அவளுக்கு ஒரு புள்ள பெத்து தாரதுக்கு வக்கு இல்லியே

அவளோடு சில நொடிகள்
தொடர்-14

“வாங்க வாங்க மாமி நல்லா இருக்கிங்களா? மாமா மறுவா வீட்டுல எல்லாரும் எப்புடி நல்லா இருக்காங்களா?”

“இருக்க்கம் இருக்கம், எங்க ஸிராஜ் அவனுக்கு நான் குடுத்திருந்த இரண்டு வருசமும் முடிஞ்சி. இனி ஒரு ஒரு நிமிசம் கூட அவன் இங்க இருக்கக் கூடாது. எங்க அவன்.”

திக்கென்றிருந்தது ஜெஸீறாவிற்கு பட படவென அவளது இதயம் அடித்துக் கொண்டது. புயலடித்து ஓய்ந்து போய் மீண்டுமது பெரும் சூறாவளியாக உருப் பெற்றது போல் இருந்தது அவளது மாமியாரின் கோபத் தாண்டவம்.

“என்னை மைனி! வயசுல மூத்தவங்க நீங்களே இப்புடி பேசலாமா. நீங்க விரும்பி ஏத்துகிட்ட மருகள் தான என்ட புள்ள. இப்ப நீங்களே இப்புடி வெறுக்கலாமா.”

“நான் தேடின மருமக தான். என்ன செய்ற அவளுக்கு ஒரு புள்ள பெத்து தாரதுக்கு வக்கு இல்லியே. சும்மாவா சொன்னாங்க பெண் பாவம் பொல்லாததுன்னு. நீங்க செஞ்சதெல்லாம் தான் உங்கட குடும்பத்த இப்புடி போட்டு ஆட்டுது. இதுக்கு என்ட புள்ளய பலிகடா ஆக்க ஏழாது”

திருமணம் முடித்து ஆறு ஏழு வருடங்களாகியும் ஜெஸீறாவுக்கும் ஸிராஜுக்கும் குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை. காத்திருந்து காத்திருந்து பலன் கிட்டாத அவனது தாய் அவனுக்கு இரண்டாவது திருமம் முடித்து வைக்கத் தீர்மாணித்து இரண்டு வருடங்களாகின்றன.

ஒவ்வொரு முறையும் அவனது தாய் வார்த்தைகளால் அவளை பதம் பார்க்கும் தருணங்களிலெல்லாம், ஸிராஜ் அதையெல்லாம் சமாளித்து அவளோடு ஒரு அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான்.

“இனி யார்ர பேச்சையும் நான் கேக்கப் போறதில்ல. என்ட புள்ளைக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வெச்சிட்டுத் தான் எனக்கு மறு வேல.”

“மாமி”

“ஸிராஜ் வந்தவொன அவன உடனே என்னப் பாக்க வரச் சொல்லு. நான் போறன்.” என்று கூறி விட்டு வந்த வேகத்திலேயே திரும்பிச் சென்றாள்.

“இரிங்க மைனி.”

“மாமி மாமி.”

“என்னம்மா எனக்கு மட்டும் ஏன் இப்புடியெல்லாம் நடக்குது. நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சன். ஏன் எனக்கு ஒரு புள்ள இல்ல”

நின்றிருந்த இடத்துலயே விழுந்து அழ ஆரம்பித்த ஜெஸீறா சில நிமிடங்களில் மயக்கமுற்றாள். ஒருபக்கம் அவளைக் கவனிப்பதில் கை கால்கள் அசைந்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் நினைவுகள் ததும்பிப் போய் மனம் ஸ்தம்பித்துப் போனது ஜெஸீறாவின் தாய்க்கு.

“நான் செஞ்ச பாவத்தால தானா இப்ப என்ட புள்ளைக்கு இப்புடியான ஒரு நிலம. இல்ல. நான் அன்னைக்கு எல்லார்ற மனசயும் காயப் படுத்திட்டன். அவள்ட சாபம் தான் இதெல்லாம் நான் அப்புடி செஞ்சிருக்கக் கூடாது.”

கடந்த கால நினைவு ஓட்டத்தில் தத்தளித்து தான் செய்தது எப்படியான தவறு என்று உணர்ந்து கொண்டாள் தாய். அதனால் அவள் இழந்ததாக உணர்ந்ததில் ஒன்று தான் கியாஸ். அவன் தான் அந்த சம்பவத்துக்குப் பிறகு முற்றிலும் மாறிப் போய் இருந்தானே பழைய கியாஸைக் காணக் கிடைக்காத அளவுக்கு அவனில் அத்தனை மாற்றங்கள். அத்தனைக்கும் இன்று பலிகடாவாகி நிற்கிறாள் பசியா.

தொடரும்
ஏரூர் நிலாத்தோழி