கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூல வாக்கெடுப்பும் வெளியக விசாரணையும்

  • 7

கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் காணப்பட்ட 74 பிரிவுகளில் 25 ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதாகவும் அவற்றை நிறைவேற்றுவதென்றால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென்றும் குறிப்பாக 9 பிரிவுகளை நிறைவேற்றுவதற்கு சர்வஜனவாக்கெடுப்பு கட்டாயமென்றும் உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தினை பாராளுமன்றுக்கு அறிவித்தது.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய 25 ஏற்பாடுகளையும் திருத்தியமைத்து அச்சட்டமூலத்தினை நிறைவேற்றுவதையே அரசாங்கம் இலக்காக கொண்டிருந்தது.

அதன்பிரகாரம், கடந்த 20ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு நிறைவடைந்த நிலையில் குழுநிலையில் சட்டமூலத்தின் மீதான திருத்தங்கள் செய்யப்பட்டதோடு இரண்டாம் மூன்றாம் வாசிப்பு மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட 91 மேலதிக வாக்குகளால் அது நிறைவேற்றப்பட்டது.

எனினும், 20ஆவது திருத்தத்தினை நிறைவேற்றும்போது மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்த அரசாங்கம் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தினை நிறைவேற்றும் போது அதனை இழந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவை மிகக் கடுமையாக விமர்சித்தன.

இது,அரசாங்கத்திற்கு ‘கௌரவப் பிரச்சினையாக’ மாறியது. மறுநாளே, இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பங்கேற்றிருந்த நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, “அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருக்கின்றது. என்னுடைய வாக்கும், ஜெயரத்ன ஹேரதினுடைய வாக்கும் பதிவாகவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. இவ்விரண்டு வாக்குகளும் உள்ளீர்க்கப்பட்டிருந்தால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வெளியாகி இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

சட்டமூலத்தின் மீது இலத்திரணியல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட தருணத்தில் எவ்வாறு இரண்டு வாக்குகள் உள்ளீர்க்கப்படாது போனது என்பது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்தன. இதனால், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானத்தார். அதற்கான நியமனங்களையும் செய்திருந்தார்.

இவ்வாறு விசாரணைகளை முன்னெடுக்கும் தரப்புக்கள் பாராளுமன்றத்தின் உள்ளக ரீதியில் அமைக்கப்பட்டதென்று கூறப்பட்டாலும், வெளியக விசாரணையொன்றே முன்னெடுக்கப்படுகிறது. குறித்த வாக்கெடுப்பின்போது ‘நிருவாக ரீதியான தவறுகள் இடம்பெற்றுள்ளனவா’ என்பதை கண்டறிவதற்காக பாராளுமன்றின் முன்னாள் செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துல்கொடவும், இலத்திரணியல் ரீதியாக தவறுகள் இடம்பெற்றுள்ளனவா என்பதை கண்டறிவதற்காக டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அதேநேரம், குறித்த ஆணைக்குழுச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டு அது நடைமுறையாகியுள்ள நிலையில் பாராளுமன்றில் அச் சட்டமூலம் தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு முடிவினை மாற்றமுடியாது என்று எதிர்க்கட்சி பிரதம கொறடாவான பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் சபாநாயகர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டபோது, “தவறு எங்கே நிகழ்ந்திருக்கின்றது என்பதை அறியவே விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் வாக்கெடுப்பு முடிவு மாற்றப்படாது” என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

பிரதிபலிக்காத சீனா

இவ்வாறான நிலையில், சீன சார்பான அபிவிருத்தி செயற்றிட்டங்கள் சிலவற்றின் பெயர்பலகைகளில் தமிழ் மொழியில்லை என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோது அதற்கு இலங்கையில் உள்ள சீன தூதரகம் பதிலளிப்புக்களைச் செய்து வருகின்ற நிலையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டமைக்கு எந்தவொரு பிரதிபலிப்பினையும் அத்தூதரகம் செய்திருக்கவில்லை.  இந்த நிலைமையானது, சீனா எதிர்பார்த்த ஏற்பாடுகளுடன் ஆணைக்குழு சட்டமூலம் நிறைவடையவில்லை என்பதை வெளிப்படுத்தியிருப்பதாக சில இராஜதந்திர தரப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தியாவிற்கு மறைமுக சாடல்

எனினும், இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட கையோடு இலங்கைக்கு ஐந்து இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை இலவசமாக சீனா வழங்கியிருந்தது. இதனை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வினை விமானநிலையத்தில் வைத்தே நிறைவு செய்து கொண்ட சீனா அப்புகைப்படத்தினை பதவிசெய்து “ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்” என்று மும்மொழிகளிலும் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டிருந்தது. இது இந்தியாவை மறைமுகமாக சாடி வெளியிடப்பட்டதொரு பதிவென்றும் இராஜதந்திர தரப்பில் கருத்துக்கள் பகிரப்பட்டிருக்கின்றன.

கூடிய அவதானம்

இதேநேரம், கொழும்பு துறைமுக நகர பொருளாதார சட்டமூலம் மற்றும் அங்கு அடுத்துவரும் காலத்தில் நடைபெறும் செயற்படுகள் தொடர்பில் கூடிய கவனம் எடுக்கப்படவுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பாதுகாப்பு ரீதியான விடயங்கள் தொடர்பில் ஆழ்ந்த கரிசனையுடனான கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் புதுடெல்லித் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

வடக்கில் ‘சினோபார்ம்’

வடமாகாணத்திற்கு 50ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடத்தில் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் பெரும்பாலும் இன்றைதினம் அவை விநியோகிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் குறித்த நிகழ்வினை ‘பெரியளவில்’ காண்பிப்பதற்கு சீன சார்பு ஊடகங்கள் தயாராகி வருகின்றன. வடமாகாணத்தினைப் பொறுத்தவரையில் அனைத்து விடங்களிலும் இந்தியத்தரப்பே முன்னின்று செயற்பட்டு வரும் நிலையில் முதற் தடவையாக சீனாவின் பங்களிப்பொன்று அங்கு செல்வதால் அதனை ‘பிரமாண்டமாக்குவதற்கு’ சீனா விருப்பியுள்ளதாக தெரிகிறது.

அஸ்ட்ராசெனெகா இரண்டாவது தடுப்பூசி

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெறுவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆறு இலட்சம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் ஏற்கனவே செலுத்தப்பட்டவர்களுக்கு இரண்டாவது தடவையாக செலுத்துவதற்கு தேவையாக உள்ளன.

இந்தநிலையில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியொன்றை 15டொலர்களுக்கு வழங்குவதற்கு சீரம் நிறுவனம் இணங்கியுள்ளதாகவும், தனியார் நிறுவனங்கள் அவற்றை கொள்வனவு செய்வதற்கு இடமளிக்குமாறு இலங்கையில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், உலகளாவிய கொரோனா தடுப்பு திட்டமான “கோவகஸ்” மற்றும் ஏனைய நாடுகளுக்கான விநியோகம் இந்த ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து தடுப்பூசியை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை உற்பத்திசெய்யும் அஸ்ட்ராசெனெகா சிங்கப்பூர் நிறுவனம், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேனவுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தவிர, அஸ்ட்ராசெனெகா நிறுவனத்தின் வேறெந்த தனியார் முகவர்களும் இல்லை என தெரிவித்துள்ளது.

இலங்கையில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை விநியோகிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு,  இலங்கையிலுள்ள சில தனியார் நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்தை அணுகிவருவதை அறியமுடிந்ததாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாவிடம் மன்னிப்புக்கோரிய நாமல்

கொரோனா செயலணிக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது ஜனாதிபதி கோட்டாபய வியடத்தில் அமைச்சர் நாமல் மன்னிப்புக்கோரியுள்ளார். இந்தக் கூட்டத்தின்போது, மொறட்டுவ மாநகர சபையின் மேயர் சமன்லால் பெர்னாண்டோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை மற்றும் மொறட்டுவ பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் போது சுகாதார ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமை  தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய தனது கரிசனையை வெளிப்படுத்தினார்.

இதனையடுத்தே அவ்விதமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதில்லை என்றும், நடந்த சம்பவத்தினை இட்டு கவலையடைவதோடு அதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு தான் மன்னிப்புக் கோருவதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார். மொறட்டுவ மேயருக்காக நாமல் மன்னிப்புக்கோரினாலும் அவர் ‘பஷில்’ அணியென்று பொதுஜனபெரமுன தகவல்கள் கூறுகின்றன.

சம்பிக்கவை புறக்கணிக்கும் சஜித்  

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் அதன் பிரதி தலைவராக வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் சம்பிக்க ரணவக்கவுக்கும்  இடையில் தொடர்ந்தும் பாரிய முரண்பாடுகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக வட்டத்துக்குள் சம்பிக்கவை உள்வாங்குவதற்கு சஜித் பிரேமதாச தொடர்ச்சியாக தயக்கத்தைப் வெளிக்காட்டி வருகின்றார்.

அதாவது அவரை எக்காரணம் கொண்டும்  ஒரு முக்கிய பதவிக்கு கொண்டு வந்துவிட கூடாது என்பதில் சஜித் பிரேமதாச மும்முரமாக இருந்து கொண்டிருக்கின்றார்.  எப்படி இருப்பினும் மக்கள் மத்தியில் தனக்கு ஒரு முக்கிய பதவி முக்கியமாக பிரதித் தலைவர் போன்ற பதவியை  தராவிடின் விரைவில் ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுக்க போவதாக சம்பிக்க ரணவக்க தனது நெருக்கமானவர்களிடம்  தெரிவித்திருக்கின்றார்.

அந்த வகையிலேயே  தற்போது அவர் 43 ஆவது  படையணியை உருவாக்கி  செயற்பட்டு வருகின்றார்.  சஜித்தை பொறுத்தவரையில் சம்பிக்க ரணவக்க பிரதித் தலைவராக உள்வாங்கப்படும் பட்சத்தில் தனது தலைமைத்துவத்திற்கு சிக்கல்கள் வரலாம் என்றும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக வருவதற்கான சாத்தியம் சவாலுக்கு உட்படும் என்றும் கருதுகிறார்.

அதனால் அவர் தொடர்ச்சியாக சம்பிக்க ரணவக்கவை தடுத்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  சஜித் தற்போது கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்.  எப்படி இருப்பினும் அவர் தற்போது அரசியல் கொரோனா நெருக்கடியிலும் சிக்கியிருப்பதாக கட்சியின் ஒரு சில தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

புதிய கூட்டணிக்கான முயற்சிகள் 

சம்பிக்க ரணவக்க மூன்றாவது தரப்பில் ஒரு கூட்டணியை  அமைப்பதற்கான முயற்சியில்; ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. குறிப்பாக சம்பிக்க ரணவக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, முன்னாள்   பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் இரகசிய சந்திப்புக்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு  சந்திப்புக்களை நடத்தி வருகின்ற சம்பிக்க ரணவக்க அடுத்ததாக ஒரு புதுக் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் அதில் ஒரு புதுமுகத்தை ஜனாதிபதியாக வேட்பாளராக களமிறக்கவும்  முயற்சிப்பதாகவும் அறியப்படுகிறது.

சஜித்தை அங்கீகரிக்க மறுக்கும் ஜே.வி.பி.

எதிரணி சார்பாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச களமிறங்கும்  பட்சத்தில் எக்காரணம் கொண்டும் அவருக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும் அவர் தலைமையிலான கூட்டணியில் இடம் பெறப் போவதில்லை என்றும் மக்கள் விடுதலை முன்னணி  தீர்மானித்துள்ளது.  ஐக்கிய  மக்கள் சக்தி கட்சியின்  கூட்டுக் கட்சி தலைவர் ஒருவரிடம்  கருத்து வெளியிட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைத்துவம் எங்களால் எந்த ஒரு காரணத்துக்காகவும் சஜித்துக்கு ஆதரவு வழங்க முடியாது என்றும் அவர்   தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு வழங்க முடியாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அந்தவகையில் ஜே.வி.பி.யின் ஆதரவும் சஜித்தை  பொறுத்தவரையில்  ஒரு சவாலான விடயமாகவே காணப்படுகிறது.

உற்சாகத்துடன் இயங்கும் ரணில் 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்   ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சியின் தரப்பினரை  ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளில் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக எதிர்த்தரப்பில் இருக்கின்ற சிறுபான்மை கட்சிகளுடன் ரணில்  விக்கிரமசிங்க  பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.  அவர் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் மங்கள சமரவீர, சம்பிக்க ரணவக்க உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.  அதேபோன்று ஹரினுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக இவ்வாறான அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பதில் தீவிரம் செலுத்தி வருகின்றார். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுடனும் ரணில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியாக பயணிக்க வேண்டியதன் அவசியத்தை இதன்போது அவர்  வலியுறுத்தியிருந்தார்.  அந்த வகையில் ஆளும் கட்சியில் இருக்கின்ற போது இதுபோன்று உற்சாகத்துடன் செயற்படாவிடினும்  தற்போது  ரணில் விக்கிரமசிங்க  எதிர்க்கட்சியில் மிக வேகமாக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதாக  ஐக்கிய  மக்கள் சக்தியின்  கூட்டணி கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

விஜயதாஸவின்  நகர்வுகள்

ஆளும் கட்சியில் கடுமையான அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தற்போது மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  அதாவது ரணில் விக்கிரமசிங்க, விஜயதாச ராஜபக்ஷ,  மங்கள சமரவீர உள்ளிட்டோர் இவ்வாறான தொடர்புகளில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தரப்பினரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கி அதனூடாக எதிர்வரும் காலங்களில் செயற்படுவது தொடர்பாக ஆராய்ந்துவருகின்றனர்.  ஆனால் அந்த கூட்டணியில் இணைந்து கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தயக்கம் காட்டி வருகின்றார் என்றும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளராக அடுத்த தேர்தலில்  தான் களமிறக்கப்படும் பட்சத்தில்  மட்டுமே இவ்வாறான  கூட்டணியுடன் செயற்பட முடியும் என்ற நிலைப்பாட்டில் சஜித் இருக்கின்றார். ஆனால் மறுபுறம் இந்த கூட்டணியில் சஜித் பிரேமதாச உறுப்பினராக இணைந்து கொள்ள முடியுமே தவிர அவர் வேட்பாளராக  முடியாது என்று  எதிரணியில் புதுக்கூட்டணியை உருவாக்க முயற்சிக்கும் தலைவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஒன்றுபட்ட மு.கா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலத்தில் ஒன்றுபட்டுச் செயற்பட்டிருக்கின்றது. அத்தரப்பு வாக்கெடுப்பில் பங்கெடுக்காது விட்டிருக்கின்றது. அதன்பின்னர் அதுதொடர்பாக வெளியிட்டுள்ள விளக்கமளிப்பில் “நன்மையும் உண்டு, தீமையும்; உண்டு என்பதால் நடுநிலை வகித்தோம்” என்று சப்கைக் கட்டு கட்டியுள்ளது.

ஆனால், பாராளுமன்றில் குறித்த சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பு தினமன்று காலையில் கூடிய மு.கா.வின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து பேசியே முடிவெடுத்துள்ளார்கள். இந்த நிலையில் மு.கா.வின் முக்கியஸ்தர் ஒருவர், “துறைமுக ஆணைக்குழு விடயத்தில் இணைந்து செயற்பட்டதைப் போன்று தான் 20ஆவது திருத்தச்சட்டத்திலும் செயற்பட்டோம். தலைமைக்கு அழுத்தங்கள் அதிகரித்தவுடன் ‘பல்டி’ அடித்துவிட்டார்” என்று கூறினார்.

அத்துடன், “ரிஷாத்தின் கட்சியைப் பாருங்கள் அங்கு ஒற்றுமையான முடிவெடுக்காமையால் தான் இருவர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் எங்களுடைய கட்சியில் ஒருமையான முடிவெடுக்கப்பட்டமையால் தான் தலைமை எந்த நடவடிக்கையையும் எடுக்கவி;ல்லை” என்றும் குறிப்பிட்டார்.

ஆக, 20ஆவது திருத்தச்சட்ட விடயத்தில் தலைமையும் இணைந்து தான் “அனைத்தும்” நடந்தது என்கிறார் அந்த முக்கியஸ்தர்.

முன்னணியின் விளக்கம்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைத்தமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு தமிழ்த் தேசியத் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டிணைந்து கடிதமொன்றை அனுப்பினார்கள். அந்தக் கடிதத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவரும் கையொப்பமிடவில்லை.

“சுமந்திரன் கையொப்பமிட்டமையால் தான் பெரிய கஜனும், சின்னக் கஜனும் கையொப்பமிடவில்லை” என்று கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார். ஆனால் முன்னணியின் தரப்பில் அதற்கு உரிய விளக்கமொன்று அளிக்கப்பட்டுள்ளது.

முன்னணியின் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், “அந்த கடிதத்தில் போரில் கொல்லப்பட்டவர்களிற்கான நினைவுத்தூபி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ளது இனப்படுகொலையை நினைவு கூருவதற்கான நினைவுத்தூபி. ஆனால் கடிதத்தில் அதை குறிப்பிடவில்லை. அக்கடிதம் இனப்படுகொலையை மறைப்பதற்கான கூட்டமைப்பின் முயற்சியென்பதால் நாம் கையெழுத்திடவில்லை” என்றார். .virakesari

கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் காணப்பட்ட 74 பிரிவுகளில் 25 ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதாகவும் அவற்றை நிறைவேற்றுவதென்றால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென்றும் குறிப்பாக 9 பிரிவுகளை நிறைவேற்றுவதற்கு…

கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் காணப்பட்ட 74 பிரிவுகளில் 25 ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதாகவும் அவற்றை நிறைவேற்றுவதென்றால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென்றும் குறிப்பாக 9 பிரிவுகளை நிறைவேற்றுவதற்கு…