வெளிநாட்டுப் பயணம்

  • 56

உச்சிவெயிலின் கடும் வெப்பம் உச்சந்தலையைப் பிளந்து கொண்டிருக்கும் மதிய நேரம். வெளியில் சென்றிருந்த பஷீர் வியர்வையில் குளித்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான். ஹோலிலிருந்த மின்விசிறியை இயக்கி விட்டு கதிரையை இழுத்து மின்விசிறியின் கீழ் போட்டு அமர்ந்தவன்,

“ஸாறா எனக்கு குடிக்க தண்ணி கொஞ்சம் எடுத்துட்டு வாங்களே” என்று உள்நோக்கி தன் அன்பு மனைவிக்கு குரல் கொடுத்தான்.

அடுக்களையில் சமைத்துக் கொண்டிருந்தவள் தன் பதியின் அழைப்புக் கேட்டு நீர்க்குவளையை எடுத்துக்கொண்டு சிட்டாய்ப் பறந்து சென்றாள் ஸாறா.

“இந்தாங்க தண்ணி. றொம்ப களச்சி போயிருக்கீங்க. போன வேலயெல்லாம் எப்பிடி? நல்லா முடிஞ்சுதா?”

முதலில் நீரைப் பெற்றுக்கொண்ட பஷீர் தொண்டையில் எரிந்து கொண்டிருந்த தாக நெருப்பைத் தணித்த பின்னரே பதிலளிக்கத் துவங்கினான். ‘மடக் மடக்’ என அவன் நீரருந்திய வேகமே அவனது அதீத களைப்பைப் பறைசாற்றியது.

“ஓ ஸாறா அல்ஹம்துலில்லாஹ் எண்டு போன வேலயெல்லாம் ஹைரா முடிஞ்சுது. இன்னம் மூனு நாள் தான் ஈக்கிது”

“ஏங்க கட்டாயம் நீங்க போய்த்தான் ஆகனுமா? வேணாங்க நீங்க இங்கயே இரீங்க. சோறும் சம்புலும் திண்டுட்டு சரி நாங்க காலத்த கழிப்பம். நீங்க இல்லாம நாங்க எப்பிடி இரிக்க போறம்” அழாக்குறையாய் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள் ஸாறா.

“நீங்க என்ன பேசுறீங்க ஸாறா? இவளவு நாளும் இங்க இருந்து என்னத்த சாதிச்சன்? கடன் தலக்கி மேல நிண்டு தாண்டவமாடுது. இனி கடன் கேக்க போனா செருப்படி தான் கெடக்கும். இன்னம் ரெண்டு வருஷம் தானே. கண்ண மூடித் திறக்குறத்துக்குள்ள அது போயிடும்”

“இல்லங்க கஷ்டமா ஈக்கிது. வெளிநாட்டுக்குப் பெய்த்து நீங்க கஷ்டப்படுறத்த என்னால நெனச்சிம் பார்க்கேல. இங்கயே என்ன சரி கூலி வேலயோ இல்லாட்டி நானே என்ன சரி சுட்டு தாறன். நீங்க கடகள்ல வித்துட்டு வாங்க. நான் ஒங்கள்ட அது வேணும் இது வேணும் எண்டு ஒண்டுமே வாங்கிக் கேக்க மாட்டன். எனக்கு பணம், நக நட்டுன்னு எதுவுமே வேணாம். ஒங்கட இந்த அன்பு மட்டும் இருந்தா போதும்க. இதவிட எனக்கு வேற எதுவும் பெரிசில்ல. ஒங்கள பிரிஞ்சி என்னால இரிக்கவே ஏல”

அதுவரை அணையிட்டுத் தடுத்து வைத்திருந்த கண்ணீர் மடை திறந்த வெள்ளமாய் அவள் கன்னத்தில் கோடு கிழித்தது. தன் அன்புக்குரிய இல்லாளின் கணகளில் நீர் கண்டு துடித்துப் போனான் பஷீர்.

“என்ன ஷாறா இது? (அவளது கண்ணீரைத் துடைத்து விடுகிறான்) நீங்களா எதுவும் கேக்காட்டியும் எனக்கு ஆச இல்லயா? நீங்க ஒங்களுக்கு விருப்பமானத்த என்கிட்ட கேக்கணும் அத நான் வாங்கித் தரணும் எண்டு எவளவு நாள் கனவு கண்டீக்கிறன். அதெல்லாம் நனவாகனும் எண்டா கொஞ்சம் காலத்துக்கு கஷ்டங்கள தாங்கிட்டுத் தான் இரிக்கனும். எனக்கு மட்டும் ஒங்கள பிரிஞ்சி போக ஆசயா என்ன?”

“ம்ம்மா ம்ம்மாமா.”

அவர்கள் இருவரினதும் அதீத அன்பின் அடையாளமாய் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயதே ஆகும் குழந்தை ஹனாவின் அழுகையொலி கேட்டு இருவரும் தம் பேச்சை நிறுத்தி விட்டு அன்பு மழலையை நோக்கித் தம் கவனத்தை செலுத்தினர்.

“என்னம்மா ஏண்ட தங்கக்குட்டி எதுக்கு அழூறீங்க? புள்ளக்கி பசியா மா?” என்று பிள்ளையைக் கொஞ்சிக் கொண்டு தூக்க முனைந்த போது அன்னையின் கையைத் தத்திப் பிடித்து அவளிடம் தாவினாள் குழந்தை ஹனா. குழந்தையைக் கணவனிடம் கொடுத்த ஸாறா,

“ஏய் புள்ளய கொஞ்சம் வெச்சிக்கோங்க. நான் பாலடிச்சி எடுத்துட்டு வாரேன்” என்று உள்நோக்கிச் சென்றாள்.

இனி ஹோலில் தந்தை, மகளின் சாம்ராஜ்யத்தைக் கேட்கவா வேண்டும். “ஏண்ட தங்கம் (பிள்ளையை வாரி முத்தமிட்டு) வாப்பா சொல்லுங்கமா வாப்பா”

“வா…ப்…பா” வா…ப்…பா”

குழந்தையின் மழலையில் முத்துக் குளித்துக் கொண்டிருந்த பஷீருக்கு அதுவரையிருந்த துன்பங்களெல்லாம் கானல் நீராகிப் போயின.

“மாஷா அல்லாஹ். ஏண்ட புள்ள எவளவு அழகா வாப்பா சொல்றா. ஏண்ட செல்லம்”

குழந்தையும் முளை விட்டிருக்கும் தன் அரிசிப் பற்களைக் காட்டிச் சிரித்து தன் தந்தைக்கு அழகு காட்டிக் கொண்டிருந்தது.

“எத்துன தடவ தான் ஒங்களுக்கு சொல்ற. ஒங்கட மீச புள்ளேட மொஹத்துல குத்துது கொறச்சி வெட்டுங்க. இல்லாட்டி மீசயால புள்ளய குத்தாதீங்கன்னு. கேட்டாத் தானே”

பாலடித்துக் கொண்டு வந்த ஷாறா தன் கணவனைச் செல்லக் கோபத்துடன் நோக்கினாள். அவனது அடர்ந்த மீசையில் தானே தன் முகத்தை உரசி விளையாடும் அளவுக்கு குட்டி ஹனா இப்போது அவன் மீசைக்குப் பழகி விட்டாள். குழந்தையை அவனிடமிருந்து பெற்று அவளை அணைத்து முத்தமிட்டு விட்டுப் பாலூட்டினாள் ஸாறா.

“ஸாறா இண்டக்கி மீன் பொரியல் போல. ஊட்டுக்குள்ள வரும்போதே மூக்க துளச்சி ஏண்ட பசியேம் கூட்டிட்டு”

“ஓ மீன் பொரியலும் கத்திரிக்க கறியும் ஆக்கின. சோறெல்லம் போட்டுத்தான் வெச்சீக்கி. திண்ண வாங்க” என்று குழந்தையையும் தூக்கிக் கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தாள். அவனும் அவளைப் பின்தொடர்ந்தான்.

மூன்று நாட்களும் முடுக்கி விடப்பட்ட இயந்திரமாய் சுழல அன்று வானத்துக்கு வர்ணம் பூசிக்கொண்டு வையகத்தை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தான் பகலவன். காலைப்பொழுது ரம்மியமாய்ப் புலர பஷீரின் வீடோ கவலையில் கரைந்து கொண்டிருந்தது. அவர்கள் கவலையும் கண்ணீருமாய் எதிர்கொள்ளக் காத்திருந்த நாள் அன்றே. பஷீரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு இன்னும் சில மணி நேரங்களே இருந்த நிலையில் சூரியன் பூமாதேவியை முழுவதுமாய்க் காணும் ஆவலில் விரைவாய்ப் பயணித்திட காலை 11 மணியும் ஆகியது. வெளிநாட்டுப் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஏஜன்சி வேனும் அவன் வீட்டு முற்றத்தில் வந்து நின்றது.

“என்ன பஷீர் ரெடியா? குயிக்கா போன தான் மிச்சமீக்கிற வேலகளெல்லம் முடிச்சிட்டு பிளைட்ட புடிக்கேலும்” என்றவாறு உள்ளிருந்து தலை நீட்டிக் கேட்ட ரஸாக் நானா வெளியிறங்கினார்.

தன் பயணப் பொதிகளை சுமந்து கொண்டு வந்த பஷீர் வீட்டு வாயிற்படியில் நின்று திரும்பிப் பார்க்க குளமாய் நிறைந்திருந்த கரு விழிகளுடன் அவனைப் பின்தொடர்ந்து வந்த ஸாறாவின் கரங்களிலிருந்த மழலைச் செல்வம்,

“வா…ப்…பா”

என்று கூறிக் கொண்டு அவனை நோக்கித் தாவியது. நிலை தடுமாறிப் போன பஷீர் தாவிய குழந்தையை வாரியணைத்து முத்த மழை பொழிந்து கொண்டிருந்தான்.

“பஷீர் லேட் ஆகிட்டு அவசரமா வாங்க”

என்று பல முறை ஒலித்த ரஸாக் நானாவின் கோபக் குரல் எதுவும் அவன் செவிகளில் விழவில்லை. தொடர்ந்தும் முத்த மழை பொழிய, கண்ணீர்த்துளிகள் ஒன்றுடனொன்று சங்கமமாகிக் கொண்டிருக்க, ஓர் இருப்பிடம் வெற்றிடமான நிலையில் வேகமாகப் புறப்படும் வேனின் ஒலி காற்றில் கலந்து கரைந்து கொண்டிருந்தது.

ILMA ANEES
(WELIGAMA)
3RD YEAR
SEUSL

உச்சிவெயிலின் கடும் வெப்பம் உச்சந்தலையைப் பிளந்து கொண்டிருக்கும் மதிய நேரம். வெளியில் சென்றிருந்த பஷீர் வியர்வையில் குளித்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான். ஹோலிலிருந்த மின்விசிறியை இயக்கி விட்டு கதிரையை இழுத்து மின்விசிறியின் கீழ் போட்டு…

உச்சிவெயிலின் கடும் வெப்பம் உச்சந்தலையைப் பிளந்து கொண்டிருக்கும் மதிய நேரம். வெளியில் சென்றிருந்த பஷீர் வியர்வையில் குளித்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான். ஹோலிலிருந்த மின்விசிறியை இயக்கி விட்டு கதிரையை இழுத்து மின்விசிறியின் கீழ் போட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *