மூன்று வாரங்களுக்குள் பொலிஸ் பாதுகாப்பில் மூன்று பொது மரணங்கள்

கொரோனா கட்டுப்படுத்தலுக்காக பயணத்தடைச் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட கடந்த மூன்று வார காலப்பகுதியில் இடம்பெற்ற பொலிஸாருடன் தொடர்புடைய சம்பவங்களை அவதானிக்கையில் பல சந்தேகங்களை பொது மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நாட்டில் புதிய  ஆட்சியை உருவாக்க விரும்பியவர்களின் பிரதான கோசங்களில் ஒன்றே தனிநபர் சார்ந்த சிவில் சட்டங்களை திருத்தி “ஒரே நாடு ஓரே சட்டம்”  என்பதை நடைமுறைப்படுத்தலாகும். ஆனால் நடைமுறையில்    உள்ள அனைவருக்கும் பொதுவான குற்றங்வியல் சட்டங்களையாவது அனைவருக்கும் சமனாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது பாரிய சந்தேகமாகவே உள்ளது.

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் பயணத்தடைச் சட்டம் அமுலில் உள்ளது. அச்சட்டத்தைமீறும் வகையில் எவராவது செயற்பட்டால் அவர்களை கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இருக்கின்றது.

குறிப்பாக பொதுவெளியில் முகக்கவசம் அணியாமல், சத்தமாக தும்மினால்கூட, சுகாதார நடைமுறைகளைமீறிய குற்றச்சாட்டில் அத்தகைய நபர்களை கைது செய்யலாம். கடந்த காலங்களில் அவ்வாறான கைதுகளும் இடம்பெற்றுள்ளன. கைதானவர்கள் குண்டு கட்டாக தூக்கிச்செல்லப்படும் காணொளிகளையும் கண்டிருப்பீர்கள்.

அதேபோல பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் களியாட்ட நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மரண சடங்குகள்கூட கடும் கட்டுப்பாட்டுகளுக்கு மத்தியிலேயே இடம்பெறவேண்டும். இதற்கான சுகாதார வழிகாட்டல்கள்கூட வெளியிடப்பட்டுள்ளன.

அவ்வாறே கடந்த மூன்று வாரங்களில் பொதுவாக பயணத்தடைச் சட்டங்களுடன் தொடர்புடையதாக பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இருந்த மூவர் மரணித்துள்ளனர். அவை தொடர்பான பொலிஸார் அறிக்கைகள் விபத்து என்று கட்டமைக்கப்பட்டாலும் குடும்பத்தினரின் வாக்குமூலங்கள் மற்றும் காணொளிகள் அவை கொலையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம் பயணத்தடைக்காலப்பகுதிக்குள் பிறந்துள்ள பிரபலங்களின் பிறந்த நாள் கொண்டாட்டாங்களும் சில பொலிஸாரின் பங்களிப்புடன் இடம்பெற்றுள்ளது. மேலும் நாட்டில் ஏற்படுத்த முயன்ற  ஒரே நாடு ஓரே சட்டமோ பொதுமக்களை கொலை செய்து, பிரபலங்களுக்கு ஆடை வாங்கிக் கொடுத்துள்ளது.

பயணத்தடைக் காலப்பகுதியில் வெலிகம, மட்டக்களப்பு, பாணந்துறை பிரதேசங்களில் மூன்று மரணங்கள் இடம்பெற்ற வேளை பல பிரபலங்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வெலிமயில் இடம்பெற்றது என்ன?

மே மாதம் 17 ஆம் திகதி செய்தியறிக்கையின்படி சி.சி.டி.வி காணொளிக் காட்சியின்படி பாதையில் விழுந்து கிடந்த ஒருவரின் மேலால் பஸ் ஏறிச் சென்றதால் குறித்த நபர் இறக்கிறார். அதாவது பார்வைக்கு ஒரு விபத்து அறிக்கையாகத்தான் உள்ளது. ஆனால் நான்கு நாட்கள் கழித்து குறித்த சி.சி.டி.வி காணொளியின் முதல் பகுதி வௌியாகின்றது.

அதன் படி குறித்த நபருக்கும் பொலிஸாருடன் தகறாறு ஏற்பட்டுள்ளது. அச்சந்தர்ப்பத்தில் பொலிஸாரின் முன்னிலையில் வெறொரு நபர் குறித்த நபரிற்கு தாக்கியுள்ளார்.  அத்தாக்குதலில் குறித்த நபர் விழுந்துள்ளார். குறித்த நபரை தூக்குவதற்காவது அங்கிருந்த பொலிஸார் உதவவில்லை. சிறிது நேரத்தில் அவ்விடத்தால்  செல்லும் பஸ் ஒன்றிற்கு கீழ்பட்டு குறித்த நபர் உயிரிழக்கிறார்.

மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர் 47 வயதுடையஇலங்கை துறைமுகத்தில் சேவைபுரிந்தவர். இவரின் வீட்டில் மூவருர் கொரோனா தொற்றுக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையிலே குறித்த சம்பவம் இடம்பெறுகின்றது.

தனிமைப்படுத்தலில் இருந்த குறித்த குடும்பத்தினருக்கு மூன்று நாட்களுக்கு அரசின் உதவி கிடைக்கவில்லை. மூன்று நாட்கள் பட்டினி கிடந்து இறுதியாக பசி காரணமாக குறித்த நபர் சாப்பாடு எடுக்க வெலிகம நகரிற்கு சென்றுள்ளார். அச்சந்தர்ப்பத்தில் பொலிஸாருடன் தகறாறு ஏற்பட்டுள்ளது. அச்சந்தர்ப்பத்தில் பொலிஸாரின் முன்னிலையில் வெறொரு நபர் குறித்த நபரிற்கு தாக்கியுள்ளார்.  அத்தாக்குதலில் குறித்த நபர் விழுந்துள்ளார். குறித்த நபரை தூக்குவதற்காவது அங்கிருந்த பொலிஸார் உதவவில்லை. சிறிது நேரத்தில் அவ்விடத்தால்  செல்லும் பஸ் ஒன்றிற்கு கீழ்பட்டு குறித்த நபர் உயிரிழக்கிறார்.

இங்கு குறித்த நபருக்கு பொலிஸாரின் முன்னிலையில் தான் தாக்கப்பட்டுள்ளது. அதனை தடுக்க பொலிஸார் முயலவில்லை. விழுந்த நபரை மனிதாபிமான அடிப்படையில் தூக்கி விடவில்லை.  காணதவாறு சென்று விடுகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வெலி­கம நகர சபையின் நகர பிதா ரெஹான் விஜே­ரத்ன ஜெய­விக்ரம வௌியிட்ட அறிக்கையில்,

வெலிகம நபர வீதியில் பஸ்ஸிற்கு கீழ் பட்டு மரணித்த சம்பவத்துடன் தொடர்புடை பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் யாரெல்லாம் தொடர்புடையவர்? யார் குறித்த சம்பவத்தை மறைக்க முற்பட்டனர் என்பது பற்றி மக்களுக்கு நாட்டிற்கு வௌிப்படுத்த வேண்டும்.

வெலிகம பொலிஸாரிற்கு கொலை செய்ய அதிகாரப் பத்திரம் வழங்க உரிமம் வழங்கப்பட்டள்ளதா? அமைச்சர் சரத் வீரசேகர ஏன் அமைதியாக இருக்கிறார்?

குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரையும் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கேள்விப்பட்டேன். அவ்வாறு பணி நீக்கம் செய்வது மாத்திரமல்ல சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவும். அவர்களின் அரசியல் பின்னணி எல்லாம் எனக்கு தேவையில்லை. அவர்கள் யாருக்காக அரசியல் செய்தாலும் அவர்களுக்கெதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகவிடம் கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்றது என்ன?

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஜூன் 2ஆம் திகதி இரவு புலனாய்வுப்பிரிவினர் எனக்கூறிவந்தவர்களினால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட இளைஞன் ஒருவர் சடலமாகத்தான் கண்டெடுக்கப்படுகின்றது.

இரவு 10.30மணியளவில் மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு ஏழாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கைதுசெய்யப்பட்ட 22 வயதுடைய சந்திரன் விதுசன் என்னும் இளைஞனே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இரவு நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து வெளியில் வருமாறு கூறியபோது குறித்த இளைஞர் வெளியில் வந்ததாகவும் இதன்போது வீதியில் நின்ற புலனாய்வாளர்கள் எனக்கூறிக்கொண்டவர்கள் குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது குறித்த இளைஞன் புலனாய்வாளர்கள் எனக்கூறப்பட்டவர்களினால் கடுமையான முறையில் தாக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

என்றாலும் பிரேதப் பரிசோதனை அறிக்கைளின்படி மட்டக்களப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் 4 ஐஸ் போதைப் பொருள் பெக்கெட்டுக்களை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் 25 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய கூட்டில் அடைத்து வைக்கப்பட இளைஞன் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்த சம்பவம் 03.06.2021 ஆம் திகதி அதிகாலையில் இடம்பெற்றிருந்தது.

கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிசாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தி இருந்தனர்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த தலைமையில் விசேட பொலிஸ்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணையும் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் குறித்த நபர் 4 பெக்கெட்டுக்களை கொண்ட ஐஸ் போதைப் பொருளை வாயில் போட்டு விழுங்கிய நிலையில் நெஞ்சுப் பகுதியில் ஐஸ் போதைப் பொருள் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் ஜெய­விக்ரம வௌியிட்ட அறிக்கையில்,

இச்சம்பவம் குறித்த உண்மைகளைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுகுறித்து சாணக்கியன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், ‘பொலிஸாரின் காவலின் கீழ் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். அளவுக்கதிகமாக ஐஸ் போதைப்பொருளை உள்ளெடுத்தமையின் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ‘அந்த இளைஞர் கைவிலங்கிடப்பட்டதுடன் தாக்கப்பட்டார். அதுமாத்திரமன்றி அவர் உயிரிழக்கும்போது பொலிஸ் காவலிலேயே வைக்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பான உண்மையைக் கண்டறிந்து, நீதியை உறுதி செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘என்னுடைய சகோதரன் புதன்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் கைதுசெய்யப்பட்டதுடன் எங்களுடைய வீட்டுக்கு முன்னால் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கின்றனர்’ என்று விதுஷனின் சகோதரி இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், ‘மிகையான ஐஸ் போதைப்பொருள் பாவனையால் இந்த உயிரிழப்பு இடம்பெற்றிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் அந்த இளைஞரின் வீட்டுக்கு முன்னாலேயே அவர் தாக்கப்பட்டதாக அவரது சகோதரி தெரிவித்திருப்பதால், சித்திரவதை இடம்பெறவேயில்லை என்று கூற முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ‘இச்சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணை செய்யப்பட வேண்டும். மேலும் போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்கள் குறித்து கையாள்வதுடன் தொடர்புடைய விடயங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட சிறைச்சாலைகள் தொடர்பான ஆய்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன’ என்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாணந்துறையில் இடம்பெற்றது என்ன?

நாட்டில் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதான நபர் ஒருவர், பொலிஸ் வாகனத்திலிருந்து குதித்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் ஜூன் 06 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

பாணந்துறை வடக்கு வத்தல்பொல பிரதேசத்தில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 42 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட வேளையில் ஓடும் வாகனத்திலிருந்து குதித்த போது படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் குறித்த நபரை அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

வத்தல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி உறவினர் வீடு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் வண்டியில் ஏற்றி சென்ற போது அங்கிருந்து தப்பிச் செல்லும் நோக்கில் வாகனத்திலிருந்து குதித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், இறந்தவரின் மனைவி தனது கணவர் வாகனத்தில் இருந்து குதித்ததில்லை என்று கூறியுள்ளார், மாறாக அவரை கைது செய்த பொலிஸாரினால் தாக்கப்பட்டார், இதனால் அவரது மரணம் ஏற்பட்டது பொலிசார் பொய் கூறுகின்றனர் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சந்தேக நபரை கைது செய்த உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் மேலுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். உயிரிழப்பு தொடர்பில் பிரேத பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு மேலதிக பொலிஸ் அதிகாரி தலைமையிலான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தானாக வாகனத்திலிருந்து கீழே குதித்திருந்தாலும் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது பொலிஸாரின் கடமையாகும். அதற்கமைய இதற்கான நடவடிக்கைகள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்காவிட்டால் , அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையும் நீதிமன்ற நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை கடந்த மூன்று வாரத்திற்குள் வெலிகம, மட்டக்களப்பு தற்போது பாணந்துறை என மூன்று இடங்களில் பொலிஸாரின் பாதுகாப்பு அல்லது பொலிஸாருடன் தொடர்புடைய மூன்று மரணங்கள் இவ்வாறு பதிவாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் நிதி நிறுவன உத்தியோகத்தர்களின் நெருக்கடி காரணமாக தனது உயிரை மாய்த்துள்ளார்.

பொதுமக்களை கொலைசெய்யும் விதமாகவும் தற்கொலை செய்து கொல்ல வைத்த பயணத்தடைச் சட்டங்களை பிரபலங்கள் தொடர்பில் எவ்வாறு நடைமுறைப்படுத்தனார்கள் என்பதையும் அவதானிப்போம்.

பொலிஸாரின் ஏற்பாட்டிலேயே மேயருக்காக பிறந்தநாள் கொண்டாட்டம்

கொரோனா தொற்று பரவல் விரைவில் கட்டுக்குள் வரவேண்டும், நாடும் மக்களும் தொற்று அபாயத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக குருணாகல் பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘பிரித் ஓதும்’ ஆன்மீக வழிபாட்டு நிகழ்வு பொலிஸ் வளாகத்தில் மே 30 ஆம்  திகதி இடம்பெற்றது.

இதில் குருணாகல் மாநகர மேயர் துஷார சஞ்சீவ விதாரணவும் பங்கேற்றார். மேயரின் பிறந்தநாள் என்பதால், பொலிஸாரால் ‘கேக்’ வெட்டுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. சுகாதார விதிமுறைகளைமீறியே ‘கேக்’ வெட்டப்பட்டது. அதுமட்டுமல்ல நிகழ்வில் பங்கேற்றிருந்த உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரும் கேக் சாப்பிட்டு மகிழ்ந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கடும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. சட்டத்தை சரிவர அமுல்படுத்த வேண்டிய தரப்பே, சட்டத்தைமீறும் வகையில் செயற்படுவதை அனுமதிக்கலாமா என்ற தொனியிலும் கருத்தாடல் இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ஹோரன இச்சம்பவம் தொடர்பில் இன்று நடைபெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடலொன்றின்போது கருத்து வெளியிடுகையில்,

”இத்தகைய நடவடிக்கையை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கொண்டாட்டம் குறித்த காணொளியும் கிடைத்துள்ளது. இது தொடர்பில் வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடினேன்.

விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொலிஸாரால் இப்படியான நிகழ்வை (பிறந்தநாள்) ஏற்பாடு செய்யமுடியாது.” என்றார்.

நடிகைக்கு ஆடை வாங்கிக் கொடுத்த பாதுகாப்பு அமைச்சர்

மே 31 ஆம் திகதி தனிமைப்படுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாட்டு சட்டங்களை மீறி அழகுக்கலை நிபுணரான சந்திமால் ஜயசிங்க கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். இதில் பங்கேற்ற நடிகை பியூமி ஹன்சமாலி உட்பட 15 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன்போது மாற்று ஆடையில்லை என பியூமி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர அவருக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்திருந்தார்.

பியுமி ஹன்சமாலியின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்து அவரது கவலையை கேட்டறிந்து, பஸ்ஸிற்குப் பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் அதிகாரிக்கு கூறி கொஸ்வத்த பிரதேசத்தில் பஸ்ஸினை நிறுத்தும் படியும் உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் அவர்களது உறவினர்களிடம் கூறி தனிமைப்படுத்தலில் ஈடுபடும் காலத்தில் பயன்படுத்த ஆடைகளை அவர்கள் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஹிரு தொலைக்காட்சியில் இடம் பெறும் சலகுண நிகழ்சியில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அவர்களிடம் பியுமி ஹன்சமாலியின் விவகாரமும் விவாதிக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனாவின் அரசியல் களத்தில் பியுமி ஹன்சமாலியின் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது இலங்கை்கு பாரிய அழிவை ஏற்படுத்திய கப்பல் தீ விபத்தில் இருந்து மக்களை திசை திருப்ப மேற்கொண்ட முயற்சி என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நடிகைக்கு ஆடை இல்லை என்றால் ஆடை வாங்க முன்வரும் பாதுகாப்பு அமைச்சர் உள்ள தேசத்தில்தான், ஒரு பொதுமகன்  மூன்று நாள் பட்டினி கிடந்து அடி பட்டு வீழ்ந்தாலும் தூக்கிவிடாத  பொலிஸாரும் உள்ளனர்.

வாக்களித்த 69 இலட்சம் பேரும் ஒரே நாடு ஒரே சட்டம் கோரியே வாக்களித்துள்ளனர். எனவே நாட்டில் அரசனுக்கும், அடிமைக்கும், அமைச்சருக்கும் அழகிற்கும் ஒரே தனிமைப்படுத்தல் பயணத்தடை சட்டத்தை அமுல்படுத்தினால் அனைவருக்கும் நல்லது.

இக் கட்டுரை பல ஊடகங்களில் வௌிவந்த அறிக்கையாகும்.

伊卜努阿萨德