நந்தசேனவுக்கு இரண்டு பக்கங்கள் – போர்க் குற்றவாளி என்பதை நிருபித்து விட்டார் – அனந்தி

விடுதலைப் புலிகள் தலைவர் “பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்” – கோட்டாபய பேச்சு

பாதுகாப்பு செயலாளராக தான் இருந்த போது, பித்தளைச் சந்தியில் தன்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் ‘வேலை’யை ஆரம்பித்ததாகவும், பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, தான் அதனை முடித்து வைத்ததாகவும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சனிக்கிழமை (09.01.2021) காலை அம்பாறை, உஹன பிரதேசத்திலுள்ள லாத்துகல கிராமத்தில் நடந்த “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசும்போது இதனைக் குறிப்பிட்டார் கோட்டாபய.

தான் எதற்கும் தயாரானவர் என்றும், ஆனால் மக்களுக்கு சேவை செய்வதே தனது தேவையாக உள்ளது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறினார்.

2009ம் ஆண்டு நடந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தம் நந்திக்கடல் பகுதியில் நடந்ததும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உடல் அப்பகுதியில் கிடைத்ததாக இலங்கை அரசு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

தான் அதிகாரத்துக்கு வந்த பின்னர் – அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை என்று இதன்போது தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஷ, சட்டத்துக்கு முரணாக நடந்திருந்தால், சட்ட ரீதியாகவே அந்த விடயம் அணுகப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த ஆட்சியின்போது பரந்த அளவில் அரசியல் பழிவாங்கல்கள் நடந்தன எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

நந்தசேனவுக்கு இரண்டு பக்கங்கள்.

அண்மையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ, அரசாங்கத்தை விமர்சித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் குறிப்பிடும் வகையில் ‘நந்தசேன’ எனக் கூறியதை நினைவுபடுத்திய ஜனாதிபதி, தாம் அதனை எதிர்பார்க்கவில்லை என்றார்.

“நந்தசேன ஆம், நந்தசேன கோட்டாபய நல்ல பெயர். நந்தசேன கோட்டாபயவுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. தங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேவையில்லை என்றும், பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவே தமக்கு வேண்டும் எனவும் சில பௌத்த பிக்குகள் என்னிடம் கூறுகின்றனர், அதனைச் செய்ய முடியும். அவ்வாறு வந்தால், அதே வகையில் செயற்பட முடியும்” என்று, இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தின்போது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டாபய. அந்தப் போரில் விடுதலைப் புலிகளை அழித்ததற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் என்று சிங்களப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் கோட்டாபய. அத்துடன், அந்தப் போரின்போது கடுமையான அணுகுமுறையைக் கையாண்டதாகவும், மோசமான போர்க்குற்றங்களுக்குக் காரணமாக இருந்ததாகவும் பெரிதும் தமிழ் மக்களால் விமர்சிக்கப்படுகிறவர் அவர்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த உரை தொடர்பில், கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வெளியாகி உள்ளன.

போர்க்குற்றவாளி என்பதை நிரூபித்து விட்டார் – அனந்தி

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைப் பற்றி, கோட்டாபய ராஜபக்ஷ கூறியமை தொடர்பில், தனது கடுமையான கண்டனத்தை வெளியிடுவதாக – வட மாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழக செயலாளருமான அனந்தி சசிதரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அனந்தி

“எவ்வளவு மன வக்கிரமுடையவராக இருந்திருந்தால், இவ்வாறான ஒரு செய்தியை சிங்கள மக்கள் மத்தியில் – இனவாதத்தைப் பரப்பும் நோக்கில் அவர் கூறியிருப்பார் என்று புரிகிறது”.

“உண்மையில் தேசியத் தலைவர் பிரபாகரனை இவர் கொன்றிருந்தால், இந்திய அரசுக்கு ஏன் இவர் மரண சான்றிதழை வழங்கவில்லை என்கிற கேள்வியை நாங்கள் முன்வைக்கின்றோம். பிரபாகரனை இவர்கள் கொன்றிருந்தால், அவரின் டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்ள ஏன் இவர்கள் உடன்படவில்லை என்கிற கேள்வியினையும் முன்வைக்க வேண்டியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

“எனவே தேசியத் தலைவர் பிரபாகரனை ‘நாய்போல இழுத்துச் சென்றேன்’ எனக் கூறுகின்ற, வக்கிரம் நிறைந்த அவரின் பேச்சை, மேற்சொன்ன விடயங்களினூடாக நிரூபிக்க முடிந்தால் நிரூபிக்கட்டும்” என்று சவால் விட்ட அவர்,

“சிங்கள மக்களை வெறுமனே உசுப்பேற்றவும், தற்போது இழந்து கொண்டிருக்கும் தமது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காகவுமே, இந்த சொற்களை அவர் பயன்படுத்தியதாக நான் கருதுகிறேன்”.

“கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் பத்திரிகையாளர்கள்; ‘நீங்கள் போர்க்குற்றம் புரிந்துள்ளீர்களா’ எனக் கேட்டபோது, யுத்த காலத்தில் தான் ஓர் அரச அதிகாரியாக மட்டுமே இருந்ததாகத் தெரிவித்திருந்தார். ஆனால், நேற்றைய தினம் அவர் ஆற்றிய உரையின் ஊடாக, தான் ஒரு போர்க்குற்றவாளி என நிரூபித்திருக்கின்றார்” எனவும் அனந்தி சசிதரன் பிபிசியிடம் தெரிவித்தார்.

BBC

Leave a Reply

Your email address will not be published.