இலங்கை அரசுக்கு சொந்தமான பெருமதி வாய்ந்த 21 தேயிலை பெருந்தோட்டங்கள் சீனாவிற்கு

  • 8

 

நாட்டை விற்க மாட்டோம் என தேர்தல் காலத்தில் வாய் கிழிய வீரம் பேசி பூமியில் அடித்து சத்தியம் செய்து ஆட்சிக்கு வந்த நந்தசேன கோட்டாபய – மஹிந்த ராஜபக்ஷ குடும்ப கூட்டு அரசாங்கம் இலங்கை அரசுக்குச் சொந்தமான மிகவும் பெருமதி வாய்ந்த 21 தேயிலை பெருந்தோட்ட நிறுவனங்களை சீனாவிற்கு விற்பனை செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு தெரிய வந்துள்ளது.

யார் இந்த ஹூஜியென்?

இதன் முதல் கட்டமாக சீனாவுடன் இலங்கை தேயிலை சபை வியாபார ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு உள்ளதாக தற்போதைய அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருகிறது. அதன்படி சீனாவின் ‘ஹூஜியென்’ என்ற சீன சர்வதேச வர்த்தக நிறுவனம் ஒன்றுடன் இலங்கை தேயிலை சபை ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளதாகவும் 15 வருடங்கள் இலங்கை தேயிலையில் வருடாந்தம் 4 மில்லியன் கிலோ கிராம் சந்தை விலைக்கு சீன நிறுவனம் கொள்வனவு செய்வதாகவும் அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

லங்கா ஈ நியூஸ் முன்னெடுத்த இணைய வழி ஆய்வில் சீனாவில் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடும் ‘ஹூஜியென்’ (Hujian) என்று ஒரு நிறுவனம் இல்லை. அதேவேளை சீனாவில் உள்ள பிரதான 10 தேயிலை விற்பனை சின்னங்களிலும் ஹூஜியென் என்று ஒன்று இல்லை. எனவே இந்த வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலை செய்வதற்காக குறித்த நிறுவனம் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

அரசாங்கம் கூறுவது பொய்

ஆனால் லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு வந்துள்ள தகவல் படி 15 வருடங்களாக இலங்கை தேயிலையை சந்தை விலைக்கு சீன நிறுவனம் கொள்வனவு செய்து வருவதாகக் அமைச்சரவை பேச்சாளர் கூறும் கதை பொய். சீனா நிலையான விலைக்கே தேயிலை கொள்வனவு செய்கிறது.

அதற்காக அரசுக்கு சொந்தமான 21 தேயிலை பெருந்தோட்டங்களை சீனாவிற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தேயிலை தோட்டங்களை சீனா கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளமை (கொள்வனவு என்பதற்கு இலங்கை அரசாங்கம் வைத்துள்ள பெயர் முதலீடு) யாரும் எதிர்பார்க்காத உயர் விலைக்கு என தெரிய வருகிறது. குறித்த அதி உச்ச விலையானது இலங்கையின் கடன்களை அடைக்கக் கூடியது என கூறப்படுகிறது. அண்மையில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை உடனே திருப்பிச் செலுத்துமாறு கேட்ட பின் சீனா இலங்கைக்கு 1500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கியது. இந்தியா கோரிக்கை விடுத்து இரண்டு நாட்களில் இலங்கை கடனை அடைத்து விட்டது. இந்த விடயம் இந்தியாவிற்கு அதிர்ச்சியைும் புதுமையையும் ஏற்படுத்தியது.

இதேவேளை, தேயிலை தோட்டங்களை கொள்வனவு செய்யாது நிலையான விலைக்கு இலங்கை தேயிலையை கொள்வனவு செய்யுமாறு இதற்கு முன்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சியின் போது இந்தியாவிடம் இலங்கை கோரிய போதும் அப்போதை இந்திய மத்திய அரசாங்கம் விருப்பம் தெரிவிக்கவில்லை. அதற்கு காரணமாக இலங்கைக்கு சர்வதேச சந்தையில் ‘இலங்கை தேயிலை’ என்ற பெயர் இல்லாமல் போகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று சீனா அதையே செய்யப் போகிறது.

இந்திய வம்சாவளி உறவு கொண்ட இலங்கை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் நிலையை வைத்து இலங்கைக்கு இந்தியா கொடுத்து வரும் அழுத்தங்களை முடிவுக்கு கொண்டு வரும் எதிர்பார்ப்பிலும் சீனாவிற்கு தேயிலை தோட்டங்களை விற்பனை செய்யும் திட்டத்தை ராஜபக்ஷ குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்க முடியாத நிறுவனங்கள் தோட்டங்களை மீள அரசாங்கத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என அரசாங்கத்தின் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட பலர் அரசியல் மேடைகளில் கருத்து வௌியிட்டு வருவதற்கு காரணமும் சீன பின்னணி என தெரிவிக்கப்படுகிறது.

சீனா கொடுக்கும் கொமிஷன் பணத்திற்கு ஆடும் பொய் நாட்டுப் பற்று எலிகள்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய – ஜப்பான் கூட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தேசப் பற்றாளர்கள் இலங்கை சொத்துக்களை சீனாவிற்கு விற்பனை செய்யும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கிடையாது. கொழும்பு துறைமுகத்தில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த முனையத்தை சீனாவிற்கு விற்பனை செய்த போது தேசப் பற்றாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர்.  ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட 1500 ஏக்கர் நிலம் சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு விற்பனை செய்யப்பட்ட போது தேசப் பற்றாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்திற்கு பெருமதி வாய்ந்த 420 ஏக்கரில் 266 ஏக்கர் சீனாவிற்கு விற்பனை செய்த போது தேசப் பற்றாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்காது மௌனமாக இருந்தனர். தற்போது கோட்டையில் உள்ள மக்கள் வங்கி தலைமையக கட்டிடத்தை சீனாவிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு தேசப் பற்றாளர்கள் எதிர்ப்பு இல்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக வடக்கு கடற்பரப்பில் இந்து சமூத்திரத்தில் அமைந்துள்ள முக்கியமான மூன்று தீவுகளை சீனாவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கு தேசப் பற்றாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தயாரில்லை. அதனால் 21 தேயிலை தோட்டங்களை சீனாவிற்கு விற்பனை செய்தாலும் தேசப் பற்றாளர்கள் அதனை கண்டும் காணாததும் போல் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

அதற்கு உண்மையான காரணம் தேசப் பற்றாளர்கள் என்று கூறப்படும் அனைவருக்கும் சீனாவிடம் இருந்து தேவைக்கு அதிகமாகவே கொமிஷன் பணம் கிடைக்கிறது. கிழக்கு துறைமுகத்தை காப்பாற்ற வீதிக்கு இறங்கிய துறைமுக தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் வங்கிக் கணக்குகளை சோதனை செய்தால் உண்மை வௌிச்சத்திற்கு வரும். தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு மாத்திரமன்றி இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளின் பிரநிதிகளுக்கும், சில கட்சிகளுக்கும், சில பிக்குகளுக்கும், சில ஊடகங்களுக்கும் சீனா மறைமுக லஞ்சம் வழங்குகிறது. அதனால் தான் இந்தியாவிற்கு அமெரிக்காவிற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக இலங்கை தேசப் பற்றாளர்கள் என குரல் கொடுப்போர் சீனாவிற்கு என வரும் போது வாளை சுருட்டிக் கொண்டு குட்டி போட்ட பூனை போல அமைதியாகி விடுகின்றனர். அதனால் தான் நாம் அவர்களை தேசப் பற்று எலிகள் என நாம் அழைக்கிறோம்.

சந்திரபிரதீப்

  நாட்டை விற்க மாட்டோம் என தேர்தல் காலத்தில் வாய் கிழிய வீரம் பேசி பூமியில் அடித்து சத்தியம் செய்து ஆட்சிக்கு வந்த நந்தசேன கோட்டாபய – மஹிந்த ராஜபக்ஷ குடும்ப கூட்டு அரசாங்கம்…

  நாட்டை விற்க மாட்டோம் என தேர்தல் காலத்தில் வாய் கிழிய வீரம் பேசி பூமியில் அடித்து சத்தியம் செய்து ஆட்சிக்கு வந்த நந்தசேன கோட்டாபய – மஹிந்த ராஜபக்ஷ குடும்ப கூட்டு அரசாங்கம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *