காலி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

காலி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டம் காரணமாக கலந்துரையாடலுக்காக அந்த அலுவலகத்திற்கு சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

அமைச்சர் ரமேஷ் பத்திரண, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, இசுறு தொடங்கொட, சம்பத் அத்துகொரல மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோர் இவ்வாறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

தம்மை நிரந்தரமாக்க கோரி தென் மாகாணத்திற்கு கீழ் இயங்கும் நிறுவனங்களில் தற்காலிகமாக சேவையாற்றும் குழுவினர் காலி மாவட்ட செயலகத்தின் பிரதான வாயிலை மறைத்து இன்று முற்பகல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலை முன்னெடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் போராட்டம் காரணமாக வெளியேற முடியாமல் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா முச்சக்கரவண்டியில் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அத்துடன் போராட்டத்தின் போது காவல்துறையினருடன் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளுடன் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

hiru

Author: admin