கொரோனாவில் மரணித்தவர்களை தகனம் அல்லது அடக்கம் செய்யவும் அனுமதியுடன் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

2021.02.25 ஆம் திகதி 2216/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமையவே கொரோனாவில் மரணித்தவர்களை தகனம் அல்லது அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த வர்த்தமானிக்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராய்சி கையொப்பமிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி,

222 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டத்தின், 1925.08.28 ஆம் திகதி 7481 ஆம் இலக்க வர்த்தமானியின் “61அ” பகுதியில் உள்ள “பூதவுடலின் தகனம்” எனும் சொற்களுக்கு பதிலாக “பூதவுடலின் தகனம் அல்லது அடக்கம்” என்ற சொற்களை இடுவதன் மூலம் திருத்தப்பட்டுள்ளது.

அதன் ஒழுக்குவிதிகள் 5 இன் படி தகனத்தின் போது சவப்பெட்டியில் இட வேண்டும், அல்லது அடக்கத்தின்போது சுகாதார அதிகாரிகளினால் விடுக்கக்கூடிய பணிப்புரைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சரால் ஏற்கனவே 2020.04.11 ஆம் திகதி 2170/8 எனும் அரசாங்க வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய, கொவிட்-19 தொற்றினால் மரணிப்பவர்கள் அனைவரும் தகனம் செய்யப்பட வேண்டும் என்று இருந்தது.

மேலும் குறித்த “தகனம்” என்ற வார்த்தைக்கு “தகனம் அல்லது அடக்கம்” என்று திருத்தி புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பினால் வழிகாட்டப்பட்ட பரிந்துரைகளுக்கமைய, உலகிலுள்ள ஒரு சில நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளும் கொரோனா தொற்று காரணமாக மரணித்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

இதன் காரணமாக, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட வெவ்வேறு மத மற்றும் கலாசாரங்களை பின்பற்றுவோர் தங்களது, இன, மத, கலாசார உரிமைகளுக்கமையவும், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு அமைய, தங்களது உறவினர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி கோரி, நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்திருந்ததோடு, பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.

அந்த வகையில், இவ்விடயத்தை ஆராய சுகாதார அமைச்சரினால் ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, நிலத்தடி நீர் மூலம் கொவிட்-19 பரவல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து, அடக்கம் செய்வதற்கான அனுமதியை மறுத்திருந்தது.

ஆயினும் பின்னர் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர் குழு, உரிய வழிகாட்டல்கள், பாதுகாப்பு விதிமுறைகளைப் பேணி, உடல்களை அடக்க அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இது தொடர்பில் பாராளுமன்றத்தில், எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு, கொவிட்-19 உடல்களை அடக்க அனுமதி வழங்கப்படும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2021 ஆம் ஆண்டு மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் மற்றும் இம்ரான் கானின் இலங்கை விஜயம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இராஜதந்திர ரீதியாக தமது முயற்சிகளை பலரும் மேற்கொண்டிருந்தனர்.

இதன் அடிப்படையில் ஐ.நா  மனித உரிமைகள்பேரவையில் இவ்விடயம் பேசப்பட்டதுடன், இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு உட்பட மூன்று நாடுகள் இது தொடர்பான தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தது. இம்ரான் கானின் விஜயத்தின் போது இது தொடர்பாக இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.

மேலும், இலங்கையில் கொரோனா தொற்று பரவி ஓராண்டை அடைந்துள்ள நிலையில் கடந்த மார்ச் 28ஆம் திகதி முதல் இதுவரை 459 பேர் மரணமடைந்துள்ளனர்.

இப்னு அஸாத்

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Need Help