எரிக்கப்படும் சடலங்களும் மறைக்கப்படும் அரசியலும்

  • 19

இலங்கையில் நல்லாட்சி வீழ்ச்சியின் பின்னர் உருவாகியுள்ள புதிய ஆட்சி முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையும் என எதிர்வுகூறப்பட்டவை நிதர்சனமாக்குவது போல் களநிலவரங்கள் அமைந்துள்ளன.

இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை நடைமுறைப்படுத்த இலகுவான ஒரு காரணியாக புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அதேமாதத்தில் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனாவும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. ஆனால் அக்கொரோனா இனமத பேதமின்றி பரவுகையில் இலங்கையிலோ இனமத பாகுபாட்டுடன் கொரோனாவை பரப்பப்பட்ட வண்ணமுள்ளது.

இதனால் நாடாளாவிய ரீதியில் சிங்கள, முஸ்லிம், தமிழ் என அனைத்து கிராமங்களிலும் கொரோனா தொற்றை உறுதி செய்ய PCR பரிசோதனை செய்தாலும்
அவற்றில் முஸ்லிம் கிராம, பிரதேச பரிசோதனைகளே ஊடகங்களின் பேசு பொருளாக மாறியுள்ளன.

அவ்வாறு PCR பரிசோதனை மேற்கொண்ட பின்னர் அடுத்த கட்டமாக குறித்த முஸ்லிம் கிராமம் தனிமைப்படுத்தப்படுகிறது. அல்லது ஊரடங்கு அமுலாக்கப்படுகிறது.

மறுபுறம் முஸ்லிம் வியாபாரிகளின் பிரதான வியாபாரத்தளமாக உள்ள இலங்கையின் பிரதான வியாபார சந்தை கட்டமைப்புகளை கொண்ட பெட்டாஹ்வின் சந்தையை வீழ்த்துவதற்கு கொழும்பை தூய்மைப்படுத்தல் என்ற நகர திட்டமிடல் முறையின் கீழ் பெட்டாஹ்வை தளமாக கொண்டு இயங்கும் சந்தைகள் வேறு பிரதேசங்களுக்கு மாற்றப்பட்ட வண்ணமுள்ளது. ஆரம்பத்தில் 2014 இல் மீன் சந்தை பெஹலிகயகொடைக்கு மாற்றப்பட்டது. தய்போது மெனிக் மார்க்கெட் பேலிய கொடைக்கு மாற்றப்பட்டுவிட்டது.

அதாவது கொழும்பு முஸ்லிம்களின் அதிகமான வியாபாரத்தளங்கள் பெட்டாஹ் சந்தையை மையமாகக் கொண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே காணப்படுகிறது. இங்கு வருகின்ற வாடிக்கையாளர்கள், பேலியகொடையை நோக்கி நகர்வதால் பெட்டாஹ்வை மையமாககக் கொண்ட அருகிலுள்ள ஏனைய பிரதேச வணிகங்களும் முடக்கப்படுகின்றது.

மறுபுறம் ஏனைய முஸ்லிம் பிரதேச வியாபார நிலையங்கள் தனிமைப்படுத்தல், ஊரடங்கு சட்டம் காரணமாக முடக்கப்படுவதால் கிராமிய மட்டத்தில் முஸ்லிம் கிராமங்களில் பொருளாதார வீழ்ச்சியை உருவாக்க முற்படுகின்றனர்.

அதாவது கொரோனா தொற்றைக் கொண்டு முஸ்லிம் பிரதேசங்களை தொடர் தனிமைப்படுத்தல், கொழும்பு பெட்டாஹ் சந்தை கட்டமைப்பை பேலியகொடை நோக்கி நகர்ந்துதல் என்பனவற்றின் திரைமறைவில் காய் நகர்த்தல்கள் இடம் பெறுகின்றது. இத்தருணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் அவர்கள் வழங்கிய நேர்காணல் ஒன்றில், “இலங்கை முஸ்லிம்களின் பொருளாதாரம் 2015 இல் 30% ஆக இருந்த பொருளாதாரம் 10% ஆக குறைவடைந்துள்ளது.” என்று குறிப்பிட்டது கவனம் செலுத்த வேண்டிய ஒரு விடயமாகும்.

மறுபுறம் இலங்கை அரச பரப்பில் மாகாண சபைத் தேர்தலை பேசு பொருளாக காட்ட முனைந்தாலும், திறை மறைவில் புதியதொரு அரசியலமைப்பு யாப்பை அறிமுகப்படுத்தலுக்கான அழுத்தமே அதிகரித்துள்ளது. அதனால்தான் பௌத பீடமொன்று மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னால் அரசியலமைப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துமாறு கூறுகையில் மறுபுறம் தினம் குறிப்பிடாது மாகாண சபைத் தேர்தலை பிற்போடப்பட்டுள்ளது.

இந்த மாகாண சபைத் தேர்தல் என்றால் ஏனைய சமூகங்களை விட தமிழ் சமூகத்திற்கு கரிசணை அதிகம் ஏனெனில் தமிழ் பேசும் வட பகுதி மக்களின் உந்துதல்கள் மற்றும் இந்தியா அரசின் அழுத்தம் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரதிபலனே மாகணசபையாகும்.

மாகாண சபையின் முக்கியத்துவத்தை ஓர் எளிய முறையில் எடுத்துக் கூறுவதாக இருந்தால்,

கடந்த 2013 – 2019 வரையான காலப்பகுதியில் தென்மாகாண சபையில் தமிழ், முஸ்லிம் பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனத்தில் முஸ்லிம் பட்டாதாரிகளை புறக்கணிக்கப்பட்டு வண்ணமிருந்தது. அக் காலப்பகுதியில் மாகாண சபையின் கட்டுப்பாட்டில் இருந்த முஸ்லிம் பாடாசாலைகளுக்கு வழங்கப்படாத ஆசிரிய நியமனங்கள் மாகாண சபை கலைக்கப்பட்ட பின் ஆளுனர்களின் அதிகாரத்தின் கீழ் மாகாணங்கள் வந்ததன் பின்னரே வழங்கப்பட்டது. இங்கு சுமார் 6 ஆண்டுகளாக சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றி தென் மாகாண சபையில் உரையாட முஸ்லிம் உறுப்பினர்கள் குறித்த காலப்பகுதியில் தென் மாகாண சபையில் இல்லாமை மிகப் பாரியதொரு குறைபாடாகும்.

குறித்த பிரதேச மாகாண சபையின் கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலைகள், பிரதேச சபை, பிரதேச செயலகங்கள், மற்றும் மாகாண சபையின் கட்டுப்பாட்டில் உள்ள அரச நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்புகளை வழங்குவது மாகாண சபை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வட கிழக்கு உட்பட நாடாளாவிய ரீதியில் மாகாண சபைகள் இருப்பதாலும், அவற்றிற்கு சிறுபான்மை உறுப்பினர்கள் தெரிவாகுவதாலும் குறித்த மாகாண சிறுபான்மை மக்களுக்கு சில சலுகைகள் உள்ளன. என்றாலும் ஒட்டுமொத்த நாடு என்று நோக்குகையில் பெரும்பான்மை சமூகத்திற்கு மாகாண சபைகள் தேவையற்ற விடயமாகும். மாகாண சபைகள் நீக்கப்பட்டால் நான் குறிப்பிட்ட அனைத்து தொழில் வாய்ப்புகளும் மத்திய அரசினாலே வழங்க வேண்டும்.

அடுத்த விடயம் யாப்பு மாற்றம், தற்போது நாட்டில் 1978 ஆம் ஆண்டின் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு உள்ளது அதுவும் கடந்த 42 ஆண்டுகளில் 20 முறை திருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய அரசியலைப்பை அறிமுகப்படுத்துவதாக வாக்களித்தே தற்போது புதிய அரசு ஆட்சிக்கு அதற்குரிய படிமுறைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.

அதன் ஒரு கட்டமாக பொது மக்களிடம் ஆலோசனை பெறும் கட்டமொன்றுள்ளது அதற்கான ஊடக அறிக்கைகளும் கடந்த ஒக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த அறிக்கையின்படி புதிய அரசியலமைப்பு தொடர்பில் 12 தலைப்புகளின் கீழ் கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அரசின் தன்மை, அடிப்படை உரிமை, மொழி, அரச கொள்கையை வழிநடத்தும் கோட்பாடுகள் மற்றும் அடிப்படை கடமைகள், நிறைவேற்றதிகாரம், பாராளுமன்றம், மக்கள் கருத்துக்கணிப்பு, வாக்குரிமை, தேர்தல், அதிகார பரவலாக்கல், அதிகாரப் பகிர்வு, நீதித்துறை, அரச நிதி, பொது மக்கள் பாதுகாப்பு, வேறு ஆர்வம் செலுத்தப்படுகின்ற துறைகளின் கீழ் மக்கள் கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்க முடியும் என்றிருந்தது.

இதுவும் நாம் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான விடயம் ஏனெனில் இங்கு மொழி என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் 30 ஆண்டுகள் விடுதலைப் புலிகளின் போராட்டம் இடம் பெற்றது அப் போராட்டத்தின் ஆரம்பப்புள்ளியை அவதானிக்கையில் தேசிய மொழியாக எதை பயன்படுத்துவது என்று 1956 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினையில் ஆரம்பமாகின்றது.

குறிப்பாக இலங்கையில் தற்போது நான்கு பிரதான பிரச்சி கொரோனா சடலங்கள் எரிப்பு, பொருளாதார வீழ்ச்சி, மாகாண சபைத் தேர்தல், அரசியமைப்பு மாற்றம் என்பவற்றை குறிப்பிடலாம். ஆனால் இன்று நம் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறோம் கொரோனாவில் மரணித்தால் அடக்குவதா அல்லது எரிப்பதா என்பது பற்றி மாத்திரமே. ஆனால் இப்பிரச்சினை தீர்க்க முடியுமான இலகுவான பிரச்சினை இதனை தீர்க்காமல் இருப்பதற்கான காரணம் நாட்டில் கொரோனா நிலைமையில் பதிவாகியுள்ள பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை போன்ற பிரச்சினைகள் பற்றி சமூகம் சிந்திக்காமல் இருப்பதற்காகும். அடுத்த விடயம் பிரதேச அரச வேலைவாய்ப்பு, அதிகார பரவலாக்கம் என்பவற்றை கொண்ட மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டிய சிறுபான்மை மக்களின் அபிலாசைகள் போன்றன பற்றி சமூகம் சிந்தித்து அதற்கான தீர்வுகள் பற்றி சமூகத்தில் கலந்துரையாடமல் இருப்பதற்காகும்.

அதாவது நாம் கொரோனாவில் மரணித்தோரை அடக்குதல், பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள், மாகாண சபைத் தேர்தல், பொருத்தமான அரசியலமைப்பு மாற்றம் என அனைத்து விடயங்களிலும் சமமான அளவு கரிசணை செலுத்த வேண்டும்.

Ibnuasad

இலங்கையில் நல்லாட்சி வீழ்ச்சியின் பின்னர் உருவாகியுள்ள புதிய ஆட்சி முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையும் என எதிர்வுகூறப்பட்டவை நிதர்சனமாக்குவது போல் களநிலவரங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை நடைமுறைப்படுத்த இலகுவான ஒரு காரணியாக புதிய…

இலங்கையில் நல்லாட்சி வீழ்ச்சியின் பின்னர் உருவாகியுள்ள புதிய ஆட்சி முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையும் என எதிர்வுகூறப்பட்டவை நிதர்சனமாக்குவது போல் களநிலவரங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை நடைமுறைப்படுத்த இலகுவான ஒரு காரணியாக புதிய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *