தொழுகையில் பொடுபோக்கு செய்தால்

தொழாமல் வாழும் சகோதரர்கள் மனதில் எதை நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியாது. இதை அவர்களே மீட்டிப் பார்க்க வேண்டும். நான் தொழாமல் வாழ்கிறேனே அல்லாஹ் இல்லையா? அல்குர்ஆன் ஹதீஸ் பொய்யா? மௌத் என்பது பொய்யா? கப்ருடைய வாழ்க்கையை நான் ஈமான் கொள்ளவில்லையா? மறுமையிலே என்னிடம் அல்லாஹ் முதலில் கேட்பது தொழுகை தொழுகை என்று சொல்கிறார்களே அது பொய்யா? தொழாதவர்களுக்கு அல்லாஹ் ஸகர் என்ற நரகத்தை தயார் செய்து வைத்திருக்கிறானே அது பொய்யா? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அவர்களுக்கே அவர்கள் செய்யக்கூடிய அசிங்கம் புரியும்.

அல்லாஹுத்தஆலா எவ்வளவோ நிஃமத்துக்களை தந்திருக்கிறான் சகோதரர்களே. அல்லாஹ் தந்திருக்கும் நிஃமத்துக்களை எண்ண ஆரம்பித்தால் நம்மால் எண்ணி முடிக்க முடியாத அளவு நமது சொந்த வாழ்க்கையில் அல்லாஹ் நிறைய நிஃமத்துக்களை தந்திருக்கிறான். அதைப் பட்டியலிட்டுப் பாருங்கள். உங்களது இரு கண்களும் கெட்டுப் போகும் போது கண்ணின் பெறுமதி உங்களுக்கு புரியும். உங்களது இரு கிட்னிகளும் பழுதாகும் போது அல்லாஹ் தந்திருக்கும் கிட்னியின் பெறுமதி உங்களுக்கு புரியும். ஏதாவதொரு இடத்தில், உடம்பிலோ சதையிலோ ஏதாவதொரு இடத்திலே censer என்று ஒரு நோய் உண்டாகும் போது அந்த ஆரோக்கியமான நிஃமத்தின் பெறுமதி நமக்கு புரியும்.

அல்லாஹுத்தஆலா தந்திருக்கும் நிஃமத்துக்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டு, ஒரு நண்பன் உங்களிடத்தில் சில உதவிகளை வாங்குகிறான். அந்த நண்பன் ஒரு கட்டத்தில் ஒரு பிரதியுபகாரம் செய்யத் தவறும் போது நன்றிகெட்டவன் நன்றிகெட்டவன் என்று அவனையும், நீங்கள் ஒருவனுக்கு vote போட்டுவிட்டு வருகிறீர்கள் அந்த vote போட்ட அவன் உங்களுக்கு சேவை செய்யாதபோது அவனை நன்றிகெட்டவன் என்று திட்டுகிற நீங்கள், உங்களுடைய மனைவியை நன்றிகெட்டவள் என்று திட்டுகிற நீங்கள், உங்களுடைய ரப்புக்கு நன்றியுடையவர்களாக இருக்கிறீர்களா நன்றிகெட்டவர்களாக இருக்கிறீர்களா என்று தொழாதவர்கள் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

கண்ணியதிற்குரிய சகோதர்களே தொழாதவர்களுடைய நிலை மறுமையிலே மிகப் பயங்கரமானது. தொழக் கூடியவனுக்கே அல்லாஹ் வைல் என்ற நரகம் என்று சொல்கிறான். நன்றாக யோசித்துப் பாருங்கள்.

فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ

அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.

الَّذِينَ هُمْ يُرَاءُونَ

அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.

[ அல் மாஊன் – 4, 5,6]

தொழுதுகொண்டு தொழுகையில் பொடுபோக்காக இருப்பவர்கள், மற்றவர்களுக்கு காட்டுவதற்காக தொழுபவர்களுக்கு வைல் என்ற நரகம் என்றால் தொழாதவர்களுடைய நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

ரசூல் (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஒரு ஆபாத்தான கூட்டம் இருந்தார்கள். ரசூல் (ஸல்) அவர்களுக்கு நிம்மதியைக் கெடுத்த கூட்டம். ரசூல் (ஸல்) அவர்களுடைய மனைவியின் மீது கலங்கத்தை ஏற்படுத்திய கூட்டம். ரசூல் (ஸல்) அவர்கள் வெளியூரிலே இருந்த நேரம் அவர்களுக்கு சதி செய்வதற்காக ஒரு பள்ளிவாசலை அமைத்த கூட்டம், யார் அவர்கள் முனாபிக்குகள். இந்த முனாபிக்குகளைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் சொல்லும் போது

إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தலத்தில்தான் இருப்பார்கள்.

(நிஸா : 145)

காபிர்களை விட கேவலமானவர்கள் முனாபிக்குகள்.

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே , இந்த முனாபிக்குகளும் ரசூல் (ஸல்) அவர்களின் காலத்தில் தொழுதார்கள். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் தொழாதவர்கள். நீங்கள் அந்த முனாபிக்குகளை விட மோசமானவர்களா? முனாபிக்குகளை விட நன்றிகெட்ட கேவலமான கூட்டமா? ஏன் உங்களுடைய மூளையை பயன்படுத்தாமல் இருக்கிறீர்கள்? உங்களுடைய சிந்தனையை ஏன் பயன்படுத்தாமல் இருக்கிறீர்கள்? நீங்கள் பாதையில் போகும் போது வாகனம் உங்கள் மீது மோதினால் உங்களது வாழ்க்கை முடிந்து விடும்.

அன்புள்ள சகோதரர்களே உங்களுடன் கோபத்தில் பேசவில்லை. இதை நீங்கள் மௌத் ஆகும் போது உணர்வீர்கள். கப்ரில் வைத்து உணர்வீர்கள். மஹ்ஷரில் உங்களுக்கு முன்னால் அல்லாஹ் வந்து உங்களோடு நேரடியாகப் பேசும் போது உணர்வீர்கள். இன்று முடிவெடுங்கள், அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து முடிவெடுங்கள் இதற்குப் பிறகு என் வாழ்க்கையில் ஒரு வேளைத் தொழுகையையும் விட மாட்டேன் என முடிவெடுங்கள்.

ஒரு மனிதனை ரசூல் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு எவ்வாறு வழிகாட்டுகிறார்கள் நின்று கொண்டு தொழு, அதற்கு முடியாவிட்டால் இருந்து கொண்டு தொழு, அந்த அளவுக்கும் உன்னிடம் ஆரோக்கியம் இல்லையா படுத்துக் கொண்டு தொழு, அதற்கும் உன்னால் முடியாவிட்டால் கண்களால் சைகை செய்து தொழு. தொழுகையை விட முடியாது சகோதரர்களே. ஊரில் இருந்தாலும் தொழ வேண்டும். பயணத்தில் இருந்தாலும் தொழ வேண்டும். நீங்கள் வாகனத்தில் போனாலும் தொழ வேண்டும் விமானத்தில் போனாலும் தொழ வேண்டும். நீங்கள் சமாதான சூழலில் இருந்தாலும் தொழ வேண்டும் யுத்த களத்தில் ஆயுதமேந்தி போராடும் போராளிகளாக இருந்தாலும் நீங்கள் தொழ வேண்டும் என்ற அளவுக்கு இஸ்லாம் தொழுகையின் முக்கியத்துவத்தை எமக்கு சொல்லியிருக்கிறது என்றால் ஏன் நமக்கு புரியவில்லை.

இந்த சகோதரர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் தொழாதவனுக்கு இஸ்லாத்தில் எந்தப் பங்கும் கிடையாது. ரசூலுல்லாஹ் சொன்னார்கள்

العهد الذي بيننا و بينكم الصلاة

நமக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தொழுகை ஆகும்.

தொழாத நீ இந்த உம்மத்தில் ஏன் கவலைப் பட வேண்டும். முஸ்லிம்களைப் பற்றி உனக்கென்ன அக்கறை. முஸ்லிம்கள் பார்த்துக் கொள்வார்கள் அவர்களை. தொழாதவனுக்கு இஸ்லாத்தில் எந்தப் பங்கும் இல்லை என்று உமர் ( ரலி) சொன்ன கட்டத்தை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். சாதரணமான ஒரு கட்டமல்ல. உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23 ஆம் ஆண்டு கலீபாவாக இருக்கும் போது சுபஹுடைய இமாமத் செய்வதற்காக முன்னால் சென்று சப்புகளை ஒழுங்குபடுத்திவிட்டு தக்பீர் கட்டும்போது பின்னாலிருந்து ஒருவன் சரமாரியாக அவர்களுடைய முதுகிலே ஒரு கூரிய ஆயுதத்தினால் குத்துகிறான். ஆறு ஏழு தடவைகள் முதுகிலே குத்து விழுந்து விட்டது. உமர் (ரலி) அவர்கள் கீழே விழப் போகிறார்கள் இமாம் தக்பீர் கட்டி நின்ற இமாம் கீழே விழப் போகிறார்கள் பின்னாலிருந்த அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்களது கையைப்பிடித்து முன்னால் இழுத்து விட்டார்கள் இமாமத் செய்யுமாறு. மக்கள் அவர்களைத் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். வீட்டில் வைத்து அவசர சிகிச்சை நடக்கிறது. அவசர சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போது மயக்கமாக இருக்கிறார்கள். உமர் (ரலி) அவர்கள் கண்விழித்துப் பார்க்கிறார்கள், நிறைய சஹாபாக்கள் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்திலே முதலாவது கண்ணைத் திறந்தவுடனே அமீருல் முஃமினீன் கலீபா ஜனாதிபதி முதலாவது கண்ணைத் திறந்தவுடனே எதைப் பேச வேண்டும். இப்னு அப்பாஸ் (ரலி) பக்கத்தில் இருந்து அவரைப் பார்த்துச் சொன்னார்கள் அமீருல் முஃமினீனே நீங்கள் இன்னும் சுபஹு தொழவில்லை என்றார்கள், உமர் (ரலி) அவர்கள் நான் இருக்கும் நிலை என்ன என்று பதற்றப்படவில்லை. மக்கள் தொழுதுவிட்டர்களா அவர்கள் கேட்டார்கள். கேட்டுவிட்டு தயம்மம் செய்து உடம்பில் இருந்து இரத்தம் ஓடக் கூடிய நிலையில் சுபஹுத் தொழுகை நிறைவேற்றிவிட்டு சொன்னார்கள்:

لا حظ في الإسلام لمن ترك الصلاة

“தொழுகையை விட்டவனுக்கு இஸ்லாத்தில் எந்தப் பங்கும் இல்லை” என்றார்கள்.

எனவே கண்ணியத்திற்குரிய சகோதரர்களே உங்களை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறோம். நீங்கள் யாரென்று நமக்குத் தெரியாது நாம் கலிமாவின் அடிப்படையில் ஒன்றுபட்டவர்கள். அந்த நேசத்தின் வெளிப்பாட்டால் சொல்கிறோம் இன்றிலிருந்து தொழுங்கள் ஒரு கஷ்டமான விடயமல்ல ஒரு சவாலாக எடுங்கள் நீங்கள் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து அல்லாஹ்வைப் பயந்து அவனை நேசித்து நீங்கள் இந்த தொழுகையைத் தொழ வேண்டும் என்று உறுதியான முடிவு எடுப்பீர்களாக இருந்தால் அல்லாஹ் உங்களுக்கு அதை இலகுபடுத்துவான். இன் ஷா அல்லாஹ் அதற்குப் பிறகும் உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக் கூடிய மாற்றங்களை நீங்கள் உணர்வீர்கள்.

எல்லாம்வல்ல அல்லாஹ் தொழுகையை நிலைநாட்டி ருகூஉ செய்யக் கூடியவர்களோடு ருகூஉ செய்து மறுமையிலே அல்லாஹ்வுக்கு சுஜூது செய்யக்கூடிய பாக்கியத்தை நாம் எல்லோரும் பெறுவதற்கு அவன் கிருபை செய்யட்டும்.

உறை: அஷ் கலாநிதி முபாரக் (மதனி)
எழுத்து: நபீஸ் நளீர் (இர்பானி)

Leave a Reply

Your email address will not be published.