முகவரி தேடும் முகங்கள்

  • 8

சொந்த நாட்டில் முகவரி தொலைத்த சமூகமாக சிறிது சிறிதாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோம். எப்போதுமே எல்லாம் நடந்த பின் ஒப்பாரி வைப்பதே நமது வழக்கம் என்பதால் சமூகப் பார்வை ஒரு இடத்தில் குவிவதற்கு இன்னும் பல காலங்கள் தேவைப்படும்.

ஏனைய சமூகங்களை ஒப்பிடுகிறோமோ இல்லையோ, கருத்து முரண்பாட்டில் கொடி கட்டிப் பறக்கும் உலக சமூகங்களின் பட்டியலில் இலங்கை முஸ்லிம்களுக்கு நிச்சயம் இடமுண்டு. நின்று நிதானித்து ஆராய்ந்து பார்த்தால், தமக்குத் தாமே வரையறுத்துக் கொண்ட அறிவு எல்லைக்குள்ளிருந்தே இலங்கை முஸ்லிம் சமூகம் இச்செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

திண்ணைகளில் அமர்ந்து அரபு, தமிழ் மற்றும் அல்-குர்ஆன் வாசிப்பு, மனனம் என்று ஏதோ ஒரு வகையில் கல்வித்துறைக்குள் கால் பதித்துக் கொண்ட நம் முன்னோர் 19ம் நூற்றாண்டில் மதரசாக்களை உருவாக்கி ஆலிம்களையும் உருவாக்கினர். ஆயினும் நவீன மயப்படுவதில் எப்போதும் தயக்கமிருந்து கொண்டேயிருந்தது.

எந்த அளவுக்கு என்று சொன்னால், முஸ்லிம் சமூகத்தில் ஒருவர் சப்பாத்து அணிவது கூட விமர்சனங்களையும் வாதப் பிரதிவாதங்களையும் உருவாக்கியிருந்தது. ஹாஜி இஸ்மாயில் எபன்டி என அறியப்பட்ட இஸ்மாயில் லெப்பை மரிக்கார் ஆலிம் (1854 – 1896) 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கொழும்பில் சப்பாத்து ஆலிம் என்று கேலிக்குள்ளாக்கப்பட்ட ஒருவராவார். ஹஜ்ஜுக்கு செல்லும் வழியில் எகிப்து, துருக்கி போன்ற நாடுகளுக்கும் சென்று திரும்பிய அவர் நாடு திரும்பிய பின்னர் மேலை நாட்டவர் போன்று காலணி அணிய ஆரம்பித்ததன் விளைவே அது.

அத்துடன், துருக்கியில் ஆட்சியாளருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்தமையும் பாரிய அளவில் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. அதன் பின்னணியில் அவர் குப்ரில் வீழ்ந்து விட்டதாக பத்வாவும் வழங்கப்பட்டிருந்தது. இதனை 120 வருடங்கள் கழித்து மீள் நோக்கிப் பார்க்கையில் எவ்வாறு ஆச்சரியமாக இருக்கிறதோ அவ்வாறே இன்றைய நம் சமூகத்தின் நடவடிக்கைகள் சில, எதிர்காலத்தில் முரண் நகையை உருவாக்கப் போகிறது. இன்று வாழும் நாம் நம் செயற்பாடுகளை நியாயப்படுத்த எடுத்துக் கொள்ளும் அளவுகோல்கள் இன்னொரு நூற்றாண்டு கழித்து அதே போன்று இருக்கப் போவதில்லை.

90களில் கூட தொலைக்காட்சிப் பெட்டிகளை ‘ஷைத்தான் பெட்டிகள்’ என வர்ணிக்கப்பட்டிருந்தன. நான்கைந்து வருடங்களுக்கு முன் வரை பேஸ்புக்குக்கு ‘பித்னாபுக்’ என்று மிம்பர்களில் வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருந்தன. வாதப்பொருள் என்பதால் தவறில்லை, ஆனால் காலம் கடந்த பின் அதே நபர்கள் அதனை எவ்வாறு நியாயப்படுத்துகிறார்கள்? என்பதே இங்கு கவனிக்க வேண்டியது.

ஷைத்தான் பெட்டியென வர்ணிக்கப்பட்ட தொலைக்காட்சிகளில் தோன்றாத உலமாக்கள் இல்லை, பித்னாபுக்கில் அக்கவுன்ட் இல்லாத, லைவ் நடத்தாத ஆலிம்கள் இல்லையென்ற அளவுக்கு காலம் மாறிப் போய்விட்டது. அவசர அவசரமாக முந்திக் கொள்ளும் நமது செயற்பாடுகள் காலத்தால் மாற்ற வேண்டியதாகவே உள்ளன. ஆறுதலாக ஆராய்ந்து, நவீன தொழிநுட்பத்தை நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்துவதற்கு முன்பாக இவ்வாறு கொதித்தெழுவது இன்னும் நமது வாடிக்கையாக இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனை எதிர்த்து தடுப்பு மருந்தைக் கண்டு பிடிக்க முடியாத காலத்தில் இறைவன் இந்த சோதனையைத் தரவில்லை. உதாரணமாக 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சுமார் இரு வருடங்கள் நீடித்த (1918 – 1920) Spain Flu என அறியப்பட்ட இன்புளுவன்சா தொற்றுக்கு பதிலாக கொரோனா பெருந்தொற்று உருவாகியிருந்தால் அதன் விளைவுகள் மிகவும் பாரதூரமாக இருந்திருக்கும்.

ஆக, நமது அறிவு விருத்தி எதிர்கொள்ளும் நிலையை அடைந்திருக்கும் காலத்திலேயே தற்போதைய சோதனை உருவாகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ், அதற்கான தடுப்பு மருந்துகளும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும், இங்கு முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. அதாவது, தற்போதைய தடுப்பூசிகளின் செயற்பாடு தொழிநுட்ப ரீதியில் மிகவும் நுணுக்கமானது.

கொவிட்19 வைரசின் தனித்துவமான புரோட்டின் வகையை நமது இரத்த அணுக்களே உருவாக்கி அதனை எதிர்த்துப் போராடுவதற்கான செயற்பாடே தற்போது பாவனைக்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசிகளின் இயக்கமாக இருக்கப் போகிறது. அதனைத் தூண்டி விடக்கூடிய ‘அறிவுறுத்தல்களே’ தடுப்பு மருந்து ஊடாக உடலுக்குள் செயற்படுத்தப்படுகிறது. இந்த முறைமை mRNA vaccine என்று அறியப்படுகிறது. இரண்டாவது வகையான Vector Vaccine கூட ஏறத்தாழ இதே செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டதே.

மாற்றீடாக, கொரோனா வைரஸ் சார்ந்த புரோட்டீன் அணுக்களுடன் உட்செலுத்தப்படும் Protein Subunit தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வகை தடுப்பு மருந்துகளும்; உடலில் வைரஸ் சார்ந்த புரோட்டீனை எதிர்த்துப் போராடும் செயற்பாட்டை உருவாக்குவதனூடாக (T-lymphocytes and B-lymphocytes) எதிர்ப்பு சக்திக்குத் தேவையான செயற்பாட்டை தூண்டுவனவாகவே இருக்கின்றன.

அறிவியல் இத்தனை தூரம் முன்னேறியுள்ள நிலையில் நமது சமூகம் எங்கே நிற்கிறது? எதெற்கெல்லாம் முட்டி மோதிக் கொண்டிருக்கிறது? சமூகத்தின் பொதுத் தேவையும் சிந்தனைகளும் எங்கு முடங்கிக் கிடக்கிறது என்பதை ஆராயும் கட்டாயம் நமக்கிருக்கிறது.

கடந்த கால வரலாறுகளிலிருந்து தற்கால சூழ்நிலையில் நாம் எவ்வாறு வேறுபட்டிருக்கிறோம் என்பதையம் சிந்திக்கக் கடமைப்படுகிறோம். நூற்றாண்டுகள் கடந்து செல்லாவிடினும் கடந்த அரை நூற்றாண்டுக்குட்பட்ட சுய விமர்சனமாவது தேவைப்படுகிறது.

இந்த வாரம் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்கள் தொடர்புபட்ட சர்ச்சையொன்று வெகுவாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டிருந்தது. அதனை உற்று அவதானிக்கையில், இலங்கையில் பரகசியமான எமது கொள்கை இயக்க முரண்பாடுகள் பல்கலை மட்டத்தில் முட்டி மோதிக் கொண்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இணையங்களில் காணப்படும் பெண்களின் படங்கள் பொதுவாகவே உதாசீனப்படுத்தப்படும் வழக்கமும் அதனால் பல்வேறு சர்ச்சைகள் உருவாகும் சூழ்நிலையும் தாராளமாக இருக்கிறது. ஈஸ்டர் தாக்குதலையடுத்து லண்டனைத் தளமாகக் கொண்ட ஒரு தொலைக்காட்சி சேவையில் எதுவித தொடர்புமற்ற, இணையத்தில் காணப்பட்ட இலங்கை முஸ்லிம் பெண்ணொருவரின் படம் காட்சிப்படுத்தப்பட்டு செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்தது.

அதனை சம்பந்தப்பட்டவர் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம் அமீனிடம் தெரிவிக்க, அவர் என்னைத் தொடர்பு கொண்டு இது பற்றிக் கூற, உடனடியாக குறித்த தொலைக்காட்சி சேவையைத் தொடர்பு கொண்டு அந்தப் படத்தை நீக்குவதற்கான கோரிக்கையை முன் வைத்திருந்தேன். அவர்களும், தவறை ஏற்றுக்கொண்டு ஆவன செய்திருந்தார்கள்.

இவ்வாறு, பல பிரச்சினைகள் தோன்றுவது வழக்கம். தவிரவும், ஏதாவது ஒரு பரீட்சையில் சிறப்புச் சித்தியடைந்த அல்லது இன்னபிற சாதனைகளைப் புரிந்த பெண்களின் படங்களை செய்தியில் பிரசுரிக்கக் கூட பல தடவைகள் யோசிக்க வேண்டியுள்ள காலம். சற்றே வளர்ந்தவரின் தோற்றம் இருந்தால் குழந்தைகளின் படங்களைக் கூட பிரசுரிப்பதில் எமக்குத் தயக்கம் உள்ளது. அதற்கான நியாயம் இல்லாமலில்லை.

மறுபுறத்தில், சாதனையாளர்களை அடையாளப்படுத்தும் தேவையும் வலிதானது. அவர்களுக்குரிய அங்கீகாரத்தின் ஒரு பகுதியாகவே அது இருக்கும். எனினும், பத்திரிகைகளில் பிரசுரிப்பது போன்றன்றி இணைய உலகில் பாரிய சவால்கள் உள்ளன. பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரையில் தமது மாணவர் மன்ற விவகாரங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட முன்னர் அவர்களுக்குள் இவ்விவகாரம் தொடர்பிலான கலந்துரையாடலும் ஆய்வும் அவசியப்படுகிறது.

ஒருவேளை, இன்ன பல்கலைக்கழகத்தின் இன்ன குழுவென்ற விளம்பரங்களை முற்றாகத் தவிர்ப்பது நல்லதா? அல்லது தமது படங்களைப் பிரசுரிப்பதில் ஆட்சேபனையில்லாத பெண்களின் முகங்களைப் பிரசுரிப்பது சரியானதா? எதற்கும் இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களின் கருத்தறிதல் அவசியமா? போன்ற விடயங்கள் அவர்கள் மத்தியில் ஆராயப்பட வேண்டியவை.

எனினும், கொள்கை முரண்பாடுகளால் முட்டி மோதிக் கொண்டிருக்கும் சமூகம் என்ற அடிப்படையில் முகங்கள் மறைக்கப்படுவது ஒரு இயக்கம் சார்ந்த கொள்கையெனவும் அதற்கெதிரான பேச்சுக்கள் இன்னொரு இயக்கத்தின் கொள்கை சார்ந்தது என்ற தொனியிலும் கருத்துப் பரிமாறல்கள், சில வேளைகளில் எல்லை மீறிய வார்த்தைப் பிரயோகங்களையும் கூட காணக்கிடைத்தது.

நமது சமூகத்தின் விடயங்கள் ஞானசாரக்களுக்கே மிகத் தெளிவாகத் தெரிகிறது. நாம் மறைப்பதற்கு எதுவுமில்லை. பாடசாலைக் காலத்திலேயே மாணவர்களைத் தம் வசம் இழுத்துப் போடும் கொள்கை இயக்கங்களின் போட்டி பல்கலைக்கழக மட்டத்திலும் பிரதிபலிப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆயினும், எதிர்கால புத்திஜீவிகளையும் இவ்வாறு குறுகிய வட்டங்களுக்குள் அழைத்துச் செல்வதால் சமூகம் எந்த வகையில் நன்மையடையப் போகிறது? என்ற கேள்விக்கு தெளிவான பதில் அவசியப்படுகிறது.

1980 – 2010 வரையான காலப்பகுதியில் மற்றவர்கள் நம்மைப் பார்க்கவில்லையென நினைத்துக் கொண்டு நமக்கு நாமே செய்து கொண்ட அநீதிகள் எண்ணற்றவை. அவற்றைப் பட்டியலிட முடியாமலும் இல்லை. ஆயினும், எதிர்கால நலன்கருதி நமக்குள் இருக்கும் இந்த அநாவசியமான தலைமைத்துவ போட்டியைக் கைவிட வேண்டும் எனும் கோரிக்கையை முன் வைப்பதே காலத்தின் தேவையெனப் படுகிறது.

மேற்குறிப்பிட்ட மூன்று தசாப்தங்களில் தாமே இந்த சமூகத்தினை வழி நடாத்தக் கூடிய புத்திஜீவிகள், தலைவர்கள் என்று முடிவெடுத்த யாரால் இப்போது இந்த சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடிந்துள்ளது? எந்தப் பாசறையில் இருந்து வந்தவர்களால் களமிறங்கி இந்த சமூகத்துக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க முடிகிறது? இல்லை எந்த இயக்கம் ஆதரிக்கும் அரசியல் தலைவர்களால் தான் நியாயத்தின் பால் நின்று வாதாட முடிகிறது?

நாம் இலங்கை முஸ்லிம்கள் என்ற பொது அடையாளத்துக்கு அப்பால் ஒவ்வொரு இயக்க அடையாளத்துடனான தனி வட்டங்களுக்குள்ளேயே இன்றைய தலைமுறை பழகியுள்ளது. அவ்வாறே, தாம் சார்ந்த இயக்கத்தவருடனேயே திருமண பந்தத்தில் ஈடுபடுவது மற்றும் வணக்க வழிபாடுகளிலும் இணைந்து கொள்வதே சுகம் எனவும் கருதிக் கொள்கிறது. அந்த ஊரில் திருமணம் முடித்ததால் ஒரு பெருநாளும் உம்மா வீட்டுக்கு வந்தால் மறு நாள் பெருநாளுமாக ஒவ்வொரு பெருநாளையும் இரண்டு தடவைகள் கொண்டாட வேண்டியிருக்கிறது என நொந்து கொண்டவர்களையும் கண்டிருக்கிறேன்.

சரி – தவறுகளுக்கு அப்பால், தொடர்ந்தும் இந்த இயக்கப் பிளவுகளை வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளில் அனைத்து தரப்பினரும் முனைப்பாக இருக்கிறார்கள். இந்நிலை இன்றைய தலைமுறையை விட அடுத்த தலைமுறையையே அதிகம் பாதிக்கப் போகிறது.

பேரினவாதத்தைத் தூண்டி ஆட்சி பீடமேறிய அரசு இன்னும் நான்கு அல்லது ஒன்பது வருடங்களில் மாறிவிடும் என்றாலும் கூட முஸ்லிம்கள் தம் இனத்துக்கு அச்சுறுத்தலான ஒரு சமூகமாக இருக்கிறார்கள் என்கிற எண்ணம் பௌத்த பீடங்களில் அத்தனை சீக்கிரம் களையப் போவதில்லை.

ஏனெனில், 1870 களிலிருந்து தலைமுறை தலைமறையாக இந்த எண்ணப் போக்கு ஊற்றி வளர்க்கப்பட்டு வந்துள்ளது. அதன் பின்னணியில் தான் அநகாரிக தர்மபால உருவானார். 2012 அளவில் 1915ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் நூற்றாண்டு கொண்டாடப்படும் என எச்சரித்த உதய கம்மன்பில, சம்பிக்க ரணவக்க, கலபொட அத்தே ஞானசார, இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ முதல் இன்றைய மெடில்லே பன்னாலோக வரை உருவாகியுள்ளார்கள். இன்னும் உருவாகிக் கொண்டேயிருப்பார்கள். ஏனெனில், இலங்கைத் தீவொன்றே இப்பூமியில் தமக்கிருக்கும் நாடென்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.

தவிரவும், இத்தீவின் ஆட்சியாளர்களை சிறுபான்மையினர் நிர்ணயிக்கிறார்கள் என்கிற நிலைப்பாடு மாற வேண்டும் என்ற அடிப்படையே 2019 ஜனாதிபதி தேர்தல் மற்றும் 2020 பொதுத் தேர்தலின் பின்னணியிலான சிங்கள சமூகத்தின் எழுச்சியாகக் காணப்பட்டது. தற்சமயம் நிலவி வரும் அரசியல் ஒரு வேளை மக்கள் மனங்களை மாற்றியமைத்தாலும் பௌத்த உயர் பீடம் இதில் மிகவும் அவதானமாக இருக்கப் போகிறது.

2015ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை கவிழ்ப்பதற்காக அனைத்து விகாரைகளின் வலைப்பின்னல்களும் மிகவும் உறுதியுடன் செயற்பட்டிருந்தன. இன்றைய கட்டாய ஜனாஸா எரிப்பு பல பேரை மகிழ்வடையச் செய்துள்ளது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முஸ்லிம்களைப் பழி வாங்குவதற்கான ஒரு தருணமாக சில சக்திகளால் இது பார்க்கப்படுகிறது. ஒருவேளை விஞ்ஞானமும் தற்கால கள நிலையும் அடக்கத்துக்கு சாதகமாக வந்து விடுமோ என்ற அச்சத்தில் மெடில்லே பன்னாலோக, அக்மீமன தயாராத்ன போன்றோர் துடித்தெழுவதும் இங்கு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய விடயங்களாகும்.

நமக்கு எதிர்ப்பக்கம் இவ்வாறு இருக்க, நமது சமூகத்தின் பக்கமும் பல்வேறு பிரிவினைகளால் சிதறுண்டு போயிருக்கிறது. இதை ஏற்றுக்கொள்வதற்கான மனப்பாங்கு கூட எம்மவர் மத்தியில் இல்லையென்பது கவலைக்குரியது. ஆகவே, தன்னிச்சையாக, தாம் நினைப்பதே சரியென அனைத்துப் புறங்களிலும் தறிகெட்டு நின்று தமக்கான முகவரிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றன எமது சமூகக் கூறுகள்.

இந்த நிலை எப்போது மாறுமென்று யோசித்துக் கொண்டிருக்க முடியாது. இப்போது கடிவாளமிடப்படாவிட்டால் எதிர்கால விளைவுகளையும் தவிர்க்க முடியாது. ஆயினும், பொறுப்பு யாருடையது? எனும் கேள்வி தொக்கு நிற்கிறது. அத்துடன், அனைத்து கூறுகளையும் ஒன்றிணைக்கும் ‘பொதுவான’ காரணியைக் கண்டு கொள்வதும் கடினமானது.

கூட்டுப் பொறுப்பை மறந்து தனித்தனித் திசைகளில் பறக்கும் எம் எண்ணங்களை ஒன்று படுத்த எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிப்பானாக!

இர்ஃபான் இக்பால்

சொந்த நாட்டில் முகவரி தொலைத்த சமூகமாக சிறிது சிறிதாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோம். எப்போதுமே எல்லாம் நடந்த பின் ஒப்பாரி வைப்பதே நமது வழக்கம் என்பதால் சமூகப் பார்வை ஒரு இடத்தில் குவிவதற்கு இன்னும்…

சொந்த நாட்டில் முகவரி தொலைத்த சமூகமாக சிறிது சிறிதாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோம். எப்போதுமே எல்லாம் நடந்த பின் ஒப்பாரி வைப்பதே நமது வழக்கம் என்பதால் சமூகப் பார்வை ஒரு இடத்தில் குவிவதற்கு இன்னும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *