பிரதமரும் ஏமாற்ற முற்பட்டால் ஆர்பாட்டத்தினால் கொழும்பை ஸ்தம்பிக்கச் செய்வோம்

  • 1

பிரதமரும், காலம் கடத்தி, முஸ்லிம்களை ஏமாற்ற நினைத்தால் மக்கள் ஆர்பாட்டத்தினால் கொழும்பை ஸ்தம்பிக்கச் செய்வோம்.

கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய நிலத்தடி நீர் மட்டம் குறைந்த பகுதிகளை ஆராயும்படி பிரதமர் உத்தரவிட்ட அடிப்படையில் ஜனாஸாக்கள் எரிப்பதை நிறுத்தி அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

கொரோனா தொற்றில் உயிரிழப்பவர்களை உலகம் முழுவதும் அடக்கம் செய்து வரும் நிலையில் இலங்கையில் மாத்திரம் கொரோனாவில் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யாமல் எரித்து வருகின்ற அவலம் நடைபெற்று வருகின்றது.

உலகலாவிய அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், நிலத்தடி நீர் மற்றும் நிலம் தொடர்பான ஆய்வாளர்கள், மருத்துவ மேதைகள், அறிவு ஜீவிகள் என இத்துறையில் உச்சத்தை தொட்ட அனைத்து அறிஞர்களையும் தன்னகத்தே கொண்ட உலக சுகாதார அமைப்பான WHO கொரோனா உடல்களை அடக்கம் செய்வதினால் எவ்வித சுகாதார கேடுகளும் நடக்காது என மிகத் தெளிவாக அறிவித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள வைரஸ் மற்றும் நுன்கிருமிகள் தொடர்பான ஆய்வாளர்கள், புவியியல் ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவ மேதைகள் பலரும் கூட உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கையை இலங்கையில் செயல்படுத்த வேண்டும் என கோரியுள்ள நிலையில் தெளிவான இனவாதத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்து 20 நாட்களேயான பச்சிளம் குழந்தையின் உடல், அது குழந்தை என்று கூட பாராமல் எரியூட்டப்பட்ட அவலம் இலங்கையில் நடந்தேறியது. மனிதம் செத்த, மிருகத்தனமாக செயல்பாடாக இதனை உலக நாடுகள் பார்க்கின்றன.

கொரோனா ஜனாஸா எரிப்பு விவகாரம் முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகப்பெரும் சோகமாக மாறியுள்ளது. குறிப்பாக இதுவொறு அரசியல் பழிவாங்கலாகவே முஸ்லிம்கள் பார்க்கிறார்கள். பச்சிளம் குழந்தையை எரியூட்டும் அளவுக்கு இது எல்லை கடந்து சென்று விட்டது.

இந்நிலையில், ஜனாஸா எரிப்பு தொடர்பில் 10.12.2020 அன்று பிரதமர் தலைமையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நீதி அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர்களான ரோஹித்த அபேகுணவர்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் கொரோனா ஜனாஸாக்களை அடக்கும் வகையில் நிலத்தடி நீர் மிகவும் ஆழமாக இருக்கும் வறண்ட நிலப்பரப்புகளை அடையாளம் காணுமாறு பிரதமர் உத்தரவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்றதொரு அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னால் அமைச்சரவையில் பிறப்பிக்கப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர்களான ஷமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர ஆகியோர் தெரிவித்த நிலையில் அப்படியொரு பேச்சுவார்தையே நடக்காதது போல் இறுதியில் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டதை முஸ்லிம் சமூகம் இன்னும் மறக்க வில்லை.

இப்போது பிரதமர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக அவருடைய ஊடகப் பிரிவின் கடிதத்திலிருந்து அறிய அமுடிகின்றது.

ஆனால், பிரதமரின் இந்த அறிவிப்பு கடைசியாக இருக்க வேண்டும் இது காலம் கடத்தி ஏமாற்றும் அறிவிப்பாக இருக்கக் கூடாது என்பதே முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

மரணித்தவர்களின் ஜனாஸாக்களை எரியூட்டுவதின் மூலம் உயிரிருடனிருக்கும் முஸ்லிம்களின் உள்ளத்தை சாம்பலாக்கும் இக்கொடிய செயல்பாடு உரிய தீர்வின் மூலம் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்.

பிரதமரின் அறிவிப்பின் பின்னரும் தொழிநுற்பக் குழுவின் ஆய்வு முடியவில்லை. நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் என்ற சமாளிப்பு வார்த்தைகளை கூறி இந்த விவகாரத்தை இழுத்தடிக்க நினைப்பது ஒரு ஜனநாயக அரசின் சிறந்த செயல்பாடாக அமையாது என்பதை அரசும் அரசு சார்ந்தவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரதமரின் தற்போதைய உத்தரவின் பிரகாரம் ஜனாஸா எரிப்பு நிறுத்தப்பட்டு அடக்கம் செய்யும் முடிவை ஓரிரு நாட்களில் அரசு எடுக்க வேண்டும் என்பதே முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

இதன் பின்னரும் ஏமாற்றி காலம் கடத்தும் செயல்பாட்டை அரசு தொடர நினைத்தால் ஜனநாயக ரீதியில் வீதியில் இறங்கி தொடர் போராட்டத்தை நடத்துவதின் மூலம் சர்வதேசதின் கவனத்தை இந்த பிரச்சினையில் பெற்றுக் கொள்ள முஸ்லிம் சமூகம் பின்நிற்காது.

சிறுபான்மை சமூகத்தை அடக்கி, ஒடுக்கி முஸ்லிம்களின் உரிமைகளை பரித்து, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க நினைக்கும் இலங்கை அரசின் ஜனநாயக விரோத, உரிமை மீறல் செயல்பாடுகளை பாரிய ஆர்பாட்டத்தின் மூலம் உலகறியச் செய்ய முஸ்லிம் சமூகம் பின்வாங்காது என்பதுடன், மக்கள் ஆர்பாட்டத்தினால் கொழும்பை ஸ்தம்பிக்கச் செய்வோம். அதில் எவ்வித மாற்றமும் இருக்காது என்பதையும் மிகத் தெளிவாக ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்ட வைக்க விரும்புகிறோம்.

எமது உரிமையை வென்றெடுக்க, இருக்கும் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள ஜனநாயக ரீதியில் போராடுவதை தவிர வேறு வழியை இந்த சமூகம் ஒரு போதும் கையிலெடுக்காது என்பதில் உறுதியாக இருக்கும் காரணத்தினால் இறுதி வழியான அறவழி மக்கள் போராட்டத்தை கையிலெடுப்போம். கொழும்பை ஸ்தம்பிக்க செய்வோம் என்பதை மீண்டுமொரு முறை தெரிவித்துக் கொள்கிறோம்.

R. அப்துர் ராசிக் B.COM
பொதுச் செயலாளர்,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ

பிரதமரும், காலம் கடத்தி, முஸ்லிம்களை ஏமாற்ற நினைத்தால் மக்கள் ஆர்பாட்டத்தினால் கொழும்பை ஸ்தம்பிக்கச் செய்வோம். கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய நிலத்தடி நீர் மட்டம் குறைந்த பகுதிகளை ஆராயும்படி பிரதமர் உத்தரவிட்ட அடிப்படையில் ஜனாஸாக்கள்…

பிரதமரும், காலம் கடத்தி, முஸ்லிம்களை ஏமாற்ற நினைத்தால் மக்கள் ஆர்பாட்டத்தினால் கொழும்பை ஸ்தம்பிக்கச் செய்வோம். கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய நிலத்தடி நீர் மட்டம் குறைந்த பகுதிகளை ஆராயும்படி பிரதமர் உத்தரவிட்ட அடிப்படையில் ஜனாஸாக்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: