கபுரில் உறங்கவும் அனுமதியில்லை

  • 15

பிறப்பையே இன்னும்
ருசி பார்க்க முடியாத எனக்கு
இறப்பு வந்து நேர்ந்தது

மண்ணிலே பாதம் பதிக்கும் முன்னே
தீ குழம்பிற்கு உணவானேன்
பத்துத் திங்கள் பத்திரமாய் சுமந்து
மார்போடு கட்டி அணைத்த தாய்க்கும்
கொரோனா இல்லை
தோள் மீது சுமந்த தந்தைக்கும்
கொரோனா இல்லை

வேஷம் போடும் அநியாய அரசே
துவேஷம் தான்
உன் வாழ்நாள் லட்சியமோ

மண்ணில் வாழத்தான் முடியவில்லை
மண்ணறையில் உறங்குவதற்கவது
அவகாசம் தராமல் போனது ஏனோ

கல்லிலும் ஈரம் உண்டு
உங்கள் இதயத்தில்
துளியளவும் ஈரம் இல்லையோ

என் கரங்களால்
என்ன தவறு செய்தேன்
என் கால்களால்
எந்த தவறுக்கு துணை நின்றேன்
என் கண்கள்
இவ்வுலகத்தை இன்னும்
ரசிக்க ஆரம்பிக்கவில்லை
அப்படியிருந்தும் ஏன்
எரித்தாய் என்னை

கலிமா சொன்ன முஸ்லிமின்
வயிற்றில் பிறந்த காரணத்திற்காக
உலகமே அடக்கம் செய்ய
அனுமதி கொடுத்த பின்னும்
ஏன் நீ அடக்க மறுக்கிறாய்
அணியாயம் இழைக்கிறாய்

பால்வாடை கூட இன்னும் போகவில்லை
இருபது நாட்கள் உலகை ரசித்தேன்
நான் செய்த பாவம் இது தானோ

கலிமா சொன்ன அரசியல்வாதிகளே
இன்னும் ஏன் மௌனம்
வாய்திறக்க மறுக்கிறாய்
உங்களுக்கு அதிகாரம்
தான் வேண்டுமென்றால்
உங்கள் குழந்தைகளுக்கும்
இந்நிலை வரும் என்று நினைத்துக் கொள்

இயற்கை எழில் கொஞ்சும்
இலங்கைத் திருநாடு என
உலகம் பேசும் இந்நாட்டில்
இப்படியும் கொடூரங்கள் உண்டு
என உலகம் அறிந்து கொண்டது என்னால்

இறைவா வந்த வேகத்தில்
உன்னை பார்க்க மீண்டும் வருகிறேன்
உன்னை போற்றும்
மனிதகுலத்திற்கு நடக்கும்
அக்கிரமங்களை கூறிட வருகிறேன்

தாயே ஒரு சில நொடிகளில்
என் உடல் எரிந்து போனது
நீ வாழும் காலமெல்லாம்
உன் மனம் எரியும் என
நான் அறிவேன்

தாயே உன் கண்ணீரை கலைத்து விடு
என் மரணம் உன்யிலிருந்து
எண்ணெய் பிரித்தி இருக்கலாம்
உன் மரணம் என்னை
இணைக்கும் சுவனத்தில்
கலங்காதே என் தாயே

எரிக்கப்பட்டு நான் சாம்பலாய் மாறிவிட்டேன்
உலகத்திற்கு ஒரு படிப்பினையாக
நான் மாறிவிட்டேன்
இனியும் ஒரு உடல்
எரிக்கப்பட்ட மாட்டாது என
நம்பிக்கையோடு
நான் போகிறேன் என் இறைவனிடம்

கலிமா சொல்லியும் எரிக்கப்பட்ட
இறுதி உடல் என் உடல் ஆகட்டும்
உலகம் அறிந்து கொண்டது
இந்த அநியாயக்காரர்களின் ஆட்சியை
இனியும் வாய் திறக்காமல்
மௌனம் காக்காது இந்த உலகம்

உலக மருத்துவர்களை மிஞ்சிய
இலங்கை மருத்துவர்களே
மனிதர்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல
என்பதை புரிந்து கொள்

உயிர்காத்த கற்ற கல்வியை
உடல் எறிக்க பயன்படுத்தி விட்டாய்
நீ கற்ற கல்வி கால் செருப்புக்கு உதவாது

மன்னிக்க மாட்டேன் உங்களை
நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்
மறுவுலகில் காத்திருக்கிறேன்
என் இறைவனிடம் சாட்சி சொல்லி
நரக நெருப்பில் உங்களை எரித்திட
என்னை ஒருமுறைதான் எரித்தீர்கள்
உங்களை அனுதினமும்
எரித்திடுவான் இறைவன்

போய் வருகிறேன்
அநியாயக்காரர்களின் மண்ணில்
வாழவும் முடியவில்லை
கபுரில் உறங்கவும் அனுமதியில்லை
சாம்பலானேன் காற்றோடு கலந்து
மனித மனங்களில் வாழ்வேன்
மனிதம் கொண்ட மனங்களில் வாழ்வேன்

கவிதை காதலன்
அக்குறணை லஷாட்

பிறப்பையே இன்னும் ருசி பார்க்க முடியாத எனக்கு இறப்பு வந்து நேர்ந்தது மண்ணிலே பாதம் பதிக்கும் முன்னே தீ குழம்பிற்கு உணவானேன் பத்துத் திங்கள் பத்திரமாய் சுமந்து மார்போடு கட்டி அணைத்த தாய்க்கும் கொரோனா…

பிறப்பையே இன்னும் ருசி பார்க்க முடியாத எனக்கு இறப்பு வந்து நேர்ந்தது மண்ணிலே பாதம் பதிக்கும் முன்னே தீ குழம்பிற்கு உணவானேன் பத்துத் திங்கள் பத்திரமாய் சுமந்து மார்போடு கட்டி அணைத்த தாய்க்கும் கொரோனா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *