செல்போன் பேய்

ஊரெல்லாம் தூங்கிடிச்சு
உறக்கத்தை வாங்கிடிச்சு
பகலொளித்த சூரியனோ
உறவு வீடு போயிடிச்சு
வெண்ணிலவின் வெள்ளொளியில்
இருள் அடைக்கலமாய் புகுந்திடிச்சு

அசைந்தாடும் பனைமரமோ
காற்றை அசைப்போட்டிட
அசைப்போட்ட இரவுக்காற்று
பேய் காற்றாய் மாறிட
பேய்க் காற்றின் மிரட்டலுக்கு
நாய்களெல்லாம் பயந்திட

பயந்த நாய்கள் ஊளையிட
பதற்றமென்னுள் காளைவிட
மெல்லபிடித்தேன் அம்மாவை
மெதுவாய் மூடினேன் கண்ரெண்டை

என்னம்மோ சத்தம்
ஆந்தையலறும் சத்தம்
ஆழ்மனது சொல்லிவிட
அடிவயிறு கலங்கிவிட
திடுக்கென்று பயந்தேன்
அம்மாவைப் பிடித்தேன்

பாலாப் போன மனது
பேய்ப்படங்களை ஓட்டிவிட
சீரழிந்த என் சிந்தையோ
அவற்றினுள் மாட்டிவிட
ஐந்தே ஐந்து நொடியினில்
ஆயிரம் சிந்தனைகளை
அள்ளிக்கொண்டு வந்தது
என் மனப்பேய்

எங்கேயோ கேட்கிறது
ம்ம் என்ற ஒளி
என் மனதுக்குள் பயத்தை
முழுவதுமாய் செதுக்கிய உளி

நம்பி வந்த புருஷன்
நஞ்சு வைத்துக் கொண்ட
நாகம்மாள் ஆவியோ?- இல்லை
குடித்துக் கும்மாளம்போடும்
குடிகாரப் புருஷனால்
கொலையுண்ட கோமதி ஆன்மாவோ?

இதயம் அடிக்க
தொண்டை அடைக்க
திடீரென திறந்தது
என் மூடிய கண்கள்
திரும்பவும் கேட்டது
ம் என்ற சத்தம்

பத்து வருசத்துக்கு முன்
பாம்பு கடித்து செத்தபயல் செல்வம்
என் சிந்தனையில் குறுக்கிட்டான்

திடீரென என்செவியைத்
தொட்ட சத்தம் தொலைதூரமல்ல
நான் தொடுந்தூரம்தான் என்று
எனக்குத் தெரிந்தது

மெதுவாய் எழுந்தேன்
வேறு வழியில்லை
என்னறையைப் பார்த்தேன்
சத்தம் அங்கில்லை.

விளக்கை எரித்தேன்
கூர்ந்து பார்த்தேன்
குனிந்து பார்த்தேன்
நிமிர்ந்து பார்த்தேன்
நான் பார்த்த
இடங்களில் சத்தமில்லை.

மறுபடியும் ம் சத்தம்
ஒரு நொடியில் மறுசத்தம்
தலையணைக்கடியில் சத்தம்
இருக்குமா பார்க்க
தலையணையை எடுத்தேன்

மெதுவாக பார்க்க
தலையணைக் கடியில்
பார்த்ததும் தான் தெரிந்தது
நாகம்மாள் கோமதி
செல்வம் பேயல்ல

நான் சைலன்டில் போட்டு வைத்த
செல்போன் தான் பேயென்று

Rustha salam