாள்.

என்னதான் அப்படி ரகசியம் சொல்ல போகிறாள். என்ற ஆர்வக் கோளாரில் ரிழ்வானும் தனது பதில் மின்னஞ்சலில் முதலில் அவளுக்கு நன்றி தெரிவித்து தன் பெயர் விபரங்களையும் அனுப்பி விட்டான்.

மீண்டும் இருநாள் காத்திருந்தான் எந்தவித பதிலும் இல்லை. ஆனாலும் தென்னிலங்கையின் ஆற்றோரக் கிராமமொன்றில் பிறந்து, இஸ்ரேலிய வீரங்கனைக்கும் ஆலோசனை சொல்லும் அளவிற்கு தான் பிரபலமாகப் போகிறேன் என நினைக்கையில் ரிழ்வானுக்கும் உள்ளூர ஒரு மகிழ்ச்சி.

முகநூல், வட்ஸ்அப் என்று மீண்டும் வீட்டில் இயங்கலையில் மூழ்கியிருக்கையில் அன்று, “உங்கள் அவசர பதிலை நான் பாராட்டுகிறேன்” என்ற தலைப்பில் ஜூலியட்டிடம் இருந்து  இன்னொரு மின்னஞ்சல் வந்திருந்தது.

“என்னை நம்பி பதிலளித்ததுக்கு நன்றி. உங்களுடன் கலந்துரையாட வேண்டிய ஒரு விடயமுள்ளது. என்னிடம் குறிப்பிட்ட தொகை பணமுள்ளது. அதனை சிறிது காலம் பாதுகாப்பாக வைப்பதற்கு உங்களிடம் வழங்க தீர்மானித்துள்ளேன்.

தயவு செய்து நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்.

கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இரவு  தெஹ்ரானின் கிழக்கு புறநகரான 60 மைல் கிழக்கே அமைந்துள்ள அப்சார்ட் என்ற ஊரின் வழியாக மொஹ்சின் பாக்ரிஜாதே, அவரது மனைவி ஆகியோர் காரில் பயணித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது எங்களில் ஒரு தற்கொலைதாரியை மரங்களை ஏற்றிய ஒரு லொரியில் அனுப்பி அக் காரின் அருகே வெடிக்க வைக்கப்பட்டது. இதனால் மொஹ்சின் பாக்ரிஜாதே சென்ற கார் நின்றது.

அதனைத் தொடா்ந்து விரைத்த நாம் ஐவர் அடங்கிய குழு, ஃபக்ரிசாதேவின் காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டோம். இதில் ஃபக்ரிசாதே மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொல்லப்பட்டனர். வெறும் 3 நிமிடத்தில் நடந்து முடிந்த படுகொலை இது.

அவர்களை அம்புலன்ஸில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதும். அந்தக் காரை சென்று பரிசோதித்த போது, அதில் பணப் பெட்டிகள் ஐந்து காணப்பட்டது. நாம் ஐவரும் ஆளுக்கொரு பெட்டி வீதம் பகிர்ந்து கொண்டு விரைவாக எமது முகாமிற்கு வந்தோம். அதில் எனக்கு 3.5 மில்லியன் அமெரிக்கா டொலர்  கிடைத்தது.

இந்த பணத்தை என்னால் இஸ்ரேலிற்கு எடுத்துச் செல்ல முடியாது, ஏனென்றால் அவர்கள் என்னை இராணுவ வீராங்கனை என அறிந்திருப்பதால், நான் அங்கு செல்லும்போது இது பற்றி விசாரிப்பார்கள்.

எனவே நான் ஒரு இராஜதந்திர முறையில் உங்கள் நாட்டிற்கு பணத்தை அனுப்ப தீர்மானித்துள்ளேன். இதனை உங்களுக்கு எவ்வித ஆபத்தும் இன்றி நடைமுறைப்படுத்த உள்ளேன். ஆனால் ஒரு சரக்குப் பெட்டி வடிவில் நிதியைப் பெறும் வரை எல்லாவற்றையும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

நாங்கள் இப்போது இருக்கும் இடத்தில் எமது இராணுவ தகவல் தொடர்பு வசதிகள் மூலமாக மட்டுமே தொடர்பு கொள்ள முடியும், அவை பாதுகாப்பாகவே உள்ளன, எனவே எங்கள் அரட்டையை யாரும் கண்காணிக்க முடியாது, பின்னர் நான் உங்களுக்கு விவரங்களை விளக்க முடியும். மின்னஞ்சல் மூலம் மட்டுமே நான் உங்களை தொடர்பு கொள்வேன். ஏனென்றால் எங்கள் அழைப்புகள் கண்காணிக்கப்படலாம்.

இறுதியாக, நீங்கள் பயனாளியாக நின்று நிதியைப் பெற்று பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நான் உங்கள் நாட்டிற்கு வந்தவுடன், அதை ஒரு நல்ல இலாபகரமான முயற்சியில் முதலீடு செய்ய நீங்கள் எனக்கு உதவ வேண்டும். மேலும் இப்பணத்தில் நான் உங்களுக்கு 35% தருகிறேன்.

நீங்கள் என்னை நம்புவீர்கள் என நம்பிக்கையுடன் உள்ளேன்.

தயவுசெய்து இதனை உங்களால் கையாள முடிந்தால், உங்கள் தரவுகளை அனுப்புங்கள், பின்னர் எவ்வாறு பணம் கொண்டு வரப்படும் என்பதை விளக்குகிறேன்.

  1. உங்கள் பெயர்
  2. உங்கள் தொலைபேசி எண்
  3. உங்கள் வீட்டு முகவரி
  4. உங்கள் தொழில்
  5. உங்கள் வயது
  6. உங்களுக்கு அருகிலுள்ள விமான நிலையம்
  7. உங்கள் நாடு
  8. உங்கள் அடையாள அட்டை இல
  9. உங்கள் மின்னஞ்சல் முகவரி

என்பவற்றை அனுப்பி வையுங்கள்.

உங்களிடம் நல்லதொரு பதிலை எதிர்பார்க்கிறேன்.”

ரிழ்வானுக்கு மனதிற்குள் அதிர்ச்சியுடன் பலவிதமான எண்ணங்கள் ஓடத் துவங்கியது.

நண்பர்களிடமே 350ரூபா கடனாக கேட்பது கஷ்டமான காலத்தில் என்னை நம்பி ஒருத்தி 3.5 மில்லியன் அனுப்ப போகிறாளே? அதிலும் 35% எனக்கு தருவதாக கூறினால், 1.225 மில்லியன் அதுவும் இலங்கைப் பணமல்ல அமெரிக்கன் டொலர்.

கலியாணத்திற்கு மஹராக தாஜ்மஹாலையே வாங்கிக் கொடுக்குற பணம்.

ஆனாலும் வார பணம் கள்ள வழியிலே வருது. இது பிலக் மணியே, அது இஸ்லாத்தில ஹராமே. ஆனாலும் பழகி நாலு நாள்ள கேகுற உதவி.

பலமுற ஒன்லைன் பிஸினஸ் செய்தா நூறு டொலர் வேலையை எடுக்குற என்டாலே பத்து டொலர்  (g)ஙறன்டி டிபோஸிட் கேகுற. ஆனால் இவள் ஒரு டொலரும் (g)ஙறன்டி டிபொஸிட் கேட்கல.

என்ன செய்லாம் என சிந்தித்தவன் என்னதான் இருந்தாலும் ரெண்டு ரக்காத் சுன்னத் தொழுதுவிட்டே பதிலளிப்போம். என முடிவெடுத்தவன் தொழுகைக்கு சென்றான்.

தொழுது விட்டு வந்தவன் மீண்டும் சிந்தனையில் மூழ்கினான்.

கேட்டுள்ள விபரத்தை கொடுப்பதில் பிரச்சினயில்லை. பெங் கார்ட் நொம்பர்(Bank Card No), கார்ட் ஸிவிஸி நொம்பர் (Card CVC No) கேட்டால் தான் ஏன்ட பெங்க் காச திருடலாம்.

ஆனால் அந்தப்பொட்டிய கொணரும்போது, ஏர்போர்ட்ல மாட்டிவிட்டால், ஆக டிஆர்ஸி, ஜனாதிபதி கொமிஸன், எப்ஸிஜடி, ஸைபர் கிறேம் என்றெல்லாம் வழக்கிற்கு போகவாகுமே, ஆனாலும் எனக்கு எந்தப் பிரச்சினயும் ஏற்படாது என்கிறாளே.

பிரச்சின வந்தால் தப்பவும் வேண்டும், காசு வந்தால் எடுக்கவும் வேண்டும் என எண்ணியவனாக பதிலளிக்க தீர்மானித்தான் ரிழ்வான்.

“உங்கள் நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள். நீங்கள் கேட்ட விடயங்களைப் தெரிப்பதில் எந்தவித பிரச்சினையுமில்லை.

ஆனால் இது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு கறுப்புப் பணப் பரிவர்த்தனை. எனவே பணம் பெறுவதை நான் விரும்பவில்லை. நான் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறேன். இந்த வழியில் பணத்தை மாற்றுவதற்கான அனுபவம் என்னிடமில்லை, இடையில் பணம் திருடப்பட்டால் இழப்பீடு வழங்குவதற்கான நிதியும் என்னிடமில்லை.

நான் இலங்கையன், எனது கணிப்பின் படி உங்கள் பணத்தை முதலீடு செய்ய இலங்கை பொருத்தமான நாடு அல்ல. டுபாய் அல்லது கட்டார் தான் தற்போது பணத்தை முதலீடு செய்ய சிறந்த நாடு, எனவே நீங்கள் இப்பணத்தை அங்கு அனுப்புவது மட்டுமே பொருத்தம்.

என்னிடம் உதவி மற்றும் ஆலோசனை கேட்டதற்கு நன்றி.”

எனத் தெரிவித்துவிட்டு ஆர்வக் கோளாரில் அவள் கேட்டிருந்த விபரங்களையும் அனுப்பி விட்டான். இனி அவள் பணத்தை கடாரூக்குத்தான் அனுப்புவாள் என்ற நம்பிக்கையில் உறங்கச் சென்றான்.

மறுநாள் அதிகாலை மீண்டும் ஜூலியட்டிமிருந்து இன்னொரு மின்னஞ்சல்,

“நன்றி அன்புக்குரியவரே! உங்கள் தகவல்களை நான் பெற்றுள்ளேன், உங்கள் எல்லா தகவல்களையும் இராஜதந்திர முகவர் மற்றும் விநியோக நிறுவனத்திடம் சமர்ப்பித்துள்ளேன். அவர்கள்தான் உங்கள் நாட்டிற்கு பணப்பெட்டியைக் கொண்டு வருவார்கள். அவர்களின் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன். அவர்கள் உங்கள் நாட்டிற்கு வரும் நாளை, நான் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். எனவே நீங்கள் தயாராகி, அவர்களுக்காக காத்திருங்கள்.

உதவி செய்வதற்கு முன்வந்ததுக்கு மிக்க நன்றி, உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் என உறுதியளிக்கிறேன்.”

இப்பணத்தை அனுப்ப மாட்டாள் என்ற நம்பிக்கையில் பதிலளித்தால் எனக்கே பணத்தை அனுப்புவதில் உறுதியாக இருக்கிறாள். ஏதும் வந்து பிர்சினையென்றால் முகங்கொடுக்க தயாராகவும் இருக்க வேண்டும். என எண்ணியவனாக எப்பதிலை அனுப்புவது என்று சிந்திக்கையில்,

சஹ்ரானிற்கும் இவ்வாறுதான் பணம் வந்தது என்று மீடியா எல்லாம் சொல்ற, அப்படி ஏதும் தீவிரவாத நடவடிக்கைக்கு அனுப்பும் பணமா இது, எனப் பயந்தவானக மீண்டும் அவசரமாக இன்னொரு பதிலை அனுப்பினான்.

“நன்றி! ஆனால் நான் தீவிரவாத, ஏமாற்று நடவடிக்கைகளுக்கு உதவுபவன் அல்ல”

என அனுப்பி விட்டான். ஆனால் அன்று பின்னேரம் வந்த மின்னஞ்சலை பார்த்ததும் தலைகால் புரியாமல் தடமாறினான் ரிழ்வான்.

 

“ஹலோ அன்புக்குரியவரே! இன்று நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?  உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மன்னிக்கவும், இந்த தகவலைப் பற்றி நான் உங்களுக்கு தாமதமாக தெரிவிக்கிறேன்.

விநியோக நிறுவனத்திடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் இறுதியாக வந்தது. இராஜதந்திரியுடனான அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துவிட்டன, அந்தப் பெட்டி அவருக்கு முழுமையாக சீல் வைக்கப்பட்டு இராஜதந்திர சாமான்கள் என்று பெயரிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

சீல் செய்யப்பட்ட பெட்டியில் மொத்த பணம் 3.5 மில்லியன் டொலர்கள் உள்ளது.

தூதரின் பெயர் டாக்டர் ஆண்டர்சன். அவர் நாளை (04/12/2020) அன்று வெள்ளிக்கிழமை பயணம் செய்வார். அவர் சனிக்கிழமை (05/12/2020) அன்று உங்கள் நாட்டிற்கு (ஸ்ரீலங்காவுக்கு) வருவார். அவர் விமான நிலையத்திற்கு வந்து உடனடியாக உங்களை தொலைபேசியில் அழைப்பார்.

அதன் பிறகு அவர் சாமான்களை நேரடியாக உங்கள் முகவரிக்கு அல்லது நீங்கள் விரும்பும் எந்த இடத்திற்கும் அனுப்புவார்.

நீங்கள் ஒரு இராஜதந்திரி அல்ல, விமான நிலையத்தின் இராஜதந்திர பிரிவுக்குள் விமான நிலைய அதிகாரசபை உங்களை அனுமதிக்கமாட்டார்கள்.

எனவே தூதர் உங்கள் வீட்டு முகவரிக்கு நேரடியாக பெட்டியை கொண்டுவருவார். உங்கள் வீட்டு முகவரியில் அவருக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும்.

என்று குறிப்பிட்டு, குறித்த பணப்பெட்டியின் மூன்று புகைப்படங்களையும் இணைத்து அனுப்பியிருந்தாள்.”

ரிழ்வானுக்கும் நடப்பது கனவா நனவா எனப் புரியவில்லை. ஆனாலும் நாட்டு நடப்பை மறக்கவுமில்லை. மீண்டும் பல சிந்தனைகள் நெஞ்சில் உதிக்கவே,

அஸருடைய நேரம் பள்ளிக்குச் சென்றான் ரிழ்வான். பாங்கு சொன்னதும், சென்றால் பள்ளிவாசல் திறந்திருந்தது.

இகாமத் சொன்னதும் பள்ளி மூடப்பட்டு தொழுது முடிந்து துஆ, ஸலவாத் முடிந்துதான் பள்ளி மீண்டும் திறக்கப்படும். இது அந்த ஊருக்கு மட்டுமுள்ள கொரோனாவின் விசேட சட்டம்.

தொழுகை முடிந்ததும் எழும்பி வந்த ரிழ்வான் கேட் திறக்கும்வரை வாசல்படியில் காத்திருக்கவே அவ்விடம் வந்தான் அவனது நண்பன் அஷ்கர். அவனிடம் இக் கதையை சென்னான். அவன்,

“அடே இதெல்லாம் நம்பாதே உன்ன ஏமாத்துற”

“பயப்புடாத இதுவரை நான் ஏமாறவில்லை ஏமாறவும் மாட்டேன். ஆனால் அந்த ஒப்பிஸேர் ஊட்டுக்கே பொட்டியொட வாராம் ஆனால் கொரோனா கேஸ் என்று ஏர்போர்ட் எல்லாம் மூடியீக்கி சோ வருவார? வந்தாலும் எனது ஊட்டுக்கும் வருவார?”

“நல்ல ஊருக்குத்தான் வரப்போற, அன்டக்கி சுபஹ்ல ஊட்டுக்கு கொழும்பில இருந்து சொந்தக்காரர் வந்தவுடனே, பள்ளி ரெஸ்ட்டி எலவ்ன்ஸ் பண்ணின ஞாபகமா, ஊருக்கு கொழும்பில இருந்து வந்தவங்கெல்லாம் (P.H.I) பீ எச்ஐய போய் சந்தியுங்க என்று. இனி அந்த டிப்லொமடிக் ஒப்பிஸேர் வந்த, பள்ளி ரெஸ்டித் தலைவர் ரிடன் எலவ்ன்ஸ் பண்ணுவார்.” எனக்கூறியவனாக சிரித்தான் அஷ்கர்.

“அவரு செய்ற வேல, ஊர் மக்கள பயமுறுத்தி அவரு ரெஸ்ட்டியாக இருக்கிறதுக்கு, போம்ப டைமும் பெரிய நாடகம் நடிச்ச தானே பொலிஸோட சேர்ந்து, நாளு பக்கமும் தொறந்த பள்ளில ஒரு பக்கம் ஆமிய போட்டு, இப்பயும் பத்து நிமிஷம்தான் பள்ளிய தொறக்கிற, கொஞ்சம் சரி லேட் ஆனா இருவத்தஞ்சி பேர் இல்லாட்டியும் பள்ளி மூட்டி”

“சரி இனி இந்த ரெஸ்ட்டி போர்ட் பத்தி பேசி வெலில்ல நான் போய் வாரன்”

அதே நேரம் பள்ளியின் முஅஸ்ஸின் பள்ளி கேட்டைத் திறக்கவே ரிழ்வானும், அஷ்கரும் தத்தமது வீடுகளுக்குச் சென்றனர்.

இரவு நேரம் அந்த மின்னஞ்சல் பற்றி பலவித சிந்தனைகளுடன் ரிழ்வான் தூங்கிவிட்டான்.

“3.5 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் கடத்த முற்பட்ட குழு சுங்க அதிகாரிகளால் கைது”
இலங்கைக்கு ஈரானில் இருந்து வந்த பயணி ஒருவர் கொண்டு வந்த பைகளை பரிசோதித்ததில் 3.5 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பணமானது நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் தென்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“உம்மா! அது நானல்ல, நான் வாணண்டு சொல்லச் சொல்லத்தான் சல்லி அனுப்பினா” என தூக்கத்தில் அலர ஆரம்பித்தான் ரிழ்வான்.

“என்ன மகன் என்ன மகன்” என்று தந்தை வந்து கேட்கையில்

“கெட்ட கனவொன்று கண்டேன்” என கூறிவிட்டு ரிழ்வான் மறுபுறம் திரும்பி உறங்கி விட்டான்.

மறுநாள் இந்தப் பணத்தை பெறுவது பொருத்தமில்லை எனத் தீர்மானித்தவனாக,

“தயவு செய்து அப்பணத்தை அனுப்ப வேண்டாம்”

எனக் கூறி இன்னொரு மின்னஞ்சலை அனுப்பினான்.

ஆனால் அதற்கு வந்த பதிலைக் கண்டதும் வெள்ளம் தலைக்கு மேல் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டேன்.

“அன்புக்குரியவரே! ஏன் இப்போது இவாவாறு கூறுகிறீர்? இராஜதந்திரி ஏற்கனவே உங்கள் நாட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறார். நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம்.

அதை அவரே உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து தருவார். நானும் ஒரு மாதத்தில் உங்களை சந்திக்க வருவேன். அப்போது காலியில் ஒரு சுற்றுலா விடுதி ஒன்றை அமைக்க முதலீடு செய்வோம்.”

நடப்பதெல்லாம் நலவுக்கு என்று நாளை தனக்கு வரவுள்ள பணப்பெட்டி பற்றி கனவுகளுடன் உறங்கச் சென்றான். மறுநாள் காலையிலே,

எதிர்பார்த்தவாறு, இராஜதந்திரி ஆண்டர்சனிடமிருந்து கையடக்க தொலைபேசிக்கு குறுஞ்செய்தி (+94 754 848 864) ஒன்று வந்திருந்தது. அதில்,

“வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள்? நீங்களா ரிழ்வான் – இலங்கை? நான் டாக்டர் ஆண்டர்சன், சர்வதேச விநியோகக் கம்பனி முகவர். இப்போது, ​​நான் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருக்கிறேன். ஜூலியட் அனுப்பிய பெட்டி என் கைவசமுள்ளது. (ஈரான்) உங்கள் பெட்டியின் அனுமதிக்காக, இலங்கை ரூபாயில் 130,000.00 விமான நிலைய சுங்க அதிகாரிகளால் வசூலிக்கப்படுகிறது. நீங்கள் பெட்டியை பெற்றுக்கொள்ள பணத்தை செலுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன். நீங்கள் பணம் செலுத்த தயார் எனில் சுங்க அதிகாரியின் வங்கிக் கணக்கை அனுப்பி வைக்கிறேன்?”

என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே, பதிலாக,

“என்னிடம் பணமில்லை, பணம் கொடுக்காமல் அப்பெட்டியை பெற முடியுமா?”

என்று கேட்டனுப்பினான். பதிலேதுமில்லை.

எனவே ஜூலியட்டுக்கு அந்த குறுஞ்செய்திகளை திரைப்பிரதியெடுத்து அனுப்பி அதில்,

குறித்த முகவர் வந்துள்ளார். ஆனால் என்னால் அப்பெட்டியை பெற முடியாது.

தற்போது நாட்டில் கொரோனா தொற்று. நான் உள்ள இடத்திலிருந்து விமான நிலையம் செல்ல முடியாது. தற்போது எனது வியாபாரமும் நஷ்டத்தில் உள்ளது.

எனவே என்னால் பணம் செலுத்த முடியாதுள்ளது. நான் சுங்க அதிகாரியின் வங்கி இலக்கத்தை அனுப்புகிறேன். நீங்கள் பணம் செலுத்தவும்.

என்று குறிப்பிட்டு அனுப்பினான்.

“வணக்கம் என் அன்புக்குரியவரே!, நீங்கள் அனுப்பிய இந்த மின்னஞ்சலில் உங்கள் நாட்டில் இராஜதந்திரி வந்துவிட்டார் என்பதைத் தெரிவித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,

நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை அவர்கள் உங்களுக்குச் கூறியிருக்கிறார்,

நீங்கள் குறிப்பிடுவதுபோல், எமக்கு ஈரான் வங்கிகளுக்கு சென்று பணம் செலுத்த முடியாதுள்ளது.

எனவை நீங்கள் அவர் குறிப்பிடுவது போலவே கொஞ்சம் பணம் செலுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

அவருக்கு நான் கூறினேன் சற்று அங்கே நிக்குமாறு, நீர் உங்கள் உறவினர்கள் யாரிடமாவது, கடனாகப் பெற்று பணத்தை கொடுங்கள்.

எனது பெட்டி உங்கள் கைக்கு கிடைத்ததும் அதிலிருந்து எடுத்து திரும்பிச் செலுத்துங்கள்.

நான் உங்களை நம்பி அனுப்பினேன். நீங்கள் பணம் செலுத்தாமல் அவர் பெட்டியுடன் மீண்டும் ஈரான் வந்தால் இங்கு எனது உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். நீங்கள் பணம் செலுத்தி பெட்டியைப் பெற்றதும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். அது நீங்கள் எனக்கு வழங்கும் உயிர்ப்பிச்சை. உங்களை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன்.

நான் எனது 2021 ஏப்ரல் விடுமுறைக்கு இலங்கைக்கு வரவுள்ளேன். நான் கூறியபடி நீங்கள் அப்பெட்டியை பெறுவீர் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்.

என்று குறிப்பிட்டு அனுப்பினான்.

ரிழ்வான் என்ன செயவது என்று தெரியாமல் தடுமாற்றத்தில் தனது நண்பன் அஷ்கரை வட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு,

“எனக்கு யாரும் சவுதியிலியிருந்து ஏதும் வேறு ஒருதர்ட அனுப்பினால் அதற்கு நான் கஸ்டம்ஸ் கிளியர் பண்ணணுமா?”

“அப்படியில்லை, டியுட்டி ப்ரீலா முப்பது கிலோ கொண்டுவரலாம். இது யாரோ உன்ன ஏமாத்துற போல, எதுக்கும் வந்த நொம்பர ட்ரூ கோல்லர்ல செக் பண்ணி பாரு”

எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டான்.

ரிழ்வான் ட்ரூ கோல்லரில் (True Caller) பரிசோதித்து பார்த்தால், குறித்த இலக்கம் “எப்.பி ஹொரு (FB Horu)” என்று 25 பெயரால் முறைப்பாடு செய்யப்பட்ட இலக்கம் என காட்டியதும்தான் இதுவரையும் யாரோ இனந்தெரியாத ஒருவன் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்து கொண்டான்.

இதனை உறுதி செய்து கொள்ள ஆற்றோரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அஷ்கரை போய் சந்தித்தான்.

“அடே அந்த நொம்பர் எப்.பி ஹொரு (FB Horu) என்றுதான் ஸேவ்வாகியுள்ளது. அதோட இருவத்தஞ்சி ஸ்பாம் ரிடோர்ட் என்ட கிட்டத்தட்ட இருவத்திக்கும் மேல ஆக்கள ஏமாத்த பாத்திக்கி ஆனால் நொம்பர் வெர்க், ஏதும் பொலிடிகல் ஸபோர்ட்டும் ஆளுக்குண்டா? “

“அதுதான் நான் சொன்னேனே?, நீ அந்த சல்லிய நம்பி ஊட்டுலயே நிண்டாய், மீன் புடிக்க வந்தால் நூருபாச் சரி சம்பரிக்க இருந்து, சரி சரி இப்ப அந்த நொம்பர டீஆர்ஸில இல்லாட்டி சைபர் கிறைம்ல போய் கொம்லைய்ன் பண்ணு”

“அது மட்டு செய்ய மாட்டேன், இங்குத்து கோர்ட்ட நம்ப ஏல, மய்யத்த பத்த வைக்க வாணாம் என்று வழக்கு போட்டால், உச்ச நீதிமன்றம் நிராகரிக்கிறது, திவிநெகும கேஸ்ல வழக்கு போட்டால் பசில் நிராபரதியென்று தீர்ப்ப கொடுக்குது, ஆனால் அநியாயம் நடந்த நேரமெல்லாம், நம்ம முஸ்லிம் எம்பிமார்தான் நீதியமைச்சர். முந்தி ரவுப் ஹக்கீம் இருந்த இப்ப அலிசப்ரி நிக்குற, ஆனால் மஹர கேஸ்ல அவசரப்பட்டு, சிறைக்கைதிக்கு கொரோனா என்று ரிப்போர்ட் பண்ணி, கக்கவும் ஏலாமல் முக்கவும் ஏலாமல் அரசாங்கம் தடமாறது, சோ நான் இத டீஆர்ஸில கொம்ப்லைன் பண்ண மாட்டேன், ஆனால் ஆள் யாரென்று கண்டு பிடிப்பேன்.”

“சரி நீ கண்டுபிடிச்சு என்ன செய்யப்போற?”

“ஆள் யாரென்று பார்க்கனும், அந்த டிப்லொமடிக் ஒப்பிஸேர் நேத்து கோல் எடுத்த, அவர்ட வொய்ஸ் பொரிங்ன் ஒத்தர்ட மாறிதான் ஆள் ஸ்ரீ லங்கா அல்ல, ஆனால் இப்ப டுவரிஸ் விஸாலா வார சிலர் இப்பிடி சல்லி களவண்ட, இங்குத்து கிராமத்து ஸைட், கொழும்புச் சேறி ஸைட் ஏழகளுக்கு சல்லி கொடுத்து, அவங்கட ஐடின்டிய பாவிச்சி ஸிம், பங்க் பொஸ்தகம், கார்ட் எல்லாம் எடுக்குற, அதுதான் இப்ப அந்த ஸிம் ஒவ்னெர வைச்சி தேடின ஐடின்டிக்கு ஸ்ரீ லங்கா ஒருத்தன்தான் ஆப்புடும்”

“அது சரி நாட்டு கொரோனா நிலவரம் என்ன”

“நாட்டுல பிர்அவ்ன்தான் ஜனாதிபதி அவன் உசிரோட புள்ளய நெருப்புல போட்ட இவன் கொரோனா என்டு பொய்ய சொல்லி நெருப்புல போடுறான். இதுக்குதான் அலிசப்ரி அப்பவே சென்ன அம்பானைக்குபடும் என்று, பெஸ்ட்டுக்கு அட்டுலுகம, இப்ப வெலிகம என்டு முஸ்லிம் ஊரு மட்டுத்தான் மிடீயாவுக்கு தெரியுது. ஆனா எத்தனயோ சிங்கள ஊருகளும் மூட்டி. அடுத்த கொரோனா கொத்தனி அந்த வெதமகத்யடா குருப்லதான் வரும்.

“பேசி வேளில்ல இந்த 40 ஸீட்டுள்ள பஸ்ல 80 பேர் போர ஆனா 500 பேர் தொழுற பள்ளிக்கு 25 பேர்தான் எடுக்குற.”

“சரி சரி நான் இப்ப புடிச்ச மீனெல்லாம் விக்க போகனும், போரகு செல்லு யாரு கள்ளன் என்று”

என்று கூறிவிட்டு அஷ்கர் பிடித்த மீன்களை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

நீண்ட நேர சிந்தனைக்கு பின்னர் அடுத்தகட்டமாக தன்னை ஏமாற்றி பணம் பறிக்க முற்பட்ட குழுவை ஏமாற்றிச் சீண்டிப் பார்க்கத் தீர்மானித்தான். உடன் குறித்த இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்திப் பார்த்தான். ஆனால் கையடக்க தொலைபேசி செயலிழந்திருந்தது. ரிழ்வான் ஆண்டர்சனுக்கு ஒரு  குறுஞ்செய்தி அனுப்பினான்.

“உனக்கு இன்றிரவு எனது வீட்டில் சாப்பாடு ஏற்பாடு செய்துள்ளேன். பணமும் ஏற்பாடு செய்துவிட்டேன். எவ்வாறு அனுப்ப வேண்டும் என வங்கிக் கணக்கை அனுப்பவும். நான் பணம் அனுப்பியதும் அதைச் செலுத்தி விட்டு நேராக ஹைவேயில் எனது வீட்டுக்கு வா

என்று அனுப்பிவிட்டு, ஜூலியட்டுக்கு மின்னஞ்சலை அனுப்பினான்.

“அன்புக்குரியவரே! கஷ்டமான தருணத்தில் என்னிடம் உதவி கேட்டீர், உண்மையில் வரவுள்ள பணத்தால் உன்னை விட எனக்குத்தான் பெறுமதியாகவுள்ளது.

எனவே உறவினர்களிடம் கடன் கேட்டு பணத்தை ஏற்பாடு செய்தேன்.

ஆனால் ஆண்டர்சனின் கையடக்கத் தொலைபேசி செயலிழந்துள்ளது. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

நான் பணத்தை ஏற்பாடு செய்ய தாமதமாகியதால் சென்று விட்டான?

மேலும் உனது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.”

என்று அனுப்பினான். சிறிது நேரத்தில் ஆண்டர்சனிடமிருந்து குறுஞ்செய்தி,

பெயர்: ஏ. ஆர். ஆர். ரஹீம்
இல: 119 152 091 540
சம்பத் வங்கி
பன்சிகாவத்தைக் கிளை
வங்கிச் சீட்டை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
fairfaxdelivering47@gmail.com

சம்பத் வங்கியில் பணத்தை போட்டமாதிரி ஏமாற்ற என்ன செய்யலாம் என சிந்தித்தவன் “ஸம்பத் பங்ல எக்கவுன்ட் இருந்த ஸம்பத் விஷ்வ வைத்து ஏமாற்றலாம்” என கையடக்க தொலைபேசியில் ஸம்பத் வங்கி பற்றி தேடுகையில், சிக்கியது ஸ்லிப் லெஸ் சம்பத் பங்கிங்க் செயலி அதை நிறுவி, குறித்த வங்கியில் பணத்தை செலுத்தியது போல் ஒரு இயங்கலை சீட்டு ஒன்றை தயாரித்து திரைப்பிரதியை எடுத்துக் கொண்டான்.

பின்னர் ஆன்டர்சன், ஜூலியட் இருவருக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பினான்.

“எனது வங்கிச் சீட்டு” என்று தலைப்பிட்டு,

“நான் சம்பத் வங்கியில் இயங்கலை மூலம் பணம் செலுத்தினேன். எனது வங்கிச் சீட்டை இணைத்துள்ளேன்.”

என்று அனுப்பிவிட்டு குறுஞ்செய்தியில்,

“நான் எனது வைப்புச் சீட்டை அனுப்பினேன் “

என அனுப்பினான். மறு புறம்!

“உங்கள் கொடுப்பனவை உறுதி செய்ய  45 நிமிடங்கள் பொறுத்திருக்கவும்.”

என்று ஆண்டர்சன் அனுப்பியிருந்தான்.

ரிழ்வானுக்கோ அவர்கள் எனது வலையில் சிக்கிவிட்டார்கள் என நினைக்கையில் ஒரு புறம் பெருமிதம். ஒரே நேரத்தில் இரு மின்னஞ்சலும், ஒருகுறுஞ்செய்தியும்,

முதல் மின்னஞ்சல்,

“பணம் செலுத்தியமைக்கு நன்றி. நீ இல்லாமல் என்னால் இலங்கையில் இருக்க முடியாது.”

குறுஞ்செய்தியில்,

“வணக்கம்! நாங்க உங்களுடன் ஜோக்கடிக்க வரல்ல நீ சல்லிய போடாட்டி நான் நாட்டிற்கு திரும்பிப் போகிறேன். உனக்கு பெட்டியைத் தரமாட்டேன்.”

அதற்கு பதிலாக ரிழ்வான்.

“நான் ஒரு FCID அதிகாரி. இணையதளம் மூலம் நாட்டில் பணமோசடி செய்யும் குழுவை இணங்கண்டுள்ளோம். அதில் நீயும் ஒருவன். நீ அவசரமாக நாட்டை விட்டு வெளியேறு இல்லாவிடின் GPSஇல் நீ நிக்கிய எடத்த  கண்டுபிடிச்சி எரஸட் பன்ரேன்.”

மின்னஞ்சலில்,

“வணக்கம்! வங்கிக் கணக்கில் பணம் வரவில்லை முகவரிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது, என்ன நடந்தது? பணம் சரியாக மாறியுள்ளதா என்று மீண்டும் பரிசோதிக்கவும்”

என்று வந்திருந்தது. மின்னஞ்சலுக்கு பதிலாக

“எனது கடைசி எச்சரிக்கை”

என்ற தலைப்பில்

“அன்புக்குரிய ஜூலியட் அவர்களே!
என்னை ஏமாற்ற நினைக்காதே. நீ இஸ்ரேலிய இராணுவ வீராங்கனை என்றால் நான் இலங்கை FCID அதிகாரி.

இலங்கையில் பணமோசடி செய்யும் உமது குழு பற்றிய தேவையான தரவுகளை திரட்டி விட்டோம்.

இனி உன்னையும் உனது குழுவையும் கொரோனா தொற்றாளர்கள் உள்ள மஹர சிறைச்சாலையிலே சந்திக்க விரும்புகிறேன்.

இறுதியாக என்னை ஏமாற்ற நினைக்காதே! என்னை மறந்தும் விடாதே! நல்லதொரு கதை எழுத உதவியமைக்கு நன்றி.”

Ibnuasad

இணையதள மோசடி பற்றி கற்பனைக் கதை தெற்கே; மாணிக்க கல் அகழ்வில் பிரபலமாகி இன்று மக்களின் குப்பைகளையும் எச்சில்களையும் கொட்டி முதலைகளின் பிரபல வசிப்பிடமாகிய நிள்வள கங்கையும், வடக்கே; பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் காட்சியளிக்கும்…

இணையதள மோசடி பற்றி கற்பனைக் கதை தெற்கே; மாணிக்க கல் அகழ்வில் பிரபலமாகி இன்று மக்களின் குப்பைகளையும் எச்சில்களையும் கொட்டி முதலைகளின் பிரபல வசிப்பிடமாகிய நிள்வள கங்கையும், வடக்கே; பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் காட்சியளிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *