ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா – 2021 இன்று ஆரம்பம்

வரும் நாள்களில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதியாகும், எந்தத் தேதியில் கொரோனா உச்சம்பெறும், பயணங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்ற சந்தேகங்களும் அச்சமும் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, உலகின் பிரமாண்டமான விளையாட்டுத் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் போட்டிகளை நடத்துவோருக்கும் இருக்கிறது.

இந்த அச்சத்துக்கு மத்தியிலேயே (09.04.2021) வெள்ளிக்கிழமை சென்னையில் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா. அடுத்த 52 நாள்களுக்கு ஆறு நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன. இப்போதைக்கு மைதானத்துக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட நகரங்களில் திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் என்ன செய்வது என்பது குறித்தும் யோசனைகள் செய்யப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு ஆறு நகரங்கள் தவிர, தேவைப்பட்டால் ஹைதராபாத்துக்கு போட்டிகளை மாற்றுவது என திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனால் போட்டிகள் எப்படி, எங்கு நடைபெறப் போகின்றன என்பதை உண்மையில் கொரோனாதான் தீர்மானிக்கப்போகிறது.

கடந்த முறை கொரோனா வேகமாகப் பரவி வந்தபோது, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு போட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. தொலைக்காட்சிகளிலும் ஆன்லைனிலும் அதிகம் பேர் பார்த்த விளையாட்டு நிகழ்ச்சி என்ற பெருமை அப்போது அதற்குக் கிடைத்தது.

இப்போது தினசரி கொரோனா பாதிப்புகளில் உலகிலேயே இந்தியாவுக்கு முதலிடம். மொத்த எண்ணிக்கையில் பிரேசிலைக் கடந்து இரண்டாம் இடத்தை எட்டிவிட எத்தனிக்கிறது. மிக வேகமாக தொற்று பரவுவதைக் கருதி மகாராஷ்டிரா, டெல்லி, மத்தியப்பிரதேசம் உள்பட சில மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை ஏற்கெனவே அறிவித்திருக்கின்றன. சில மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. போட்டிகள் நடத்தப்படும் மும்பை, டெல்லி, சென்னை நகரங்களில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள்

ஐபிஎல் அணிகளுக்கு பயோ பப்பிள் என்ற கொரோனா நடமாட்ட விதிமுறைகள் இந்தப் போட்டிகளிலும் தொடருகின்றன. வீரர்கள், பயற்சியாளர்கள், நிர்வாகத்தினர் ஆகியோருக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும். எங்கெல்லாம் செல்ல வேண்டும், யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பவை பயோ பப்பிள் விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. போட்டிகள் முடியும் வரை யாரும் குறிபிட்ட வரம்பைத் தாண்டி வெளியே செல்ல முடியாது. இந்த முன்னெச்சரிக்கை வளையத்தையும் கொரோனா உடைத்திருக்கிறது. பயோ பப்பிள் வரம்புக்குள் இருந்த மும்பை அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான கிரண் மோரே, பெங்களூர் அணியின் ஆல் ரவுண்டரான டேனியல் சாம்ஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த இரு அணிகளும்தான் சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மோதப் போகின்றன.

மைதானத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. பந்தில் எச்சிலைத் தடவக்கூடாது, பிற அணி வீரர்களுடன் கைகுலுக்கக்கூடாது என்பன போன்ற பிற கட்டுப்பாடுகளும் தொடருகின்றன.

பயோ பப்பிள் கட்டுப்பாடுகள் தவிர, ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கேரவன் முறையில் போட்டிகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. இதன்படி ஒரு அணி குறிப்பிட்ட மைதானத்தில் ஆட வேண்டிய அனைத்துப் போட்டிகளையும் ஆடி முடித்த பிறகே அடுத்த மைதானத்துக்குச் செல்ல வேண்டும். சொந்த ஊரில் எந்த அணிக்கும் போட்டிகள் கிடையாது.

BBC