நோபல் பரிசு – 2020

  • 8

ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும்.

நோபல் பரிசு ஒன்றுதான் தேச, மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டுதோறும் கௌரவிக்கிறது. நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலைபெற்றிருக்கிறது. இன்று பலரை ஆக்க வழியில் சிந்திக்க தூண்டும் அந்த நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? அழிவுசக்தியை உருவாக்கி அதனால் மனம் நொந்துபோன ஒரு விஞ்ஞானி தனக்கு ஏற்படப்போகும் களங்கத்தை துடைத்துக்கொள்ள உருவாக்கியதுதான் நோபல் பரிசு. அந்த அழிவுசக்தி டைனமைட் எனப்படும் வெடிமருந்து, அந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல்.

1833 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ந்தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கொமில் பிறந்தார் ஆல்ஃப்ரெட் நோபல், நோபலின் தந்தை மேனுவல் நோபல் ஒரு புகழ்பெற்ற பொறியாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தவர் கட்டடங்கள் பாலங்கள் கட்டுவதிலும் வெவ்வேறு வழிகளை கற்களை வெடித்து உடைப்பதிலும் அவர் வல்லவர். ஆனால் ஆல்பர்ட் நோபல் பிறந்த சமயம் தந்தையின் நிறுவனம் நொடித்துப்போனது. பின்னர் ரஷ்யாவுக்கு சென்று தொழில் செய்து பணம் சேர்த்தார் தந்தை, தனது குடும்பத்தையும் அங்கு அழைத்துக்கொண்டார். தனது நான்கு பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு தனியாக பாடங்கள் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்தார்.

ஆல்ஃப்ரெட் நோபலுக்கு 17 வயதானபோது ஸ்விடிஸ், ரஷ்யன், ப்ரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியும். நோபலை வேதியல் பொறியாளராக ஆக்க வேண்டும் என விரும்பிய தந்தை அவரை மேல்படிப்புக்காக பாரிஸ்க்கு அனுப்பி வைத்தார் பாரிஸில் நோபலுடன் படித்த அஸ்ட்ரானியோ ஸ்ப்ராரோ என்ற இத்தாலியர் நைட்ரோ கிளிசரின் என்ற ரசாயனத்தை கண்டுபிடித்திருந்தார். அது வெடிக்கும் தன்மை கொண்டதாலும் ஆபத்தானது என்பதாலும் அதை அப்படியே விட்டுவிட்டார். ஆனால் நோபல் அதைப்பற்றி மேலும் ஆராய விரும்பினார். படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பியதும் தன் தந்தையுடன் இணைந்து எப்படி நைட்ரோ கிளிசரினை கட்டுமான துறைக்கு பயன்படுத்தலாம் என ஆராயத் தொடங்கினார்.

கிரைனியன் போர் காரணமாக அவர்களது தொழில் மீண்டும் நொடித்துப்போனது எனவே அவர்கள் மீண்டும் ஸ்விடனுக்கு திரும்பினர். ஸ்வீடன் வந்த பிறகு நைட்ரோ கிளிசரினை வெடி மருந்தாக உருவாக்குவதில் ஆராய்ட்சி செய்தார் நோபல் அது அபாயமான பொருள் என்று தெரிந்தும் அதனை பாதுகாப்பானதாக ஆக்கினால் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த முடியும் என்று நம்பினார். ஆனால் அதற்கு அவர் செலுத்திய விலை அதிகமாக இருந்தது. அவரது சோதனைகளின் பொது சிலமுறை பயங்கர வெடிப்புகள் ஏற்பட்டு அவரது தொழிற்சாலைகள் தரைமட்டமாயின. பணியாளர்கள் சிலர் உயிரழந்தனர். அவர்களுள் ஒருவர் நோபலின் இளைய சகோதரர் இமில். உயிர் பலிக்கு பிறகும் ஆராய்ச்சிகளை தொடர்ந்தார் நோபல். ஆனால் ஸ்வீடன் அரசாங்கம் அதற்கு தடை விதித்தது.

மனம் தளராத நோபல் நைட்ரோ கிளிசரினுடன் பல்வேறு பொருட்களை கலந்து சோதனை செய்து பார்த்தார். கிஸல்கள் என்ற ஒரு வகை களிமண்ணுடன் சேர்த்து பிசைந்தால் பாதுகாப்பான வெடிமருந்து கிடைக்கும் என்பதனை கண்டுபிடித்தார். அந்த தனது கண்டுபிடிப்புக்கு டைனமைட் என்று பெயரிட்டார். டைனமைட் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1866. கிரேக்க மொழியில் டைனமைட் என்றால் சக்தி என்று பொருள். அவரது அந்த கண்டுபிடிப்பு பல தொழில்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. உதாரணத்திற்கு காடு மேடுகளை அழிக்கவும், நிலத்தை சமப்படுத்தவும், மலைகளை குடைந்து பாதைகள் அமைக்கவும், பழைய கட்டடங்களை சில நிமிடங்கில் தகர்க்கவும் முடிந்தது.

ஆல்ப்ஸ் மலையை குடைந்து செயின்ட் கடாட் குகைப்பாதை அமைக்க நோபலின் டைனமைட்தான் பேருதவி புரிந்தது. அவரது கண்டுபிடிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் 90 டைனமைட் தொழிற்சாலைகளை உருவாக்கினார் பெருமளவில் செல்வம் சேரத்தொடங்கியது. ஆனால் ஆக்கசக்தியாக தான் உருவாக்கியதை அழிவுசக்தியாக சிலர் பயன்படுத்தத் தொடங்கியதை கண்டு மனம் பதைத்தார் நோபல். 1888 ஆம் ஆண்டு நோபலின் சகோதரர் லுட்விக் காலமானார். ஆனால் நோபல்தான் இறந்துவிட்டார் என நினைத்த பத்திரிகைகள் அழிவுசக்தியை உருவாக்கி கோடிஸ்வரரான ஆல்ஃப்ரெட் நோபல் காலமானார் என்று செய்தி வெளியிட்டன. அதனை படித்து அதிர்ந்து போன நோபல் தனது உண்மையான மரணத்துக்குபின் உலகம் தன்னை பழிக்கப்போகிறது என்று கலங்கினார்.

அந்த களங்கத்தை அகற்ற ஒரே வழி தனது செல்வத்தை எல்லாம் உலக நன்மைக்காகவும் மனுகுல மேன்மைக்காகவும் பாடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்குவதுதான் என்று முடிவு செய்தார். உலகம் முழுவதிலும் இருந்த 90 க்கும் மேற்பட்ட டைனமைட் தொழிற்சாலைகளிலிருந்தும், ரஷ்யாவில் எண்ணெய் கிணறு அபிவிருத்தியிலிருந்தும் கிடைத்த பெரும் செல்வத்தைகொண்டு ஓர் அறக்கட்டளையை நிறுவினார். 1890 ஆம் ஆண்டு தான் எழுதிய உயிலில் 9 மில்லியன் டாலரை நோபல் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். அந்தத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைக்கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு மிகச்சிறந்த மனுகுல சேவை ஆற்றுவோருக்கு பரிசு வழங்க முடிவு செய்தார். இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி தனது 63 ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.

ஆல்ஃப்ரெட் நோபல் மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது 1901 ஆம் ஆண்டு முதல் அவர் விருப்பப்படியே நோபல் பரிசுகள் வழங்கப்பட தொடங்கின. ஐந்து துறைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நோபல் பரிசு 1969 ஆண்டிலிருந்து பொருளாதாரம் என்ற புதிய பிரிவையும் சேர்த்துக்கொண்டது. இது ஸ்வீடனின் நடுவண் வங்கியான வெரிஜஸ் ரிக்ஸ் பாங்கின் 300 ஆம் ஆண்டு கொண்டாட்ட நினைவு நாளின் போது நோபலின் நினைவாக பொருளியலில் சீர்மிகு பங்களிப்புக்களை மேற்கொண்டவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இன்றுவரை 881பேர் நோபல் பரிசை வென்றிருக்கின்றனர். தன்னை அழிவுசக்தியை கண்டுபிடித்த நோபல் என்றில்லாமல் அறிவாளிகளை கௌரவிக்கும் நோபல் என்று உலகம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினார் ஆல்ஃப்ரெட் நோபல். அவரது எண்ணம் வீண்போகவில்லை.

இவ்வாறு நோபல் பரிசு வழங்குவதற்கு அடித்தளமிட்டவர். நோபல் பரிசினை பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கப் பதக்கம், பட்டயம் மற்றும் பணப்பரிசு ஆகியவை வழங்கப்படும் (2017 ஆண்டின் படி ஒவ்வொரு நோபல் பரிசும் 90,00,000 SEK ஆகும்) 1980 இதற்கு முன்பு 23 கேரட் தங்கத்தால் ஆன பதக்கங்கள் செய்யப்பட்டன அதற்குப் பின்பு 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட 18 கேரட் பசுந்தங்கத்தால் செய்யப்பட்ட பதக்கம் வழங்கப்பட்டது.

1901ம் ஆண்டு முதல் 2016 வரை நோபல் பரிசுகள் 579 முறை 911 நபர்களுக்கும், பல்வேறு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படமாட்டாது. எனினும் பரிசு அறிவித்த பின்பு அதைப் பெறுவதற்கு முன்னர் பரிசினைப் பெறுபவர் இறந்து விட்டால் அவருக்கு பரிசு வழங்கப்படும் பொதுவாக மூன்று நபர்களுக்கு மேல் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட மாட்டாது இருந்தாலும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும்போது மூன்று நிறுவனங்களுக்கு மேல் பகிர்ந்தளிக்க முடியும்.

நோபல் நிறுவனமானது ஒரு தனியார் நிறுவனமாக1990 ஆம் ஆண்டு ஜூன் 29 ல் ஏற்படுத்தப்பட்டது. இதன் முக்கிய பணியில் நிதி மேலாண்மை மற்றும் பரிசு வழங்குவது சம்பந்தமான நிர்வாகம் ஆகியவை ஆகும். ஆனால் இந்த நிறுவனம் நோபல் பரிசைப் பெறுவதற்கான நபர்களைத் தேர்வு செய்வதில் பங்கு கொள்ளாது.

நோபல் பரிசினை பெறுவதற்கான நபர்களைத் தேர்வு செய்யும் பணிக்கு நோபல் குழுவானது பொறுப்பேற்று இருக்கிறது அதில் ஒவ்வொரு பரிசுக்கும் ஒரு குழு என மொத்தம் 5 நோபல் குழுக்கள் உள்ளன.

இயற்பியல் வேதியல் மருத்துவம் மற்றும் இலக்கியத்திற்கான பரிசுகளை அதனைச் சார்ந்த நிறுவனக் குழுக்கள் பரிந்துரை செய்யும். இப் பரிந்துரையில் இருந்து நோபல் சபையானது இறுதிப் பெயரை பட்டியலிடும்

5-ஆவது நோர்வே நோபல் குழுவானது அமைதிக்கான நோபல் பரிசினை அறிவிக்கும். அறிவியலுக்கான ஸ்வீடன் அரசு நிறுவனமானது பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை அறிவிக்கிறது.

முந்திய ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமே இப்பரிசு வழங்கப்படும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசுகள் வழங்கப்பட வேண்டும் என்பது விதி. எக்காரணம் கொண்டும் நோபல் பரிசு திரும்பப் பெறத்தக்க ஒரு பரிசு அல்ல.

அமைதிக்கான நோபல் பரிசு நோர்வேயிலும் இதர நோபல் பரிசுகள் ஸ்வீடன் நகரிலுள்ள ஸ்டாக் ஹோம் நகரத்தில் ஆல்ஃபிரட் நோபலின் இறந்த தினமான டிசம்பர் 10 ல் வழங்கப்படும் இப்பரிசை பெறுபவர்கள் தனது துறை சம்பந்தமாக ஒரு சொற்பொழிவை பரிசு வழங்கும் விழாவிற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பதாக ஆற்ற வேண்டும்.

அமைதிக்கான நோபல் பரிசானது அதேநாளில் நோர்வேயின் தலைநகரான ஆஸ்லோவில் நோர்வே நோபல் குழுவினரால் நோர்வே நாட்டின் மன்னனின் முன்னிலையில் வழங்கப்படும்.

இவ்வாறு வழங்கப்படும் இப்பரிசானது 2020 இல் 6 துறைகளில் 11 பேருக்கும் ஒரு நிறுவனத்திற்குமாக வழங்குகின்றது. அவை

மருத்துவம்

அமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டெர், சார்ல்ஸ் எம். ரைஸ், பிரிட்டிஷ் விஞ்ஞானி மிஷெல் ஹோட்டன் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் பெரும் சுகாதார பிரச்சனையாக இருக்கக்கூடிய ரத்தத்தில் பரவும் “ஹெபடைட்டிஸ் சி” வைரஸை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.

இயற்பியல்

ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில், ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. கருந்துளை பற்றிய ஆய்வுக்காக 3 பேருக்கும் இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.

வேதியல்

இமானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னா ஆகிய 2 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. மரபணு சார்ந்த ஆராய்ச்சிக்காக 2 பேருக்கும் இந்த கௌரவம் அளிக்கப்படுகிறது. இமானுவேல் சார்பென்டியர் பிரான்ஸ் நாட்டவர் மற்றும் ஜெனிஃபர் ஏ டவுட்னா அமெரிக்கவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதி

`உலக உணவுத் திட்டம் (World Food Programme-WFP)’ என்ற அமைப்புக்கு இவ்வருடத்துக்குரிய அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

1962-ல் இரான் நாட்டில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் அதைத் தொடர்ந்து அக்டோபரில் தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட புயல், அல்ஜீரியாவில் தவித்த 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் போன்ற பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு 1963-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் உலக உணவுத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு இத்தாலி நாட்டின் ரோம் நகரைத் தலைநகராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நிலநடுக்கம், சுனாமி போன்ற இக்கட்டான காலகட்டங்களில் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த அமைப்பின் வழியே உணவளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பட்டினியால் வாடி வதங்கும் 83 நாடுகளில் உள்ள 91 மில்லியன் மக்களுக்கு உணவளித்து வருகிறது இந்த அமைப்பு. `உணவானது ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று’ என்பதை மையக்கருத்தாகக் கொண்டு சேவையாற்றி வரும் உலக உணவுத் திட்டத்துக்கு 2020-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இலக்கியம்

அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயி க்ளூக்கிற்கு இந்த ஆண்டிற்கான இலக்கியத்திற்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. Unmistakable Poetic Voice என்ற திறனிற்காக அவருக்கு இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

பொருளாதாரம்

ஏல முறைகள் குறித்த ஆராய்ச்சிக்காக பொருளாதார நிபுணர்கள் பால் ஆர்.மில்க்ரோம், ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்கு இந்தாண்டுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஏலக் கோட்பாட்டின் மேம்பாடு, புதிய வடிவமைப்பு ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளதற்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது . இவர்களின் இந்த கண்டுபிடிப்பு உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வணிகர்கள், வரி செலுத்துவோருக்கு பயன்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் நோபல் பரிசின் பெயர் உச்சரிக்கப்படும் போதேல்லாம் அந்த உன்னத மனிதனைத்தான் உலகம் நினைவு கூறுகிறது. உண்மையில் அவர் அழிவுசக்தியை கண்டுபிடிக்கவில்லை. ஆக்கசக்தியாக நோபல் கண்டுபிடித்ததை உலகம்தான் அழிவுசக்திக்கு பயன்படுத்தியது இன்றும் பயன்படுத்துகிறது. இருப்பினும் டைனமைட்டை கண்டுபிடித்ததிலும் பின்னர் நோபல் பரிசை அறிமுகம் செய்ததிலும் ஆல்ஃப்ரெட் நோபலின் நோக்கமும் சிந்தனையும் உயரியதாக இருந்தன. அதனால்தான் இன்றும் அவரது பெயர் வானம் வரை உயர்ந்து நிற்கிறது.

Reference

  1. https://www.tnpscthervupettagam.com/ta/articles-detail/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81?cat=gk-articles
  2. https://www.bbc.com/tamil/global-54419103
  3. https://tamil.examsdaily.in/nobel-prize-2020-winners-in-literature/
  4. https://tamil.samayam.com/latest-news/international-news/2020-nobel-prize-for-economics-is-awarded-to-two-experts/articleshow/78619750.cms
  5. https://www.vikatan.com/news/international/nobel-peace-prize-2020-awarded-to-world-food-programme
  6. https://www.maalaimalar.com/news/world/2020/10/06161636/1952565/Nobel-Prize-2020-for-Physics-awarded-to-Roger-Penrose.vpf
  7. http://www.kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=1336&id1=25&id2=0&issue=20111017
N.SOHRA JABEEN
AKKARAIPATTU
SEUSL

ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது…

ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *