3 ஆவது பயணத்தில் தீயில் கருகி கடலில் சங்கமமாகிய பேர்ள்

  • 39

2021 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகிய 186 மீற்றர் நீளமும் 34 மீற்றர் அகலமும் கொண்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கொள்கலன் கப்பலில் ஒரே தடவையில் 2700 கொள்கலன்களை ஏற்ற முடியும்.

எம்.வி. எக்பிரஸ் பேர்ள் என்ற கப்பல் கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதி தனது முதல் பயணத்தை ஆரம்பித்திருந்தது.

சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்ட எம்.வி.எக்ஸ்பிரஸ் என்ற கப்பல் அந்நாட்டின் எக்ஸ்பிரஸ் கப்பல் சரக்கு போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமானது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு இடைப்பட்ட நாடுகளுக்கு இடையில் கப்பல் போக்குவரத்தை மேற்கொண்டு வந்த நிலையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் தனது மூன்றாவது வர்த்தக பயணத்தின் போது தீப்பிடித்து எரிந்து கடலில் சங்கமமானது.

எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலானது மலேசியாவின் தஞ்சுங் பிலிப்பஸ் துறைமுகத்தில் இருந்து ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி தனது  பயணத்தை ஆரம்பித்து மே மாதம் 9 ஆம் திகதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜபல் அலி துறைமுகத்தை வந்தடைந்து.

அங்கிருந்து மே மாதம் 10 ஆம் திகதி புறப்பட்டு 25 மெட்ரிக் தொன் நைட்ரிக் அமிலம் அடங்கலான 1486 கொள்கலன்களுடன் கட்டாரின் ஹமட் துறைமுகத்தில் மே மாதம் 11 ஆம் திகதி தரித்து நின்று அன்றைய தினத்திலேயே அங்கிருந்து இந்தியாவின் ஹசீரா துறைமுகம் நோக்கி புறப்பட்டு பின்னர் சிங்கப்பூர் நோக்கி தனது பயணத்தை தொடர இருந்தது.

2021 மே 15 அன்று இந்தியாவின் ஹசிரா துறைமுகத்திலிருந்து 25 தொன் நைட்ரிக் அமிலத்துடன்  (Nitric acid) பல இரசாயனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுடன் 1486 கொள்கலன்களுடன் பயணித்ததுடன் 2021 மே 19 ஆம் திகதி இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்கு முன்பு 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டிருந்தது.

இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள அரேபிய கடலில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை நெருங்கியபோது இதில் இரண்டு கொள்கலன்களிலிருந்த நைட்ரிக் அமிலம் கசிந்ததாக கப்பல் சேவையாளர்கள் அவதானித்துள்ளனர்.

அமிலக்கசிவைத் தொடர்ந்து, கப்பல் கட்டாரில் உள்ள ஹமாத் துறைமுகத்திற்குள் நுழைய முயற்சித்துள்ளது. ஆனால் அமிலக்கசிவு காரணமாக கட்டார் அரசாங்கம் குறித்த கப்பலை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

இதையடுத்து இந்தியாவின் ஹசிரா துறைமுகத்திற்குள் நுழைவதற்கும் குறித்த கப்பல் முயற்சித்த நிலையில், அங்கு நுழையவும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் 2021 மே 20 அன்று  பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல், கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிக்க முன்னதாக இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலுள்ள இரு துறைமுகங்களுக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளதாகவும், குறித்த இரண்டு துறைமுகங்களுக்குள் பிரவேசிக்க  அனுமதியளிக்கப்பட்டிருக்கவில்லை எனவும்  கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட இரசாயன திரவியம் கசிந்ததால் இந்த தீ ஏற்பட்டதாகவும் எக்ஸ்பிரஸ் பேர்ள் நிறுவனத்தின்,  நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னொல் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

கொள்கலன்கள் முறையாக களஞ்சியப்படுத்தப்படாமையே தீ ஏற்படுதற்கான காரணம் என எக்ஸ்பிரஸ் பேர்ள் நிறுவனத்தின்,  நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னொல் சுட்டிக்காட்டியுள்ளார்.

கப்பலில் ஆபத்து நிலைமை அடையாளம் காணப்பட்ட போது, முதல் கட்டமாக இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள ஹசீரா துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்காக அனுமதி கோரப்பட்டிருந்தது.

எனினும், ஹசீரா துறைமுகத்தினால் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து, கட்டாரிலுள்ள ஹாமட் துறைமுகத்துக்குள் இந்தக் கப்பல் பிரவேசிக்க முயற்சி கோரிய போதிலும், அக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து அக்கப்பல் தனது அடுத்த பிரயாண இலக்கான இலங்கையை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது என எக்ஸ்பிரஸ் பேர்ள் நிறுவனத்தின்,  நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னொல் கூறியுள்ளார்.

எனினும், கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி கோர முன்னதாகவே கப்பலில் தீ ஏற்படுவதற்கான ஆபத்து நிலைமை தோன்றியிருந்ததாக தெரிவித்துள்ள பேர்ள் நிறுவனத்தின் பணிப்பாளர்,  இந்தியா அல்லது கட்டாரில் உள்ள துறைமுகங்களில் ஒன்றில் அனுமதி வழங்கப்பட்டிருக்குமானால் இந்த பாரிய அழிவிலிருந்து தப்பிக்க முடியுமானதாக இருந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கொள்கலன் கப்பலில் பிலிப்பைன்ஸ், சீன, இந்திய மற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 25 பணியாளர்கள் பணி புரிந்துள்ளனர்.

2021 மே 20 ஆம் திகதி மாலை, இலங்கை துறைமுக ஆணையம் மற்றும் இலங்கை கடற்படையின் நிபுணர்கள் குழு கப்பலுக்குள் நுழைந்து அதன் நிலையை ஆய்வு செய்ததுடன் கப்பலில் கொண்டுவரப்பப்பட்ட இரசாயனங்களின் எதிர்வினையால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அவர்கள் சந்தேகம் வெளியிட்டனர்.

கப்பலில் பரவிய தீயை கட்டுப்படுத்த இலங்கை விமானப் படையில் BELL 212 ரக ஹெலிக்கொப்டர் அனுப்பப்பட்டு தீயை அணைக்கும் முயற்சிகள் மும்முரமாக இடம்பெற்றபோதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகே நங்கூரம் இடப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில்  உள்ள கொள்கலன் ஒன்று 25 ஆம் திகதி  காலை வெடித்ததையடுத்து ஏற்பட்ட தீ பரவலில் காயமடைந்த இரு இந்திய பிரஜைகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உழுகேதென்னவின் வேண்டுகோளின் பேரில், தீயணைப்பு திறன்களைக் கொண்ட இந்திய கடலோர காவல்படையின் கடல் மாசு தடுப்பு கப்பலொன்றும் விமானம் ஒன்றும் உதவிக்கு அனுப்பப்பட்டிருந்தது.

மேலும், இலங்கை கடற்படைக் கப்பல் சிந்துரல மற்றும் இந்திய கடலோரக் காவல்படையின் கடல் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட வஜ்ரா (ICGS Vajra) மற்றும் விபாவு (ICGS Vaibhav) என்ற இரண்டு கப்பல்களும் பாதிக்கப்பட்ட MV X-PRESS PEARL கப்பல் உள்ள கடல் பகுதியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

அதன்படி, தீ பிடித்த கப்பலில்  இருந்து கரைக்கு மிதந்து வருகின்ற பல்வேறு பொருட்கள் பற்றி கடற்படை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றதுடன் கடலோர சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து செயற்பட்டு வருகின்றன.

தீ பரவிய கப்பலில் இருந்து கடலுக்குள் வீழ்ந்துள்ள பொருட்கள் காற்றின் வேகத்திற்கு ஏற்ப நாட்டின் எத்திசையிலும் கரையொதுங்கலாம். ஆகவே கடலில் மிதந்து வரும்  பொருட்களையும், கரையொதுங்கியுள்ள பொருட்களையும்  தொட வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீ பிடித்த கப்பலில் இருந்து கடலில் விழும் பாகங்கள் மிதந்து வர அதிக வாய்ப்புள்ள திக்கோவிட்ட முதல் சிலாபம் வரையிலான கடலோரப் பகுதியை உள்ளடக்கி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும், இதேபோல், வெள்ளவத்தை முதல் பாணந்துறை வரையிலான கடற்கரை பகுதியையும் உள்ளடக்கியம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே சமுத்திர சூழலை பாதுகாப்பதற்காக தீ பரவிய எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ள்  கப்பலை 50 கடல் மையில் தொலைவிற்கு ஆழ் கடலுக்குள் நகர்த்துவதற்க்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடல் மாசுறுதல் தடுப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர் டெர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த ஒரு கொள்கலன் மே 26, 2021 நீர்கொழும்பு தல்ஹேன கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கியுள்ளது. தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து விழும் கொள்கலன்கள் மற்றும் பிற பாகங்கள் திக்கோவிட்ட முதல் சிலாபம் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் கரையொதுங்க வாய்ப்புள்ளதால் பல்வேறு இரசாயன கலவைகள் அடங்கிய எந்தவொரு பொருளையும் தொடுவதைத் தவிர்க்குமாறு அப்பகுதி மக்களுக்கு மற்றும் மீன்பிடி சமூகத்திக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உழுகேதென்ன, கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள எம். வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்கு  கப்பலில் ஏற்பட்ட தீ மே மாதம் 28 ஆம் திகதியளவில் ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீ பரவலினால் இரண்டாக பிளவடைந்து கடலுக்குள் மூழ்கும் அபாயத்தை கப்பல் கடந்துள்ளது என்று குறிப்பிடுகின்றார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலினால் கடற்பிராந்தியம் வெகுவாக மாசடைந்துள்ள நிலையில், அது மீளவும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு சுமார் 20 வருடங்களாகும் என்று கடற்பிராந்தியப் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹதபுர தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து, அதனால் பல்வேறு சூழலியல் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று சூழலியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

தீப்பரவலினால் தற்போது மிகப்பாரியளவில் கடற்பிராந்தியம் மாசடைந்திருக்கிறது. அந்த மாசுபாட்டைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் கடற்பிராந்தியப் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹதபுர சுட்டிக்காட்டினார்.

தற்போது வரையில் எண்ணெய்ப்படிவுகள் தென்படவில்லை. இதனால் பெருமளவான பகுதிகளுக்குச் சேதம் ஏற்பட்டிருக்கிறது. மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. எமது காலத்தில் இடம்பெற்ற மிகப்பாரிய சேதம் இதுவாகும் என்றும் தர்ஷனி லஹதபுர குறிப்பிட்டார்.

தற்போது கரையொதுங்கியிருக்கும் கழிவுகளை, ஏனைய சாதாரண கழிவுகளைப் போன்று அப்புறப்படுத்த முடியாது. அதனால் அவற்றை கொள்கலன்களில் சேகரிக்கின்றோம். இந்தக் கடற்பிராந்தியம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு 20 வருடங்கள் தேவைப்படும் என்கிறார் தர்ஷனி லஹதபுர.

எது எவ்வாறு இருப்பினும் தீ பரவிய எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் பரவிய தீ மே மாதம் 28 திகதி மாலையுடன் அடங்கியுள்ளது. கப்பலின் எரிபொருள் தேவைக்காக 3 ஆயிரம் மெட்ரிக் தொன் எண்ணெய் கப்பலில் சேமிப்பில் உள்ளதாக கூறப்படுகின்றது. இருப்பினும் எவ்வேளையிலும் தீ மீண்டும் பரவக் கூடிய ஆபத்து குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டாலும் காலம் தாழ்த்தாது விரைந்து நடவடிக்கை எடுத்து கடல் பாதுகாப்பை 20 வருடங்கள் வரை காத்திருக்காது விரைந்து நடவடிக்கை எடுக்க அனைவரும் ஒன்றுபடுவோம்.

தொகுப்பு – க்ரித்திகா சக்திவேல் 

2021 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகிய 186 மீற்றர் நீளமும் 34 மீற்றர் அகலமும் கொண்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கொள்கலன் கப்பலில் ஒரே தடவையில் 2700…

2021 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகிய 186 மீற்றர் நீளமும் 34 மீற்றர் அகலமும் கொண்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கொள்கலன் கப்பலில் ஒரே தடவையில் 2700…