தேசத்தின் மீதான நேசத்திற்கு நபிகளார் ஒரு முன்மாதிரி

  • 351

பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான உணர்வு. தேசப் பற்று என்பது மனிதனுக்குள்ளே புதைந்துள்ள ஒரு மானிடப் பண்பு. நபிகளார் (ஸல்) அவர்கள் தான் பிறந்து வளர்ந்த மக்கத்து மண்ணை மிகவும் நேசித்தார்கள். இறை தூதின் பணிகளை முன்னெடுக்கும் அடிப்படைத் தளமாக மக்கா பூமி அமைய வேண்டும் என்ற ஆசை நபிகளாரின் மனதில் வேரூன்றியிருந்தது. ஆனால் மக்காவாசிகளின் எல்லைமீறிய கொடுமைகள்; நபிகளாரை நிர்ப்பந்தமாக இடம் பெயரவைத்தது. அப்போது அவர்களின் உள்ளத்தில் இருந்து வெளிப்பட்ட சோகம் கலந்த வார்த்தைகள் மக்கா மண்ணின் மீதுள்ள அவர்களது நேசத்திற்கு சான்றாக அமைந்தன.

ஸீராவின் நிழலில் நபிகளாரின் தேசப்பற்று

நபியவர்கள் (ஸல்) ஹிஜ்ரத் பயணத்தின் போது மக்கா நகரை நோக்கி ‘மக்காவே நீ உலகிலேயே எனக்கு மிகவும் விருப்பமான பூமி. அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியமான தேசம். உன் சமூகம் என்னை விரட்டியிருக்காவிட்டால் நான் உன்னை விட்டுச் சென்றிருக்க மாட்டேன்’ (முஸ்னத் அபூயஃலா

உண்மையில் இந்த வார்த்தைகளின் இடுக்குகளில் சோகத்தில் தள்ளாடும் கண்ணீர் திவலைகளை உணரமுடிகின்றது.

நபியவர்களுக்கு ஆரம்ப வஹி வந்த சமயத்தில் அந்நிகழ்வு குறித்த விளக்கத்தை பெறுவதற்காக கதீஜா (ரழி) அவர்கள் நபிகளாரை வரகத் பின் நௌபலிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது நபிகளார் மக்காவை விட்டும் விரட்டப்படுவார்கள் என வரகத் பின் நௌபல் எதிர்வு கூறியபோது இறைதூதர் (ஸல்) அவர்களுக்கு அதனை நம்ப முடியவில்லை. மிகுந்த ஆச்சரியத்தில் நான் பிறந்து வளர்ந்து ஒன்றாகக் கூடிப் பழகி வாழ்ந்த இந்த மண்ணிலிருந்து ‘அவர்கள் என்னை வெளியேற்றுவார்களா? என்று கேட்டார்கள். இது நபியவர்கள் தேசத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக வெளிப்பட்ட வார்த்தையாகும். உண்மையில் நபிகளாரின் ‘ஹுப்புல் வதன்’ உணர்வால் வெளிப்பட்ட அந்த வார்த்தை எமது இதயத்தில் இரத்தம் கொட்டச் செய்கிறது.

நபியவர்களும் மனித உணர்வுகளோடு படைக்கப்பட்டவர்கள் என்ற வகையில், அவரிடமிருந்தும் தேசப்பற்றும், தேசிய உணர்வும் தேசத்தை நேசிக்கும் வார்த்தைகளும் இயல்பாகவே வெளிப்பட்டிருக்கின்றன.

நபியவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற பின்னர் கூட தனது பிறந்த தேசத்தை நினைத்து கவலைப் பட்டிருக்கிறார்கள். மதீனா நகரில் தொற்றுநோய் பரவியிருந்த ஒரு சமயம் ‘எங்கள் சொந்த மண்ணிலிருந்து தொற்று நோய்களுள்ள பூமிக்கு அந்த மக்காவாசிகள் எம்மை வெளியேற்றி விட்டார்களே’ என மனம் நொந்து கடிந்து கொண்டார்கள். தொடர்ந்து பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்: ‘யா அல்லாஹ் நீ எங்களுக்கு மக்காவை நேசத்திற்குரிய பூமியாக மாற்றியது போன்று, மதீனாவையும் மாற்றித் தருவாயாக அல்லது மக்காவை விட நேசத்திற்குரிய பூமியாக மதீனாவை மாற்றித் தருவாயாக’ (புகாரி)

இறைதூதரின் தேசிய உணர்வு, தேசப்பற்று காரணமாக மக்காவை பிரிந்து சென்றமை அவர்களது உள்ளத்தில் கவலை கொடுத்தது. வேதனைமிக்க அந்த சோக சமயத்தில் எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலாவும் பங்கெடுத்து அவர்களை ஆற்றுப்படுத்தி தேற்றியுள்ளான். ‘நபியே உங்கள் விருப்பத்திற்குரிய மண்ணிலிருந்து உங்களை வெளியேற்றிய ஊரைவிட அதிக வலிமையும் சக்தியும் கொண்ட இன்னும் எத்தனையோ ஊர்கள் இருந்துள்ளன. நாங்கள் அவற்றை அழித்து விட்டோம். பிறகு அவர்களுக்கு உதவி செய்ய யாரும் இருக்கவில்லை’ (ஸுரா முஹம்மத் : 13)

நபியவர்கள் மதீனாவை விட்டு வெளியே சென்று திரும்பி வரும்போது மதீனா நகர் மீதுள்ள பற்றின் காராணமாக தமது வாகனத்தை விரைவு படுத்துவார்கள் என்ற செய்தி ஸஹீஹுல் புகாரியில் பதிவாகியுள்ளது.

நபியவர்கள் ஹிஜ்ரத் சென்று சில நாட்களுக்குப் பின்பு உஸைல் அல்-கிப்பாரி (றழி) அவர்கள்; மதீனாவுக்கு வந்த சமயம் உஸைல் (ரழி) அவர்களை விழித்து மக்கா நகரம் எப்படி இருக்கிறது என்று கேட்டார்கள். உஸைல் கிப்பாரி (றழி) அவர்கள்; புனித மக்காவின் பசுமைகளையும் மழை பொழிந்து வெள்ளம் பாய்ந்தோடிய பள்ளத்தாக்குகளையும் செழிப்பாக வளர்ந்துள்ள மக்கத்து செடிகொடிகளையும் வர்ணிக்க ஆரம்பித்த போது நபி (ஸல்) அவர்கள்: போதும் போதும், மீண்டும் அந்த மக்கா பற்றிக் கூறி எமது உள்ளங்களை கவலையில் ஆழ்த்திட வேண்டாம் என்றார்கள்.(நூல்கள்:உஸுதுல் காபா, அல்-இஸாபா)

ஸஹாபாக்கள் வாழ்வில் தேசப் பற்று

பிலால் (றழி) அவர்கள் மதீனாவில் சுகயீனமுற்றிருந்த ஒரு சமயம் மக்காவை நினைத்து கண்ணீர் வடிக்கிறாகள். ‘இத்கிர் மற்றும் ஜலீல் என்ற பசுமையான புற்றரைகள் என்னைச் சூழ இருக்க மக்காவின் அந்தப் பள்ளத்தாக்கில் ஓர் இரவேனும் தூங்கும் நாள் எனக்குக் வரக் கூடாதா?; மஜன்னாவின் (மக்காவின்; ஒரு இடம்) நீரைப் பருகும் வாய்ப்பு ஒரு நாளேனும் கிட்டாதா? ஷாமா, துபைல் என்ற இரு மலைகளும் எனக்குத் தென்படக் கூடாதா? என பிலால் தனது தேச உணர்வின் மன உலைச்சலை கவியாக பாடியுள்ளார்கள். (நூல் புகாரி)

ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் வழங்கிய பங்கீடுகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் தான் பிறந்த மண்ணை மனத்திருப்தியோடு ஏற்பதை போன்று வேறு ஒன்றிலும் மனிதன் திருப்தி காண்பதில்லை என அப்துல்லா இப்னு துபைர் ரழி அவர்கள் கூறியுள்ளார்கள்.

தேசப்பற்றும் தேசிய உணர்வும் இருப்பதால் தான் நாடுகள் வளமாகின்றன’ என உமர் (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இஸ்லாமிய நோக்கில் தேசம் பெறும் அந்தஸ்து

சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் தமது அடையாளத்தையும், மார்க்கத்தையும் அடையாளப்படுத்துவதிலும் நாட்டில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதிலும் தான் கவனம் செலுத்துகின்றனர். மாற்றமாக, நாட்டின் தேசிய நலனில் அக்கறை காட்டுவது குறைவு என்ற மனப்பாங்கே பெரும்பான்மை சமூகத்திடம் பொதுவாகக் காண முடிகிறது. இலங்கை தேசம் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே ஒரு முஸ்லிம் தனது தேசத்தை சார்ந்து நிற்றல் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டினை மிகத் தெளிவாக புரிந்து கொள்வது பல்லின சமூகத்தில் இணங்கி வாழ்வதற்கான அடிப்படைத் தேவையாகும்.

இஸ்லாமிய சட்டவியல் பரப்பில் தேசம் பெறும் முக்கியத்துவம் என்ன? ஒரு முஸ்லீமால் தேசத்திற்காக தனது வாழ்வை தியாகம் செய்ய முடியுமா? அல்லது தேசத்தை மையப்படுத்தி ஒரு ஜமாஅத் அல்லது ஒரு நிறுவனம் தனது பணிகளை முடுக்கிவிடுவது குறித்து இஸ்லாமிய நிலைப்பாடு என்ன? அது அனுமதிக்கப்பட்டால் அதன் வரையறைகள் யாவை? போன்றன முஸ்லீம் சமூகத்திற்கு மத்தியில் பரவலாக பேசப்படும் கேள்விகள். இது குறித்த ஒரு தெளிவை பின்வரும் அறிஞர்களின் விளக்கங்களினூடாக பெற முடியும் என நம்புகின்றோம்.

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் தேசம் பெறும் வகிபாகத்தை பற்றி அல்லாமா யூசுப் அல்-கர்ளாவி அவர்கள் குறிப்பிடும் போது ‘இஸ்லாம் இயற்கை மார்க்கம் என்ற அடிப்படையில் தேசத்தை சார்ந்து நிற்கும் உணர்வை அது அங்கீகரிக்கின்றது’ என்கிறார். மேலும் ‘இஸ்லாம் எப்போதும் மனித இயல்புகளை மதிக்கிறது. இந்த வகையில் ஒரு மனிதனின் தேசிய உணர்வையும் தேசத்தை சார்ந்து நிற்கும் மனோநிலையையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது’ என்றும்; ‘தேசப் பற்று என்பது மனித இயல்பூக்கத்தை சார்ந்தது. இதில் காபிர்கள், முஸ்லீம்கள் என்ற வேறுபாடுகளின்றி அனைவரும் உடன்படுகின்றனர்’ என்றும் கலாநிதி கர்ளாவி அவர்கள் அல்வதன் வல்முவாதன் என்ற நூலில் விளக்குகிறார்.

நபியவர்களுடைய ஸீராவில் தேசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பல்வேறு உதாரணங்களை நாம் மேலே கண்டோம். குறிப்பாக நபியவர்கள் சிறுபான்மை சமூகமாக மக்காவில் வாழும் போது மக்காவை அதிகம் நேசித்திருக்கின்றார்கள் என்பதை அந்த ஹதீஸ்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

அல்குர்ஆனின் பார்வையில் தேசம்

தேசத்தின் மீதான நேசமும் தன் உயிர் மீதான பற்றும் மனித இயல்பைச் சார்ந்து என்ற ரீதியில், ஒரு மனிதனை தனது தேசத்திலிருந்து வெளியேற்றி விடுவதானது மிகப் பெரும் பாவமாக இஸ்லாம் கருதுதிறது. ஒரு மனிதனை கொலை செய்வதற்கு சமனான குற்றமாக ஒரு மனிதனை தனது தேசத்திலிருந்து வெளியேற்றி விடுவதனை அல்குர்ஆன் நோக்குகிறது. ஒரு சமூகம் அநியாயமாக அதன் தேசத்திலிருந்த வெளியேற்றப்படும் போதுதான் சமூகங்கள் மத்தியில் யுத்தம் விதியாகிறது. எனவேதான் இஸ்லாம் தேசத்தை விட்டு வெளியேற்றுவதை பல குற்றங்களுக்கான தண்டனையாகவும் விதித்துள்ளது.

ஸூரா அந்நிஸாவின் 66 வது வசனத்தில் அல்லாஹ் தஆலா ‘நீங்கள் உங்களை கொலை செய்து கொள்ளுங்கள் அல்லது உங்களது பூமியிலிருந்து வெளியேறிச் சென்று விடுங்கள் என அவர்களுக்கு விதித்த போது, அவர்களில் மிகச் சிலரே அதனை செய்யக் கூடியவர்களாக இருந்தனர்’ என்கிறான்.

அதாவது பனூ இஸ்ரவேலர்கள் நபி மூஸா (அலை) அவர்களுக்கு கட்டுப்படாமல் நடந்து கொண்ட போது அல்லாஹ் அவர்களுக்கு தவ்பாவாக இரு அம்சங்களை பரிந்துரை செய்தான். அதிலொன்று, அவர்கள் தங்களைத் தாங்களே கொலை செய்து கொள்ள வேண்டும். மற்றையது நாட்டை விட்டும் வெளியேற வேண்டும் என்பனவாகும். இங்கு ஒரு மனிதனை கொலை செய்வதனையும், அவன் நாட்டை துறந்து வெளியேறி விடுவதனையும் அல்லாஹ் சம தரத்தில் உள்ள தண்டனையாக நோக்குவதனை அவதானிக்கலாம். அதாவது ஒருவன் தனது தேசத்தில் தொடர்ந்தும் வாழ்வது அவனுக்கு உயிர் வாழ அனுமதிப்பதற்கு சமனானதாகும். அதாவது இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் தேசம் என்பது ஒரு மனிதனின் உயிருக்கு சமனானது என அல்-குர்ஆன் குறிப்பிடுகிறது.

‘மரணத்திற்கு பயந்து தனது தேசத்திலிருந்து ஆயிரக் கணக்கான எண்ணிக்கையில் வெளியேறுகின்றார்களே! அவர்களை நீர் பார்த்தீரா, அல்லாஹ் அவர்களை நோக்கி நீங்கள் மரணித்து விடுங்கள் எனக் கூறினான்’ (அல் பகரா:243)

நவீன இஸ்லாமிய சிந்தனையாளர் கலாநிதி முஹம்மத் இமாரா இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது ‘ஒரு சமூகம் தனது தேசத்தின் சுதந்திரத்திற்காக அல்லது விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம், அச்சமூகம் தொடர்ந்தும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றது என இஸ்லாம் கருதுகிறது. அதேபோன்று யாரெல்லாம் தனது நாட்டின் விடுதலைக்காக, எழுச்சிக்காக மற்றும் தனித்துவத்திற்காக போராடாமல் இருக்கிறார்களோ, அவர்கள் இறந்த பிணங்களுக்கு சமமானவர்கள் என்ற கருத்தையே அல்குர்ஆன் மேற்குறிப்பிட்ட வசனத்தில் சுட்டிக் காட்ட முனைகிறது’ என விளக்குகிறார்.

தேசம் குறித்து இஸ்லாமிய சிந்தனையாளர்களது பார்வை

இமாம் முஹம்மத் அப்துஹுவின் பார்வையில் ஒரு மனிதன் தனது தேசத்தை சார்ந்து தொழிற்படுவது, சிந்திப்பது மற்றும் அதன் சுதந்திரத்திற்காக, அபிவிருக்திக்காக போராடுவது என்பன அல்லாஹ் ஏற்படுத்திய சமூகவியல் நியதியாகும். மேலும் அதனை யாராலும், எக்காலத்திலும் மாற்ற முடியாது என இமாம் அப்துஹு கருதுகிறார்.

‘தேசிய உணர்வின் அடிப்படையில் தனது போராட்டத்தை அமைத்துக் கொள்ளல்’ என்ற சிந்தனை இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட மதச்சார்பற்ற, தேசியவாதிகளது சிந்தனா முகாம்களிலிருந்து பிறந்ததல்ல என அல்லாமா யூசுப் அல் கர்ளாவி விவாதிக்கிறார். இஸ்லாமிய எழுச்சிக்காகப் போராடிய ஜமாலுத்தீன் ஆப்கானி, இமாம் ஹசனுல் பன்னா, முஹம்மத் அப்துஹூ போன்ற அனைத்து வரலாற்று நாயகர்களும் தங்களது தேசத்தை சார்ந்து நின்றே போராடியிருக்கின்றார்கள் என்பதை அறிஞர் யூசுப் அல் கர்ளாவி அவர்கள் மேலே கூறிய நூலில் தெளிவு படுத்தியுள்ளார்கள். அது மாத்திரமன்றி, ‘தேசத்தை கட்டியெழுப்பல்’ என்ற சிந்தனையின் ஆரம்ப கர்த்தாக்கள் இஸ்லாமிய சிந்தனையாளர்களே என்பது கலாநிதி கர்ளாவியின் கருத்தாகும்.

இது குறித்து கலாநிதி கர்ளாவி அவர்கள் மேலும் விவரிக்கும் போது ‘இஸ்லாமிய சீர்திருத்தத்திற்காகவும், முஸ்லீம் உம்மத்தின் சுதந்திரத்திற்காகவும் மற்றும் காலனித்துவத்தின் இரும்புக் கரத்திற்கு எதிராகவும் போராடியவர்களது வாழ்கை வரலாற்றை படித்தால், அவர்கள் அனைவரும் சர்வதேச முஸ்லீம் சமூகத்தின் எழுச்சியை தங்களது சிந்தனையில் சுமந்திருந்தாலும், தங்களது நாட்டின் சீர்திருத்தத்தில் அதிகம் சிரத்தை எடுத்துக் கொண்டதனை புரிந்து கொள்ள முடியும் எனக் குறிப்பிடுகிறார்.

தேசியவாதம் குறித்து அறிஞர் ஹசனுல் பன்னாவின் பார்வை

தேசியவாதம் குறித்த இஸ்லாமிய நோக்கை இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் ‘எமது அழைப்பு’ என்ற நூலில் மிகவும் நுணுக்கமாக முன்வைத்துள்ளார்கள். பன்னாவின் நோக்கில் தேசியம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசியவாதம் மற்றும் ஏற்றுக் கொள்ளப்படாத தேசியவாதம் என இரண்டாக வகுத்து அவர் அணுகியுள்ளதை காணலாம்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிவாதம்

இஸ்லமிய சட்டப்ப பரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியவாதம் என்பதை இமாம் பன்னா பின்வருமாறு அடையாளப்படுத்துகிறார்.

  1. மனித இயல்பின் அடிப்படை என்ற வகையில் தோன்றும் தேசிய உணர்வு. தான் பிறந்த பூமியை நேசித்தல், பற்றுக் கொள்ளுதல் என்பது இதன் அர்த்தம். இது இஸ்லாம் அங்கீகரித்த பகுதியாகும்.
  2. அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து தாய்நாட்டை பாதுகாப்பதும் சுதந்திர உணர்வுடன் நாட்டு விடுதலைக்காக போராடுவதும் தனது நாட்டு மக்கள் கண்ணியமாகவும் கௌரவமாகவும் வாழ வேண்டும் என்ற சிந்தனையில் எழும் தேசிய உணர்வும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியவாதமாகும்.
  3. ஒரு குறித்த நாட்டில் வாழும் மக்கள் ஒற்றுமையாக இணைந்து நாட்டை கட்டியெழுப்ப உழைத்தல், பல்லின சமூத்தில் இணங்கி வாழ்வதுடன் நாட்டின் தேசிய நலனுக்காகவும், நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் நல்வாழ்வுக்காகவும் உழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தோன்றும் தேசியவாதத்தையும் இஸ்லாம் அங்கீகரிக்கின்றது.

மேற்குறித்த பரப்புக்களில் வெளிப்படும் தேசிய உணர்வை இஸ்லாம் அங்கீகரிக்கின்றது. அத்தகைய உணர்வில் தேசத்திற்காக பாடுபடுவதனை இஸ்லாம் வரவேற்கின்றது. அந்தப் பாதையில் மரணிப்பதானது அல்லாஹ்வின் பாதையில் மரணிப்பதற்கு சமனானதாக இஸ்லாம் நோக்குகிறது.

ஏற்றுக்கொள்ள முடியாத தேசிவாதம்

ஒரே சமூகத்தை பௌதீக ரீதியாக துண்டாடி பல கூறுகளாக பிரிக்கும் தேசிய உணர்வு போலியானது. ஒரே உம்மத்தான முஸ்லீம் உம்மத்தை பகமை, சதி, போட்டி, பொறாமை போன்றவற்றின் அடிப்படையில் பாகுபடுத்தி பலவீனப்படுத்தும் நோக்குடன் இயங்கும் தேசியவாதம் மறுதலிக்கப்ட வேண்டியதாகும். சுயநல அரசியல் இலாபங்களுக்காக தூண்டப்படும் தேசிய உணர்வை இஸ்லாம் அடியோடு மறுக்கிறது. சத்தியத்திற்காக பிரிந்தும் அசத்தியத்திற்காக கூட்டுச் சேரும் சோரம் போன தேசிய உணர்வால் யாருக்கும் இலாபமில்லை என்பதை இமாம் பன்னா அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

இஸ்லத்தின் பார்வையில் தேசத்தின் எல்லைகள்.

தேசியவாதிகள் இஸ்லாமிய சிந்தனையோடு முரண்படும் முக்கிய இரண்டு புள்ளிகளை இமாம் பன்னா அவர்கள் குறித்துக் காட்டுகின்றார். ஒன்று தேசத்தின் எல்லைகள். மற்றது தேசியத்தின் இலக்கு.

  1. தேசத்தின் எல்லைகள்: தேசியவாதிகள் பௌதிக நில எல்லைகள் அடிப்படையிலேயே தேசத்தை வரையறுப்பர். இஸ்லாம் நம்பிக்கை கோட்பாட்டின் அடிப்படையிலேயே தேசியத்தின் எல்லைகளை வரையறை செய்கிறது.
  2. தேசியத்தின் இலக்கு: தேசியவாதிகள் பௌதிக அபிவிருத்தியை மாத்திரமே இலக்காக கொள்வர். இஸ்லாம் அபிவிருத்தியோடு மனித சமூகத்தின் சுபீட்சத்திற்கான வழிகாட்டல் வழங்குவதையும் இலக்காகக் கொள்கிறது.
தேசிய உணர்வின் முழுமையான வடிவம்

நாட்டுப் பற்று, தேசிய உணர்வு என்பது ஒரு மனிதன் தனது பிறந்த பூமியை விரும்புவதுடன் மாத்திரம் சுருங்கிவிட மாட்டாது. அதற்கு அப்பால் அவன் தன் நாட்டு மக்களை நேசிப்பான். நாட்டு மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வதும் அவர்களோடு இணக்கமாக வாழ்வதும் அவர்களுக்காக உழைப்பதும்தான் உண்மையான தேசப்பற்று. தேசப் பற்றுள்ள ஒரு குடிமகன் நாட்டின் சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது உழைப்பதும் தன்னால் ஆன ஒத்தாசைகளை செய்வதும் நாட்டுப் பற்றின் உண்மை அடையாளங்களாகும். நாடு ஆபத்துக்கோ வறுமைக்கோ பஞ்சத்துக்கோ அநியாயத்துக்கோ உள்ளாகும்போது உயிரை துச்சமாகக் கருதி நாட்டை விட்டு ஓடாமல் அங்கேயே நிலைத்து நின்று நாட்டின் விடுதலைக்காக போராடுவது உண்மையான நாட்டுப் பற்றாகும். தேசப் பற்று குறித்த அல்குர்ஆனிய சிந்தனையும் இதுவே.

எனவே தான் உமர் (ரழி) அவர்கள் தேசப்பற்றும் தேசிய உணர்வும் இருப்பதால் தான் நாடுகள் வளமாகின்றன என்று கூறினார்கள். நாட்டுப் பற்று தேசிய அபிவிருத்தியின் ஒரு குறியீடாகும். அது வெறுமையான பக்திப் பிரவாகம் அல்ல என்பதே உமர் (ரழி) அவர்களின் கருத்தாகும்.

தேசப்பற்று, தேசிய உணர்வு என்பது இயல்பானது. அதனை ஷரீஆ அங்கீகரிக்கின்றது. அதனால் நாடு வளம் பெறுகின்றது. பிரிவையும் பிளவையும் ஏற்படுத்தும் தேசியவாதத்தை இஸ்லாம் மறுதலிக்கின்றது என்ற உண்மையை அல்குர்ஆன், நபிகளாரின் ஸீரா, ஸஹாபாக்களின் கூற்றுக்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் தேசியம் பற்றிய சிந்தனைகளின் நிழலில் தெளிவாக புரிந்து கொண்டோம்.

எனவே இந்தப் பின்ணணியில் இலங்கை சூழலில் வாழும் முஸ்லிம் சிறுபான்மையான நாம் தேசத்தை கட்டியெழுப்புவதில் உண்மையான உணர்வோடு பங்களிப்பு செய்வது ஒரு தார்மீகக் கடமையாகும்.

முஹம்மத் பகீஹுத்தீன்

பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான உணர்வு. தேசப் பற்று என்பது மனிதனுக்குள்ளே புதைந்துள்ள ஒரு மானிடப் பண்பு. நபிகளார் (ஸல்) அவர்கள் தான் பிறந்து வளர்ந்த மக்கத்து மண்ணை…

பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான உணர்வு. தேசப் பற்று என்பது மனிதனுக்குள்ளே புதைந்துள்ள ஒரு மானிடப் பண்பு. நபிகளார் (ஸல்) அவர்கள் தான் பிறந்து வளர்ந்த மக்கத்து மண்ணை…

2 thoughts on “தேசத்தின் மீதான நேசத்திற்கு நபிகளார் ஒரு முன்மாதிரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *