முஃமினின் வாழ்க்கையில் சோதனையும் இறைநெருக்கமும்

  • 50

நிச்சயமாக அல்லாஹ் நாம் நேசிக்கும் விடயத்திலும் நாம் வெறுக்கும் விடயத்திலும் நம்மை சோதனைக்குட்படுத்துவான். நம்மில் யாரும் மறைவான அறிவு ஞானம் வழங்கப்பட்டவர்களல்ல. நமக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் நாம் எந்தச் சோதனையிலும் வீழமாட்டோம். நமக்கு ஏற்படும் சோதனையின் முடிவுகளை நாம் முன்கூட்டியே அறியும் ஆற்றலுள்ளவர்களாக இருந்திருந்தால் எவ்வித கலக்கமுமில்லாமல் நாம் அமைதி காத்திருப்போம். ஆதலால் அல்லாஹ் சோதனை எனும் அம்சத்தையும் அதன் முடிவுகளையும் தன் வசமே வைத்துள்ளான், கஷ்டத்திலும், ஆரோக்கியத்திலும், நோயிலும், வறுமையிலும், செல்வத்திலும் சோதனை இருந்து கொண்டே இருக்கும்.

அல்லாஹ் தனது பிரதிநிதியான மனிதனுக்கு சில விடயங்களை அலங்காரமாகக் காட்டியுள்ளான். இவற்றைக் கொண்டே அல்லாஹ் மனிதனை சோதிக்கிறான். இவற்றிலே 21ஆம் நூற்றாண்டு மறுபடியும் மூழ்கியுள்ளது. அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

“பெண்கள், ஆண்மக்கள், பொன், வெள்ளியிலிருந்து சேகரிக்கப்படும் குவியல், அடையாளமிடப்பட்ட குதிரைகள், கால்நடைகள், வேளாண்மை ஆகிய ஆசையூட்டப்பட்டவற்றை நேசிப்பது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே!” (3:14)

உலகப்பொருட்களான இவை அல்லாஹ்வின் சிந்தனையை விட்டும் மனிதனை திசைதிருப்பக்கூடியவை. “உலகை நேசிப்பது அனைத்துப் பாவங்களுக்கும் காரணம்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவற்றிலுள்ள் மோகத்தால் மனிதன் மறுமையை மறந்து வாழ்கிறான். அல்குர்ஆன் கூறும் இவ்வாறான விடயங்களும் மனிதன் உலகை நேசிப்பதற்கு காரணமாய் அமையக்கூடியன. முக்கியமாக மனிதன் பெண்ணை அதிகம் விரும்புகிறான். பின் குழந்தைகளை விரும்புகிறான். பின் இவற்றோடு சுகமாக வாழும் ஆசையில் இந்த உறவுகளுக்காக தங்கம், வெள்ளி, கால்நடை என சங்கிலித்தொடர் போல இவைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தான் உலகில் படைக்கப்பட்டதன் நோக்கத்தை மறந்து வாழ்கிறான் மனிதன்.
“மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகின்றவனும் இருக்கிறான். அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக்கொண்டு அவன் திருப்தி அடைந்து கொள்கிறான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அதைக்கொண்டு அவன் தன் முகத்தின் மீது புரண்டு (திருப்பி) விடுகிறான். இத்தகையவன் இம்மையிலும், மறுமையிலும் நஷ்டமடைகிறான்.” (22:11)

மேற்கூறிய வசனத்திலிருந்து நமக்கு புலப்படும் விடயம் யாதெனில் அல்லாஹ் இந்த உலக வாழ்க்கையை சோதனைக்களமாக ஆக்கியிருக்கிறான். இவ்வுலகில் வாழும் மக்களில் நல்லவர்கள், கெட்டவர்கள் என தரம் பிரித்து நோக்காமல் அனைவரையும் சோதனைக்குட்படுத்துகிறான். அல்லாஹ் சிலருக்கு

  • மரணத்தை விதித்தும்
  • செல்வங்களை பெருக்கியும், குறைத்தும்
  • நோயைக் கொண்டும்
  • உடல் குறைபாடுகளுடன் படைத்தும்
  • எதிர்பார்த்த விளைவுக்கு மாற்றமான முடிவைக் கொண்டும்

எனப் பலவாறாக சோதிக்கிறான்.

சோதனைகள் எல்லோருக்கும் பொதுவானவையே. ஆதம் (அலை) முதல்

முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை நபிமார்களும், இறைநேசர்களும் அல்லாஹ்வின் சோதனைக்கு உள்ளானார்கள். அல்லாஹ் தன் திருமறையில் நபிமார்களின் வரலாறுகளைக் கூறுகிறான். அதில் நபிமார்களும் சோதனைக்குள்ளாகினர் என்பதை அறிய முடிகிறது.

  • நபி நூஹ் (அலை) வெள்ளத்தினாலும்
  • நபி இப்றாஹிம் (அலை) நெருப்பினாலும்
  • நபி யஃகூப் (அலை) பார்வையிழப்பாலும்
  • நபி ஐயூப் (அலை) நோயினாலும்
    சோதிக்கப்பட்டார்கள்.

மேலும் தூதுத்துவத்தை சொல்ல வந்த நபிமார்களை அல்லாஹ் சொல்லணாத் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் இடர்படுத்திச் சோதித்தான். எனினும் அவர்கள் அல்லாஹ்வின் மீது திடமான நம்பிக்கை வைத்திருந்தனர். தங்களுக்கு கொடுக்கப்பட்ட தூதுத்துவப் பணியை செம்மையாக நிறைவேற்றினார்கள்.

“உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும், துன்பங்களும் பீடித்தன. அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும் என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்” (2:214)

நம்மிடம் “சோதனை என்பது மனதிற்கு வெறுப்பான காரியங்களில் மட்டுமே உண்டாகும்” எனும் தவறான சிந்தனை காணப்படுகிறது. நிச்சயமாக அல்லாஹ் எமது அனைத்துக் காரியங்களிலும் எம்மை சோதிக்கவே செய்கிறான். அது சோதனையாகவும் இருக்கலாம். வேதனையாகவும் அமையலாம். காரியங்களைப் பொறுத்தவரையில் மனிதனுடைய பார்வையில் தான் அவற்றில் நல்லது கெட்டது என்ற பாகுபாடு உள்ளதே தவிர யதார்த்தத்தில் அனைத்துக் காரியங்களுமே நல்லவையாகத் தான் உள்ளன. ஆகவே செல்வமும், வியாபாரமும், குழந்தைகளும், உடல் குறைபாடுகளும், நோயும், மரணமும் அல்லாஹ் மனித இனத்துக்கு அளித்த சோதனைகளாகும். இவை எவ்வாறு சோதனைகளாகின்றன என்பது குறித்து விரிவாக நோக்குவோம்.

முதலில் செல்வம் குறித்துப் பார்ப்போம். அல்லாஹ் எமக்கு வறுமையைத் தந்தால் அதன் மூலம் அவன் எம்ம சோதிக்கிறான். எமது கூலியை அதிகப்படுத்துவான். அல்லாஹ் எமக்கு செல்வத்தை தந்தால் அந்த செல்வம் குறித்தும் அதை எந்த வழியில் சம்பாதித்தாய் என்றும், அதை எவ்வாறு செலவழித்தாய் என்றும் அல்லாஹ் விசாரிப்பான். அந்த விசாரணையே ஒரு சோதனை தான்.

“உங்கள் பொருள்களும், உங்கள் மக்களும் (உங்களுக்கு) சோதனை தான்…” (64:15)

இந்த உலகத்தில் மனிதன் மிகவும் விரும்பக்கூடிய செல்வம் மனிதனுக்கு சோதனை என அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் ஒருவருக்கு அதிகமான செல்வத்தை கொடுத்துள்ளான் எனில் அவர் அதைக்கொண்டு சோதிக்கப்படுகிறார் என்பதே உண்மை. இஸ்லாம் கடன் கேட்டு வருபவனுக்கு கடன் கொடுக்குமாறு வலியுறுத்துகின்றது. இன்னும் ஸகாத்தை முறையாக நிறைவேற்றுமாறு கட்டளையிடுகிறது. ஆனால் நடைமுறையில் பலர் வழங்கிய செல்வங்களை தன் சொந்த முயற்சியிலும் தன் அறிவு மற்றும் உழைப்பாலும் பெற்றவை என எண்ணிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் வட்டித் தொழிலில் ஈடுபடுகிறார்கள். அல்லாஹ் இவர்களை சோதிக்கவில்லையெனில் அதிக தவறுகள் செய்ய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

அடுத்து வியாபாரம் தொடர்பாக நோக்குவோம். இறைவழியில் அதிக நாட்டம் கொண்ட மக்களாக இருப்பினும் அவன் நாடினால் வியாபாரத்தில் சரிவை ஏற்படுத்தி சோதிப்பான். பொறுமையாளர்கள் விதியினை ஏற்று அவனிடமே உதவியையும் நாடுவர்.

அல்லாஹ்தஆலா அஷ்ஷுரா எனும் அத்தியாயத்தில் குழந்தைகளும் சோதனையே எனக்கூறுகிறான்.

“…தான் விரும்புவோருக்கு பெண்மக்களை அளிக்கின்றான். மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண்மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும் பெண்மக்களையும் சேர்த்துக் கொடுக்கிறான்.” (42:49-50)

ஆகவே இறைவன் வழங்கிய குழந்தைச் செல்வங்களின் மகத்துவத்தை எண்ணி சந்தோசப்பட வேண்டும். அவ்வாறின்றி அதனை பாரமாகவோ, பெண் குழந்தைகள் கிடைத்தால் அதனை துக்கமாகவோ கருதக்கூடாது.

அடுத்து உடல் குறைபாடுகள் சோதனைகளாகும் விதம் குறித்துப்பார்ப்போம். நபி (ஸல்) அவர்கள் கூறத்தாம் செவிமடுத்ததாக அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். “நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான் என் அடியானின் இரு கண்களை (போக்கிவிடுவது) கொண்டு அவனை நான் சோதித்து அவன் அதன் மீது பொறுமை கொள்வானேயானால், அவ்விரு கண்களுக்குப் பகரமாக நான் அவனுக்கு சுவர்க்கத்தை வழங்குவேன்.” (புஹாரி)
நோயில் வீழ்ந்த ஒரு அடியான் நோயிலிருந்து குணமடைந்து விட்டால் தன்னை விட்டும் சோதனை அகன்று விட்டதென எண்ணுகிறான். ஆனால் சோதனையென்பது தொடர்ச்சியாக இருந்து கொண்டேயிருக்கும் எனும் யதார்த்தத்தை மனிதன் புரிந்து கொள்வதில்லை. அல்லாஹ் நோயைத்தந்தால் அதில் பொறுமையை சோதிக்கிறான். அதன் மூலம் பாவங்களை மன்னிக்கிறான்.

அல்லாஹ் மரணத்தைக் கொண்டும் சோதிப்பான். அதாவது
பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளையும், பிள்ளைகளிடமிருந்து பெற்றோரையும், கணவனிடமிருந்து மனைவியையும், மனைவியிடமிருந்து கணவனையும் மரணிக்கச் செய்து சோதிக்கிறான். குழந்தைகள் பிறந்து மகிழ்ச்சியிலிருக்கும் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளை மரணிக்கச் செய்து சோதிக்கிறான். சிலருக்கு குழந்தைகளை உயிரோடு விட்டு விட்டு தாயின் உயிரை எடுத்துக் கொள்கிறான். இதன் மூலம் குழந்தைகளை அநாதையாக விட்டு விடுகிறானா அல்லது மனைவி இழந்த துக்கத்தில் தன் வாழ்க்கையை நேரானதாக மாற்றிக்கொள்கிறானா என்று கணவனை சோதிக்கிறான்.

தற்கால சூழ்நிலையில் கூட கொரோனாவின் அகோரத்தால் பலர் பல்வேறு விதமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டு அவர் குடும்பம் அதன் சோதனையை அனுபவித்து வருகிறது. பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது. மேலும் சிலர் தமது தொழில்களை இழந்துள்ள அதேவேளை இன்னும் பலர் தொழில்களைப் பெற பல வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இச்சோதனைகளின் போது துவண்டு விடாமலும், வசைபாடித்திரியாமலும் அதனை அல்லாஹ்வின் அருளாக ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் அவ்வேளைகளில் சில ஒழுங்குகளை கடைபிடிப்பதன் மூலம் இறைநெருக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும். அவற்றை தொகுத்து நோக்குவோம்.

கழாகத்ரை பொருந்திக் கொள்ளல்

“அதை உங்களுக்கு தீங்காக என்ன வேண்டாம். எனினும் அதில் உங்களுக்கு பலநன்மைகள் இருக்கின்றன.” (24:11)

அல்லாஹ் விதித்ததன் அடிப்படையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு காரியத்தையும் இறைவிசுவாசி பொருந்திக் கொள்ள வேண்டும். இவ்வுலகில் ஏற்படும் அனைத்து சோதனைகளுக்குமான பிரதிபலனை அல்லாஹ் இம்மையில் தருவான். அல்லது அது மறுமையில் ஈடேற்றமாக அமையும்.

சோதனைகளின் போது உறுதியைக் கைக்கொள்ளல்

சோதனைகளைக் கண்டு நாம் ஒருபோதும் கலக்கமடையக் கூடாது.
இதன் போது “நாம் அல்லாஹ்வால் சோதிக்கப்படுகிறோம். நமக்கு வந்திருக்கும் சோதனை நம்மையும், நமது ஈமானையும் பரீட்சிக்கவே. இதன் மூலம் அல்லாஹ் நமது பாவங்களை மன்னித்து அந்தஸ்த்துக்களை உயர்த்தி கூலி தருவான்” எனும் நம்பிக்கையை ஆணித்தரமாக மனதில் பதிப்பிக்க வேண்டும்.

பொறுமையைக் கடைபிடித்தல்

சோதனை ஏற்பட்டால் அழகிய முறையில் பொறுமையைக் கையாள வேண்டும். இதற்கான கூலியை அல்லாஹ்விடம் மட்டுமே எதிர்பார்க்க வேண்டும். அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநீதி இழைப்பதில்லை எம்மை சோதிப்பது அல்லாஹ்வின் விதியில் இருந்தால் நம்மால் ஒன்றுமே செய்யமுடியாது. பொறுமை செய்வதுதான் முதல் தீர்வாகும்.

தவ்பா செய்தல்

நம்மால் நிகழும் பாவங்கள், குற்றச்செயல்களின் காரணமாகவும் அல்லாஹ் நம்மை சோதிப்பான். எனவே அவைகளிலிருந்து மீண்டு அவனிடம் பிழைபொறுக்கத் தேடவேண்டும் இவ்வாறு செய்வதால் இறைநெருக்கம் ஏற்படுகிறது.

திக்ர் செய்தல்

ஒரு மனிதனுக்கு சோதனை ஏற்பட்டால் அவன் மனநிம்மதியை இழக்கிறான். இந்நிலையில் மனஅமைதிக்கு ஒரே தீர்வு அல்லாஹ்வை நினைவு கூர்வதாகும். அல்லாஹ்தஆலா திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

“அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன.” (13:28)

பிரார்த்தனை செய்தல்

பிரார்த்தனை ஆயுதமாகும். இது அனைத்து நலவுகளின் திறவுகோலாகும். அல்லாஹ் ஏற்படுத்திய விதியில்கூட மாற்றத்தைக் கொண்டு வரசக்தி பெற்ற ஒருவணக்கமென்றால் அது துஆவாகும்.

அடியான் அதிகமதிகமாக துஆ கேட்பதை அல்லாஹ் விரும்புகிறான். இதன் மூலம் இறைநெருக்கம் ஏற்படுகிறது.

அல்லாஹ் இவ்வுலகில் மனிதனுக்குக் கொடுத்திருக்கும் செல்வங்கள், மனைவி, குழந்தைகள், ஆரோக்கியம், அதிகாரம், பதவி, பொறுப்புக்கள், நோய், மரணம் எல்லாம் சோதனைகளே. எனினும் அவன் இவற்றைக் கொண்டே நல்லடியார்களை சோதிக்கிறான். அவ்வாறு வரும்போது பொறுமையைக் கடைபிடித்து மனஉறுதியுடன் கழாகத்ரை ஏற்று தவ்பா, பிரார்த்தனை போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதால் இறையருளையும், இறைநெருக்கத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ASMA MASAHIM
PANADURA
SEUSL

நிச்சயமாக அல்லாஹ் நாம் நேசிக்கும் விடயத்திலும் நாம் வெறுக்கும் விடயத்திலும் நம்மை சோதனைக்குட்படுத்துவான். நம்மில் யாரும் மறைவான அறிவு ஞானம் வழங்கப்பட்டவர்களல்ல. நமக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் நாம் எந்தச் சோதனையிலும் வீழமாட்டோம். நமக்கு…

நிச்சயமாக அல்லாஹ் நாம் நேசிக்கும் விடயத்திலும் நாம் வெறுக்கும் விடயத்திலும் நம்மை சோதனைக்குட்படுத்துவான். நம்மில் யாரும் மறைவான அறிவு ஞானம் வழங்கப்பட்டவர்களல்ல. நமக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் நாம் எந்தச் சோதனையிலும் வீழமாட்டோம். நமக்கு…