ஓர் விபத்தில் அடிபட்ட பறவை பேசுகிறது

எனது பெயர் என்னவென்று எனக்கு தெரியாது. நான் வானில் பறப்பதாலோ என்னவோ மனிதர்கள் என்னை பறவை என்று அழைத்தனர். அதனால் நானும் அவ்வாறே அடையாளம் காணப்பட்டேன். அறிமுகப்படுத்தப்பட்டேன்.

நான் பிறந்த பின் எனது தாயும் தந்தையும் என்னையும் விட்டுச் சென்றனர். ஏன் என்று தான் இதுவரை தெரியவில்லை. எனவே நான் அநாதையாகவே வளர்ந்தேன்.

எனது பெற்றோரை தேடி அலைந்தேன். ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுவரை கிடைக்கவில்லை. இனியும் கிடைக்கப் போவதில்லை. கிடைத்தால் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் என்னிடம் உள்ளது. கதறியழ ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. என்றாலும் கிடைக்கவில்லை.

பசி, தாகம் என்றாலும் எதை உண்பது, குடிப்பது என்று தெரியவில்லை. நிழலைப் போல என்னை பின் தொடரும் தனிமை. எப்போது நீங்கும் என்று எனக்கு தெரியாது. எனது தோற்றத்தில் பலர் இருப்பதை காண்கிறேன். எனக்குள் ஒரே குஷி.

அவர்களுடன் ஒன்றாக சிரித்து மகிழ்ந்து விளையாடி, கூட்டாக இணைந்து நானும் உண்டு மகிழலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர்களோ என்னை புறக்கணித்து விட்டனர். நான் ஒரு அநாதை, ஏழை என்பதால் மனம் வலித்தது. ஆனாலும் நான் அவர்கள் அறியாமலேயே அவர்களை பின் தொடர்ந்தேன். அவர்கள் என்னை புறக்கணிக்கின்றனர்.

என்னால் அவர்களை புறக்கணிக்க முடியாது. நேசங்களை சேகரிக்கவே நான் விரும்புகிறேன். எனக்கு பறக்க தெரியாது தவித்தேன் பல முறை. இந்த சந்தர்ப்பத்தில் தான் நானும் ஒரு வேடனின் வலையில் சிக்கி கொண்டேன். அது பெரிய வலை. தப்பிக்க வழியும் இல்லை.

என்ன செய்வேன் நான்? ஏது செய்வேன்? எதுவுமே புரியவில்லை. எல்லாம் புதிராய் இருந்தது எனக்கு.

ஐயோ!அடிமைத்தன சிறைக்குள் அல்லவா என்னை அடைத்து விட்டனர். இனி எனது வாழ்வும் இருள் தான். இப்படியே பல வருடங்களை கடத்தி விட்டேன். இன்னும் விடுதலை மட்டும் கிடைக்கவில்லை.

ஒரு நாள் வேடனின் இளைய மகனின் அறியாமை செயலால் எனக்கு விடுதலை கிடைத்தது. எனக்கோ பேரானந்தம்.

இப்போது நான் மெல்ல சிறகு விரித்து பார்க்கிறேன். ஆம் என்னால் பறக்க முடியும். இனி நான் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. என்னை நான் உணர்கிறேன். என் தனிமை எனக்கு கற்றுத்தந்த பாடங்களை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகிறேன்.

என் இருண்ட காலத்தின் மூலம் ஒவ்வொருவரினதும் முகமூடி நீக்கப்பட்ட உண்மை முகத்தை கண்டேன். இதனால் எனக்கான குட்டி உலகத்தை நானே உருவாக்கினேன். எனக்கான கனவுகளை அதிலே தூவினேன். இது எனக்கான வாழ்க்கை எனக்காக வாழ்வேன்.

என் கடந்த காலத்தில் கசக்கப்பட்ட வாழ்க்கை பக்கங்களை என்னால் சரிசெய்ய முடியும். நிச்சயமாக சரி செய்வேன் என்ற திடமான நம்பிக்கையுடன் பயணிக்கிறேன். பல நெருக்கடிகளையும் தாண்டி!

பறந்து கொண்டிருப்பேன் எனக்கான சிகரத்தை தொடும் வரை. கடந்தது கடந்தது தான் மீண்டும் கடக்க வைக்க முடியாது. நடந்தது நடந்தது தான் மீண்டும் நடைபெறாது. இழந்தது இழந்தது தான் மீண்டும் ஈடுசெய்ய முடியாது. வருவதை ஏற்று போவதை வழியனுப்பி தன்னம்பிக்கையோடு பயணித்தால் சிகரம் தொடலாம்.

Noor Shahidha
SEUSL
Badulla