வேற்றுமையில் ஒற்றுமையே தேசத்தின் பலம்

  • 148

மதியை மறைக்கும் முகில் கூட்டம்
மறைத்தும் மதியோ ஒளிபாய்ச்சும்
மனதில் தோன்றும் பிரிவுகள் நீங்கி
மதி போல் மீண்டும் ஒளிர்வோம்

மலைபோல் துன்பம் வந்தாலும்
மன உறுதியால் வெல்வோம்
மாசுகளற்ற நம் வாழ்வில்
மனிதம் தழைக்க வாழ்வோமே

வாழ்க்கை என்பது நாணயம் போன்று இரண்டு பக்கங்களை உடையது. இன்பமும், துன்பமுமே அவை. அவ்வாறே விளையாட்டில் வெற்றி தோல்வி, குடும்ப வாழ்வில் ஊடல் கூடல், நாட்டில் ஒற்றுமை வேற்றுமை சகஜமானவை. சவால்களை சாதனைகளாக மாற்றும் மனிதர்களால் மாத்திரமே வாழ்வில் முன்னேற முடியும். தனி மனிதர்கள் பலர் சேர்ந்து குடும்பம் உருவாகிறது. பல குடும்பங்கள் இணைந்து சமூகம் உருவாகிறது. பல சமூகங்கள ஒன்றிணைந்து தேசம் உதயமாகிறது. ஒரு நாட்டில் பல இனங்களையும் சேர்ந்த, பல்வேறு மதங்களை பின்பற்றுகின்ற, பல மொழிகளைப் பேசுகின்ற, வெவ்வேறான பண்பாடுகளைக் கொண்ட மக்கள் உலகெங்கிலும் வாழ்கின்றனர். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத சந்தர்ப்பங்களுமுண்டு. இத்தகைய வேளைகளில் ஒற்றுமை நீங்கி முரண்பாடுகள் தலைதூக்குகின்றன.

இன்றைய நவீன உலகில் ஒற்றுமை பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஒற்றுமையானது காலவோட்டத்திற்கேற்ப மாற்றமடையக் கூடியதல்ல. தொடர்ச்சியான மற்றும் நிலையான வாழ்வுக்கான அடித்தளமாகவே கருதப்படுகினற் து. பரம்பரை பரம்பரையாக உணர்த்தப்பட வேண்டிய மற்றும் கட்டியெழுப்பப்பட வேண்டிய விடயம் ஆகும். நம் முன்னோர் அந்நிய மதச் சகோதரர்களுடன் இருந்த அந்நியோன்னியமான உறவு தற்கால உலகில் சமூக வலைத்தளங்களுடன் சுருங்கி விட்டது. ஒற்றுமையை நிலைநாட்ட பாரிய விடயங்களை மேற்கொள்ளத் தேவையில்லை. சிறு சிறு விடயங்கள் கூட நிலையான சகவாழ்வுக்கு அத்திவாரமாக அமையும்.

முதலில் ஒற்றுமை தொடர்பாக நோக்குவோம். ஒற்றுமை என்பது பல புவியியல், இன மற்றும் மக்கள் தொகை, வரலாறு, ஆன்மீகம், மத, கலாசார, பொருளியல், அரசியல் மற்றும் பல துணைக் கூறுகளால் உருவான ஒரு தொகுப்பு எனலாம். அதாவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள் தங்கள் வேறுபாடுகளை மதித்து மோதல்களைத் தவிர்த்து வன்முறையற்ற முறையில் தீர்க்கும் போது உருவாகும் நிலையாகும். இது குறிப்பிட்ட நேரத்திற்கும், பிரதேசத்திற்குமேற்ப வேறுபடலாம். ஒற்றுமையானது புராதன காலங்களிலிருந்து வலியுறுத்தப்பட்டு வரும் ஒரு கோட்பாடாகும். ஆரம்ப காலங்களில் ஆக்கிரமிப்புக்கான வழியாகப் புலப்பட்டிருப்பினும் பினனர் இரு சமூகங்களுக்கு அல்லது குழுக்களுக்கு இடையிலான உறவை மறுசரீமைப்பதற்கான ஒரு முறையாக வளர்ச்சியடைந்தது.

வன்முறை, ஆயுத கலாசாரம், பயங்காரவாதம் இல்லாதொழிக்கப்பட்டு அன்பு, கருணை, சாந்தி, சமாதானம் உலகில் நிலை பெற வேண்டும் என்பதே ஒற்றுமையின் எதிர்ப்பார்ப்பாகும்.

அடுத்து இதன் அவசியம் பற்றி பார்ப்பின், இனம், மதம், வர்க்கம், பாலினம் மற்றும் அரசியல் சாய்வு உள்ளிட்ட பல வழிகளில் வேறுபடும் சந்தர்ப்பங்களும் உண்டு. இக்குழுக்கள் மோதலுக்கான காரணிகளாக இருக்கலாம். அல்லது பங்களிக்கின்றவையாக இருக்கலாம். மேலும் வேறுபாடுகளைக் கண்டறிந்து வாழ வழி வகுக்கிறது. சகிப்புத் தன்மை, பரஸ்பர மரியாதை மற்றும் வன்முறைக்கு உதவாமல் மோதல்களை தீர்ப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள உதவுகிறது.

எல்லா மதங்களும் ஒற்றுமையையே போதிக்கின்றன. பௌத்த மதம் “நிலையற்ற வாழ்வினையும் மனிதன் வாழ வேண்டிய அறநெறிகளையும், ஒற்றுமையையும் போதிக்கிறது.” இந்து மதம் “நடப்பவை எல்லாம் நன்றாக நடக்கும். மனிதரில் புனிதரைக் காண்போம்” என்று கூறுகிறது. “உன்னைப் போலவே பிறரையும் நேசி” என்பது இஸ்லாமிய மதக் கோட்பாடு.

இரு கைகளும் ஒன்றிணையும் போதே ஓசையுண்டாகும் என்பது போல நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும், தத்தமது உரிமைகளுடனும் வாழும் போதே அந்நாடு அபிவிருத்தியை நோக்கி நகரும். இன்றைய நவீன உலகில் மக்கள் அரசியல், சமூக, பொருளாதார, கலாசார ரீதியாக பிளவுபட்டு வேற்றுமையில் திண்டாடுவதைக் காணலாம். ஆகவே இத்தகைய அம்சங்களை தனித்தனியாக ஆராய்ந்து நோக்கின் பல்லின மக்கள் மத்தியில் இலகுவாக கட்டியெழுப்ப முடியும்.

முதலில் அரசியல் ரீதியாக ஒற்றுமையை எவ்வாறு கட்டி எழுப்பலாம் என்பது குறித்து நோக்குவோம்.

ஆட்சி, அதிகாரம் பற்றி கோட்பாடுகளும், நடைமுறைகளும் தான் அரசியல் எனப்படுகிறது. அரசின் அமைப்பு, குடிமக்களின் உரிமை, அரசின் கடமை முதலியவற்றை வரையறுக்கும் சட்டமே அரசியல் சட்டம் எனப்படுகின்றது. மனிதர்களுள் பத்து பேர் சேர்ந்து வாழ ஆரம்பித்த நாளிலேயே அரசியலுக்கும் வாழ்வு வந்து விட்டது என்பது தான் யதார்த்தம். பதின்மரில் ஒருவர் மூத்தவர்-தலைவர், அவரது வழிகாட்டலின் கீழ் செயல்பட இருவர் அல்லது மூவர்-அமைச்சர்கள். அந்த இடத்தில் வாழ்ந்து வளர வேண்டியவர்கள் குடிமக்கள். ஆயினும் தத்துவ அடிப்படையில் நோக்கின் மனிதன் தோன்றி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகே அரசியல் உருப்பெற்றது.

கிரேக்க தத்துவ அறிஞர் பிளேட்டோ எழுதிய ‘குடியரசு’, அரிஸ்டொட்டில் எழுதிய ‘அரசியல்’ ஆகிய நூல்கள் தான் அரசியல் தத்துவத்தில் எழுதப்பட்ட ஆரம்ப வழிகாட்டிகள் என்பர். 19ஆம் நூற்றாண்டில் தான் அரசியல் ‘அறிவியல்’ எனும் அந்தஸ்தை அடைந்தது. பலவிதமான சமூக அறிவியற் பிரிவுகள் உருவாகத் தொடங்கிய 19ஆம் நூற்றாண்டு வரை அரசியல் அறிவியல் எனும் நவீனத்துறை உருவாகியிருக்கவில்லை. அரசியல் கட்சிகள் நவீன வடிவத்திலும் 19ஆம் நூற்றாண்டில் தான் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் தோன்றின.

ஒரு நாடு தேசிய அரசொன்றை நிறுவி அதன் மூலம் சகல சமூகங்களினதும் அதாவது பல்லின மக்களினதும் அடிப்படை உரிமைகளும், தேவைகளும் நிறைவு செய்யப்பட வேண்டுமென்ற உணர்வு ஆட்சியாளர் முதல் அடிமட்டத் தொண்டர் வரை வியாபித்து வருகின்றன. மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை ஆட்சித் தலைவர்கள் பலர் அறியாதவர்களாகவே உள்ளனர். இவற்றிற்கு காரணம் சமூகம் தொடர்பில் சிந்திக்காமையும், வேற்றுமையை களைய முயற்சிக்காமையுமே. சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக ஓடோடி உழைத்து எவ்வழியிலேனும் பணத்தை தேடினால் போதும் என்ற நினைப்பில் ஒரு தரப்பினரும், இருக்கும் பதவியிலிருந்து உயர் பதவியை அடைய வேண்டுமென்று சிந்திக்கும் மற்றொரு தரப்பினரும் இருக்கையில் இங்கு தான் வேற்றுமை தலைதூக்குகிறது.

யுத்தம், பகைமை, வன்முறை போன்றவைகள் காரணமாக பிரிந்துள்ள மாந்தரை ஒன்றிணைத்து ஒற்றுமையை கட்டியெழுப்புவது காலத்தின் தேவையாகும். காரணம்:

“குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு”

அதாவது குடிமக்களை காத்து செங்கோல் செலுத்தும் மன்னன் அடியை உலகத்தார் பொருந்தி நிற்பர்.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது ‘ஜப்பான்’ நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி போனற் நகரங்கள் மீது அணுகுண்டு வீசி முற்றாக அழிக்கப்பட்டாலும் அந்நாட்டு மக்கள் அனைவரும் எதுவித பேதமுமின்றி தம் நாட்டை கட்டியெழுப்ப அர்ப்பணித்ததால் உலக அரங்கிலே துரித அபிவிருத்தியை நோக்கி நகர்ந்தது.

அடுத்து சமூக ரீதியிலான சகவாழ்வை கட்டியெழுப்புவது தொடர்பாக நோக்குவோம்.

ஒரு சமூகம் தனக்குள்ள கண்ணியத்தையும், மரியாதையையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் சகோதரத்துவ உணர்வையும், பரஸ்பர புரிந்துணர்வையும், சமாதானத்தையும், சமத்துவத்தையும் பேணுவது அவசியமாகும். ஒற்றுமை இழந்து வேற்றுமை தலைதூக்கும் போது அச்சமூகம் பல வழிகளிலும் பலவீனமடைவது மாத்திரமன்றி ஏனைய சமூகங்கள் இச்சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தவும் முனைகின்றன. தவறுகளையும், குற்றங்களையும் மறந்து மன்னிப்பு மனப்பாங்குடன் வாழ்ந்தாலே ஒற்றுமையுடன் சகவாழ்வில் நடைபோட முடியும். மேலும் பிற மதத்தவர்களுடன் புரிந்துணர்வுடன் செயற்படும் போது அவர்களின் வழிபாடு, பண்பாடு, கலாசாரங்களை மதித்து நடப்பது அவசியமாகும்.

இன்றைய நவீன உலகின் ஜனநாயக வளர்ச்சியில் உலக நாடுகள், சர்வதேச நிறுவனங்கள், அமைப்புக்கள் ஐக்கியத்தை வலியுறுத்துகின்றன. ஒரு நாட்டின் உயர்வு அந்நாட்டு மக்களின் நலன்பேணல், உரிமை, சுதந்திரம், உத்தரவாதம் போன்றவற்றிலேயே தங்கியுள்ளது.

அந்தவகையில் சமூகங்களுக்கு கருத்துச் சுதந்திரம் உண்டு என்பது தெளிவாகின்றது. ஒரு தனிமனித குரல் சமூகக்குரலாக வேற்றுமையின் திருப்புமுனையாக ஒலிக்கலாம்.

ஒரு நாட்டில் பல்லின மக்கள் சேர்ந்து வாழும் போது கலாசார ரீதியான ஒற்றுமை பிரதிபலிக்க வேண்டும் என்ற ரீதியில் இதனை சற்று விரிவாக ஆராய வேணடும். உலகின் பல நாடுகள் பல கலாசாரத்தால் ஒன்றிணைக்கப்பட்டு உள்ளன. அனைவரும் மொழியினாலும், மதத்தாலும் வேறுபட்டு காணப்படினும் நாட்டின் அபிவிருத்திக்கும், சகவாழ்வுக்கும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது. பன்மைச் சமூகம் அண்மித்து வாழும் பகுதிகளில் வேறுபட்ட கலாசாரங்களை மதித்து வாழும் தலைமுறைகளை உருவாக்க வேண்டியுள்ளது. இந்த உன்னத நோக்கின் அடிப்படையில் பாடசாலை கல்வித் திட்டத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளது. உதாரணமாக சமூகக்கல்வி, குடியுரிமைக் கல்வி… ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இத்திட்டம் பல சிக்கல் நிலையில் காணப்படுகிறது. மலேசியாவில் அண்மைக் காலமாக பல் கலாசாரக் கல்வியின் முக்கியத்துவம் கூடியளவில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சமூகத்தினதும் கண்ணாடி அதன் கலாசாரம் என்ற வகையில் விழுமியங்களைக் கடைபிடித்து ஒழுகுவது கௌரவத்திற்கு காத்திரமானது. ஆயினும் இன்று மதங்களுக்கு இடையில் மாத்திரமின்றி தொழில்களின் அடிப்படையிலும் கலாசார விழுமியங்கள் பேணப்படுகின்றன. ஒரு சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் கலாசாரம் இன்னொரு சமூகத்தில் மறுக்கப்பட்டிருக்கும். எனவே பல் கலாசாரக் கல்வியின் மூலம் முரண் கலாசாரம் உருவாகாமல் தடுக்கலாம்.

மேலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் மூலமும் ஒற்றுமையை கட்டியெழுப்பலாம். விளையாட்டுப் போட்டிகள், மற்றும் கலாசார நிகழ்வுகளின் போது ஒன்றிணைந்து செயற்படுகின்றனர். இதன் மூலம் புரிந்துணர்வும், சகிப்புத் தன்மையும் ஏற்படுகின்றது. இதனால் தேசத்தில் இனவெறி, வர்க்க முரண்பாடு இயக்கமற்றுப் போகின்றது.

மாணவர்கள் மத ஒப்பீட்டு ஆய்வு மேற்கொள்வதால் அவர்களிடையே மத ரீதியான ஒற்றுமை உருவாகின்றது. கலை நிகழ்வுகளை ஆரம்பிக்கும் போது கலாசாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து ஒவ்வொரு கலாசாரமும் தமக்கேற்ற பாணியில் மேற்கொள்வதைக் காணலாம். இனங்களுக்கு இடையிலான கசப்புணர்வை வளர்க்கும் பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போது ஒற்றுமை சீர் குலைகிறது. ஆகவே ஊடகங்களையும் வேற்றுமையை களைய ஒரு முறையாகக் கையாளலாம்.

இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் ஒற்றுமையை கடைபிடித்து அதன்படி ஒழுக வேண்டும்.

காலவேகத்தோடு ஈடு கொடுக்கும் வகையில் விஞ்ஞானமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி ஆக்கப்பாதையிலன்றி அழிவுப் பாதையிலும் உலக மக்களை இட்டுச் செல்கிறது. விஞ்ஞானம் கண்ட விந்தைகளில் குறிப்பிடத்தக்கது அணு ஆயுதக் கண்டு பிடிப்பாகும். இன்றைய உலகில் பல நாடுகள் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை செலவிட்டு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றன. உலகில் வளர்முக தேசங்கள் பலவற்றில் மாந்தர் உணவுக்கே வழியின்றி அல்லல்படுகின்றார்கள். பட்டினியில் மடிகிறார்கள்.

“வெள்ளம் வரு முன் அணை கோல வேண்டும்” என்பதற்கமைய உலகை மாபெரும் அழிவு எதிர் கொள்ள முன் அதனைத் தடுத்து உலகை அமைதிப் பூங்காவாக மாற்றிட வேண்டும். ஒற்றுமையை நிலைநிறுத்தி சகவாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டும்.

அறிவுக் கண்களுடன் துளிர்த்தெழும் கட்டிளமைப் பருவம் முதல் பல்கலைக்கழக மாணவர் உள்ளங்களில் பல்கலாசார விழுமிய வித்துக்களை விதைத்திட முடிகின்றது. இதனால் திறந்த மனதுடன் ஏனைய மதத்தவர்களுடன் அந்நியோன்னியமாகப் பழகும் திறனை வளர்த்துக் கொள்கின்றனர். ஒரு நாட்டின் தனித்துவத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்கின்ற உரிமை அனைத்து மக்களையும் சார்ந்தது என்ற வகையில் பல்கலாசாரத்தையும், சகவாழ்வையும் பின்பற்றும் போதே தேசம் முன்னேற்றமடையும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஒற்றுமையின் எதிர்மறையே மோதலாகும். இன்று மோதலே எங்கும் நிறைந்திருக்கிறது. தனிநபர், சமூகம், நிறுவன மற்றும் தேசிய மட்டங்களிலும் ஏற்படுகிறது. பல மோதல்கள் உள்ளூர்மயப்படுத்தப்பட்டு வன்முறையற்ற முறையில் வெளிப்படுத்தப்படுகின்றன. உண்மையில் மோதல் ஆக்கபூர்வமானதாக இருக்கலாம். அல்லது சமூக மாற்றத்திற்கான அடிப்படையாகவும் அமையலாம். ஆயினும் சகவாழ்வு மோதல்களின் மூல காரணங்களை ஆராயவும், மோதல் கோட்பாட்டை பகுப்பாய்வு செய்யவும் உலகளாவிய சமூகத்தை தூண்டுகிறது.

ஒற்றுமையினூடாக தேசப்பற்றின் அவசியத்தை பொன்மொழிகளினூடாக. நோக்குகின்ற போது: புரட்சிக் கவி பாரதி செப்பிய “பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நற்றவ வானிலும் நன் சிறந்தனவே” என்ற கூற்றும் “உன் தாயகம் உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே, நீ உன் தாயகத்திற்கு என்ன செய்ய வேண்டுமென்று கேள்” என்ற ஜோன் கெனடியின் கூற்றும் நம்மை சற்று சிந்திக்கத் தூண்டுகிறது.

அதே போல் எல்லா மக்களும் ஒன்றுபட வேண்டும் என்ற அவசியத்தை “உலக அதிசயங்கள் ஏழு அல்லது எட்டு ஆகும். அது மனிதனை மனிதனாக அடையாளம் காட்டும் விரிப்பும் ஒன்றுபடும் உணர்வுமாகும்” என்ற அரிஸ்டோட்டலின் சிந்தனை உணர்த்துகின்றது.

2019 ஆம் ஆண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசுக்காக எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத் அலி அவர்கள் நோர்வேயின் நோபல் குழாமினால் தேர்ந்தெடுக்கப்பட்டார். “அமைதியை நிலை நாட்டவும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை எடுத்ததற்காக குறிப்பாக அயல் நாடான எரித்திரியாவுடனான எல்லைப் பிரச்சினையில் அவர் மேற்கொண்ட தீர்க்கமான முடிவுக்காகவும் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படட் து. எத்தியோப்பாவிலும் கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆபிரிக்க பகுதிகளிலும் அமைதியை ஏற்படுத்துவதற்காக முன்னிற்கும் அனைத்து பங்குதாரர்களையும் அவர்களது பணிக்கான அங்கீகாரத்தையும் வழங்குவதாகவே இப்பரிசு வழங்குகிறது.

அதாவது 2018 ஏப்ரலில் பிரதமராக பதவியேற்ற போது எரித்திரியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த விருப்பத்தை தெளிவுபடுத்தினார். எரித்திரியாவுடன் இரண்டு தசாப்த காலமாக நிலவி வந்த இராணுவ ரீதியிலான சிக்கலை சமாதான ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தார். சமாதானம் என்பது ஒரு தரப்பு நாட்டத்தால் நிகழ்வதன்று. இரு தரப்பினரும் ஒன்றிணைந்ததாலே சகவாழ்வுமிக்க தேசம் தலை தூக்கியது என்றால் அது மிகையாகாது. அதே சமயத்தில் இச்சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக எத்தியோப்பியாவில் ஏற்பட்ட இன ரீதியான பதற்றம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகளின் காரணமாக சுமார் 2.5 மில்லியன் மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இவர்களுக்கான மீள் குடியேற்ற நடவடிக்கைககளில் ஈடுபட்டார். பல மொழிகளையும், இனங்களையும் கொண்ட எத்தியோப்பியாவில் இன்னும் பல இனமுறுகல்கள் தொடரும் நிலையில் அமைதிக்கான விருது வழங்குவதில் அவசரம் காட்டப்பட்டதாக பல விமர்சனங்கள் பல தரப்பிலும் முன்வைக்கப்பட்டன. ஆனால் பிரதமர் முன்னெடுத்த சகவாழ்வுக்கான முயற்சியானது அதற்கான அங்கீகாரத்தையும் ஊக்குவிப்புக்களையும் எதிர்பார்த்து நின்றது.

ஆகவே பல்லின மக்கள் மத்தியில் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப சமூகங்களுக்கு மத்தியில் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு சாரார் பற்றியும் ஏனையோர் புரிந்திருக்க வேண்டும். இந்தப் புரிந்துணர்வு ஏற்பட்டு விட்டால் சர்ச்சைகளை தவிர்க்க முடியும். அடுத்து கூட்டு வேலைத்திட்டங்களை
மேற்கொள்ளலாம்.

ஒன்று சேர்ந்து வேலை செய்யும் போது பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும்.
உதாரணம்:

  • வறுமை ஒழிப்புத் திட்டம்
    வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் வெளிப்படையானதாக மாற்றப்பட வேண்டும். நிறுவனம், இனம் என்று சார்ந்திருக்காமல் சமூகம் என்ற முறையில் சிந்தித்து செயற்பட வேண்டும்.
  • மாநாடுகளை நடாத்தல்:
    அதாவது அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் பல்லின மக்களும் கலந்து பயன் பெறும் விதத்தில் நிகழ்வுகளை நடாத்துதல். தெளிவுகளை வழங்குதல். சகவாழ்வை இலக்காகக் கொண்ட இத்தகைய நடவடிக்கைகள் உந்து சக்திகளாக அமையலாம்.

புரிதலுடன் கூடிய சகவாழ்வே ஆரோக்கியமானதாக இருக்கும். அந்நிய சமூகத்தவர்களுக்கு மத அடையாளங்களின் முக்கியத்துவம் புரியவில்லையாயின் அவர்களுக்குப் புரிய வைப்பது காலத்தின் தேவையாகும். பல்லின மக்கள் மத்தியில் சகோதர பாசத்துடன் பழகுவோம். வேற்றுமத கலாசாரங்களுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவோம். இவ்வாறான நிலையில் தேசிய ரீதியில் பலம் பொருந்தும் எல்லா இன மக்களும் சுதந்திரமாக ஒற்றுமையுடன் வாழ்வார்கள். இனங்களுக்கிடையில் பேதங்களோ, பிளவுகளோ ஏற்படாது. சமத்துவ ஆட்சியே நடைபெறும். ஒரே தேச மக்கள் என்ற உணர்வு உள்ளொளிக்கும். நம் மத்தியில் காணப்படும் மிகப்பெரும் பலவீனம் மக்கள் மத்தியில் வேற்றுமை கொண்டு பார்ப்பதாகும். ஆனால் நம் மேனியில் ஓடும் குருதி ஒரே நிறம் என்பதை மறந்து விடுகிறோம். மேலும் உலகில் இரண்டு சாதிகள் மாத்திரமே உள்ளன. ஒன்று ஆண் சாதி மற்றையது பெண் சாதி. இவ்வாறான உண்மைகளை நம் உள்ளம் சிந்திக்க மறுக்கிறது. ஆனால் சிந்தித்தால் நம்மில் பல மாற்றங்கள் உருவாகும்.

மனங்கள் மாற
மனிதம் தழைக்க
மாநிலம் செழிக்க
மண்ணில் சமாதானம் நிலைக்க
மாந்தர் மகிழ
மறையணும் வேற்றுமை
மலரணும் ஒற்றுமை

எம். எம். எப். அஸ்மா
முதலாமிடம் (மேல்மாகாணம்)
அகில இலங்கை கட்டுரைப் போட்டி

மதியை மறைக்கும் முகில் கூட்டம் மறைத்தும் மதியோ ஒளிபாய்ச்சும் மனதில் தோன்றும் பிரிவுகள் நீங்கி மதி போல் மீண்டும் ஒளிர்வோம் மலைபோல் துன்பம் வந்தாலும் மன உறுதியால் வெல்வோம் மாசுகளற்ற நம் வாழ்வில் மனிதம்…

மதியை மறைக்கும் முகில் கூட்டம் மறைத்தும் மதியோ ஒளிபாய்ச்சும் மனதில் தோன்றும் பிரிவுகள் நீங்கி மதி போல் மீண்டும் ஒளிர்வோம் மலைபோல் துன்பம் வந்தாலும் மன உறுதியால் வெல்வோம் மாசுகளற்ற நம் வாழ்வில் மனிதம்…