காத்திருப்பேன் நீ வரும் வரை!

நீ யாரென்று தெரியாமல் தான்
உன்னை நினைக்கிறேன்
ஏனென்று கூட புரியாமல்!

நீ இப்போது எங்கிருக்கிறாய்?
ஏன் இன்னும் என்னை தவிக்க வைக்கிறாய்?

நீ இப்போது என்ன செய்கிறாய்?
இன்னும் என்ன தான் செய்கிறாய்?
என்னிடம் வந்து சேராமல்!

நீ இப்போது எப்படி இருக்கிறாய்?
எப்படியும் நீ
நலமாக தான் இருப்பாய்.
உனக்கான என்
பிராத்தானைகள் தொடரும் வரை!

நீ எப்படி இருப்பாய் என்று
எனக்குள் தேடுகிறேன்.
நீ எப்படி இருந்தாலும்
எனக்காக நீ இருப்பாய் என்று தெரியும்.
ஏனெனில் உனக்காக
நான் இருப்பதால்!

நீ உன் கடந்த காலத்தை நினைத்து
வருந்திக் கொண்டிருக்கிறாயா?
இல்லை உன் நிகழ்காலத்தை நினைத்து
உன்னையே வருத்திக் கொள்கிறாயா?
இல்லை உன் எதிர்க்காலத்தை நினைத்து
அமைதியாக இருக்கிறாயா
என்று எனக்கு தெரியாது.

கடந்ததையும் கடப்பதையும்
நினைத்து நீ வருந்தாதே!
கடக்க இருக்கும் தூரம் உனக்கு
புன்னகையை அள்ளி வீசும் கலங்காதே!

உனக்கான காத்திருப்பில்
நான் என்னையும் மறந்து போகிறேன்!
நீயாவது வந்து என்னை
எனக்கே ஞாபகப்படுத்துவாயா?
இல்லை நீ உன்னையே மறந்து என்னை நேசிப்பாயா?

நீ நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை
நானாவது உன்னை நேசிக்கிறேன்.
தாமதிக்காமல் என்னிடம் வந்து விடு!

உன்னிடம் சொல்ல பல
கதைகள் உண்டு என்னிடம்
உன்னிடம் சண்டை போட
பல காரணங்கள் உண்டு என்னிடம்.
உன்னிடம் கதறியழ பல
காயங்கள் உண்டு என்னிடம்.

உலகம் அறியாது கலைக்கப்பட்ட
என் பிஞ்சு கனவுகளுக்கும்
சிதைக்கப்பட்ட என் புன்னகைக்கும்
உயிரூட்ட நீ சீக்கிரம் வந்து விடு!

நீ மட்டும் என் பயணம் முடியும் வரை
என்னோடு வழித்துணையாக
வந்தாலே போதும் எனக்கு!

நீயின்றி தனிமையில் தத்தளிக்கும்
நொடிகள் உனக்கானது என்று
எப்போது தான் நீ அறியப் போகிறாய்?

உனக்காக காத்திருக்கும்
கணங்களின் வலிகளை நீ
எப்போது தான் உணரப் போகிறாய்?

நீ என்னைப் பற்றி நினைக்கிறாயா
இல்லையா என்று எனக்கே தெரியாது.
ஆனாலும்
ஒரு தும்மல் வந்தால் மட்டும்
நீ தான் என்னை நினைக்கிறாய் என்று
நான் நினைத்து மனதிற்குள்
சிரித்த நிமிடங்களை யார் அறிவது?

இதற்கு மேல் வேண்டாம் இந்த தூரம்!
இனியும் தொடருமா இந்த கண்ணாமூச்சி ஆட்டம்.
இனியாவது வந்து விடு என்னிடம்.

உனக்கான கனவுகளுடன்
உனதான நினைவுகளுடன்
உனக்கான தீராத காத்திருப்புடன்
காத்திருக்கிறேன்.

உனக்காக மட்டுமே
காத்திருப்பேன் நீ வரும் வரை!

Noor Shahidha
SEUSL
Badulla