ஸகாத் கணக்கியல் கோட்பாடு

  • 18

உள்ளடக்கம்

  1. நோக்கம்
  2. ஸகாத் அறிமுகம்
  3. ஸகாத் துறை ஆய்வு செய்ய வேண்டுமா?
  4. வளங்கள் மீது ஸகாத் விதியாகுவதற்கான நிபந்தனைகள்
  5. வணிகத்திற்கான ஸகாத்
  6. வணிக கொடுக்கல் வாங்கல்களை இனங்காணல்
  7. வணிக ஸகாத்திற்கான அடிப்படைச் சமன்பாடு
  8. ஸகாத் கணிக்கும் கூற்று
  9. கள ஆய்வு
  10. உலகலாவிய ஸகாத் கணிப்பீட்டு முறை
  11. உசாத்துணை

1.        நோக்கம்

இவ் ஆய்வினூடாக இஸ்லாத்தின் பிரதான கடமைகளுள் ஒன்றான ஸகாத்தை, தற்கால சூழ்நிலையில் வணிக நிறுவனங்களில், எவ்வாறு கணிக்கப்பட வேண்டும் என்பதை கணக்கியல் நுட்பமூடாக முன்வைக்கவுள்ளேன். அதாவது ஸகாத் கணிக்கும் முறையை நிதிக்கூற்றுக்கள் வடிவில் அறிமுகப்படுத்தவுள்ளேன்.

2.        ஸகாத் அறிமுகம்

இஸ்லாமானது ஐம் பெரும் கடமைகள் மீது உருவாக்கப்பட்டுள்ள ஓர் மார்க்கமாகும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது எழுப்பட்டுள்ளது.

  1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி மொழிவது.
  2. தொழுகையை கடைபிடிப்பது.
  3. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது.
  4. (இயன்றோர் இறையில்லம் கஃபாவில்) ஹஜ் செய்வது.
  5. ரமழானில் நோன்பு நோற்பது.

(புஹாரி 08)

மேற்குறிப்பிட்ட கடமைகளுல் அல் – குர்ஆனில் பல இடங்களில் தொழுகையுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ள செல்வந்தர்களின் மீது கடமையாக்கப்பட்ட ஓர் வணக்கமே ஸகாத்தாகும்.

இது பற்றி அல்லாஹ் அல் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

நீங்கள் தொழுகையை நிறைவேற்றுங்கள். ஸகாத்தையும் கொடுங்கள். (2:110)

ஸகாத் என்பது முஸ்லிம்களின் சொத்தின்/ செல்வத்தின்/ வளங்கள் மீது அல்லாஹ் விதியாக்கியுள்ள கடமையாகும். அதாவது முஸ்லிம்களின் வளங்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில், நிஸாபுடைய அளவை அடைந்தால் அவற்றில் குறிப்பட்ட சதவீதத்தை, குறிப்பிட்ட சாரார் மீது வழங்கும் நடவடிக்கையாகும்.

இஸ்லாம் ஆன்மீகத்தை மாத்திரம் நோக்காக கொண்ட மார்க்கமல்ல. ஆன்மீக, லௌகிக அபிவிருத்தியை இலக்காக கொண்ட மார்க்கமாகும். அவ்வகையில் உலகில் பொருளாதார சமனிலையை ஏற்படுத்தவென உருவாக்கப்பட்டுள்ள மிக முக்கியமான கடமையே ஸகாத்தாகும். எனவே ஈருலக நலன்கள் நிறைந்த ஸகாத்தை தகுதிபெற்ற அனைத்து முஸ்லிம்களும் ஆண்டுதோறும் முறையாக கணிப்பீட்டு வழங்க வேண்டும்.

இது பற்றி அல்லாஹ் அல் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

(நபியே!) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை (ஸகாத்) எடுப்பீராக! அதனால் அவர்களை சுத்தப்படுத்தி, அவர்க(ளின் அகங்)களை தூய்மைப்படுத்துவீராக. (09:103)

அவ்வகையில் உலகில் உள்ள அனைத்து வளங்கள் மீதும் ஸகாத் கடமையாகின்றதா? அல்லது றஸுலுல்லாஹ் அவர்கள் தாம் வாழ்ந்த காலப்பகுதியில் ஸகாத் அறவிட்ட ஆடு, மாடு, ஒட்டகம், கோதுமை, பார்லி, பேரீச்சம் பழம், தங்கம், வெள்ளி ஆகிய குறிப்பிட்ட வளங்கள் மீது மாத்திரம் கடமையாகின்றதா? என ஆராய்ந்து பார்த்தால், உலகில் உள்ள விருத்தியடையும் அனைத்து வளங்கள்/ சொத்துக்கள் மீதும் ஸகாத் கடமையாகின்றது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஸூறா தவ்பாவின் 103 ஆம் வசனத்தில் “செல்வங்கள்” என பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

3.        ஸகாத் துறை ஆய்வு செய்ய வேண்டுமா?

இலங்கையின் விவசாயத்துறையை எடுத்துக்கொண்டால் இங்கு கோதுமை, பார்லி, பேரீச்சம் பழம் என்பன பயிரிடப்படுவதில்லை. மாறாக மரக்கறி, நெற்செய்கை மற்றும் பெருந்தோட்டச் செய்கைகளான தேயிலை, இறப்பர், கருவா, தென்னை போன்றன பயிரிடப்படுகின்றன. இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் தென்னந்தோட்டப்பயிர் செய்கை மூலம் தன்னிறைவடைந்து செல்வந்தனாக மாறினால் அவர் தமது சொத்துக்களை தூய்மைப்படுத்தவும் நாட்டில் பொருளாதார சமனிலையை ஏற்படுத்தவும் எவ்வாறு ஸகாத் வழங்க வேண்டும் என்பது ஆய்வு செய்யத்தக்கவொரு விடயமாகும். இப்பகுதி விவசாயப் பயிர்களுக்கான ஸகாத் பற்றி ஆய்வு செய்யும் பகுதியல்ல என்பதால் இதுபற்றி மேலதிக விளக்கம் கூறவிரும்பவில்லை.

இஸ்லாமானது கால இட சூழலுக்கு ஏற்ப நெகிழ்ச்சித் தன்மையுடையது. அதாவது காலத்திற்கு காலம் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அல் – குர்ஆன், அல் – ஹதீஸ் என்பவற்றை அடிப்படையாக கொண்டு ஆய்வுகளின் ஊடாக தீர்வுகளை முன்வைத்துள்ளது. அந்த வகையில் கால சூழ மாற்றத்திற்கேற்ப ஸகாத்தின் மூலம் உச்சபயனை பெறுவதற்கு பின்வரும் துறைகளில் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

  1. ஸகாத் வழங்க கடமையானோர்.
  2. ஸகாத் பெறத் தகுதியானோர்.
  3. ஸகாத் விதியாகும் வளங்கள்
  4. நிறுவன மயப்படுத்த வேண்டிய ஸகாத்

தொழில்நுட்ப புரட்சியின் உச்சத்தில் இருக்கும் இந்த யுகத்தில் செல்வத்தை விருத்தி செய்யக்கூடிய பல வழிகள் காணப்படுகின்றன. ஸூறா தவ்பாவின் 103 ஆம் வசனத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்,

(நபியே!) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை (ஸகாத்) எடுப்பீராக! அதனால் அவர்களை சுத்தப்படுத்தி, அவர்க(ளின் அகங்)களை தூய்மைப்படுத்துவீராக. (09:103)

மேற்படி வசனத்தில் செல்வம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ள விடயத்திற்குள் உள்ளடங்க வேண்டிய கூறுகளை ஆய்வு செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

4.        வளங்கள் மீது ஸகாத் விதியாகுவதற்கான நிபந்தனைகள்

i.         பூரண சொத்துரிமை

அதாவது குறிப்பிட்ட சொத்தின் மீது சட்டரீதியான உரிமையாண்மை குறிப்பிட்ட நபருக்கு காணப்பட வேண்டும்.

ii.       விருத்தியடைதல்

குறிப்பிட்ட வளம் விருத்தியடையக் கூடியதாகவும், சேமிப்பதால் பிற்காலத்தில் மேலதிக வருமானத்தை பெறக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். சொந்தப் பாவனைப் பொருட்கள் மீது ஸகாத் விதியாகது.

iii.     நிஸாப் அளவை அடைந்திருத்தல்

குறிப்பிட்ட வளம் அல்லது செல்வம் குறிப்பிட்ட அளவை அல்லது பெறுமானத்தை அடைந்திருத்தல்.

சொத்துவகை நிஸாப்
நாணயம், வியாபாரம் (வணிகம்), தொழிற்சாலை, கட்டிடம், சம்பளம், வாடகை, முதலீடு, தங்கம் 85 கிராம் தங்கம் அல்லது 85 கிராம் தங்கத்தின் பெறுமதி (இக்கட்டுரை 2020 மார்ச் மாதத்தில் எழுதபட்டது. மார்ச் மாதத்தில் முதலிரு வாரங்களில் 85கிராம் தங்கத்தின் இலங்கைப் பெறுமதி 812,178.40 ஆகக் காணப்பட்டது.)
வெள்ளி 595 கிராம் வெள்ளி
விவசாயப் பொருட்கள், மீன், விலங்கு வேளான்மை 653 கிலோ கிராம் தானியம் அல்லது 653 கிலோ கிராம் தானியத்தின் பெறுமதி
ஒட்டகம் 5 ஒட்டகங்கள்
மாடு 30 மாடுகள்
ஆடு 40 ஆடுகள்
புதையல், கனிப்பொருட்கள் நிஸாப் அளவு கிடையாது

iv.      கடன் பொறுப்பு இல்லாதிருத்தல்

குறித்த நபருக்கு காணப்படுகின்ற கடன் பொறுப்புக்களை தீர்ப்பதால், அவரின் சொத்து நிஸாபுடைய அளவைவிட குறைந்துவிடுமானால் ஸகாத் கடமையில்லை.

v.        ஓர் வருடம் பூர்த்தியடைந்திருத்தல்

இந்நிபந்தனையானது சட்ட அறிஞர்களிடையே கருத்து முரண்பாடுள்ள நிபந்தனையாகும். இங்கு நமது ஆய்வின் பிரதான இலக்கு கருத்து முரண்பாடுகள் பற்றி விமர்சிப்பதல்ல. எனவே இது பற்றி கூறவிரும்பவில்லை. ஆனால் வருடத்தில் ஒரு முறைதான் ஸகாத் கொடுக்க வேண்டுமென்பதை அனைவரும் ஏற்கின்றனர்.

5.        வணிகத்திற்கான ஸகாத்         

ஸகாத் பற்றி கலந்துறையாடப்பட்டுள்ள பல ஆக்கங்களில் ஸகாத் விதியாகும் சொத்துக்களின் பட்டியலில், “வியாபாரப் பொருட்கள்” முற்கால சட்ட அறிஞர்களால் உள்ளடக்கப்பட்டுள்ளது. என்றாலும் தற்கால வியாபார உலக நடவடிக்கைகளை அவதானிக்கும் போது, “வியாபாரப் பொருட்கள்” என்பதற்கு பதிலாக “வணிகத்திற்கான ஸகாத்” என்றே அறிமுகப்படுத்த வேண்டும். ஏனென்றால் தற்கால உலகில் பொருட்கள் கொள்வனவு, விற்பனை நடவடிக்கை இடம் பெறுவதுடன்; சேவை கொள்வனவு, விற்பனை நடவடிக்கையும் இடம் பெறுகின்றது. மேலும் வியாபார நிறுவனமொன்றில் நிலையான சொத்து மீதும் ஸகாத் கடமையில்லை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக தற்கால உலகில் “இணையதள தயாரிப்பு” என்ற தொழிற்துறை காணப்படுகிறது. ஆனால் இத்துறையில் வியாபாரப் பொருட்களை காட்ட முடியாது. சேவை வியாபாரமான இங்கு நிலையான சொத்தாக கணனிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் இங்கு வியாபாரப் பொருளும் இல்லை, நிலையான சொத்தின் மீது ஸகாத் கடமையில்லை எனக் கூறி குறித்த தொழில் மூலம் நிஸாபுடைய அளவைவிட அதிகமாக சொத்து சேகரித்தாலும் ஸகாத்திலிருந்து தப்பி விடலாம்.

எனவே தற்காலத்திற்கு பொருத்தமான முறையில் “வியாபாரப் பொருட்கள்” என்ற குருகிய கண்ணோட்டத்தில் ஸகாத் கணிக்காமல், “வணிகம்” என்ற விரிந்த பார்வையில் அவதானித்து ஸகாத்தை கணிப்பிடுவது சாலச் சிறந்தது.

அவ்வாறே வணிகமொன்றில் நிதியறிக்கையானது “பண அளவீட்டுசார்” எண்ணக்கருவின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது. அதாவது வணிகங்களில் இடம்பெறும் கொடுக்கல் வாங்கல்கள், நிகழ்வுகளில் பணத்தினால் அளவிடக் கூடியவற்றை மாத்திரமே அறிக்கைப்படுத்த முடியும்.

இதன் அடிப்படையில் ரஸூலுல்லாஹ் அன்று தங்க நாணயங்களுக்கு அறவிட்ட ஸகாத்தை அடிப்படையாக கொண்டே வணிகச் சொத்துகளுக்கும் ஸகாத் கணிப்பிட வேண்டும்.

(நபியே!) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை (ஸகாத்) எடுப்பீராக! அதனால் அவர்களை சுத்தப்படுத்தி, அவர்க(ளின் அகங்)களை தூய்மைப்படுத்துவீராக. (09:103)

மேற்குறித்த அல்குர்ஆன் வசனத்திற்கமைய வணிகத்திற்கான ஸகாத் வருடத்தில் ஒரு முறை கொடுத்தால் போதுமானது. அவ்வாறே வணிகத்திலுள்ள குறித்தவொரு சொத்தின் மீது வருடா வருடம் கொடுக்காமல் ஒரு முறை மாத்திரம் கொடுத்தால் போதுமானது. ஏனெனில் ஒரு சொத்துக்கான ஸகாத்தை வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பதற்கான தெளிவான ஆதரமில்லை. ஆனால் இதில் கருத்து முரண்பாடுள்ளது.

6.        வணிக கொடுக்கல் வாங்கல்களை இனங்காணல்

வணிகங்களுக்கு ஸகாத் அறவிடப்பட வேண்டுமெனின் வணிக அமைப்புக்களின் வகைகள், வணிக கொடுக்கல் வாங்கல்களின் வகைகளை இனங்கண்டு கொள்ள வேண்டும். இலங்கையில் தனியுரிமை வணிகம், பங்குடமை வணிகம், தனியார் கம்பனி, பொதுக் கம்பனிகள் காணப்படுகின்றன. மேற்குறித்த எவ்வகை வணிக அமைப்பாக இருந்தாலும் வணிகமொன்றின் அடிப்படை தத்துவமானது வணிகத்தில் இடம்பெறக்கூடிய அனைத்து கொடுக்கல் வாங்கல், நிகழ்வுகளும் வணிகத்தில் இரட்டை விளைவை ஏற்படுத்தும். இது கணக்கீட்டில் “இரட்டை விளைவு விதி” என இனங்காணப்படுகிறது, இதன் அடிப்படையில் வணிகத்தில் இடம்பெறும் கொடுக்கல் வாங்கல்களை உரிமையாண்மை, பற்று, பொறுப்புகள், வருமானம், செலவு, சொத்து எனப் பிரதானமாக ஆறு வகையில் இணங்காணலாம்.

உ.ம்: முஸ்தபா 1,000,000.00 மூலதனமிட்டு தனது வியாபாரத்தை ஆரம்பித்தார். எனின், அவரது வணிகத்தில் காசு என்ற சொத்திலும், அவரது மூலதனமென்ற உரிமையாண்மையிலும் அதிகரிப்பு ஏற்படுகின்றது.

i.         உரிமையாண்மை

உரிமையாளரினால் வணிகத்திற்கு வழங்கப்பட்ட நிதி அல்லது வணிகத்தை கலைக்கும் போது உரிமையாளருக்கு செலுத்த வேண்டிய நிதி உரிமையாண்மை எனப்படும். அதாவது வணிகத்தை ஆரம்பிக்கவென உரிமையாளரினால் இட்ட பணம், கட்டடம் உட்பட அனைத்து வகை சொத்துக்களும் உரிமையாண்மை அல்லது மூலதனம் என இனங்காணப்படும். ஸகாத் வழங்கப்பட வேண்டிய சொத்துகளுக்கு இருக்க வேண்டிய நிபந்தனைகளுடன் ஒப்பிடும் போது குறித்த நபரொருவருக்கு தனது வணிகத்தின் உரிமையாண்மை மீது பூரண சொத்துரிமை காணப்படுவதால், ஸகாத் கணிப்பீட்டின் போது உரிமையாண்மை கவனத்தில் கொள்ளப்பட்டு கூட்டப்பட வேண்டும்.

நாம் நிஸாபுடைய அளவை விட அதிக மூலதனமிட்டு வணிகத்தை ஆரம்பித்தால், உரிமையாண்மைக்கான ஸகாத்தை வணிகத்தின் ஆரம்பத்திலோ அல்லது முதலாவது ஆண்டின் இறுதியில் செலுத்தி விட வேண்டும். ஆனால் ஒரு முறை மாத்திரம் செலுத்தினால் போதுமானது. வருடா வருடம் குறிப்பிட்ட மூலதனத்திற்கு மீண்டும் மீண்டும் ஸகாத் கொடுக்கத் தேவையில்லை.

தமது உரிமையாண்மை அல்லது மூலதனம் என்ற சொத்தில் / செல்வத்தில்/ ஏழைகளுக்கும் ஸகாத் என்ற உரிமையுண்டு என்று அல்- குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.

“இன்னும் அவர்களுடைய செல்வங்களில் கேட்போருக்கும், கேட்காதோருக்கும் உரிமையுண்டு’’ (51:19)

உ.ம்: முஸ்தபா 1,000,000.00 காசை மூலதனமிட்டு வணிகத்தை ஆரம்பித்தார்.

ii.       பற்று

வணிகத்தின் உரிமையாளர் தனது சொந்தவாழ்வு, குடும்ப வாழ்வு என்பவற்றுக்காக தனது வணிகத்தில் இருந்து செலவிடப்படும் தொகை பற்று எனப்படும். இஸ்லாத்தில் தனது குடும்பத்திற்காக வீண்விரயம், உலோபித்தனமின்றி நடுத்தரமாக செலவிடுவதானது ஸதகாவுடைய அந்தஸ்த்தை பெறுகின்றது. எனவே இவ்வகை எடுப்பனவுகள் ஸகாத் கணிப்பீட்டில் கழிக்க முடியும். வியாபாரத்திலிருந்து பற்று என்ற அடிப்படையில் தனக்காகவும் தமது குடும்பத்திற்கும் செலவிடுவது பற்றி ஹதீஸில்,

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தேவைபோக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். முதலில் உம்முடைய வீட்டாரிடமிருந்தே (தர்மத்தைத்) தொடங்குவீராக!” இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி 1426)

உ.ம்: முஸ்தபா தனது மகனின் கல்விச் சுற்றுலாவுக்கு 5,000.00 வணிகத்திலிருந்து வழங்கினார்.

iii.     வருமானம்

உரிமையாளரின் பங்களிப்பு இன்றி காசு உள்வருதல், சொத்து அதிகரித்தல், பொறுப்புக் குறைவடைதல் காரணமாக உரிமையை அதிகரிக்கும் கொடுக்கல் வாங்கல், நிகழ்வுகள் வருமானம் எனப்படும். விருத்தியடையும் சொத்துக்கள் மீது ஸகாத் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஸகாத் கணிப்பீட்டின் போது உள்ளடக்கப்பட வேண்டும்.

வருமானம் எனப்படும் சம்பாத்தியங்கள் மீது ஸகாத் கொடுக்க வேண்டும் என்பது பற்றி அல் -குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.

“விசுவாசங்கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், உங்களுக்குப் பூமியிலிருந்து வெளிப்படுத்தியவற்றிலிருந்தும் நல்லவைகளை (தர்மமாக) செலவு செய்யுங்கள்.” (2:267)

உ.ம்: முஸ்தபா வணிகத்தின் மாதாந்த விற்பனை 275,000.00

iv.      செலவினம்

உரிமையாளரது பற்றுதல் இன்றி காசு வெளிச்செல்லல், சொத்து குறைவடைதல், பொறுப்பு அதிகரித்தல் காரணமாக உரிமையை குறைக்கும் கொடுக்கல் வாங்கல், நிகழ்வுகள் செலவுகள் எனப்படும். இவை ஸகாத் கணிப்பீட்டில் கழிக்கப்படும். ஏனேனில் இச் செலவீனங்கள் கொடுக்கப்படாத பட்சத்தில் கடன் எனும் பொறுப்புக்களாக மாறிவிடுகிறது.

உ.ம்: வணிகத்தின் ஜுன் மாத மின்சாரக் கட்டணம் 5,750.00

v.        பொறுப்புகள்

வணிகமொன்றுக்கு வெளி நபர்கள் வழங்கிய கடன்கள் அல்லது நிறுவனம் வெளி நபர்களுக்கு செலுத்த வேண்டிய தொகைகள் பொறுப்புகள் எனப்படும். இவை எதிர்காலத்தில் தீர்க்கப்பட வேண்டும். அல் – குர்ஆனில் மிகப் பெரிய ஆயத்து கூட இவ்வகை கடன்களை பற்றியே பேசுகின்றது. கடன் எனும் பொறுப்புக்கள் தீர்க்க தமது சொத்திலிருந்து எடுத்து வைக்க வேண்டும் என்பது பற்றி அல் ஹதீஸில் பின்வருமாறு கூறுகின்றான்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உஹத் மலைய அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என்மீது மூன்று நாட்கள் கழிவது கூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது. கடனை அடைப்பதற்காக நான் அதிலிருந்து எடுத்து வைக்கும் சிறிதளவு தங்கத்தை தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி: 2389)

  1. நடைமுறைப் பொறுப்பு

ஒரு வருட காலத்திற்குள் தீர்க்கப்பட வேண்டியவை. பொதுவாக குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தப்பட வேண்டிய செலவினங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தப்படாவிடின் நடைமுறைப் பொறுப்பாக இனங்காணப்படும். இவை ஸகாத் கணீப்பீட்டின் போது ஏற்கனவே செலவுகளூடாக கழிக்கப்பட்டுள்ளதால் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை. ஏனேனில் ஒரே விடயம் இரு முறை கழிக்கப்படலாம்

உ.ம்: முஸ்தபா, காதரிடம் 50,000.00 பொருட்கள் கடனுக்கு கொள்வனவு

  1. நடைமுறையல்லா பொறுப்பு

ஒரு வருட காலத்திற்கு மேற்பட்ட காலங்களில் தீர்க்க முடியுமானவை. இவை பொதுவாக ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலத்தில் தீர்க்கப்படும் ஒப்பந்தமொன்றின் அடிப்படையில் நடைமுறையல்லா சொத்துக்கள் கடனுக்கு கொள்வனவு செய்தல் ஆகும் இவை கடனாக இருப்பதால் ஸகாத் கணிப்பீட்டில் கழிக்கப்படும்.

உ.ம்: முஸ்தபா 2 வருட இஜாரா ஒப்பந்தத்தில் கடனுக்கு 500,000.00 பெறுமதியான மோட்டார் சைக்கிள் கொள்வனவு.

vi.      சொத்து

வணிகத்திற்கு எதிர்கால பொருளாதார நலன்களை தரக்கூடிய, வணிகத்தினால் கட்டுப்படுத்தக்கூடிய வளங்கள் எனப்படும். இங்கு சொத்து என்பது உரிமையாண்மை, பற்று, பொறுப்புகள், வருமானம், செலவு என்பவற்றின் பொழிப்பாகும்.

எனவே இதற்கான ஸகாத் பற்றி சரியாக தீர்மானம் எடுப்பது கடினமாகவுள்ளது. எனவே ஸகாத் கணிப்பீட்டில் சொத்துக்கள் பற்றி கவனத்திற் கொள்ளப்படமாட்டாது.

  1. நடைமுறைச் சொத்து

ஒரு வருட காலத்திற்குள் மாற்றத்திற்குள்ளாகக் கூடிய சொத்துக்கள். இரட்டை விளைவு விதிக்கமைய இவற்றின் மறு தாக்கம் வருமானம் அல்லது செலவில் சீராக்கப்படும்.

ஸகாத் கணீப்பீட்டில் ஒரே விடயம் இரு தடவை உள்வாங்கக்கூடாது என்ற அடிப்படையில் ஸகாத் கணீப்பீட்டில் உள்வாங்கப்படாது.

உ.ம்: முற்பணமாக செலுத்திய மாதந்த குடிநீர் கட்டணம் 1,500.00

  1. நடைமுறையல்லாச் சொத்து

ஒரு வருட காலத்திற்குள் மாற்றமடையாத சொத்துக்கள் நடைமுறையல்லாச் சொத்து எனப்படும். இஸ்லாமிய சட்ட அறிஞர்களிடையே நடைமுறையல்லாச் சொத்துகளுக்கான ஸகாத் பற்றி கருத்து முரண்பாடுகள் உள்ளன. அதாவது வணிகத்தில் நடைமுறையல்லாச் சொத்துகளுக்கு ஸகாத் வழங்கத் தேவையில்லை. நடைமுறையல்லாச் சொத்துகளுக்கு ஆரம்பத்தில் ஒரு தடவை ஸகாத் வழங்க வேண்டும் என்பனவாகும். என்றாலும் இங்கு அறிமுகப்படுத்தவுள்ள ஸகாத் முறையில் இரட்டை விளைவு விதிக்கமைய ஸகாத் கணீப்பீட்டில் உள்வாங்கப்படாது.

உ.ம்: வணிகப் போக்குவரத்திற்கு 750,000.00 பெறுமதியான சிறிய லொறியொன்று கொள்வனவு.

7.        வணிக ஸகாத்திற்கான அடிப்படைச் சமன்பாடு

வணிகமொன்றில் இடம்பெறக்கூடிய அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் வணிகத்தில் இரட்டைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையிலே வணிகத்தின் அடிப்படைச் சமன்பாடு வளர்ச்சியடைந்துள்ளது. வணிகத்திற்கான ஸகாத் பற்றி இலகுவாக புரிந்து கொள்ளும் நோக்கிலும், அதற்கான அடிப்படைச் சமன்பாட்டை அறிமுகப்படுத்தும் நோக்கில் வணிகத்தின் செயற்பாடுகளை உதாரணமொன்றினூடாக தெளிவுபடுத்தவுள்ளோம்.

முஸ்தபா 1,000,000.00 காசை மூலதனமிட்டு வணிகத்தை ஆரம்பித்தார். இதற்கான இரட்டைப் பதிவு:

காசுக் கணக்கு:                 வரவு                     1,000,000.00

மூலதனக் கணக்கு:                         செலவு                                 1,000,000.00

மேலுள்ள வணிகத்தில் காசென்ற சொத்து 1,000,000.00 அதிகரிக்கும் அதேவேளை மூலதனமென்ற உரிமையாண்மையும் வணிகத்தில் அதிகரிக்கின்றது. இதனூடாக கணக்கீட்டு சமன்பாடு பின்வருமாறு வளர்ச்சியடைகின்றது.

சொத்து =  உரிமையாண்மை

1,000,000.00 = 1,000,000.00

முஸ்தபா 2 வருட இஜாரா குத்தகை ஒப்பந்தத்தில் கடனுக்கு 500,000.00 பெறுமதியான மோட்டார் சைக்கிள் கொள்வனவு. இதற்கான இரட்டைப் பதிவு:

வாகனக் கணக்கு:                           வரவு                     500,000.00

குத்தகை கடன் கணக்கு:                              செலவு                 500,000.00

மேலுள்ள வணிகத்தில் வாகனமென்ற சொத்து 500,000.00 அதிகரிக்கும் அதேவேளை குத்தகை கடனென்ற நடைமுறையல்லாப் பொறுப்பும் வணிகத்தில் அதிகரிக்கின்றது. இதனூடாக கணக்கீட்டு சமன்பாடு பின்வருமாறு வளர்ச்சியடைகின்றது.

சொத்து = பொறுப்பு

500,000.00 = 500,000.00

தற்போது மேற்படி காணப்படுகின்ற சொத்துக்களின் மொத்தப் பெறுமதி 1,500,000.00 ஆகும். எனவே கணக்கீட்டுச் சமன்பாட்டை பின்வருமாறு விரிவு படுத்தலாம்.

சொத்து =  உரிமையாண்மை  + பொறுப்பு

1,500,000.00 = 1,000,000.00+ 500,000.00

முஸ்தபா மீள் விற்பனை செய்யும் நோக்கில் 500,000.00 பெறுமதியான புத்தகங்களை கொள்வனவு செய்தார். இதற்கான இரட்டைப் பதிவு:

கொள்வனவுக் கணக்கு:                 வரவு                  500,000.00

காசுக் கணக்கு:                                                செலவு                 500,000.00

இங்கு வணிகத்தின் கொள்வனவு என்ற செலவு அதிகரிப்பதுடன் காசு என்ற சொத்து குறைவடைகின்றது. இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் குறிப்பிட்ட ஆண்டில் விற்பனை செய்யாவிடின் ஆண்டின் இறுதியில் இருப்பு என்ற சொத்தாக இனங்காணப்படும்.

–  சொத்து = + செலவு

-500,000.00 = +500,000.00

இங்கு சொத்தில் குறைவு ஏற்பட்டதுடன் செலவில் அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே கணக்கீட்டுச் சமன்பாட்டை பின்வருமாறு மேலும் விரிவு படுத்தலாம்.

சொத்து =  உரிமையாண்மை + பொறுப்பு – செலவு

1,000,000.00 = 1,000,000.00 + 500,000.00 – 500,000.00

வியாபாரத்தின் ஆண்டுக்கான புத்தக விற்பனை 800,000.00 ஆகும். இதற்கான இரட்டைப் பதிவு:

காசுக்  கணக்கு:              வரவு                     800,000.00

விற்பனைக் கணக்கு:                     செலவு                 800,000.00

சொத்து =  வருமானம்

800,000.00 = 800,000.00

இங்கு சொத்தில் அதிகரிப்பு ஏற்பட்டதுடன் வருமானத்தில் அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே கணக்கீட்டுச் சமன்பாட்டை பின்வருமாறு மேலும் விரிவு படுத்தலாம்.

சொத்து =  உரிமையாண்மை + பொறுப்பு + வருமானம் – செலவு

2,000,000.00 = 1,000,000.00 + 500,000.00 + 1,000,000.00 – 500,000.00

முஸ்தபா வணிகத்திலிருந்து தனது குடும்பச் செலவாக குறித்த ஆண்டில் 350,000.00 காசை பெற்றார். இதற்கான இரட்டைப் பதிவு:

பற்றுக் கணக்கு:                 வரவு                  350,000.00

காசுக் கணக்கு:                                 செலவு                 350,000.00

– சொத்து = + பற்று

– 350,000.00 = + 350,000.00

இங்கு சொத்தில் குறைவு ஏற்பட்டதுடன் பற்றில் அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே கணக்கீட்டுச் சமன்பாட்டை பின்வருமாறு அறிமுகப்படுத்தலாம்.

சொத்து = (உரிமையாண்மை – பற்று) + பொறுப்பு + (வருமானம் – செலவு)

1,650,000.00 = (1,000,000.00 – 350,000.00) + 500,000.00 + (1,000,000.00 – 500,000.00)

மேற்குறித்த கணக்கீட்டு சமன்பாடுகள் மூலம் தயாரிக்கப்படும் நிதியறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இரு முறைகளில் ஸகாத் கணிப்பிடலாம்.

  1. தேறிய சொத்து அடிப்படையில் ஸகாத் கணிப்பீடு
  2. தேறிய வருமான முறையில் ஸகாத் கணிப்பீடு

i.         தேறிய சொத்து அடிப்படையில் ஸகாத் கணிப்பீடு

வணிகத்தின் மொத்தச் சொத்திலிருந்து மொத்தப் பொறுப்புகளை கழித்து வரும் தொகை தேறிய சொத்து எனப்படும்.

தேறிய சொத்து = சொத்து – பொறுப்பு

1,150,000.00 =1650,000.00 – 500,000.00

தேறிய சொத்து =  (உரிமையாண்மை – பற்று) + (வருமானம் – செலவு)

1,150,000.00 = (1,000,000.00 – 350,000.00) + (1,000,000.00 – 500,000.00)

இஸ்லாமிய அடிப்படையில் நபரொருவர் ஸகாத் கணிப்பிட வேண்டும் தேறிய சொத்திற்காகும். ஏனெனில் பூரண சொத்துரிமை தேறிய சொத்தின் மீதுதான் உரிமையாளருக்கு காணப்படுகிறது. எனவே தேறிய சொத்து நிஸாபுடைய அளவை அடைந்தால் ஸகாத் கடமையாகும். ஆனால் ஒரு விடயத்தை கவனத்திற் கொள்ள வேண்டும். அதாவது வணிகத்தின் மீது இதுவரை ஸகாத் கணிப்பிடாதவரும், வணிகத்தின் அனைத்து தேறிய சொத்துக்கள் மீது வருடா வருடம் ஸகாத் கணிப்பிட வேண்டும் என்போர் இம் முறையில் ஸகாத் கணிப்பிடுவது பொருத்தமானதாகும்.

ஸகாத் = தேறிய சொத்து * 2.5%

ஸகாத் = 1,150,000.00 * 2.5%

ஸகாத் = 28,750.00

 

ii.       தேறிய உரிமை முறையில் ஸகாத் கணிப்பீடு;

குறிப்பிட்ட காலத்தில் (ஒராண்டு) இயங்கிய வணிகத்தின் பெறுபேற்றை இலாபம் அல்லது நட்டமென்று இனங்காணலாம். அதாவது வணிகத்தின் வருமானத்திற்கும், செலவுக்குமிடையிலான வித்தியாசமே இலாபம் அல்லது நட்டம் எனப்படும்.

இலாபம் உரிமையாண்மையில் அதிகரிப்பை ஏற்படுத்துவதுடன் நட்டம் உரிமையாண்மையில் குறைவை ஏற்படுத்தும். எனவே இதற்கான சமன்பாடு.

இலாபம் / நட்டம் =  வருமானம் – செலவு

500,000.00 = 1,000,000.00 – 500,000.00

இங்கு தேறிய உரிமை என்பது இலாபம் அல்லது நட்டத்திலிருந்து பற்றை கழித்து வருவதாகும்.

தேறிய உரிமை =  வருமானம் – (செலவு + பற்று)

150,000.00 = 1,000,000.00 – (500,000.00 + 350,000.00)

இலாபம் அல்லது நட்டத்திற்கான ஸகாத் பற்றி அவதானிக்கையில் அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான்.

அவற்றை அறுவடை செய்யும் போது, (இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக) அதில் அவனுடைய பாகத்தை (ஸகாத்) கொடுத்து விடுங்கள். (6: 141)

இது விவசாயத்திற்கான ஸகாத் பற்றி பேசும் அல் குர்ஆன் வசனமாகும். என்றாலும் வணிக நிறுவனமொன்றின் அறுவடையை அல்லது பெறுபேற்றை கணிப்பிடுவது இலாபம் அல்லது நட்டம் மூலமாகும். எனவே தேறிய உரிமை நிஸாபுடைய அளவை அடைந்தால் ஸகாத் கடமையாகும். ஆனால் ஒரு விடயத்தை கவனத்திற் கொள்ள வேண்டும். அதாவது ஏற்கனவே உரிமையாண்மை (மூலதனம்) க்கு ஸகாத் கணிப்பிட்டு ஒரு குறிப்பிட்ட சொத்திற்கு ஒரு முறை மாத்திரம் ஸகாத் கணிப்பிட்டால் மாத்திரம் போதும் என்போர் இம்முறையில் ஸகாத் கணிப்பிடலாம்.

ஸகாத் = தேறிய உரிமை * 2.5%

ஸகாத் = 150,000.00 * 2.5%

ஸகாத் = 3,750.00

8.        ஸகாத் கணிக்கும் கூற்று

இவ்வாய்வின் சாரம்சமாக ஸகாத் கணிப்பீடு செய்வதற்கான பொருத்தமானதும், இலகுவானதுமான முறையாக பின்வரும் ஸகாத் கணிக்கும் கூற்றை குறிப்பிடலாம் தற்போது நடைமுறையில் வணிக நிறுவனமொன்றின் தேறிய லாபம், மொத்த சொத்து என்பவற்றை கணிப்பிட ஆண்டுதோறும் வருமானக் கூற்று, நிதிநிலமைக் கூற்று என்பன தயாரிக்கப்படுகின்றன. அவ்வகையில் ஸகாத் வழங்கத் தகுதியுடைய முஸ்லிம் வியாபாரி ஒருவரால் ஸகாத் கணிப்பீடு செய்ய பின்வரும் அமைப்பில் ஸகாத் கணிக்கும் கூற்று தயாரிக்க வேண்டும்.

……………… வணிகம்

ஸகாத் கணிக்கும் கூற்று

……………. இல் முடிவடைந்த ஆண்டுக்கானது

விபரம் தொகை தொகை தொகை
மூலதனம்/ மேலதிகமூலதனம்        xxxxx
ஆண்டுக்கான தேறிய லாபம்      xxxxxx
ஆண்டுக்கான பற்று       (xxxx)           xxxxx            xxxx
ஸகாத் 2.5%            (xxx)
ஆண்டுக்கான ஸகாத்            xxxx


வணிகத்தின் ஆயுள் நீண்ட காலமுடையது அதற்கான ஸகாத் கணிப்பிட மேலுள்ள மாதிரியை பயன்படுத்தும் போது மூலதனம் அல்லது மேலதிக மூலதனத்திற்கு ஏற்கனவே ஸகாத் கணிப்பிட்டு வழங்கினால், மீண்டும் மீண்டும் ஸகாத் கணிப்பிடத் தேவையில்லை. ஒரு தடவை மாத்திரம் கணித்தால் போதுமானது. ஆனால் ஆண்டுக்கான தேறிய இலாபத்தில் ஆண்டுக்கான பற்றை கழித்து அவ்வவ் ஆண்டுக்கான ஸகாத் வழங்க வேண்டும்.

9.        கள ஆய்வு

முஸ்தபா வணிகத்தின் 2019.04.01 முதல் 2020.03.31ம் கணக்கீட்டு ஆண்டுக்கான கணக்கீட்டு புத்தகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களிலுந்து பொழிப்பாக்கப்பட்ட பரீட்சைமீதி பின்வருமாறு. இவ்வணிகம் ஆரம்பிக்கும் போது தமது மூலதனத் தொகைக்கு ஸகாத் கணிக்கவில்லை.

முஸ்தபா வணிகம்

பரீட்சை மீதி

31.03.2020 இல் முடிவடைந்த ஆண்டுக்கானது

விபரம் வகை  வரவு செலவு
விற்பனை வருமானம் 2,500,000.00
வாடகை வருமானம் வருமானம் 240,000.00
இறுதி இருப்பு விற்பனைக் கிரயம் 155,000.00
இறுதி இருப்பு நடைமுறைச் சொத்து 150,000.00
இருப்பு அழிவு செலவு 5,000.00
ஆரம்ப இருப்பு விற்பனைக் கிரயம் 105,000.00
கொள்வனவு விற்பனைக் கிரயம் 750,000.00
கட்டடம் சொத்து 1,000,000.00
வாகனம் சொத்து 1,250,000.00
திரண்டபெறுமானத் தேய்வு
கட்டடம் சொத்து 50,000.00
வாகனம் சொத்து 75,000.00
கட்டட தேய்வு செலவு 50,000.00
வாகனத் தேய்வு செலவு 75,000.00
விளம்பரம் செலவு 10,000.00
சம்பளம் செலவு 240,000.00
தொலைபேசிக் கட்டணம் செலவு 12,000.00
அறவிட முடியாக் கடன் செலவு 5,000.00
மின்சாரக் கட்டணம் செலவு 22,000.00
வங்கிக் கட்டணம் செலவு 6,000.00
வங்கி மீதி நடைமுறைச்சொத்து 100,000.00
காசு மீதி நடைமுறைச்சொத்து 55,000.00
கடன் படுனர் நடைமுறைச்சொத்து 500,000.00
முற்பண தொ.பே கட்டணம் நடைமுறைச்சொத்து 10,000.00
முற்பணச் சம்பளம் நடைமுறைச்சொத்து 10,000.00
அட்டுறு வாடகை வருமானம் நடைமுறைச்சொத்து 60,000.00
கடன்கொடுனர் நடைமுறைச் பொறுப்பு 235,000,00
முற்பண வாடகை வருமானம் நடைமுறைச் பொறுப்பு 50,000.00
அட்டுறு மின்சாரக் கட்டணம் நடைமுறைச் பொறுப்பு 10,000.00
மோட்டார் வாகனக் கடன் பொறுப்பு 500,000.00
பற்று உரிமை 500,000.00
மூலதனம் உரிமை 1,100,000.00
மொத்தம் 4,915,000.00 4,915,000.00

முஸ்தபா வணிகம்

வருமானக் கூற்று

31.03.2020 இல் முடிவடைந்த ஆண்டுக்கானது

விபரம் தொகை தொகை தொகை
விற்பனை    2,500,000.00
விற்பனைக் கிரயம்
ஆரம்ப இருப்பு     105,000.00
கொள்வனவு     750,000.00  
    855,000.00
இறுதி இருப்பு   (155,000.00)     (700,000.00)
மொத்த இலாபம்  1,800,000.00
வாடகை வருமானம்     240,000.00
 2,040,000.00
நிர்வாகச் செலவு
சம்பளம்  240,000.00
தொலைபேசிக் கட்டணம்           12,000.00
கட்டட  தேய்வு       50,000.00
மின்சாரக் கட்டணம்      22,000.00     324,000.00
விற்பனை விநியோகச் செலவு
விளம்பரம்   10,000.00
வாகனத் தேய்வு     75,000.00
அறவிட முடியாக் கடன்   5,000.00       90,000.00
நிதி மற்றும் ஏனைய செலவு
வங்கிக் கட்டணம்  6,000.00
இருப்பு அழிவு   5,000.00       11,000.00   (425,000.00)
தேறிய இலாபம்    1,615,000.00

 

முஸ்தபா வணிகம்

ஸகாத் கணிக்கும் கூற்று

31.03.2020 இல் முடிவடைந்த ஆண்டுக்கானது

விபரம் தொகை தொகை தொகை
மூலதனம் / மேலதிக மூலதனம்  1,100,000.00
தேறிய இலாபம்                       1,615,000.00
பற்று  (500,000.00)  1,115,000.00  
  2,215,000.00
ஸகாத் 2.5% 2.50%
ஆண்டுக்கான ஸகாத்      55,375.00

முஸ்தபா வணிகம்

நிதி நிலமைக்கூற்று

31.03.2020 இல் முடிவடைந்த ஆண்டுக்கானது

விபரம்  விபரம்  விபரம்  விபரம்
நடைமுறையல்லா சொத்து
கட்டடம் 1,000,000.00 -50,000.00 950,000.00
வாகனம் 1,250,000.00 -75,000.00 1,175,000.00
2,250,000.00 -125,000.00 2,125,000.00
நடைமுறைச் சொத்து
இறுதி இருப்பு 150,000.00
கடன் படுனர் 500,000.00
முற்பண தொ.பே கட்டணம் 10,000.00
முற்பணச் சம்பளம் 10,000.00
அட்டுறு வாடகை வருமானம் 60,000.00
வங்கி மீதி 100,000.00
காசு மீதி 55,000.00 885,000.00
மொத்தச் சொத்துக்கள் 3,010,000.00
 
உரிமையாண்மை
மூலதனம் 1,100,000.00
ஆண்டுக்கான தேறிய வருவாய் 1,059,625.00 2,159,625.00
 
நடைமுறையல்லா பொறுப்பு  
மோட்டார் வாகனக் கடன் 500,000.00 500,000.00
 
நடைமுறைப் பொறுப்பு 
கடன் கொடுனர் 235,000.00
அட்டுறு ஸகாத் 55,375.00
முற்பண வாடகை வருமானம் 50,000.00
அட்டுறு மின்சாரக் கட்டணம் 10,000.00 350,375.00
மொத்த சொத்துக்கள் 3,010,000.00

இக்கட்டுரை 2020 மார்ச் மாதத்தில் எழுதப்பட்டது. மார்ச் மாதத்தில் முதலிரு வாரங்களில் 85கிராம் தங்கத்தின் இலங்கைப் பெறுமதி 812,178.40 ஆகக் காணப்பட்டது. எனவே முஸ்தபா வணகத்தின் மூலதனம், தேறிய இலாபம் என்பன நிஸாபுடைய அளவை விட அதிகமாக இருப்பதால் ஸகாத் கடமையாகின்றது.

மேற்குறித்த முஸ்தபா வணிகத்திற்கான ஆண்டுக்கான ஸகாத் பொறுப்பு 55,375.00 ரூபா ஆகும்.

10.     உலகலாவிய ஸகாத் கணிப்பீட்டு முறை

முஸ்தபா வணிகம்

ஸகாத் கூற்று

31.03.2020 இல் முடிவடைந்த ஆண்டுக்கானது

இப்னு அஸாத் முறை

விபரம் தொகை தொகை தொகை
மூலதனம் / மேலதிக மூலதனம் 1,100,000.00
தேறிய இலாபம் 1,615,000.00
பற்று (500,000.00) 1,115,000.00
2,215,000.00
ஸகாத் 2.5% 2.50%
ஆண்டுக்கான ஸகாத் 55,375.00

முஸ்தபா வணிகம்

ஸகாத் கூற்று

31.03.2020 இல் முடிவடைந்த ஆண்டுக்கானது

தேறிய முதலீட்டு முறை

விபரம் தொகை தொகை தொகை
உரிமையாண்மை    2,215,000.00
நடைமுறையல்லாப் பொறுப்பு    500,000.00
கழி நிலையான சொத்து (2,125,000.00)      590,000.00  
ஸகாத் விதியாகும் வருமானம்       590,000.00
ஸகாத் வீதம் 2.50%
ஆண்டுக்கான ஸகாத்        14,750.00

முஸ்தபா வணிகம்

ஸகாத் கூற்று

31.03.2020 இல் முடிவடைந்த ஆண்டுக்கானது

பதாவி மற்றும் சுல்தான் முறை

விபரம் தொகை தொகை
தேறிய செயற்பாட்டு மூலதனம்    590,000.00
பயன்படுத்திய குறுங்கால கடன்கள்    
நிலையான நிதிச் சொத்து    
செலுத்தப்பட்ட தவணைக் கடன் கொடுப்பனவு    
குறைக்கப்பட்ட மூலதன இருப்பு                     –
கழி: நடைமுறை நிதிச் சொத்திற்காக பயன்படுத்திய நீண்ட கால தவணைக் கடன்                     –
ஸகாத் விதியாகும் வருமானம்       590,000.00
ஸகாத் வீதம் 2.50%
ஆண்டுக்கான ஸகாத்      14,750.00

முஸ்தபா வணிகம்

ஸகாத் கூற்று

31.03.2020 இல் முடிவடைந்த ஆண்டுக்கானது

சவுதி அரேபியா ஸகாத் முகவர் நிலையம்

விபரம் தொகை தொகை தொகை
உரிமையாண்மை    1,100,000.00  
ஒதுக்கங்கள்                       –    
மு.ஆ. தேறிய இலாபம்                       –    
ஆண்டுக்கான இலாபம்   1,615,000.00    2,715,000.00
தேறிய நிலையான சொத்து  2,125,000.00
மூதலீடு                    –
ஆண்டுக்கான தேறிய நட்டம்                    –  (2,125,000.00)
ஸகாத் விதியாகும் வருமானம்       590,000.00
ஸகாத் வீதம் 2.50%
ஆண்டுக்கான ஸகாத்         14,750.00

முஸ்தபா வணிகம்

ஸகாத் கூற்று

31.03.2020 இல் முடிவடைந்த ஆண்டுக்கானது

பாரம்பரிய ஹனபி / ஷாபி முறை

விபரம் தொகை தொகை தொகை
நடைமுறைச் சொத்து     885,000.00
நடைமுறைச் பொறுப்பு   (295,000.00)
ஸகாத் விதியாகும் வருமானம்     590,000.00
ஸகாத் வீதம் 2.50%
ஆண்டுக்கான ஸகாத்      14,750.00

 முஸ்தபா வணிகம்

ஸகாத் கூற்று

31.03.2020 இல் முடிவடைந்த ஆண்டுக்கானது

கலாநிதி கமால் அதிய்யா முறை

விபரம் தொகை தொகை தொகை
நடைமுறைச் சொத்து     885,000.00
நடைமுறைச் பொறுப்பு   (295,000.00)
தேறிய நடைமுறைச் சொத்து    590,000.00
ஆண்டுக்கான இலாபம் 1,615,000.00
ஸகாத் விதியாகும் வருமானம்  2,205,000.00
ஸகாத் வீதம் 2.50%
ஆண்டுக்கான ஸகாத்       55,125.00

11.     உசாத்துணை

  1. “அல்- குர்ஆன் மொழிபெயர்ப்பு” மன்னர் ஃபஹ்து பதிப்பகம் – மதீனா
  2. “ஸஹிஹுல் புஹாரி மொழிபெயர்ப்பு” ரஹ்மத் பதிப்பகம் – சென்னை
  3. “ஸகாத் கோட்பாடும் நடைமுறையும்” றாபிதா அந்-நழீமிய்யீன் – பேருவளை
  4. “கணக்கீட்டுச் சமன்பாடு” K. பிரபாகரன்BBA, PGDE, Med (Edu), PhD (Scholar)
  5. http://current.onlinetntj.com/xU-nghUSf;F-xUjlit-j/8980
  6. Accounting for zakat (presenter: Khairul Bariyyah bt Mohaidin (2015140761) Majiha Misa bt Mohd Nor Shuhaimi (2015137021), Nur Aida Syakila bt Mohamed Abdul Fatah (2015126069), Wan Teh Nur Amirah bt Wan Norulizman (2015135455)

இவ்வாய்வினை மேற்கொள்வதற்கான உதிப்பை எற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அத்துடன் மேற்படி ஆய்வுக்கு அறிவாலும் ஆலோசனையாலும் உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியை தெரிவிப்பதோடு அவர்களின் அறிவு விருத்திக்காக வல்ல நாயகனை பிரார்த்திக்கின்றேன்.

இக்கட்டுரையில் எதாவது தவறான கருத்துக்கள் இருந்தால் எழுத்தாளரின் மின்னஞ்சல் முகவரியான ibnuasadymail@gmail.com  இற்கு அறியத்தரவும்.

நன்றி!

இப்னு அஸாத்

 

உள்ளடக்கம் நோக்கம் ஸகாத் அறிமுகம் ஸகாத் துறை ஆய்வு செய்ய வேண்டுமா? வளங்கள் மீது ஸகாத் விதியாகுவதற்கான நிபந்தனைகள் வணிகத்திற்கான ஸகாத் வணிக கொடுக்கல் வாங்கல்களை இனங்காணல் வணிக ஸகாத்திற்கான அடிப்படைச் சமன்பாடு ஸகாத்…

உள்ளடக்கம் நோக்கம் ஸகாத் அறிமுகம் ஸகாத் துறை ஆய்வு செய்ய வேண்டுமா? வளங்கள் மீது ஸகாத் விதியாகுவதற்கான நிபந்தனைகள் வணிகத்திற்கான ஸகாத் வணிக கொடுக்கல் வாங்கல்களை இனங்காணல் வணிக ஸகாத்திற்கான அடிப்படைச் சமன்பாடு ஸகாத்…