இத ஊருக்கே விளம்பரம் பண்ணிறனும்

ஊமைக் காதல் நாடகம்
காட்சி :- 04

களம் :- நுவரெலியா தம்ரோ தோட்டம்
கதாபாத்திரங்கள் :-
இனியா – காதாநாயகி
ராதன் – கதாநாயகன்
செல்லம்மா – ராதனின் தாய்
மேனகா – இனியாவின் தாய்
கெளரி – ராதனின் தங்கை
சுவர்னா – ராதனின் அத்தை
சங்கவி – ராதனின் சித்தி
அபி – இனியாவின் தங்கை
ராஜன் :- தோட்ட உரிமையாளரின் மகன்
சிவா :- தோட்டத் தொழிளாலி
துரையப்பா :- தோட்ட உரிமையாளர்
சங்கர் :- ராதனின் நண்பன்

(வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த ராதனிற்கு மீண்டும் அவசரமாக நாடு திரும்பும் வாய்ப்பு கிடைத்தது. அவன் இலங்கைக்கு வருகிறான். இதே வேலை ராதனின் வீட்டின் ஒரு பகுதியில் இனியாவின் குடும்பத்தினர் வசித்து வருகையில் ராதனின் குடும்பத்தில் ஒரு சிலர் எதிர்க்க முயன்றனர். இவ்வாறான ஒரு சூழ்நிலை வளர்ந்து செல்கையில் ராதன் இனியாவிடம் வந்து பேசுகிறான். ஆஹா கதை சுவாரஸ்யமாக இருக்கும் என மனம் எண்ணுகிறது அல்லவா. இனி நாடகத்தை நகர்த்தலாம்.)

ராஜன்:- என்ன சுவர்னாக்கா ஒங்க ராதா வீட்டுல யாரோ வேலக்கார பயலுங்க வந்து தங்கியிருக்குறதா கேள்விப் பட்டேன்.

சுவர்னா:- நானே ஏற்கனிமே எரிச்சல்ல கெடக்குறேன். கெழப்பி விடாத என்னோட எரிச்சல.

துரையப்பா:- அட சுவர்னா நீ எங்க கிட்ட கத்தி கூத்தாடிட்டன்னு எந்த பயனுமில்ல. அங்க போய் ஒன்னோட பவர காட்டு.

ராஜன்:- ராதா வீட்டுல அப்படி பயலுங்க தங்கலாமா? அசிங்கமா இருக்கு சுவர்னாக்கா. தொரத்தி விடு!

சுவர்னா:- இங்க பாரு ராஜா நானே ராதா மேல ரொம்ப எரிச்சாலா இருக்கேன். அங்க தா போறே அவ வந்திருக்கான். அவன் கிட்டயே பேசிக்கிறேன்.

ராஜன்:- அதா இந்த எரிச்சல அங்க போய் காட்டு போ.

துரையப்பா:- என்னது ராதன் வந்துட்டானா? அப்ப நம்மலுக்கு சங்கு தான்.

ராஜன்:- அவனா எதுக்குவந்தா எப்ப வந்தா?

சுவர்னா:- இன்னிக்கி விடியும் போது வீடு வந்து சேந்தானாம். ஏதோ ஒரு முக்கியமான விஷயத்துக்காக திடீருன்னு வந்திருக்கான் போல!

ராஜன்:- இப்ப என்ன வில்லங்கத்த கெழப்பி விட வந்திருக்கானோ? நாம வேற தொங்கிட்டு இருக்கோம். பேசாம அவன் கூட பங்கு போட்டுக்கலாமா?

(சுவர்னா ராதனின் வீட்டுக்குள்ளே நுழையும் போது கோபத்துடன் கூச்சலிட்ட படியே வருகிறாள்.)

சுவர்னா:- மதினி மதினி எங்கிருக்க கொஞ்சம் முன்னுக்கு வாரியா?

செல்லம்மா:- என்ன மதினி எதுக்கு கத்திகிட்டு வார  இப்ப? கொஞ்சம் மெதுவா பேசு.

சுவர்னா:- கத்தாம பின்ன மனுசன் என்ன பண்ணுவானாம்? வெளில நம்மல பாத்து பத்து பதினஞ்சா பேசுறாங்க.

செல்லம்மா:- யாரு பேசுறாங்க, எவரு பேசுறாங்க? ஒன்ன பத்தி தானே பேசுறாங்க
எங்கள பத்தி பேசயில்லயே?

சுவர்னா:- அடடா மதினிக்கு வாய பாக்கல. என்ன பத்தி எதுவுமில்ல. ஒரு வேலக்கார குடும்பத்த ஊட்டு முன்னாடி குந்த வச்சிருக்கன்னு காத நொழக்க முடியல.

செல்லம்மா:- இது தானா? நா ஏதோன்னு நெனச்சிட்டேன். நீ கவல படாத மதினி என்னோட வீட்டுல பணக்காரன் இருந்தா என்ன? வேலக்காரன் இருந்தா என்ன? என்னோட வீடு தானே நான் பாத்துக்கிறேன்.

சங்கவி:- என்னக்கா நீ இப்படி பேசுற? அவங்க சொல்றதும் சரி தானே? ஒனக்கு இருக்குற தகுதிக்கும், தராதரத்துக்கும் நீ பண்ணிகிட்டிருக்க காரியம் னா ரொம்ப மோசமானது தா.

செல்லம்மா:- மறந்துடாத தங்கச்சி நீயா இருக்கட்டும். மதினியா இருக்கட்டும். எங்களுக்கு கொஞ்சம் பணம் வந்ததுக்கு அப்பறமா தா வந்திங்க.

சுவர்னா:- என்ன இப்படி பேசுற இதுக்கு மொதல்ல ஒன்ன பாத்துக்கிட்டதே இல்லயா?

சங்கவி:- ஏதோ நாம இவங்கட பணத்த அடிச்சிக்கிறதுக்கே வந்து ஒட்டிக்கின்னு இருக்குறதா நெனச்சி பேசுறாங்க பாரு.

செல்லம்மா:- சொல்லப்பானா நீங்க சொல்றது உண்மயா கூட இருக்கலாம்.

ராதன்:- யாருக்கு தெரியும் மனசுல உள்ள வார்த்த கூட வெளில வந்திருக்கலாம்.

சங்கவி:- அடேய் ராதா நா ஒன்னோட சித்திடா அத மனசுல வெச்சிட்டு பேசு.

ராதன்:- அது சரி சரியா இன்னக்கி கணக்கு படி பாத்தா சரியா ஒன்னற வருடத்துக்கு முன்னாடி இது மாதிரி ஒரு நாள்னு வச்சிக்கலாம். பசிக்கு வாயால சோறு கேக்காம ஒங்க வாசல தேடி வந்து சோறு போடும் வரக்கிம் ஒக்காந்து கெடந்தேனே அப்ப நீங்க என்ன பண்ணிங்க? மனசுல அது இருக்குதா? அப்ப நீங்க என்னோட சித்தி தானே ஒரு வாயு சோறு தந்திருக்காலாமே?

சங்கவி:- ராதா நடந்து முடிஞ்சத பேசாத நடக்குறத பேசு.

ராதன்:- நா நடக்குறத பேசுறே சொல்லுங்க.

சுவர்னா:- மொதல்ல நா கேக்குற கேள்விக்கு ஒன்னோட புள்ளக்கி பதில் சொல்ல சொல்லு.

செல்லம்மா:- என்ன கேக்க போற கேட்டுக்க அவன் கிட்டயே.

சுவர்னா:- யாரோ ஒரு வேலக்கார குடும்பத்த வீட்டு முன்னாடி வச்சிருக்க வெக்கம் இல்லயா ஒனக்கு?

ராதன்:- அவங்கள வேலக்கார குடும்பம்னு என்னோட காது கேக்க சொன்ன எந்த வேலக்கார சொந்தமும் என்னோட வீட்டுல இருக்க வேண்டாம்.

சுவர்னா:- என்னடா சொன்ன வேலக்கார சொந்தமா? நா இப்ப வெளிய போகனுமா?

கெளரி:- அண்ணா அதயும் ஒரு தடவ சொல்லிடு அப்ப சரியாகிடும். ஒனக்கிட்ட இருக்குற சல்லிக்காக அவங்க ரெண்டு பேரோட பொண்ணயும் ஒனக்கு கட்டித்தாரதா திட்டம்.

செல்லம்மா:- கெளரி வார்த்தைய அளந்து பேசு.

கெளரி:- அம்மா நீங்க சும்மா இருங்க. பசிக்கு ஒரு வாய் சோறு இல்லாம இவங்க சொந்தம்னு தேடி போனா வேலக்காரனோட பொண்ணு, கடன் காரனோட பொண்ணு வெளிய போனு எம்புட்டு மோசமான கத்திட்டு. இப்ப எதுக்கு மதினி கண் கலங்குற என்னோட பையன் இல்லயா? என்னோட பொண்ணு இல்லயா னு கிட்டு.

சுவர்னா:- நா இப்ப சொல்றேன் கேட்டுக்க இனிமே ஒன்னோட வீட்டு வாசலுக்கு என் கால் படாது. ஒன்னோட அண்ணனே வந்து அழச்சாலும் நா இந்தப் பக்கம் வர மாட்டேன்.

ராதன்:- ரொம்ப நல்லது அப்படியே செய்ங்க நம்ம வீட்டுக்கு செழிப்காவது வரும்.

சங்கவி:- நானும் போயிட்றேன். இல்லன்னா என்னயும் வெளிய போனு சொல்லிடுவான்.

கெளரி:- அதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்ல தானா புரிஞ்சிக்கனும்.

ராதன்:- நா கொஞ்சம் வீட்டோட முன் பக்கம் போய்ட்டு வாரேன்.

கெளரி:- என்ன பொண்ணு பாக்க போறீங்களா சொல்லிட்டு போங்க மாப்பிள்ளை?

ராதன்:- அடியே கெழவி வாயாடி. சும்மா போடி. என்ன ஏத்தி விடாம.

கெளரி:- நடத்துங்க. நடத்துங்க.


ராதன்:- அம்மா அம்மா உள்ள யாராவது இருக்கீங்களா?

அபி:- யாரது புதுசா? உள்ள வாங்க பரவால்ல.

அபி:- ஓய் சின்ன பொண்ணே வீட்டுல யாரும் இல்லயா?

அபி:- யே நா இருக்கேனே நான் மனுசன் இல்லயா?

ராதன்:- அடடா.

அபி:- என்னோட பேர் அபி. எனக்கு ஆறு வயசு. வீட்டுல அக்கா இருந்தாங்க இப்ப கொழுந்து பறிக்க போனாங்க. அம்மா சமச்சிகிட்டு இருக்காங்க. அப்பாவ காணோம். சரியா?

ராதன்:- அட ரேடியோ நியூஸ் மாதிரியே இருக்கு. இந்தா இத வச்சிக்க.

அபி:- அய்ய். பணம். இது என்ன பணம் ஊதா நெறத்துல. அம்பது ரூபா தான் பெருசு அத குடுங்க.

ராதன்:- இது அத விட பெருசி இத வச்சிக்க.

மேனகா:- தம்பி நீங்க வீட்டு அம்மாவோட பையனா?

ராதன்:- அது நானே தான். எடம் எப்படி இருக்கு? நல்லா இருக்கா? வசதி எல்லாம் போதுமா?

மேனகா:- எடம், வசதி எல்லாம் தாராளமா நல்லா இருக்கு ஆனா மனசு தான் ஏதோ மாதிரி இருக்கு.

ராதன்:- இங்க பாருங்க. எதுக்கு மனசு ஏதோ மாதிரி இருக்கு? நா ஒங்கள என்னோட சொந்த வீட்டுல தங்க வச்சிருக்கேன். நானாக எதுவும் சொல்லாத வரக்கிம் நீங்க எதுக்கும் மனசு ஒடச்சிக்க வேனாம். நீங்க என்னோட குடும்பம்.

மேனகா:- அதுகில்ல தம்பி நீங்க பண்ணுன காரியம் யாருமே பண்ண மாட்டாங்க. என்னோட குடும்பமே என்ன கைவிட்டது. ஆனா நீங்க ஒங்க குடும்பம்னு சொல்லிடிங்க ரொம்ப நன்றி தம்பி. ஆனா எங்களால ஒங்க குடும்பத்துல குழப்பங்கள் வேனாமே?

ராதன்:- அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம். உங்க குடும்பம் எனக்கு எப்போ பொறுப்பாகிறிச்சு. நா கோயில் பக்கம் போவனும். கூடிய சீக்கிரம் இன்னொரு செய்திக்காக நா பாரதிய பாக்க வருவேன். அது வரக்கிம் பயப்படாம இருக்கலாம்.

மேனகா:- அது என்ன விஷயம் தம்பி?

ராதன்:- நேரம் வரும் போது சொல்றேன்.


(இப்படி ராதன் பேசி விட்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறான். கோயிலை நோக்கி பயணமாகிறான். கோயிலின் வாயிலை அடைந்ததும்.)

சிவா:- ராதா தம்பி எப்படி இருக்கீங்க என்ன தெரியுதா?

ராதன்:- அடடா சிவா அண்ணே தெரியாமலா? கோயில் பக்கம் வந்தேன். சுகமா இருக்கீங்களா?

சிவா:- எங்க தம்பி சுகமா இருக்க? நாம இன்னும் அதே மாதிரி தான் இருக்கோம்.

ராதன்:- இன்னம் 2,3 நாட்கள் தான் எல்லாமே மாறிடும் பாருங்க.

சிவா:- எங்க மாற போவுது? ஏதோ ஒங்கள கண்டது ரொம்ப சந்தோஷம்…

ராதன்:- எனக்கும் தான் சிவா அண்ணே. இந்த சங்கர்.

சங்கர்:- ராதா பொண்ணு அதோ கொளத்து கிட்ட உக்காந்து கிட்டு இருக்கு. இந்தா ச்செய்ன், அதோட இந்தா லெட்டர்.

ராதன்:- நீ கொஞ்சம் நேரம் கழிச்சி வா நண்பா.

சங்கர்:- சரி நண்பா பாத்து நா கோயிலோட முன் பக்கம் போறேன்.

(ராதன் இனியாவின் பின் புறமாக வந்து குளத்தின் படிக்கட்டிலே அமர்கிறான்.. இனியா முன் புறமாக குளத்தின் கட்டில் கையை வைத்த படி இருக்கிறாள்.)

(ராதன் மெதுவாக இனியாவின் பின் பக்கமாக சென்று மாலையை கழுத்தில் அணிவிக்கிறான்.)

இனியா:- ஐய்யோ. இந்த எடத்துலயும் நிம்மதி கெடயாதா? கழுத்துல ஏதோ ஊறுதே.

ராதன்:- இனியா ஒங்க கூட கொஞ்சம் பேசனும்.

இனியா:- யாரு என்னோட பேசனும்? என்ன பேசனும்? பேச முடியாது போங்க.

ராதன்:- பாத்தா தானே பேச முடியும் கொஞ்சம் பாருங்க.

இனியா:- கடவுளே ஒன்ன என்ன பண்ணுறது? நிம்மதியா அழ கூட முடியல.

(திரும்பி பார்த்து அமைதியாகி விட்டாள். அவளது மனது இது ராதனாக இருக்குமோ என உணர்த்தியும் வாய் பேசாது இருந்தால்.)

ராதன்:- இனியா ஒன்னோட கழுத்த கொஞ்சம் பாரு நான் யாருன்னு புரியும்.

இனியா:- (மெதுவாக கழுத்தைப் பார்த்தவுடன். அவனது காலில் விழுந்து) இனிமே என்ன விட்டு எங்கயும் போவாதிங்க. என்னோட கையெல்லாம் பாருங்க. என்னோட காலெல்லாம் பாருங்க அட்ட கடிச்சி புண்ணாகிப் போயிருக்கு. இத்தன நாளா எங்க போனிங்க என்ன பாக்கணும்னு கூட நெனக்கில்லயே. நான் எவ்வளவு அழுதேன் தெரியுமா?

ராதன்:- ஒன்ன என் வீட்டுல மொதல் மொறயா பாக்கும் போது ஒன்னோட சாயல் தான் எனக்கு தெரிஞ்சது. ஒன்ன பார்த்தே தீரனும்னு ஒன்னோட வீடு தேடி வந்தப்ப என்னோட காதல் கோபுரமே சரிஞ்சு போயிறிச்சு. இப்ப ஒன் கிட்ட வந்தும் நீ இப்படி அழுறியே. நா ஒன்ன என்னோட மார்புல சாச்சிகிட்டு இருக்கேன் இனியா.

இனியா:- கடசியா அங்க இருந்து வரும் போது ஒங்களுக்கு கடிதம் எழுதினேன். அத கூட அங்கயே விட்டுட்டேன்.

ராதன்:- அந்த கடிதமா அது எப்போ எனக்கு கெடச்சிச்சு.

இனியா:- அது எப்படி? சொல்லுங்க? நீங்க நா மொதல் தடவ பாக்கும் போது இருந்த மாதிரியே இருக்கீங்க. ஆனா நான்.

ராதன்:- நீயும் அப்பிடியே தான் இருக்க. என்ன கொஞ்சம் கருத்துட்ட அப்படித்தானே.

இனியா:- கருத்து இருந்தா பரவால்ல நா இப்ப சாதாரன கொழுந்து பறக்கிற பொண்ணு. நீங்க எல்லா என்ன கைப்பிடிப்பீங்களா?

ராதன்:- ஆமா ஆமா. எனக்கு இப்பமே நாழு எஸ்டேட் கார பயலுங்க பொண்ணு தர்ரேன்னு சொல்லியிருக்காங்க. ஒன்ன கைவிடுறதுக்கா கட்டியனச்சேன்.

(இந்த வசனத்தை கேட்டதும் இனியா அனைத்து கைகளை தளர்த்தி விடுகிறாள். ராதன் தளர்த்த கைகளை மீண்டும் பிணைக்கச் செய்த படியே)

ராதன்:- இனியா நா ஒன்னோட கழுத்துல இந்தக் கோயில்ல வச்சு போட்டது வெறும் மால மட்டும் இல்ல அது நான் ஒனக்கு போட்ட மொதலாவது தாழி! அத நீ மனசுல வச்சிக்க..

இனியா:- போய் நாழு எஸ்டேட் கார பயலுங்க பொண்ணு கொடுக்குறதா சொன்னீங்க. அங்க போய் கல்யானம் பண்ணுங்க.

ராதன்:- வேணாம் டி. வேணாம். எனக்கு எஸ்டேட் பொண்ணெல்லாம் வேணாம் நீயே போதும்.

இனியா:- அப்டி எல்லாம் சொல்ல முடியாது நீங்க என்ன சேத்துக்குறது ரொம்ப சிக்கல். என்னோட அப்பா ஒங்க மேல ரொம்ப கோவமா இருக்காரு. அது மட்டுமில்ல ஒங்க குடும்பம் எல்லாம் ஒத்துக்கனுமே?

ராதன்:- (அவளது நெற்றியில் முத்தமிட்ட படியே) ஒன்னோட அப்பா என்னோட அம்மா எல்லாம். இன்னும் காலம் இருக்கே அப்ப பாத்துக்கலாம். நாம இப்ப கொஞ்சம் பேசிக்கலாம்.

இனியா:- எதுக்காக என்ன மரத்துக்கு பின்னால கூட்டி வந்திங்க? ராதன் நீங்க எனக்கு மட்டும் தான் நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன்.

ராதன்:- இங்க சிவனுக்கும் கண்ணிருக்கு. இனியா நான் ஒனக்கு மட்டும் தான் நீ என்ன யாருக்கும் கொடுக்காத. இப்ப எனக்கு முத்தம் ஒன்னு மட்டும் கொடுமா?

இனியா:- நீங்க மொதல்ல கல்யாணம் பண்ணுங்க.

சங்கர்:- அதெல்லாம் அப்பறமா பண்ணிக்கலாம் ராதா வா போகலாம். சீக்கிரம். இனியா நீங்க அப்படியே பின் வழியால போயிடுங்க ராதா நீ வா.

(இவர்கள் இருவரும் மரத்தின் பின்னால் சாய்ந்து பேசுவதை ராஜன் காண்கிறான்.)

ராஜன்:- அடடா இதுதான் நடக்குதா? இத ஊருக்கே விளம்பரம் பண்ணிறனும்.

(இப்படியாக பல எதிர்ப்புகள் சுற்றி வலை விரித்துக் கிடந்த போதிலும் காணாமலே இருந்த காதலர்கள் இறைவனின் விதியால் கள்ளம் கபடம் இன்றி பேசுகிறார்கள். முதல் தடவை சந்தித்து பேசும் காதலர்களின் உணர்வை, உள்ளத்தை சொல்லிக் புரியவைக்கத் தேவையில்லை. இவர்களது காதல் ஒரு புறமாக நகர்ந்து செல்கையில் காதலுக்கான எதிர்ப்பும் மறு புறமாக வேறூண்றத் தொடங்கியது ராஜனினால். இனியா ராதன் காதலில் அடுத்து என்ன நடக்கும் ராஜன் இவர்கள் பேசிக் கொண்டிருந்தை ஊருக்கே விளம்பரப்படுத்துவானா? ராதன் இனியாவின் தாயிடம் சொன்ன அடுத்த சந்திப்பு என்ன? பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கிறது என்று அடுத்த காட்சிகளில். இன்றைய தொடரை முடித்துக் கொள்கிறேன்.)

ஊமைக் காதல் நாடகம் தொடரும்
இனியா – ராதன்
Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies and Arabic Language
South Eastern University of Sri Lanka
Author: admin