உங்கள் பெற்றோரை முத்தமிடுங்கள்

  • 17

பெற்றோர்கள் என்பவர்கள் அல்லாஹ் எமக்களித்த மிகப் பெரும் பொக்கிஷங்களாகும். அவர்கள் தம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் எமக்காக தம்மை அர்ப்பணித்து பல்வேறு தியாகங்களையும் புரிந்து தம் இரவுத் தூக்கங்களைத் துறந்து தம் உடலைக்கசக்கிப் பிழிந்து  உணர்வுகளை அடக்கி எம்மை நல்ல முறையில் வளர்க்கப் பாடுபட்டவர்களாகும். இவை ஒவ்வொன்றையும் நாம் கண்கூடாகவே இன்று கண்டுகொள்கின்றோம்.

எனவேதான் இஸ்லாத்தில் இத்தகைய பெற்றோர்கள் குறித்தும் அவர்களது சிறப்புக்கள் குறித்தும் அல்குர்ஆனும் ஸுன்னாவும் சீரான வழிகாட்டல்களைத் தெளிவாகக் காட்டியுள்ளன.

“அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள்.” (04:36)

அதுமாத்திரமல்லாது பெற்றோருக்குப் பணிவிடை செய்வதில் ஜிஹாதுடைய நன்மையைத் தேடிக் கொள்ளுமாறு ஸுன்னா எமக்கு வழிகாட்டுகின்றது. இதனையே பின்வரும் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. “ஒருவர் ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி கேட்டு நபியவர்களிடம் வந்தார். “உம் பெற்றோர் உயிருடன் உள்ளனரா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்டார். அவர் “ஆம்” என்றவுடன் “அவ்விருவரில் நீ ஜிஹாது செய்து கொள். (ஜிஹாதுடைய நன்மையை அவர்களுக்குப் பணிவிடை செய்வதில் தேடிக்கொள்!)” என்றார்கள். (புகாரி,முஸ்லிம்)

இவ்வாறு இஸ்லாத்தில் பெற்றோரின் சிறப்புக்கள் குறித்தும் அவர்களுக்குப் பணிவிடை செய்வது குறித்தும் அதன் முக்கியத்துவம் வெகுவாகக் கூறப்பட்டுள்ளன.அந்தவகையில் நாம் பெற்றோருக்கு செய்ய வேண்டிய அம்சங்களில் முக்கியமானதொன்றே அவர்கள் மீது அன்பு மற்றும் இரக்கம் காட்டுவதாகும்.

“இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக! மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!” (17:24)

எனவே நாம் எம் பெற்றோர் மீது செலுத்தும் அன்பானது பல்வேறு வகைகளிலும் எம்மால் பிரதிபலிக்கப்படலாம். அந்தவகையில் இது அவர்களுக்கு  கட்டுப்படல், அன்பளிப்புக்களை வழங்கள், அவர்களுக்காகப் பிராத்தித்தல், அவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிதல் மற்றும் அவர்களது சுக துக்கங்களில் பங்குகொள்ளல் என ஒருவருக்கொருவர் வேறுபடலாம். எனினும் அவற்றில் மிகப் பிரதானமான ஒன்றே அவர்கள் இருவரையும் முத்தமிடுவதாகும். ஆனால் இன்று நம்மில் பலர் இதனைக் கரிசனையில் எடுப்பதில்லை.

சற்று வளர்ந்து பெரியவர்களாகி மேற்படிப்புக்களைத் தொடர்ந்தவுடனோ அல்லது பல்வேறு தொழிற்துறைகளுக்கு அவர்கள் உள்வாங்கப்பட்டவுடனோ பெற்றோருடனுள்ள உறவு படிப்படியாக குறைய ஆரம்பிப்பதனை நாம் இன்று பெரும்பாலும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. பெற்றோரை முத்தமிடுவது கூட அவர்கள் மத்தியில் ஏதோவொரு சங்கடமான நிலையில் காணப்படுவதை உணர முடிகிறது. இதற்குப் பல்வேறு காரணிகளை அவர்கள் அடையாளப்படுத்தலாம்.

அந்தவகையில் தந்தை மீதுள்ள பயம், மரியாதை, வெட்க உணர்வு, அதிகரித்த வேளைப்பளு போன்ற பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் கூட அவை பெற்றோர் – பிள்ளை என்ற உறவில்  எவ்வித பிரிவினையையோ விரிசலையோ ஏற்படுத்தவல்லதல்ல.

ஆண் பிள்ளையாயினும் சரி, பெண் பிள்ளையாயினும் சரி பெற்றோர் என்ற ரீதியில் தாய், தந்தை இருவரும் எம் பெற்றோர்களே! நாமும் அவர்களுக்குக் குழந்தைகளே! எனவே இதில் எவ்விதக் கருத்து வேறுபாடுமில்லை. பெற்றோர்களை நாம் முத்தமிடுவது தொடர்பாக வெட்கப்படுவதற்கோ அல்லது அது குறித்து அஞ்சுவதற்கோ எவ்விதத் தேவையுமில்லை. இதற்கான வழிகாட்டல் நபியவர்களின் வாழ்விலும் கூட சிறப்பாக நடைமுறைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.

அன்னை ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்: பாத்திமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைச் சந்திக்க வந்தால் நபியவர்கள் எழுந்து சென்று வரவேற்று முத்தமிட்டுத் தம்முடைய இருக்கையில் அவரை உட்கார வைப்பார்கள். நபியவர்கள் பாத்திமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களைச் சந்திக்கச் சென்றால் பாத்திமா (ரழியல்லாஹு அன்ஹா) எழுந்து கைப்பிடித்து வரவேற்று முத்தமிட்டுத் தம் இருக்கையில் நபியவர்களை அமரச் செய்வார். நபியவர்கள் மரணப்படுக்கையில் நோயுற்றிருந்தபோது பாத்திமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் சந்திக்க வந்தார்கள். அப்போதும் நபியவர்கள் அவரை வரவேற்று முத்தமிட்டார்கள்” (புகாரி,முஸ்லிம்)

எனவே நாமும் எம் பெற்றோர்களை முத்தமிடுவோம். அதன்மூலமும் எம் அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்துவோம். அவர்களுடன் எம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம். வெளிப்படையாய் அவர்களுடன் பேசுவோம். அவர்களது கருத்துக்களுக்கு மதிப்பளிப்போம். இதன்மூலம் வயது முதிர்ந்த காலத்தில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்க்கும் தேவைகளுள் மிகப் பிரதானமான உள ரீதியான அன்புத் தேவையை நிறைவேற்றி வல்லவன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற முயற்சிப்போமாக! (இன்ஷா அல்லாஹ்)

Noorul Shifa Jafeer

பெற்றோர்கள் என்பவர்கள் அல்லாஹ் எமக்களித்த மிகப் பெரும் பொக்கிஷங்களாகும். அவர்கள் தம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் எமக்காக தம்மை அர்ப்பணித்து பல்வேறு தியாகங்களையும் புரிந்து தம் இரவுத் தூக்கங்களைத் துறந்து தம் உடலைக்கசக்கிப் பிழிந்து …

பெற்றோர்கள் என்பவர்கள் அல்லாஹ் எமக்களித்த மிகப் பெரும் பொக்கிஷங்களாகும். அவர்கள் தம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் எமக்காக தம்மை அர்ப்பணித்து பல்வேறு தியாகங்களையும் புரிந்து தம் இரவுத் தூக்கங்களைத் துறந்து தம் உடலைக்கசக்கிப் பிழிந்து …