வரலாற்றுப் புகழ்மிக்க “போர்வை”க் கிராமத்தை காணச் செல்வோம்.

தென்னகத்தின் மாத்தறை மாவட்டத்தில், அக்குரஸைத் தேர்தல் தொகுதியில் அத்துரலிய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொடபிடிய என்றழைக்கப்படும் கிராமத்தின் மற்றொரு பெயர்தான் “போர்வை” என்ற வரலாற்றுப் புகழ்மிக்க அழகிய கிராமமாகும்.

சுற்றுவட்டத்தில் எந்தவொரு முஸ்லிம் கிராமமும் இல்லாத நிலையில் தனிமையில் தன் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் இக்கிராமத்தைப் பற்றிக் கேட்க ஆவலாக இருப்பீர்கள் என்று எண்ணியவனாய் இந்த கிராமத்தின் உயிர் நாடியான போர்வை முஹியத்தீன் ஜும்ஆ பள்ளிவாயலின் உள்ளே நுழைகிறேன்.

பள்ளிவாசலின் அழகை விவரிக்க வார்த்தைகள் இல்லை அவ்வளவு எழில் மிகுந்த தோற்றம். பழைய முகப்பை மாற்றாது புதிய ஒரு பகுதியையும் உயர்ந்த மினாராக்களையும் கொண்டு உருவான இப்பள்ளிவாசல் கிட்டடியில் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. இந்திய கட்டிட விற்பன்னர்களும் சேர்ந்தே புதிய முகப்பை உருவாக்கினார்களாம். உயரமான மினாராக்களோடு கூடிய இந்தப் பள்ளிவாசலின் வரலாறு நூறு வருடங்களுக்கு உட்பட்டிருந்த போதிலும் போர்வைக் கிராமத்தின் வரலாறோ மிக நீண்டதாகும்.

இந்தப் பள்ளிவாசல் 1915 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. அதன் உட்பகுதிகளில் அதன் பழைமை மாறாத விதத்தில் புனர்நிர்மானம் செய்யபட்டிருக்கும் விதமோ போற்றத்தக்கதாகும்.

1640 ஆம்ஆண்டு காலங்களில் இந்த இடத்தில் ஒரு குடியேற்றம் தோன்றுகிறது. இதற்கு அடிப்படையாக அமைந்த சம்பவங்கள் பல இருப்பினும் கிராமத்தில் தற்போது வாழும் மக்களிடம் தேடிப் பெற்ற தகவலின் படி காலிப் பிரதேசத்தில் இருந்து தொழில் நிமித்தம் இங்கு வந்து தங்கியிருந்த முஸ்லிம் ஒருவரின் கனவில் அறிந்து கொண்ட தகவலின் படி இந்த இடத்தில் அடங்கியிருந்த ஓர் அவ்லியாவுக்காக ஒரு தர்கா கட்டப்பட்டதாம்.

அதனைத் தொடர்ந்து இந்த ஊரைக் கண்டு அங்கு அடங்கியுள்ள அஸ்ஸெய்யத் ஸாதாத் பக்கீர் முஹ்யத்தீன் அவ்லியாக்களின் ஸியாரத்தைக் காண பல வகையான அழகு மிகுந்த போர்வைகளோடு பலர் அங்கு வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து இந்த இடத்தை “போர்வை” என்று அழைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கரையோரங்களில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் அதிலும் வெலிகமை, மாத்தறை போன்ற பகுதிகளில் இருந்து வந்த முஸ்லிம்களே அதிகமாக இங்கு வந்து வாழ்ந்து வந்தார்களாம் .

காலம் செல்லச் செல்ல போர்வைக் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் தமது கிராமத்தில் அடங்கியிருந்த அவ்லியாக்களின் பெயரால் வருடா வருடம் கந்தூரி வைபவமொன்றை தொடங்கி வைத்தார்கள்.

இந்த கந்தூரி வைபவம் இன்று கூட கோலாகலமாக நடைபெற்று வருவதோடு இந்த வைபவத்தில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெரும் திரளான மக்கள் ஒன்று கூடுகின்றனர். முன்னைய காலத்தில் மாட்டு வண்டிகளில் ஏறி இந்தப் பள்ளிவாசல் கந்தூரிக்கு தூரப் பிரதேசங்களில் இருந்து மக்கள் வந்ததாகவும் அப்போது எதிர்பட்ட கிராமங்களில் வாழ்ந்த சிங்கள மக்கள் கூட அவர்களுக்கு உதவி ஒத்தாசைகள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

வருடாவருடம் நடக்கும் கந்தூரி வைபவங்களில் அந்த ஊரின் தனித்துவமான கறிகளுடன் கூடிய சாப்பாடே வழங்கப் படுகிறது. வருடாந்த கந்தூரி வைபவங்களில் பல்வேறுபட்ட கலாச்சார நிகழ்ச்சிகள் பள்ளி முன்றலில் நிரந்தரமாக அமைக்கப் பட்டிருக்கும் மேடையில் அரங்கேறும். இங்கு நடக்கும் மிக முக்கியமான நிகழ்ச்சி தான் பக்கீர் பாவாக்களின் ரபாய் ராத்தீப் நிகழ்ச்சி இதனைக் காண்பதற்காகவே சனக்கூட்டம் அலைமோதும்.

பக்கீர் பாவாக்களின் வசதி கருதி “மக்காம் பக்கீர் ” எனும் விடுதி பள்ளிவாசல் வளாகத்தில் கட்டப் பட்டிருக்கிறது. இந்தப் பள்ளிவாசலின் செலவுகளை ஈடுசெய்யும் நோக்கிலும் நிரந்தர வருமானம் கருதியும் கடைத்தொகுதியொன்றை நிர்வாகத்தினர் அமைத்துள்ளனர். இப்பள்ளியின் வளாகத்தில் குர்ஆன் மத்ரஸா மற்றும் அஹதிய்யாப் பாடசாலை ஆகியனவும் அமையப் பெற்றுள்ளன. போர்வைக் கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலை ஸாதாத் மகா வித்யாலயமாகும்.

இந்தப் பள்ளிவாசல் பற்றிய பல அற்புதமான தகவல்கள் இருக்கிறது. அதில் ஒன்று தான் இங்கிருக்கின்ற பித்தளைப் பாத்திரம். சிலர் இந்த பாத்திரம் பற்றிய பல்வேறுபட்ட கதைகளைச் சொன்னபோதும் உண்மையில் இந்த பாத்திரம் சீனி தயாரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் பாத்திரமென்றும் இது 1960 ஆம் ஆண்டில் போர்வைக் கிராமத்தில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளப் பெருக்கத்தின் போது மிதந்து பள்ளிவாசல் வளவுக்கு வந்ததாகவும் அன்றிலிருந்து இன்று வரை அது அதே இடத்தில் இருந்து வருவதாகவும் பள்ளிவாசலின் மௌலவி அவர்கள் என்னிடம் தெரிவித்தார்.

அஸ்ஸெய்யத் ஸாதாத் பக்கீர் முஹ்யத்தீன் வொலியுல்லாஹ் அவர்கள் அடங்கியுள்ள இந்தப் பூமிப்பரப்பிலே பல அற்புதங்கள் நடந்துள்ளதாகவும் அதனால் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் சிங்கள மக்கள் இந்த தர்காவிற்கு கௌரவம் செலுத்தி வருவதாகவும் முஸ்லிம் மக்களோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்களாக வாழ்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

பல வெள்ளப் பெருக்குகளுக்கு முகம் கொடுத்தாலும் இன்றும் எழில் கொஞ்சும் கிராமமாக சிறந்து விளங்கும் போர்வைக் கிராமத்தின் ஒரு கோடியில் நில்வலா கங்கையின் கிளை ஊடறுத்துச் செல்கிறது. ஆங்காங்கே மலைகளும் இடையே பச்சை வயல்களும், ரப்பர் தோட்டங்களும், சிறு தேயிலைத் தோட்டங்களையும் கொண்ட போர்வைக் கிராமத்தின் அழகைக் காண ஓடோடி வாருங்கள் என்று கூறி விடை பெறுகிறேன்.

கலைமணாளன்