பதவி விலகமாட்டேன் – அதுரலிய ரதன தேரர்
தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிக் கொள்வதற்குத் தயாராக இல்லை என அபே ஜனபல கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
‘நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியில் எவ்வித உண்மையுமில்லை. அது பொய்யான செய்தியாகும். பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் 6 மாத காலத்தில் விலகுவதாக நான் எவருடனும் உடன்படிக்கை செய்துகொள்ளவில்லை. தொடர்ந்தும் எனது முழுமையான பதவிக் காலத்தை வகிப்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை அபே ஜனபல கட்சி தனது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் சமன் பெரேரா ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துரலியே ரதன தேரர் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் ஆறுமாத காலத்தை ஜூலை மாதம் 5ஆம் திகதி நிறைவு செய்கிறார். அதனையடுத்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்ததும் ஞானசார தேரர் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறுவார் என பொதுபல சேனா அமைப்பின் ஊடக இணைப்பாளர் எரந்த கேநவரத்ன இவ்வாரம் தெரிவித்தார்.