ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் நிறுவனம் மற்றும் அதன் தலைவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செய்திகளை ஒளிபரப்புவதை தடுத்து சிரச நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான MTV தனியார் நிறுவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேலதிக மாவட்ட நீதவான் சதுன் விதானனோ முன்னிலையில் (13) அழைக்கப்பட்டது.
இதன்போது, இவ் வழக்கு விசாரணையை தான் முன்னெடுப்பது தொடர்பில் பிரதிவாதிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் காரணத்தால் தான் இவ் வழக்கிலிருந்து விலகி கொள்வதாக மேலதிக மாவட்ட நீதவான் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் வழக்கு தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மாவட்ட நீதவான் சாந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் 18 ஆம் திகதி அறிவிப்பதாக நீதவான் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் அன்றைய தினம் வரையில் தடை உத்தரவை நீடிப்பதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜோர்ஜ் ஸ்டுவரட் ஹெல்த் தனியார் நிறுவனம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில், எம்.டி.வி நிறுவனத்திற்கு சொந்தமான நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்திற்கு எதிரான வழக்கை தாக்கல் செய்திருந்தது.
சிரச நியூஸ் பெஸ்ட் தனது பிரதான செய்திகளில் ஜோர்ஜ் ஸ்டுவரட் ஹெல்த் தனியார் நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைவர் திலித் ஜயவீரவிற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுவதை தடுக்கும் வகையிலான தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்திடம் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
நவம்பர் 11, 13, 16 மற்றும் 19 ஆம் திகதிகளில், கொவிட் – 19 துரித என்டிஜென் பரிசோதனை கருவிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் ஜோர்ஜ் ஸ்டுவரட் ஹெல்த் தனியார் நிறுவனம் போலியான மற்றும் வேண்டுமென்று புனையப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய அவதூறான செய்திகளை சிரச நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனம் வெளியிட்டதாக மனுதாரர்கள் மன்றில் தெரிவித்தனர்.
இதனால் ஏற்பட்ட அபகீர்த்திக்கு நட்ட ஈடாக 2 பில்லியன் ரூபாவை பிரதிவாதிகள் செலுத்த வேண்டும் என உத்தரவிட கோரி மனுதாரர்கள் மன்றில் கோரியிருந்தனர். பிரதிவாதிகள் எப்போதும் மனுதாரர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையிலும், தீங்கிழைக்கும் வகையிலும் செயற்பட்டு வருவதாக ஜோர்ஜ் ஸ்டுவரட் ஹெல்த் தனியார் நிறுவனம் சார்பில் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திலித் ஜயவீர தலைமை வகிக்கும் தெரண ஊடக வலையமைப்புக்கும், ஆர்.ராஜ மகேந்திரன் தலைமை வகிக்கும் எம்.டி.வி நிறுவனத்திற்கு சொந்தமான சிரச நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்திற்கும் இடையில் நீண்ட காலமாக நிலவும் ஊடக போட்டித் தன்மை மற்றும் விரோத நிலைமை ஆகியன இதற்கு காரணம் என மனுதாரர்கள் தெரிவித்தனர்.
மனுதாரர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஜோர்ஜ் ஸ்டுவரட் ஹெல்த் தனியார் நிறுவத்திற்கும் அந்த நிறுவனத்தின் தலைவர் திலித் ஜயவீரவிற்கும் மற்றும் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் எதிராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அபகீர்த்தி ஏற்படும் வகையிலான செய்திகளை வெளியிட வேண்டாம் என தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.