இரு மணங்கள் இணையும் நேரம்
அவளோடு சில நொடிகள்
தொடர் -08
நாட்கள் விரண்டோடி பேசி முடித்த பத்தாம் திகதியும் வந்தேறியது. கல்யாண வேலைகள் யாவும் தடல் புடலாக நடந்து கொண்டிருந்தன. இரு வீடுகளும் பெரும் மக்கள் திரள்களால் நிரம்பிக் கொண்டாட்டம் கண்டன.
கல்யாணக் கனவொன்று கைக்கூடி வந்து ஆனந்தக் கண்ணீரால் உள்ளங்கள் குளிர்ந்தன எண்ணங்கள் போலவே.
“மாமி இங்க வாங்களன் வந்து இடலாம் கொஞ்சம் சரி பாருங்க எல்லாம் சரியா இருக்கான்னு.”
பசியாவின் மைனி தான் அது மாப்பிள்ளை வீட்டாருக்கு என்று தனித்து வைக்கப்பட்டிருந்த இனிப்புப் பண்டங்களை ராவியா உம்மாவிடம் சரி பார்க்க சொன்னாள். அவரும் மிக உன்னிப்பாக எல்லாவற்றையும் சரி பார்த்து விட்டு வரும் போதே ஹஸீனாவும் தென்பட்டாள்.
வருடக்கணக்காய் மறைந்து போய் இருந்த அவளது தனித்துவமான புன்னகையும் அழகும் உட்சாகமும் அன்றைய நாள் தான் வெளிப்பட்டிருந்ததை கண்டு அவளுக்கு மனதில் பெரும் திருப்தியே குடி கொண்டு விட்டது.
இது போல அவளுக்கும் விரைவில் ஒரு நல்ல திருமணம் வாய்த்திட அவள் மனதால் ஆயிரம் முறை பிரார்த்தித்திருப்பாள். அதில் ஒன்று கூடவா ஏற்றுக் கொள்ளப்படாமல் இருக்கும். எல்லாம் இறைவன் நாடிய படி சரியான சமயத்தில் கைக்கூடி வரும். என்று எண்ணிக் கொண்டு பெருமூச்சிட்டு நகர்ந்தாள்.
கடிகார முற்கள் சரியாக நான்கு மணியை அடையாளம் காட்டி நிற்க சொந்த பந்தம் எல்லாம் நஸீம் ஹாஜியின் வீடு முழுக்க நிரம்பி விட்டார்கள். மாப்பிள்ளை வரும் நேரமது. யாரவன் தேவதைக்கேற்ற தந்த குமாரன் தான் சற்றும் சரியாத கம்பீரம். சிவப்பிள்ளை என்றாலும் ஆண்களுக்கே அழகூட்டும் பொதுமை நிறத்தால் வர்ணம் தீட்டப்பட்டவன்.
கரு கருவென சற்று தடித்த புருவங்கள் கண்ணிமைகள் கண்களுக்கு அழகூட்ட, விழியசைத்தாலே வீழ்ந்திடுவாள் போலும் அவள். இனி சொல்ல வார்த்தை இல்லை பேரழகன் தான் அவன். திருமணத்துக்கான சட்டதிட்டங்கள் நடந்து முடிந்து இறுதியாக மணப்பெண் இருந்த அறை நோக்கி அழைத்து வரப்பட்டான் மாப்பிள்ளை கியாஸ்.
இதுவரை கண்டிராத முகங்கள் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொள்கின்றன. தன் பூ விழியசைத்து அவனைப் பார்த்தாள். எதார்த்தமான அவன் பார்வையில் அவள் பார்வை விழாமலும் இல்லை. அவன் ரசிக்கும் அளவிற்கு அவள் அழகும் அவன் கண்களுக்கு படவில்லை.
அவள் அருகில் நின்றதும் மேலும் கற்சிலை போலானான் கியாஸ். அவன் மனதை யார் தான் படிப்பார். தலை துண்டிக்கப்பட்ட சேவல் பூமியில் விழுந்து துடிப்பது போல அவனுடைய உணர்வுகள் பட படத்தன.
கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத பாவியாகி விட்டேனே என்ற குற்ற உணர்வு அவனைத் தினம் தினம் நோகடித்துக் கொண்டிருந்தது. வாழ்க்கையே வெறுச்சோடிப் போன உணர்வு அவனுக்குள் அவனது வருத்தம் எல்லாம் பசியா என்ற பாத்திரத்தின் மேல் அல்ல அவள் அவனுடைய தாயால் தேர்ந்தெடுக்கப் பட்டவள் என்பதில் தான்.
அவனுக்கு அருகிலேயே தன் திருமண வாழ்க்கை குறித்து என்றோ கண்டு வைத்திருந்த கனவெல்லாம் நிறை வேறப் போகும் நல்லவன் தனக்கு கணவனாக வாய்த்திருக்கின்றான் என்ற திருப்தியில் நிம்மதியாக நின்றிருக்கும் பசியாவின் மன நிலையை உணருமளவிற்கு அவனுடைய புத்தியும் மனமும் இடம் கொடுக்கவில்லை என்பதே உண்மை.
எழுதப்பட்டதை எண்ண செய்ய முடியும் இணைய வேண்டிய இது இரு கோடுகள் இணையும் போது தடுப்பார் தான் யார். இறைவனின் தீர்ப்புக்கு தலையசைத்து இரு வேறுபட்ட துருவங்களும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டன.
வீட்டினை அடைத்து நிரம்பியிருந்த கூட்டம் மெல்ல மெல்ல கலைந்து செல்ல ஆரம்பித்து நெருங்கிய உறவினர்கள் மட்டும் ஆங்காங்கே ஊர்ந்து திரிந்தனர். சிறார்களின் ஆனந்தக் கூச்சல் இன்னும் அந்த கல்யாண வீட்டின் கல கலப்பை மெருகூட்டிக் கொண்டிருந்தன.
திருமணமும் முடிந்து தாய் வீட்டில் இரண்டு நாட்கள் கழிந்தது மூன்றாம் நாள் தாய் வீடு தாண்டி தன் கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்க தயாராக்கப்பட்டாள் பசியா. ஊர் விட்டு ஊர் போகப் போகிறாள். இது நாள் வரை கூடிக் குழாவிய குடும்பத்தின் அரவனைப்பினைத் தாண்டி புதுப் புது உறவுகளோடு அறிமுகம் காணப் போகிறாள்.
வான் தேசத்தை விட்டு அந்த வெண்மதி அகன்று செல்வது போல பிரகாசம் இழந்து விட்ட பாழடைந்த பங்கலா போல் பசியா வீட்டினர் அவர் தம் மனங்களில் வெறுமையை உணர்ந்தார்கள்.
பிரிவின் வலி ஒரு பக்கம் கிடைத்த வாழ்க்கையின் மகிழ்ச்சி ஒரு பக்கம். எல்லாமும் சேர்ந்து
ஆனந்தம் வலி கலந்த கண்ணீராய் வெளி வந்தது பசியாவிற்கு. சாயலில் ஒத்திருந்த ஹஸீனாவின் தூரம். அவளை நினைக்கும் போதே வாட்டி எடுக்க ஆரம்பித்தது. அவளை தனியாக விட்டு செல்வது. அதிகம் அதிகம் பசியாவை யோசிக்க வைத்தது. வலிக்கச் செய்தது. ஹஸீனாவை கட்டியணைத்து அழுதாள். அவளுக்கும் இவள் பிரிவை அத்தனை இலகுவில் சகித்துக் கொள்ள முடியுமா என்ன? இருந்தாலும் ஏற்றுக் கொண்ட விதியை தாங்கிக் கொண்டாள்.
மறு புறமாய் மபாசாவையும் சனாவையும் பிரியப் போகும் வலி. மபாசா அவள் அருகில் தான் நின்றிருந்தாள். சனா மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அது இன்னும் அதிகமாக பசியாக்கு கவலையை அதிகரிக்கச் செய்தது. அவரவர் சூழ்நிலையும் விதியும் தான் சில சமய களில் எதிர் பார்ப்புக்களை மாற்றிப் போடுகிறது.
பிரார்த்தனையோடு மகிழ்ச்சியோடுமாக பசியாவும் கியாஸும் வழியனுப்பி வைக்கப் பட்டார்கள்.
எல்லா உறவுகளும் தாண்டி கணவன் என்ற உறவில் உருவான நம்பிக்கையில் மண வாழ்க்கை குறித்த எதிர் காலம் பற்றிய எதிர் பார்ப்போடும் ஆசைகளோடும் ஆயிரமாயிரம் கனவுகளோடும்,
புதுப் பாதையை நோக்கி நகரும் பசியாவின் வாழ்க்கையை வரவேற்கக் காத்திருக்கும் விதி இனித்தான் அவள் வாழ்க்கையோடான விளையாட்டை ஆரம்பிக்கப் போகின்றது என்ற உண்மையை கனவிலும் நினைத்திருப்பாளோ என்னவோ.
அவளுடைய நம்பிக்கை எதிர்பார்ப்பு எல்லாம் வெறும் காணல் தான் என அவள் அருகில் சென்று உணரப் போகும் தருணத்திற்கான ஆரம்பம் இது.