இலட்சியக் குடும்பத்தை நோக்கி தொடர் – 02

  • 14

கணவன் மனைவி உறவு

“மேலும், அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீடுகளை அமைதியளிக்கும் இடங்களாக ஆக்கினான்.” (16:80)

இன்றைய பல குடும்பங்களைப் பார்த்தால் மகள் வயது வந்து விட்டாள், மகன் சம்பாதிக்கிறான் எனவே திருமணம் முடித்து கொடுத்தால் நிம்மதி என்று பெற்றோர்கள் நினைக்கின்றார்கள். இதனால் கடமைக்குத் திருமணம் முடித்தாற்போல் துணைகள் வாழ்கிறார்கள்.”

ஆசை அறுபது நாள்! மோகம் முப்பது நாள் என்பது போல் ஆரம்பத்தில் இனிக்கும் கணவன் – மனைவி உறவுகள் பிற்காலத்தில் விரிசல் காண்கிறது. ஏன்?

பொருத்தமானவர்களை இனங்கண்டு திருமணம் செய்து கொடுக்காமையே இன்று கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படவும், விவாகரத்துகள் அதிகரிப்பதற்கான காரணங்களாகவும் உள்ளன என்பதை நான் சொல்லித் தான் புரியும் என்றில்லை.

ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஒன்றை நன்றாகப் புரியவேண்டும். திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் தயார் என்றால் உமக்கான ஒரு துணையைத் தெரிவு செய்வது மட்டும் இல்லை கடமை.

உன் குழந்தைக்கான சிறந்த தாய், தந்தையை தெரிவு செய்வதே மிகவும் பிரதானமானதாகும்.

அதுவே உன்னை சுவர்க்கத்திற்குத் தகுதியானவனா? அல்லது நரகத்திற்கு தகுதியானவனா? என்பதைத் தீர்மானிக்கும்.
இதுவே இலட்சியக் குடும்பத்தின் நகர்விற்கான அடித்தளம் இடும் பாதையாகும்.

ஆக அல்லாஹ்வின் ஏற்பாட்டில் சிறந்த ஒரு உறவாக கணவன் மனைவி உறவு காணப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் இலட்சியக் குடும்பத்தை நோக்கிச் செல்வதற்கு தடையாக இருப்பது இரு காரணங்கள்.

  1. கணவன் மனைவி உறவில் அன்பும், பரஸ்பர திருப்தியும் இன்மை.
  2. இரு உள்ளங்களும் இறைவனுடனான நெருக்கத்தைக் குறைத்தல்.

இதனாலே திருமண உறவு இன்று எம் சமூகத்தில் தோல்வியடைந்து ஏனோ, தானோ என்று வாழ்கிறார்கள்.

அந்த வகையில் இலட்சியக் குடும்பமாக மாற்ற முதலில் துணைவர்களுக்கிடையில் நடந்து கொள்ளும் முறை, அன்பை வெளிக்காட்டும் விடயங்கள் பற்றி பார்ப்போம்.

வெறும் கற்பனையாக சினிமாக்களில் காட்சிப்படுத்தப்படும் காதலன், காதலி, கணவன், மனைவிகள் அன்பைப் பரிமாறும்
காட்சிகளை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் நபி(ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் குடும்ப வாழ்க்கையில் எவ்வாறு வாழ்ந்தார்கள்? குடும்ப வாழ்வு பற்றி எப்படியெல்லாம் சொன்னார்கள் என்று அறிந்திருக்கிறோம்? இல்லை என்பதே உண்மை.

“உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் நற்பண்பால் மிகச் சிறந்தவரே” (திர்மதி)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: வீட்டில் நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் சிரிப்பார்கள், சிரிக்கவைப்பார்கள் மென்மையாக நடந்து கொள்வார்கள்.

மேலும் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் நினைவை ஏற்படுத்தாத எல்லாக் காரியமும் வீண். மனைவியோடு விளையாடுவது மட்டும் வீணல்ல. (நஸாயி)

எனது மனைவி ஆயிஷாவே நான் அதிகம் விரும்பும் நபர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் நபி ஸல் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: கதீஜா (ரலி) யின் அன்பு என் இரத்த நாளங்களில் எல்லாம் கலந்துள்ளது.

ஒரு மனோதத்துவ நிபுணரின் கூற்று: எந்த அளவு உங்கள் பார்ட்னரைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்துள்ளீர்களோ அந்த அளவுக்கு இல்லற உறவை பலமாகவும், நிறைவாகவும் வைத்துக்கொள்ள முடியும்.

இதுவே இன்னும் அன்பை அதிகரித்து, புரிந்துணர்வை ஏற்படுத்தும்.

உன் துணைக்காக நேரத்தை ஒதுக்கி கதைத்தல், அன்பு வார்த்தைகளை பரிமாறுதல், வெளியிடங்களுக்கு அழைத்துச்செல்லுதல். இது இன்னும் உறவை பலப்படுத்தும் அல்லவா?

நபி (ஸல்) அவர்கள் இரவின் பிற்பகுதியில் ஆயிஷாவே என்னோடு ஏதாவது பேசு என்றார்கள்.

நபிகளாரின் இந்த முன்மாதிரி எவ்வளவு போற்றத்தக்கதாகும். மேலும் வீட்டு வேலைகளில் அவளுக்கு துனையாக இருப்பது. (அல் அதபுல் முப்ரத் 4996 )

அதே போல் நகைச்சுவை உணர்வையும் தூண்டியுள்ளார்கள். இடையிடையே உங்களது உள்ளங்களை சந்தோஷப்படுத்திக்கொள்ளுங்கள் என்றார்கள்.

ஆக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிரோடு வாழ்ந்தபோதும் உயிர் நீத்த மனைவிகளுக்கும் அழியாத தாஜ்மஹால்கள் கட்டினார்கள். அதனால்தான் அவை இன்றும் வரலாறுகளில் பேசப்படுகின்றன.

“இருபத்தி ஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மீது அவர்கள் கொண்ட காதலுக்கு நிகர் எதுவுமில்லை.”

அவர்களின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலத்திற்கு பின்பும் அன்னையரின் நினைவிலே அவர்கள் வாழ்ந்தார்கள் என்றால் மனைவியை உண்மையாக எந்தளவுக்கு அவர்கள் காதலித்துள்ளார்கள் என்பது விளங்கும். இதில் ஒரு அபூர்வ விடயம் என்னவென்றால் அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களோ நபி (ஸல்) அவர்களை விட வயதில் மூத்தவர்களாக இருந்தார்கள். திருமணத்தின் போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது 25 அன்னையருக்கோ வயது 40. உண்மையான காதலுக்கு வயதெல்லை இல்லை என்பதை இந்த பரிசுத்த தம்பதிகள் நிரூபித்துள்ளார்கள்.

“தன் பரிசுத்த மனைவி மீது நபி (ஸல்) அவர்கள் தங்களின் உண்மையான காதலை வைத்திருந்ததற்கு இந்தச் சான்றே போதுமானது.”

எனவே இந்த அன்பு, நெருக்கம், புரிந்துணர்வுடன் வாழும்போது நிம்மதி சந்தோஷம் குடிகொள்ளும் என்றாலும் இந்த நெருக்கத்தோடு இறைவனுடன் நெருக்கம், அவனின் மார்க்கத்திற்காக செயற்பட்டு இலட்சியக் குடும்பமாக மாறும் போதே இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட ஈருலகிலும் வெற்றி பெறும் தம்பதிகளாகத் திகழ்வோம்.

எனவே இறைவனுக்காக வாழும் துணைவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்.
இன்ஷா அல்லாஹ்.

தொடரும்
Faslan Hashim

கணவன் மனைவி உறவு “மேலும், அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீடுகளை அமைதியளிக்கும் இடங்களாக ஆக்கினான்.” (16:80) இன்றைய பல குடும்பங்களைப் பார்த்தால் மகள் வயது வந்து விட்டாள், மகன் சம்பாதிக்கிறான் எனவே திருமணம் முடித்து…

கணவன் மனைவி உறவு “மேலும், அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீடுகளை அமைதியளிக்கும் இடங்களாக ஆக்கினான்.” (16:80) இன்றைய பல குடும்பங்களைப் பார்த்தால் மகள் வயது வந்து விட்டாள், மகன் சம்பாதிக்கிறான் எனவே திருமணம் முடித்து…