சொடுக்குப் பாச்சிய மச்சான்

  • 7

பெண்:-

தேங்காயும் காஞ்சிருக்கு
தென்னமரம் ஒசந்திருக்கு
என் மனசு நெறஞ்சிருக்கு – மச்சான்
ஒன்னத்தான் நெனச்சிருக்கு
தேங்கா பிக்க வந்தீங்க
என் மனசத் தொட்டீங்க
எட்டாத ஒசரம் பார்க்க
என்னைய வெச்சீங்க
ஆறு மாசம் முன்னாடி
கதச்ச கத நெனவிருக்கா ?
வருவீங்களா ஊட்டுப் பக்கம்
இந்த மாசம் தேங்கா பிக்க
நுகதூவ தோப்புக்குள்ள
தேங்கா நீ புடுங்கையில
ஓல, பால, பன்னாட
பொறுக்கத்தான் நானும் வாரன்

ஆண்:-

பாசமுள்ள ஏன்ட மச்சி
தேங்காய நானும் பிச்சி
ஆசய வளர்த்து விட்டன்
ஒன் மேல நேசம் வெச்சி
ஒன்னோட சிரிப்பப் போல
கலக்குதிந்த குருத்தோல
என் மனசு மகிழுதிப்போ
தெம்பிளி மரக் கொல போல
இப்றாஹீம் தோட்டத்துல
நவசி மரம் இருக்குதடி
இன்டைக்கு பிச்சாக்கா
ரெண்டு காய் தாரேனடி
கௌஸு தொர தோட்டத்தில
தேங்கா பிக்கப் போனாக்கா
தயித்து தேங்கா பிச்சி வந்து
தருவேன்டி என் உசிரே

பெண்:-

தயித்து தேங்கா வாணம் மச்சான்
நவசிக் காயும் வாணம் மச்சான்
கழட்டித் தேங்கா ரெண்டு மட்டும்
போதுமே என்னாச மச்சான்
நாளை பிந்தி மறுநாளும்
பராஅத்தும் வரூது மச்சான்
ரொட்டி சுட கழட்டித் தேங்கா
வேண்டுமென்டா ஏன்ட உம்மா
புஞ்சி வத்த மலைமேல
ஹிளுருப் பள்ளி தானிருக்கு
கச்சுவத்தைக் கரையோரம்
தர்காவும் அமஞ்சிருக்கு
கட்டுகொட நடுவுல தான்
முஹ்யத்தீன் பள்ளியிருக்கு
என் மனசுக் கூட்டுக்குள்ள
மச்சான் நீங்க மட்டும் தானிருக்கு

ஆண்:-

கொல கொலயா பூத்திருக்கும்
தென்னமரத் தோப்புக்குள்ள
நொர நொரயா நெறஞ்சிருக்கு
ஒன்ட எண்ணம் மனசுக்குள்ள
தாஸிம் தொர காணியில
ஊடு கட்ட எடமிருக்கு
பொண்டாட்டி மட்டும் தானே
போதாக் கொறக்கிருக்கு
சொடுக்குப் பாச்சின மச்சான
அரகொறயாப் பார்க்காதீங்க
கடுக்காம காலம் பூரா – கண்
கலங்காம பார்துக்குவன்
சம்மதத்தை சொல்லு கிளி
சாதி சனத்தோட வந்திடுவன்
இம்மாசக் கடைசியில
அச்சாடம் போட்டிடுவன்

கலைமணாளன் ஹிஷாம்

பெண்:- தேங்காயும் காஞ்சிருக்கு தென்னமரம் ஒசந்திருக்கு என் மனசு நெறஞ்சிருக்கு – மச்சான் ஒன்னத்தான் நெனச்சிருக்கு தேங்கா பிக்க வந்தீங்க என் மனசத் தொட்டீங்க எட்டாத ஒசரம் பார்க்க என்னைய வெச்சீங்க ஆறு மாசம்…

பெண்:- தேங்காயும் காஞ்சிருக்கு தென்னமரம் ஒசந்திருக்கு என் மனசு நெறஞ்சிருக்கு – மச்சான் ஒன்னத்தான் நெனச்சிருக்கு தேங்கா பிக்க வந்தீங்க என் மனசத் தொட்டீங்க எட்டாத ஒசரம் பார்க்க என்னைய வெச்சீங்க ஆறு மாசம்…