நீதியமைச்சராக தான் இருக்கும் வரை 2,500 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை பௌத்த விகாரைகள் தொடர்பான ‘தேவாலகம்’ சட்டத்தை இரத்துச் செய்யப் போவதில்லையென்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் விதத்தில் பொது இடங்களில் முகங்களை மூடி அணியும் புர்கா உள்ளிட்ட ஏனைய முகக் கவசங்களை தடை செய்வதற்கும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

‘தேவாலகம்’ சட்டத்தை இரத்து செய்வதற்கோ அல்லது அதில் திருத்தம் மேற்கொள்வதற்கோ எந்த எதிர்பார்ப்பும் தமக்கு கிடையாதென தெரிவித்துள்ள அமைச்சர், அவ்வாறு மேற்கொள்வதற்கு தாம் கனவிலும் நினைக்கவில்லையென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நீதி அமைச்சில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்:

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் பாராளுமன்றத்தில் 27/2 பிரேரணையில் உரையாற்றும் போது அதற்கு நான் பதிலளித்தேன். அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு சமூகத்தில் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் முன்வைத்த கேள்விக்கமைய 16 ஆவது சரத்து நீக்கப்பட்டால் அதன் கீழ் வரும் அனைத்து சட்டங்களும் வீழ்ச்சியடைவற்கு வாய்ப்புள்ளதென நான் பதிலளித்தேன். அதைவிட வேறு எந்த கருத்தையும் நான் அங்கு முன்வைக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

2,500 வருட வரலாற்றைக் கொண்ட பௌத்த கலாசாரப் பண்புகள் நடைமுறையிலுள்ள நாட்டின் சிங்கள பௌத்த மக்களின் பாரம்பரிய உரிமைகளுக்கு எதிராக சட்டம் கொண்டுவருவதற்கு எவ்வகையிலும் முடியாது. தற்போதைய அரசாங்கத்திற்கு அவ்வாறு செயற்படுவதற்கான எந்த அவசியமும் கிடையாது என்பதை தாம் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் மாதமளவில் முஸ்லிம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கையெடுக்கப்படும். இது தொடர்பான யோசனை அமைச்சரவைவயில் சமர்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம் சட்டத்தில் திருமணம் செய்துகொள்ளக் கூடிய ஆகக் குறைந்த வயது எல்லையை 18 ஆக குறிப்பிட நடவடிக்கையெடுக்கப்படும். அத்துடன் பதிவுத் திருமணத்தின் போது பெண்களுக்கும் கையெழுத்திடும் உரிமை வழங்கப்படவுள்ளது. ஆண்களை போன்று பெண்களுக்கும் சம உரிமையை வழங்கவும் நடவடிக்கையெடுக்கப்படும்.

இதேவேளை பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகளுக்கு தடை விதிக்கவும் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது. இது எந்தவொரு மக்கள் பிரவினரையும் இலக்கு வைத்து செய்யும் தீர்மானம் அல்ல.தேசியப் பாதுகாப்புக் கருதி எடுக்கும் தீர்மானமாகும்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Need Help