உயிர்பெற்ற உன்னத உறவு

  • 23

கதிரவன் தன் கிரகணத் தூரிகையால் வான்மகளுக்கு வண்ண ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் அழகிய காலைப்பொழுதில் தன் மனதைப் பறிகொடுத்திருந்த ஹப்ஸா பெல்கனியில் அமர்ந்து தேனீர் பருகிக் கொண்டிருந்தாள். காலைக் காட்சிகள் கண்ணைக் கவர்ந்தாலும், உள்ளத்தைக் காந்தமாய்க் கவர்ந்திழுத்தாலும் இனம்புரியா இருளொன்று அவளது உள்ளத்தில் இருக்கத்தான் செய்தது.

தன் அறைத்தோழி ஆய்ஷாவுடன் அதே பெல்கனியில் அமர்ந்து அரட்டையடித்த வண்ணம் தேனீர் பருகிய அந்த அழகிய நாட்கள் உள்ளத்தில் இனித்திட, ஸுபஹ் தொழுகையின்றி ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஆய்ஷாவை கவலையுடன் நோக்கினாள்.

ஆய்ஷாவும், ஹப்ஸாவும் பல்கலையில் இரண்டாம் வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கும் இணைபிரியாத தோழிகள். நகமும் சதையும் என்பார்களே. அது போலத் தான் இவர்களது நட்பும் இருந்தது. எம் சமூகமே முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டிய அளவு அவர்களது ஈமானிய நட்பு தொடர்ந்தது. ஆனால், காலம் செய்த கோலம் கலியுகத்தில் மனிதனின் உள்ளங்கையில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் வலைத்தளத்தினால் அவர்களது நட்பினுள் இருந்த பசை குறைந்து அவர்களுக்குள் சிறு விரிசல் ஏற்பட்டது.

“ஆய்ஷா… ஆய்ஷா… எழும்புமா… மணி ஏழர ஆகிட்டு. எட்டரக்கி லெக்சர் இரிக்கி” தன் தோழியைத் தட்டி எழுப்பினாள் ஹப்ஸா.

“ஆ.. .உம்… (சோம்பல் முறித்தவாறே) சரி ஹப்ஸா நான் இன்னம் டென் மினிட்ஸ்ல எழும்புறனே”

என்று கூறி திரும்பிப் படுத்தவள் 10 நிமிடத்திற்குப் பிறகு எழும்பினாள். கண் விழித்ததும் முதலில் முழித்தது தொலைபேசியில் தான்.

“என்ன ஆய்ஷா நீ நைட் முழுக்க போன்ல இருந்துட்டு லேட்டாகி தூங்குற. ஸுபஹும் தொழாம… என்ன பழக்கம் இது.?”

பதிலேயின்றி சுவாரஸ்யமாய் தொலைபேசியை புன்னகைத்தவாறே நோண்டிக் கொண்டிருந்தாள் ஆய்ஷா. தன் அன்புக் காதலனுக்கு குட்மோர்னிங் சொல்லவே இந்த வேகம் என்பது ஹப்ஸாவும் அறிந்த விடயமே.

ஆய்ஷா இயல்பிலோ வளர்ப்பிலோ கெட்டவள் அல்ல. ஆனால், உயர் படிப்புக்காக அவளுக்குக் கிடைத்த சுதந்திரம் அவளை பாதாளத்திற்குள் தள்ளிக் கொண்டிருந்தது.

பல்கலைக்கு வந்த புதிதிலேயே அவளது கையில் ஸ்மார்ட் போன் தவழ்ந்தது. கல்விக்கு கரம் கொடுப்பதில் தொலைபேசிக்கும் பாரிய பங்குண்டு. அதில் நலவும் உண்டு. கெடுதியும் உண்டு. அதனைக் கையாளும் விதத்தைப் பொறுத்தே நம் வாழ்வும் அமைவதுண்டு.

ஆரம்பத்தில் சீராக பயணித்த ஆய்ஷாவின் வாழ்வு இடையில் தடம் புரண்ட ரயிலாய் மாறிப் போனது. வலைத்தளங்களில் வலம் வந்த அவள் ஒருவனுடன் நட்புக் கொண்டாள். பல ஆண், பெண் நட்பு போல் அவர்களது நட்பும் காதலாக மாறியது. எங்கோ, யாரோ முகமறியா ஒருவன் டைம் பாஸிங்காக பேஸ்புக்கில் அறிமுகமான ஆய்ஷாவை குருவிச்சைக் கொடியாய்ப் பற்றிக் கொண்டான். ஆனால், உண்மை எதுவும் அறியாத ஆய்ஷா அவனைத் தாங்கும் கொழுகொம்பாகவே எண்ணினாள்.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை அல்லவா? அதன் வேகத்தில் அவர்களது காதலும் மூன்று மாதங்களைத் தழுவியது.

ஆய்ஷாவின் நடத்தை மோஷமாகிக் கொண்டு போவதைக் கண்டு கவலையடைந்த ஹப்ஸா,

“ஆய்ஷா… நீ ஏன் இப்பிடி நடந்து கொள்றாய்? எங்கட பேரண்ட்ஸ் பெரிய நம்பிக்கயோட தான் எங்கள யுனிவேஸிட்டிகி அனுப்பீக்கி. அவங்கட நம்பிக்கய காப்பாத்துறது தான் எங்கட கடம. நல்லா படிச்சி அவங்களுக்கு நல்ல பேர் வாங்கிக் குடுக்குறது தான் எங்கட குறிக்கோளா இரிக்கோணம். நல்ல பேரில்லாட்டிம் கெட்ட பேர் வாங்கிக் குடுக்காம ஆவது இரிக்கோணம். நீ இப்பிடி நடந்து கொள்றத என்னால இனிமேலயும் பொறுக்கேல. ஒரு நாளக்கி ஓண்ட பேரண்ட்ஸ் இத பத்தி என்கிட்ட கேட்டா நான் குற்றவாளியா இரிக்கவாகும். உன்ன நல்ல வழிக்கு எடுக்குறது ஓண்ட பிரெண்ட் எண்டுற வகேல ஏண்டயும் கடம தான். ஸோ, பிளீஸ் இதெல்லாம் விட்டுடு ஆய்ஷா” என்று கண்ணீர் வடித்துக் கதறினாள்.

தோழியின் கண்ணீர் கண்டு ஆய்ஷாவின் மனம் சஞ்சலமடைந்தது. அமைதியாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.

******************************

அன்று நடுநிசி ஒரு மணியிருக்கும். ஹப்ஸா துயில் கொண்டு மூன்று மணித்தியாலம் ஆகி விட்டதால் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். ஏதோ கனவு கண்டு விழித்துக் கொண்டவள் சிறு அழுகை ஓசை கேட்டு அதிர்ந்து போய் உட்கார்ந்தாள். பக்கத்திலிருந்த ஆய்ஷாவைக் காணவில்லை. எழுந்து பார்த்த போது அவள் பெல்கனியில் கண்ணீர் முத்துக்களை உகுத்துக் கொண்டிருந்தாள். காரணமறியாத ஹப்ஸா அவளை சமாதானப்படுத்தி விடயத்தை அறிய முற்பட்டாள்.

“ஆய்ஷா… ஏன் இப்பிடி அழுவுற?”

“ஹப்ஸா… நான் தப்பு பண்ணிட்டேன் (ஹப்ஸாவை கட்டியணைத்தவாறு) அந்த… அ… அ..வ…ன்…. நா…ன்… லொவ் பண்ணினவன் மிச்சம் மோ….ஷமான ஆள். அவன் எல்லா பொம்புளகளேம் ஏமாத்தி தப்பா நடக்குறவன். அவன்ட வண்டவாளம் எல்லாத்தையும் ஸோஸியல் மீடியாஸ் ல பப்ளிக் பண்ணீக்கிறாங்க. நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணீக்கிறன். இதெல்லாம் ஏண்ட உம்மாவும் வாப்பாவும் தெரிஞ்சா உசிரோடயே இரிக்க மாட்டாங்க. நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்” (கதறி அழுகிறாள்).

அவள் அழுது முடிந்ததும்,

“அழாத ஆய்ஷா இப்ப சரி எல்லாம் தெரிஞ்சத நெனச்சி சந்தோஷப்படு. நடந்தத எல்லாத்தையும் மறந்து இனி ஏண்ட பழைய ஆய்ஷாவா நீ மாறனும். ஓகே”

“ஓ ஆய்ஷா… நீ எனக்கு எட்வைஸ் பண்ணணின. ஆனா, நான் அது எதயும் கேட்காம உன்ன புறக்கணிச்சிட்டன். என்ன மன்னிப்பியா?”

ஹப்ஸா அவளைக் கட்டியணைத்துக் கொண்டாள். அவர்களது புனிதமான நட்பு மீண்டும் உயிர்த்துக் கொண்டது. இனி என்றும் பிரிக்க முடியாத பிணைப்பாய் அது தொடர்ந்து கொண்டே தானிருக்கும்.

ILMA ANEES
WELIGAMA
SEUSL – 4TH YEAR

கதிரவன் தன் கிரகணத் தூரிகையால் வான்மகளுக்கு வண்ண ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் அழகிய காலைப்பொழுதில் தன் மனதைப் பறிகொடுத்திருந்த ஹப்ஸா பெல்கனியில் அமர்ந்து தேனீர் பருகிக் கொண்டிருந்தாள். காலைக் காட்சிகள் கண்ணைக் கவர்ந்தாலும், உள்ளத்தைக்…

கதிரவன் தன் கிரகணத் தூரிகையால் வான்மகளுக்கு வண்ண ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் அழகிய காலைப்பொழுதில் தன் மனதைப் பறிகொடுத்திருந்த ஹப்ஸா பெல்கனியில் அமர்ந்து தேனீர் பருகிக் கொண்டிருந்தாள். காலைக் காட்சிகள் கண்ணைக் கவர்ந்தாலும், உள்ளத்தைக்…