திரை முகத்திற்கா பார்வைக்கா

  • 17

கடந்த சில ஆண்டுகளாக உயர்கல்வித்துறையில் கேட்ட சில கசப்பான அனுபவங்களில் இருந்து….

இலங்கை முஸ்லிம் பெண்களை பொறுத்தவரை மேற்கு பகுதி கிராமங்களில் சில பெண்கள் மேற்கத்திய கலாசாரத்துடன் பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம்வரை கற்கின்றனர். சில தென் பகுதி நகரங்களில் பல பெண்கள் இஸ்லாமிய ஆடை அமைப்பு என்று கூறி முகத்திரை அணிந்த வண்ணம் பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம்வரை கற்கின்றனர்.

மேற்படி இரு நிலைமைகளும் இலங்கையை பொறுத்தவரை முஸ்லிம் பெண்களுக்கு அபாயமாகத்தான் உள்ளது. இன்று முகத்திரை அணிந்து உயர் கல்வியை தொடர்வதில் உள்ள சிக்கல்கள் பற்றி அலசி ஆராய உள்ளோம். நம்மிடம் சிலர் தமது முகத்திரையுடன் சம்பந்தப்பட்ட இரு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அவற்றை சிந்தைனைக்காக உங்கள் முன் வைக்கின்றேன்.

அன்று கல்லூரி பாடங்கள் முடிந்து ஒரு முஸ்லிம் மாணவன் தன் சிங்கள நண்பர்களுடன் புகையிரதத்தில் செல்லும் போது அதே கல்லூரியில் கற்கின்ற முகத்திரை அணிந்த மாணவியும் அவளின் நண்பியும் அதே புகையிரதத்தில் சென்றுள்ளனர். புகையிரதத்தில் சனத்தொகை குறைவு மற்றும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக குறித்த முகத்திரை அணிந்த பெண் தனது முகத்திரையை அகற்றினார். இதை அவதானித்த சிங்கள நண்பன் முஸ்லிம் நண்பனிடம் கேட்ட கேள்வி

நமது பகிடிவதையின் போது முகத்தை மூடிய பெண் ஏன் தற்போது முகத்தை திறந்துள்ளார். இது பகிடிவதையில் இருந்து தப்ப மேற்கொள்ளும் நடிப்பா???

நாட்டில் இன்று பகிடிவதைகளுக்கு எதிராக சட்டம் இருந்தாலும் உயர் அதிகாரிகளின் தயவுடன் இன்று மறைமுகமாக அணைத்து கல்லூரிகளிலும் பகிடிவதை இடம்பெறுகின்றது. இவ்வாறானதோர் சூழ்நிலையில் கல்லூரியொன்றில் புதிய கல்வி ஆண்டுக்காக சில முகத்திரை அணிந்த பெண்கள் சென்றுள்ளனர். இவர்களை பார்த்து பகிடிவதை வழங்கும் தரப்பில் உள்ள சிங்கள மாணவர்கள் கேட்ட கேள்வி

நீங்கள் மாணவர்களா அல்லது உளவுத்துறை (CID) அதிகாரிகளா????

(மேற்படி இரு நிகழ்வுகளிலும் மாற்று மத நண்பர்களால் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் அனுப்பவும்?)

இவ்வாறு நாட்டில் சாதாரண தரப் பரீட்சை தொடக்கம் பல்கலைக்கழகம் வரை முகத்திரை அணிவதால் பல பெண்களும், சில ஆண்களும் விடை தெரியாத கேள்விகளை எதிர் நோக்குகின்றனர். எனவே இது பற்றிய எனது சக்திக்கேற்ப அல்குர்ஆனிலும் புகாரி கிரந்தத்திலும் தேடினேன்.

அல்குர்ஆனில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக முன்வைத்துள்ள ஓர் கட்டளையே பார்வையை தாழ்த்துதல் ஆகும்.

(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே, அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான் (24:30)

மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக் கட்டும்; தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்; அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். தங்கள் கணவன்மார்கள், தங்களுடைய தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்கள் கணவன்மார்களின் மகன்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் மகன்கள், சகோதரிகளின் மகன்கள், தங்களுடன் நெருங்கிப் பழகும் பெண்கள், தங்களுடைய ஆண், பெண் அடிமைகள் மற்றும் தவறான வேட்கைகளில்லாத தம்மை அண்டி வாழுகின்ற ஆண்கள், மேலும், பெண்களின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி எதுவும் தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்கள் முன்னிலையிலன்றி (வேறு எவரிடத்திலும்) தங்களுடைய அழகை அவர்கள் வெளிக்காட்ட வேண்டாம். தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக தங்களுடைய கால்களை(ப் பூமியில்) அடித்துக் கொண்டு நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் பக்கம் பாவமன்னிப்புக் கோரி மீளுங்கள். நீங்கள் வெற்றியடையக்கூடும். (24:31)

நமது அன்றாட செயற்பாடுகளில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக இணைகின்ற பல சந்தர்பங்கள் உள்ளன. அவை இன்று மட்டுமல்ல ரசூலுல்லாஹ் வாழ்ந்த காலத்திலும் இடம்பெற்றுள்ளன. ஸஹிஹுல் புகாரியில் இடம் பெற்றுள்ள 5000ற்கும் மேற்பட்ட ஹதீஸ்களை வாசித்த அனுபவத்தில் கூறுகிறேன்.

அன்றைய பெண்களும் ஆண்களும் யுத்தம், பள்ளிவாசல்களில் ஒன்றாக பெண்கள் முகத்திரை இன்றி அமர்ந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ஒரு பெண்மணி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன்’ என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தம் தலையைத் தொங்கவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்வில்லை என்பதைக் கண்ட அந்தப்பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால், அவரை எனக்கு மணமுடித்து வைய்யுங்கள்!’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?’ என்று கேட்டார்கள். அதற்கவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, இறைத்தூதர் அவர்களே!’ ஏதுமில்லை, இறைத்தூதர் அவர்களே!’ என்றார். நபி(ஸல்) அவர்கள், உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!’ என்றார்கள். அவரும் போய் பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். ‘இரும்பாலான ஒரு மோதிராவது கிடைக்குமா என்று பார்!’ என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லியனுப்பினார்கள். அவர் மீண்டும் சென்றுவிட்டுத் திரும்பிவந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இரும்பாலான மோதிரம் கூடக் கிடைக்கவில்லை. ஆனால், இதோ இந்த என்னுடைய வேட்டி உள்ளது’ என்று கூறினார்.
-அறிவிப்பாளர் ஸஹ்ல்(ரலி) கூறினார்: அவரிடம் ஒரு மேல்துண்டு கூட இல்லை. எனவேதான் தன்னுடைய வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகக் கூறினார். –

அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இந்த வேட்டியை நீர் அணிந்தால், அவளின் மீது ஏது இருக்காது. அவள் அணிந்தால், உம்மீது ஏதும் இருக்காது. (ஒரு வேட்டியை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்?)’ என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்துகொண்டார். பிறகு, அவர் எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பார்த்தபோது அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். அவர் வரவழைக்கப்பட்டபோது, ‘உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது’ என்று கேட்டார்கள். அவர், ‘இன்ன , இன்ன , இன்ன என்னுடன் உள்ளன’ என்று எண்ணி எண்ணிக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (ஓதுவேன்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தேன். நீர் செல்லலாம்!’ என்று கூறினார்கள்.  (புகாரி 5030)
மேலுள்ள ஹதீஸை அவதானிக்கைகையில் ரசூலுல்லாஹ்வும் குறித்த ஸஹாபியும், ஸஹாபிப் பெண்ணை ஒரே சபையில் பார்த்துள்ளனர். என்பதை ஊகிக்க முடிகின்றது.

அல்குர்ஆனின் 24:31 ம் வசனம் பெண்களின் முகத்திரை (பர்தா) பற்றி பேசுவதாக குறிப்பிடப்படுகின்றது. ஆனால் ரசூலுல்லாஹ் மற்றும் சஹாபாக்களின் வாழ்கையை அவதானிக்கையில் முகத்திரை சட்டம் ரஸூலுல்லாஹ்வின் மனைவிமார்களுக்கான தனிச்சட்டமாக இருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ள ‘சத்துஸ் ஸஹ்பா’ என்னுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மண முடித்து) மூன்று நாள்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் வலீமா – மண விருந்துக்கு முஸ்லிம்களை அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை.

நபி(ஸல்) அவர்கள், பிலால்(ரலி) அவர்களிடம் தோல்விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, அவ்வாறே அது கொண்டு வந்து விரிக்கப்பட்டது. பிறகு, அதில் பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (‘ஹைஸ் எனும் எளிமையான உணவு தயாரானது. அதை அங்கிருந்த முஸ்லிம்கள் உண்டனர்.) அப்போது முஸ்லிம்கள் ‘ஸஃபிய்யா அவர்கள் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (-நபியவர்களின் துணைவி)-யரில் ஒருவரா? அல்லது நபி(ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா?’ என்று பேசிக் கொண்டனர். ‘ஸஃபிய்யா அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் ஹிஜாப் – திரையிட்(டுக் கொள்ளும் படி கட்டளையிட்)டால், அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் (-நபியவர்களின் துணைவியரில்-) ஒருவர். அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர்’ என்று (மக்களில் சிலர்) கூறினர். நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் புறப்பட்டபோது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கையமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) திரையை இழுத்து (மூடி)விட்டார்கள். (4213)

புகாரியின் 4213ம் ஹதீஸ் மற்றும் ஆயிஷா நாயகி மீதான அவதூறு சம்பந்தமாக அறிவிக்கின்ற (புகாரி 4141) ஹதீஸ்களை அவதானிக்கையில் ரசூலுல்லாஹ்வின் மனைவிமார்களின் வீட்டின் வாசற் கதவு, வாகனத்தில் செல்லும் போது அதன் கதவுகளையும் மூடி கொள்வதற்கான அமைப்பாகத்தான் ஹிஜாப் என்று அல்லது திரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாக இது முகத்திரை அல்ல.

இங்கு குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களை அவதானிக்கையில் ரசூலுல்லாஹ்வின் முன்னிலையிலும், ஸஹாபாக்களின் முன்னிலையிலும் பெண்கள் முகத்தை திறந்த நிலையில் அமர்ந்துள்ளனர். மேலும் திரை என்பது ரசூலுல்லாஹ்வின் மனைவிமர்களுக்கான விசேட சட்டமாக இருக்க வேண்டும். அல்லது அது வாசற்கதவை மறைத்து போடுகின்ற திரையாக இருக்கவேண்டும்.

இறுதியாக பெண்களின் ஆடை அமைப்பை பொறுத்தவரை அவை உடல் அவயங்களை வெளிக்காட்டும் அமைப்பில் ஒட்டியதாக இல்லாமல் தளர்வனதாக இருக்க வேண்டும். பிற ஆண்களை கவரும் விதத்தில் அலங்காரங்கள் இருக்க கூடாது.

இன்று பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் உயர்கல்விக்காக அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சென்ற வண்ணமுள்ளனர். அது தவறில்லை. சில பெண்கள் மேற்கத்திய ஆடை அமைப்பிலும் இன்னும் சிலர் முகத்திரை அணிந்த வண்ணமும் செல்கின்றனர். ஆனால் அங்கு 1% முஸ்லிம்களும் மீதி 99% பிற மதத்தவரும் உள்ளனர்.
மேற்கத்திய ஆடை அமைப்பில் சென்றால் பெண்களின் கற்புக்கு பாதகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. முகத்திரை அணிந்து சென்றால் உளவுத்துறை அதிகாரி மற்றும் பயங்கரவாதி என்று பட்டம் சூட்டுகின்றனர். அதற்காக கல்வியை விட்டுக் கொடுத்தால் ஒரு சில ஆண்டுகளில் இலங்கையும் மியன்மாராக மாறலாம்.

எனவே பெற்றோர்களே! முஸ்லிம் பெண்களுடன் ஆண்களையும் கற்பிக்க தூண்டவும். அவ்வாறே பெண்களை முகத்திரை இல்லாமல் தளர்வான அலங்காரங்கள் குறைந்த ஆடையுடன் கல்லூரிகளுக்கு அனுப்பவும். மேலும் கல்லூரியில் அந்நிய ஆண்களுடன் எல்லை மீறி பழகாமல் தமது பார்வைக்கும், வாய்க்கும் திரையிடுமாறு அறிவுத்தவும்.

Ibnuasad

கடந்த சில ஆண்டுகளாக உயர்கல்வித்துறையில் கேட்ட சில கசப்பான அனுபவங்களில் இருந்து…. இலங்கை முஸ்லிம் பெண்களை பொறுத்தவரை மேற்கு பகுதி கிராமங்களில் சில பெண்கள் மேற்கத்திய கலாசாரத்துடன் பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம்வரை கற்கின்றனர்.…

கடந்த சில ஆண்டுகளாக உயர்கல்வித்துறையில் கேட்ட சில கசப்பான அனுபவங்களில் இருந்து…. இலங்கை முஸ்லிம் பெண்களை பொறுத்தவரை மேற்கு பகுதி கிராமங்களில் சில பெண்கள் மேற்கத்திய கலாசாரத்துடன் பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம்வரை கற்கின்றனர்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *