நண்பனின் அறை

  • 21

அஹ்மதுக்கு இரண்டு கண்களும் இருட்டிவிட்டன. இடது காதிலும் விண் என்ற பயங்கர ஒலி. “உய்ங்.” என்ற இரைச்சல் நிற்பதற்கு சில நிமிடங்கள் ஆயின. அலீம் பளாரென்று ஓங்கி அறைவிட்டான். ஐந்து விரல்களும் அப்படியே கன்னத்தில் பதிந்து “சுர்ர்” ரென்று எறிகிறது. உயிருக்குயிரான அலீமா இப்படி அறைந்தான்? ஏன்? என்னாச்சு?

அஹ்மதும் அலீமும் குழந்தை பருவத்திலிருந்தே இணைபிரியா தோழர்கள். ஒரே தெரு, ஒரே பள்ளி, ஒரே கல்லூரி, ஒரே வகுப்பு, ஒரே துறையில் பட்டப்படிப்பு படித்தவர்கள். அஹ்மத் விபரம் தெரிந்த நாள் முதல் தொழுது, நோன்பு பிடித்து, முடிந்த வரை மார்க்க நெறியோடு வளர்ந்தவன். பள்ளிப் பருவத்திலேயே திருக்குர்ஆனை முழுமையாக ஓதுவதற்கும் பயிற்சி பெற்றவன்.

அலீம் இதுற்கு நேர்மாற்றம். படித்ததெல்லாம் ஒன்றுதான். குர்ஆனிலோ மார்க்கத்திலோ அவ்வளவு பிடிப்பு கிடையாது. வெள்ளிக்கிழமை மட்டும் கடமைக்காகப் பள்ளியில் ஒதுங்குவான். ஜும்ஆ அன்று கடைசியாகப் பள்ளிக்குப் போகும் அலீம் பள்ளிவாசலை விட்டு வெளியில் வரும் முதல் ஆளாக இருப்பான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இருவரும் தனியாக எங்கும் செல்வதில்லை. விடுமுறை நாட்களில் கடற்கரை, நீர்வீழ்ச்சி, பூங்கா என்று வெளியே கிளம்பி மனம் விட்டுப்பேசி சிரித்து ஏதாவதொரு உணவகத்தில் உணவருந்திவிட்டு மகிழ்ச்சியாகத் திரும்புவார்கள். அலீம் மார்க்க நெறியில் பலவீனமாயிருப்பது அஹ்மதுக்கு வருத்தத்தைத் தந்தது. தன்னுடனேயே இருக்கும் நண்பனுக்கு மார்க்க விதிமுறைகளை நினைவுபடுத்தாமல் தான் மட்டும் நிறேவேற்றினால் நாளை அல்லாஹ் கேள்வி கேட்பானே என்ற மனஆதங்கம் அவ்வப்போது தலைதூக்கும். சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுது அதை மென்மையாகக் கோடிட்டுக்காட்டுவான். ஆனால் நண்பன் மீதுள்ள பாசத்தினால் அவன் வலுவாகச் சொன்னதில்லை.

ஆனால் அன்றுதான் எதிர்பாராமல் அந்தச்சம்பவம் நடந்தது. வழக்கத்திற்கு மாறாக அன்று அஹ்மத் சற்றுக்கடுமையாகவும் நடந்து கொண்டான். கை நீட்டி அறையும் அளவுக்கு வந்தது எதிர்பாராதது. அப்படி என்னதான் கோபம்?

அன்று வெள்ளிக்கிழமை. சிறிது வேளை இருந்ததால் அலுவகத்தில் பம்பரமாய் சுழன்றார்கள். அலுவகத்திலிருந்து ஜும்ஆவிற்கு சீக்கிரமாகப் புறப்பட வேண்டும் என ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான் அஹ்மத். ஆனால் அதைக்கண்டு கொள்ளாமல் தன் வேலையில் மும்முரமாய் இருந்தான் அலீம். கோபம் தலைக்கேறினாலும் மிகவும் சிரமப்பட்டு அதனை அடக்கிக்கொண்டான் அஹ்மத். இறைவணக்கங்களில் இடையூறு ஏற்பட்டால் அவனால் ஜீரணித்துக்கொள்ள முடியாது.

அன்று மாலை இருவரும் கடற்கரைக்குச் சென்று பேசிக்கொண்டே காலாற நடக்க ஆரம்பித்தார்கள். வாடைக்காற்று வருடிவிட ஒரு மணல் குவியலைக் கண்டு அதில் எதிர் எதிரே அமர்ந்தார்கள்.

அன்று கடல் ஆராவாரம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாகவே காணப்பட்டது. அலைகளின் வேகம் அதிகமாக இருந்தன. நீண்ட தூரமாக நடந்து சென்ற அவர்களின் கால்களை ஓடிவந்து தொட்டுவிட்டு, வந்த வேகத்திலேயே திரும்பி ஓடின அலைகள். கடலலைகளின் இரைச்சலையும் குழந்தைகளின் ஆராவாரங்களையும் விஞ்சி பக்கத்திலுள்ள பச்சைப்பள்ளியிலிருந்து ரம்மியமான குரலில் ம:.ரிப் தொழுகைக்கான பாங்கின் ஒலி கேட்டது. அஹ்மத் பதறிக்கொண்டு எழுந்தான்.

“என்ன? எதோ சுனாமி வர்ர மாதிரி பதறி எழுந்திருக்கிறாய்? உட்காரப்பா! இன்னும் கொஞ்ச நேரம் இருப்போம்.” அலீமின் அலட்சிய வார்த்தைகளைக் கேட்ட அஹ்மத் “ஆபத்து வந்தால்தான் நீ பதறுவாயா? அல்லாஹ் அழைத்துவிட்டான், காதில் விழவில்லையா? நீதான் அந்தப் பக்கம் வர்திறல்லையே, போற என்னையும் நிப்பாட்டுறாயே!”

அத்தோடு அஹ்மத் நிறுத்தாமல் இன்னும் தொடர்ந்தான்.

“முன்ன பின்ன தொழுதால்தானே உனக்குத் தெரியப்போகுது. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை!, இன்னிக்கு ஜும்ஆ நாள், துஆ கபுலாகிற ம:.ரிப் நேரம் வா தொழப்போகலாம்.”

“போ போ நீ போய் வாரிகிட்டு வா. இதுக்கா இவ்வளவு தூரம் வந்தோம்?” என்று அலீம் பதில் கூறியதும் அஹ்மதுக்கு இன்னும் சூடாகியது.

“நீயும் ஒரு முஸ்லிமா? பெயர் மட்டும் அலீம் என்று இருந்தால் போதுமா? உனக்கெல்லாம் எதுக்குடா பெயர் மட்டும் வேணும்? நரகம் தாண்டா உனக்கு கடைசில கிடைக்கப் போகுது” என்று கூறிக்கொண்டு இருக்கும்போதே அலீமின் கை அஹ்மதின் கன்னத்தை பதம் பார்த்தது.

ஓங்கி ஓர் அறை இதுவரை இப்படி நடந்ததே இல்லை. அஹ்மதின் தொண்டைக்குழி அடைத்துக்கொண்டது. கண்கள் சிவந்து விட்டன. அவனை அறியாமல் அவனது விரல்கள் நடுங்கின. மணலில் மேலும் கீழும் ஏதோ கிறுக்கிவிட்டு சட்டென எழுந்து நடையைக்காட்டினான். அவன் சென்ற பிறகு கிறுக்கிய இடத்தை நோக்கினான் அலீம். “நண்பனின் அறை” என எழுதப்பட்டிருந்தது.

அதிகாலை நான்கு மணியைக் காட்டிக்கொண்டிருந்தது. மறுபடியும் கன்னத்தில் அறை விழுந்தது போல கனீர் என்ற அலாரம். எழும்புவதற்கு மனமே இல்லை. சோம்பல் அவனது உடல் முழுவதும் குளிர்காய்ந்துகொண்டிருந்தது. இருந்தாலும் அவனது அடிமனது “தஹஜ்ஜத் தஹஜ்ஜத்” என்று அடித்துக்கொண்டிருக்கையில் எவ்வாறு அவனால் உறங்க முடியும்?

எழும்பி சோம்பல் முறித்து தட்டுத்தடுமாறி சிறுபிள்ளை நடைபோட்டு குளியலறைக்குச் சென்றான் அஹ்மத். வுழுவுடன் வந்து தஹஜ்ஜத் தொழுகையை பயபக்தியுடன் நிறைவேற்றினான். தொழுகை முடிந்து மெதுவாக தன் கன்னத்தில் விரல்களை உலாவிட்டான். கன்னத்தில் வீக்கமும் வலியும் இருந்ததோ! இல்லையோ! மனதில் வீக்கமும் கடுமையான வலியும் ஆட்டிப்படைத்தன.

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பர். அவனது நெஞ்சத்தில் இடித்த இடி கண்ணில் மழை பொழிய வைத்தது.

“இவ்வளவு காலம் என்னோடு இவ்வளவு நெருக்கமாகப் பழகிய நண்பனையே என்னால் திருத்த முடியவில்லையே!” என அங்கலாய்த்துக்கொண்டான். அவனுக்கு எந்தவித போதைப்பாவனைகளும் கிடையாது. கெட்ட பழக்க வழக்கங்கள் என்பதும் சொல்கின்ற அளவுக்கு இல்லை. இப்படிப்பட்ட என் நண்பனின் நிலையே இவ்வாறென்றால் மற்றைய இளையர்களின் நிலை?

அவனது சிந்தனைக் குதிரை சற்று வேகமாகவே ஓடத் தொடங்கியது.

சீ என்வயது தோழர்கள் அனைவரும் எப்படியெல்லாம் சீர்கெட்டுப் போயுள்ளார்களே! அனைவரையும் உலக மாயை மாவாய் அரைத்துப்போட்டு விட்டதே.

சென்றவாரம் பாடசாலை மதிலுக்கு அருகாமையில் போதைப்பாவனையில் ஈடுபட்ட இளைஞர் கூட்டத்தின் கைது, ஜப்பார் நானாவின் சிகரட் பைத்தியத்தினால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை, மச்சான் மொஹிதீனின் காதல் விவகாரம், முந்தநாள் ஓடிப்போன சாரா, மீரா குட்டியின் துஷ்பிரயோகம், சிறுவர்கள் அதிகமாகப் போதையில் சிக்கிக் கொண்டிருப்பதாக சென்றவார பயான்.

ஆஹ்ஹ் இதெல்லாம் நினைக்கும் போது என் தலை வெடித்துவிடும் போல இருக்கே! ஊர் காதுக்கு எட்டிய செய்திகளையே இவ்வாறு அடுக்கிக்கொண்டு போகலாமெனில்,

யா அல்லாஹ்! எவ்வளவு மறைமுகமான பாவங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஹும் பாவம் என்றாலே மறைவாகச் செய்வதுதானே!

மயான அமைதி. அறையிலுள்ள கடிகாரமுள் ஓடும் டிக் டிக் ஓசை மிகவும் தெளிவாகக் கேட்டுக்கொண்டிருந்தது. கட்டிலுக்கு அருகாமையில் ஓர் பல்லி சொல்லும் சத்தம் அமைதியைப் பிளந்தது. சூழலில் என்னதான் அமைதிப் புயல் வீசினாலும் அஹ்மதின் உள்ளமோ வேகமாக அடித்தவண்ணமிருந்தது. ஈமானிய உள்ளமல்லவா, தான் மட்டும் சுவனம் செல்லவேண்டும் என நினைக்கும் உள்ளம் அல்லவே. சமூகக் கவலை உள்ளத்தை கீறிக் கிழித்தது. ஒரு ரண வேதனை.

அவனது இறையுள்ளம் நடுங்கத் தொடங்கியது. சமூகத்தின் முதுகெலும்பெல்லாம் இந்த இளைஞர்கள் தானே. இவர்கள் சீராக இருந்தால்தானே இந்த சமூகமே சீராக இருக்கும். இவர்கள் இப்படி உலகப்பாவ அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தால் இறைவனுடனான தொடர்புகள் எவ்வாறு இருக்கும்? மார்க்கம் எங்கே? இவர்களுக்கு எவ்வாறு அர்ஷின் நிழல் கிடைக்கப் போகிறது?

யா அல்லாஹ்! நான் இவர்களை நேர்வழிக்குக் கொண்டு வராவிட்டால் நானுமல்லவா நரகத்தில் இருப்பேன்!

அஹ்மதின் உள்ளம் குமுறியது. தலை சுற்றியது. அப்படியே சுஜூதில் வீழ்ந்தான்.

“யா அல்லாஹ்! எனக்கு ஒரு ஆசை; சுபஹ் தொழுகைக்காக எமது பள்ளி நிரம்பி வழிய வேண்டும். அதனை என் கண்களால் காண வேண்டும்.”

கண்ணிலிருந்து வந்த கண்ணீர் துளிகள் தொழுகை விரிப்பை முத்தமிட்டன.

அதான் ஒலி ஒவ்வொரு வேளைத் தொழுகையையும் அந்த வட்டார மக்களுக்கு நினைவுருத்தியது. சுபஹ் பாங்கின் இனிமை ஓசை அமைதியைக் கிழித்துக்கொண்டு காதை அடைந்தது. பள்ளியின் முதல் வரிசையை முத்தமிட சுறுசுறுப்புடன் எழுந்து சிட்டாய் பறந்தான். பயப்படத் தேவையில்லை, எப்படியும் பள்ளியில் ஒரு வரிசைக்கூட நிரம்பாது.

*************

நாள் முழுவதும் கொடுமைப்படுத்திய கதிரவன் அப்போதுதான் மேற்கு வானில் மறைந்து விட்டிருந்தான். கடைத் தெருவிலிருந்த வேப்ப மரங்களின் காற்று பள்ளிவாசலைச் சுற்றிலும் இருந்த மலர்களின் நறுமணத்தோடு கலந்து சிலு சிலுவென்று வீசியது.

ம:.ரிப் தொழுகை முடித்து விட்டு பள்ளிவாயிலிருந்தவர்கள் வீட்டை நோக்கிக்கொண்டிருந்தனர். அஹ்மதின் முகத்தில் கவலை ரேகைகள். அவனது அறை விழுந்த கன்னத்தில் சுள்ளென்று ஓர் மழைத்துளி. மெதுவாய்த் துடைத்து விட்டு வானத்தை அண்ணாந்து பார்த்தான். கரு முகில்கள் சூழ கொடூரமாகவும் பயங்கரமாகவும் தென்பட்டது வானம். மழை துமியில் துவங்கி துளியாய்க் கொட்டியது.

இரண்டு நாட்களாக தொடர்மழை. “சோ” என்ற மழையோசை காதில் விழுந்தவண்ணமே இருந்தது. மழை ஓய்வதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை.

இலங்கையின் பல இடங்களிலும் கடும் மழை. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரவும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு. நீர் மட்டம் உயரும் அபாயம். பல பகுதிகளில் கடுமையான சேதங்கள். நிவாரண உதவிகள் மக்கள் உதவி பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஜனாதிபதியின் சமூகமளிப்பு உயிரிழப்புக்கள் என பல பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகள் கொட்டை எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

வெள்ளப்பெருக்கு அஹ்மதின் கிராமத்தையும் கடுமையாக சேதப்படுத்தியிருந்தது. அந்தக் கிராமத்தின் பெண்கள் அனைவரும் ஓர் பாடசாலையிலும் ஆண்கள் அனைவரும் ஓர் பள்ளியிலும் ஒன்றுகூட்டப்பட்டிருந்தனர். மனித அழுகுரல் அவலம். கவலை ரேகைகள் தோய்ந்த முகங்கள் கவலையின் உச்சகட்ட நெஞ்சங்கள். நிவாரண உதவிகளில் பல தியாகிகள்.

கிணற்று நீரை எந்த ஆற்றுநீர் அடித்துச் செல்லப்போகிறது என்ற நம்பிக்கையில் சேர்த்து வைத்த செல்வங்களெல்லாம் கண்முன்னாலேயே கரைந்துக் கொண்டிருந்தன.

தேன் கூட்டை தேனீக்கள் மொய்ப்பது போல பள்ளிவாசலில் மக்கள் திரண்டிருந்தனர். அஹ்மதின் கண்கள் ஒருவனை துலாவி துலாவி தேடிக்கொண்டிருந்தன. ஆம், அவன்தான் அலீம்.

சுபஹுடைய நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. அஹ்மத் யாரைத் தேடிக்கொண்டிருந்தானோ, ஆம் அவன்தான். அவனேதான். இருவரும் நேருக்கு நேர். அஹ்மதும் நோக்கினான். அலீமும் நோக்கினான். இருவர் கண்களும் கலங்கின. அந்த நொடி, அஹ்மத் ஓடிவந்து தன் ஆருயிர் நண்பனைக் கட்டித்தழுவினான். அந்தக் காட்சிக்கு சுபஹுடைய அதான் சாட்சி பகிர்ந்துக்கொண்டிருந்தது.

இருவரும் ஒன்றாய் முன் வாரிசையில், அருகருகாமையில் நின்ற வண்ணம் மிகவும் பயபக்தியுடன் தொழுகையை நிறைவேற்றினர். தொழுகையின் முடிவில் அன்று தஹஜ்ஜத் நேரம் கண்ணீர் விட்டு கேட்ட துஆ அஹ்மதின் தலையைத் தட்டியது. முன் வரிசையில் அப்படியே எழுந்து பின்பக்கம் நோக்கினான். பள்ளிவாயல் மக்களால்; பயபக்தியுடன் தொழுத மக்களால் நிரம்பி வழிந்திருந்தது. பக்கத்தில் நண்பன். அவன் எவ்வாறு தன் கண்களால் காணவேண்டும் என்று ஆசைப்பட்டானோ அந்தக் குளிர்காட்சி. அந்தப் பூரிப்பிலேயே சுஜூதில் விழுந்தான்.

“யா அல்லாஹ்! இந்த மக்களுக்கு இப்படிப்பட்ட அனர்த்தத்தின் மூலம் தக்கபாடம் கற்பித்து விட்டாய். என் நண்பனும் இப்போது முன் வரிசையில். உனக்கே அனைத்துப் புகழும்”

விழிகளிருந்து விழுந்த கண்ணீர் அவனது ஈமானிய உணர்வை மெருகூட்டியது.

ரோஜா மொட்டு கொஞ்சம் கொஞ்சமாக இதழ் விரித்து, பூரணமாகப் பூத்துக் காற்றில் குழைவது போன்ற முகத் தெளிவுடன் சுஜூதிலிருந்து எழுந்தான்.

“ظهر الفساد قي البر و البحر بما كسبت ايدي الناس”

மனிதர்கள் தங்கள் கைகளின் மூலம் சம்பாதித்த தீயவற்றின் காரணமாக கரையிலும் கடலிலும் குழப்பம் வெளிப்பட்டு விட்டன” (30:41) என்ற அல்குர்ஆனிய வசனத்துடன் தனது சிறு உபதேசத்தை ஆரம்பித்தார் இமாம்.

முற்றும் .

Sajidh wahab
Hapugastalawa

அஹ்மதுக்கு இரண்டு கண்களும் இருட்டிவிட்டன. இடது காதிலும் விண் என்ற பயங்கர ஒலி. “உய்ங்.” என்ற இரைச்சல் நிற்பதற்கு சில நிமிடங்கள் ஆயின. அலீம் பளாரென்று ஓங்கி அறைவிட்டான். ஐந்து விரல்களும் அப்படியே கன்னத்தில்…

அஹ்மதுக்கு இரண்டு கண்களும் இருட்டிவிட்டன. இடது காதிலும் விண் என்ற பயங்கர ஒலி. “உய்ங்.” என்ற இரைச்சல் நிற்பதற்கு சில நிமிடங்கள் ஆயின. அலீம் பளாரென்று ஓங்கி அறைவிட்டான். ஐந்து விரல்களும் அப்படியே கன்னத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *