இலங்கை இந்தியா கடற்படையை கதிகலங்க வைத்த ஆயுதக் கடத்தல்

  • 7

காணிப் பிரச்சினையை நாட்டுப் பிரச்சினைகளாக மாற்றிய விஷமிகள்

கடந்த வார இறுதி நாட்களில் (12,13.06.2021) இலங்கை மற்றும் இந்தியாவை பதற்றமடையச் செய்த ஒரு ஊடக அறிக்கையே இலங்கையைச் சேர்ந்த ஆயுதக்கழு ஒன்று இந்தியாவிற்குள் புக முயற்சி என்ற செய்தியாகும்.

இது தொடர்பான செய்திகளை பல ஊடகங்கள் வௌியிட்டிருந்தன.

இலங்கையிலிருந்து ஆயுததாரிகள் சிலர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து தமிழ் நாட்டின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

இலங்கையில் இருந்து படகு மூலம் ஆயுததாரிகள் சிலர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக இந்தியாவின் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

என்று இலங்கை ஊடகமொன்று செய்தி வௌியிட்டிருந்தது.

இந்தியா ஊடகங்கள் விரிவான செய்திகளை பின்வருமாறு வௌியிட்டிருந்தது.

இலங்கையில் இருந்து ஊடுருவ முயற்சிக்கும் ஆயுதக்குழுவின் அச்சுறுத்தல்கள் வந்ததையடுத்து தமிழக மாநில காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தமது கண்காணிப்பை அதிகரித்துள்ளன.

ஐ.ஏ.என்.எஸ் செய்திச் சேவை இதனை தெரிவித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை (12.06.2021) மாலை மத்திய புலனாய்வு அமைப்பால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், அத்துடன் சென்னை ஆகிய நகரங்களிலும் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். தகவலறிந்த உளவுத்துறை தகவல்களின் படி, ஆயுதமேந்தியவர்களுடன் ஒரு படகு ராமேஸ்வரம் கடற்கரையை நோக்கி சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இவர்களின் சரியான அடையாளம் மற்றும் அவர்கள் சேர்ந்த அமைப்பு எது என்பது தொடர்பில் தகவல்கள் இல்லை என அந்த உளவுத்துறை தரப்புகள் ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்துள்ளன.

சென்னையில் உள்ள மாநில காவல்துறை தலைமையகத்தின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஐ.ஏ.என்.எஸ்ஸிடம் இது தொடர்பில் கருத்துரைத்துள்ளார். எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இதை விட தற்போது தம்மால் எதனையும் வெளிப்படுத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து முக்கிய வீதிகளிலும் ஆயுதமேந்திய காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளர்கள்.

தமிழ்நாடு கடற்கரையை அடைவதற்கான எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க கடலோர காவல்படையினரால் கடலில் அதிக கப்பல்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கேரள காவல்துறையின் புலனாய்வுத் தரப்பு, நிறுவனங்களிடம் இருந்து கிடைத்த தகவல்களுக்குப் பின்னரே தமிழக கடலோர நகரங்கள் முழுவதும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

என்று இந்தியா ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.

மேற்படி ஓர் ஆயுத கடத்தல் நடக்கப்போவதாக தகவல் வெளிநாட்டு தொலைபேசி எண்ணில் இருந்து இந்தியாவுக்கு எச்சரிக்கை அழைப்புகள் வந்ததால் இரு நாட்டு கடற்படையினரும் தீவிர விழிப்புடன் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இரவு, பகலாக இரு நாட்டுப்படையினரும் ரோந்துப்பணியை வழக்கத்தை விட அதிகமாக மேற்கொண்டனர்.

இதற்கிடையே, இந்த அழைப்புகளின் பின்னணியை தமிழ்நாடு காவல்துறையின் தீவிரவாத செயல்பாடுகளை கண்காணிக்கும் க்யூ பிரிவு அதிகாரிகள் விசாரித்துள்ளனர். இரு நாட்டு கடற்படை, ஆயுத கடத்தல், தீவிரவாத செயல்பாடு தொடர்புடைய விவகாரம் என்பதால் இந்த விவகாரத்தை இந்திய உள்துறையும் உன்னிப்பாக கவனித்து வந்தது.

இது குறித்து இந்திய உள்துறை உயரதிகாரிகளிடம் பேசியபோது,

கடந்த 12ஆம் திகதி வெளிநாட்டு தொலைபேசி எண்ணில் இருந்து இலங்கையில் இருந்து பேசுவதாகக் கூறி மதுரை திடீர் நகர காவல் நிலையத்துக்கு அழைப்பு வந்தது. அதில், இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த நசீர், அமீன், பராகத்துல்லா ஆகியோர் ஏகே 47 ரக துப்பாக்கிகளை இலங்கையில் இருந்து கடத்திக் கொண்டு மீன்பிடி படகில் இந்தியா வருவதாக மறுமுனையில் பேசிய நபர் கூறினார். பின்னர் மீண்டும் சில மணி நேரம் கழித்து அதே நபர் காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு, இந்தியாவுக்கு வரும் மூவருக்கும் அந்த ஆயுதங்களை கொடுத்தது இலங்கை கடற்படை அதிகாரிகள்தான் என்றும் கூறி இணைப்பை துண்டித்தார்.

மிகவும் தீவிரமாக கருதப்பட வேண்டிய தகவல் இது என்பதால் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை, தமிழக கடலோர காவல் படை, மத்திய உளவுத்துறையை தமிழ்நாடு காவல்துறையினர் எச்சரித்தனர்.

தீவிரவாத செயல்பாடுகள் மீது எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ அதேபோன்ற நடவடிக்கைகளை அனைத்து புலனாய்வுத்துறைகளும் பின்பற்றின. இந்திய உளவுத்துறை மூலம் இலங்கையில் உள்ள கடற்படைக்கும் இது பற்றிய தகவல் பகிரப்பட்டது. ஆயுத கடத்தலில் இலங்கை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற விசாரணையும் முடுக்கி விடப்பட்டது என்று உள்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஏதேனும் எச்சரிக்கை குறிப்பு இந்தியாவில் இருந்து வந்ததா என்று கேட்கப்பட்டது. ஆனால், அத்தகைய தகவல் தங்களுக்கு வரவில்லை என்று இந்திய தூதரகம் கூறியது.

மறுபுறம் தமிழ்நாட்டுக்கு நேரடியாக வராமல் கேரளா வழியாக ஆயுதங்கள் கடத்தப்பட்டு வரலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கேரள காவல்துறையும் எச்சரிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களின் எல்லை மாவட்டங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் இலங்கை காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் டிஐஜி அஜித ரோஹண, இந்த எச்சரிக்கை தகவல் தொடர்பாக இன்டர்போல் காவல்துறையிடம் மேலதிக குறிப்புகள் தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.

முன்னதாக, இரண்டு சிங்கள மொழி பேரும் இலங்கையர்கள் மற்றும் 23 பேர் தூத்துக்குடிக்கு சட்டவிரோதமாக படகில் வந்து பின்னர் அங்கிருந்து மதுரையில் உள்ள தொழில்பேட்டையில் தங்கியிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அவர்களை தமிழ்நாடு க்யூ பிரிவு காவல்துறையினர் கடந்த 10ஆம் திகதி கைது செய்தனர்.

அவர்கள் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி மூன்று ஃபைபர் படகுகள் மூலம் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்ததாக தெரிய வந்ததால், அவர்களுக்கும் மதுரை காவல் நிலையத்துக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்புக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. பிடிபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையின் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் காவல்துறையின் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

இதற்கிடையே, தமிழ்நாடு காவல்துறையின் தீவிரவாத செயல்பாடுகளை கண்காணிக்கும் க்யூ பிரிவினர், மதுரை காவல் நிலையத்துக்கு கடந்த 12ஆம் திகதி வந்த மர்ம அழைப்புகளின் பின்னணியை விசாரித்தனர்.

அதில், வெளிநாட்டு தொலைபேசி எண்ணில் இருந்து காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசிய நபர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. பனைக்குளத்தைச் சேர்ந்த தாஜுதீன், பஹருல் அமீன், அன்வர் ராஜா, ஷேக் அலாவுதீன், ஹுசேன் ஆகியோர் அதே பகுதியில் உள்ள ஐந்து சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து அங்கு தகர கொட்டகை போட்டுள்ளதாகவும், இது பற்றி நூருல் அமீன் மூலம் உள்ளூர் பத்திரிகையில் செய்தி வெளியிட்டதாகவும் தெரிய வந்தது.

இதனால் கோபம் அடைந்த தாஜுதீன், பஹருல் அமீன் உள்ளிட்ட ஐந்து பேர், நசீர் குறித்தும் அவரது மகன் பற்றியும் உள்ளூர் வாட்ஸ்அப் குழுவில் அவதூறான தகவல்களை பரப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான புகார் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் நிலுவையில் இருந்துள்ளது. இந்த பின்னணியில் நசீர், நூருல் அமீன், பரக்கத்துல்லா ஆகியோரை தீவிரவாதிகளாக சட்ட அமலாக்க அமைப்புகளிடம் சிக்க வைக்க தாஜுதீன், பஹருல் உள்ளிட்ட ஐந்து பேர் திட்டமிட்டே ஓர் ஆயுத கடத்தல் போலி தகவலை செல்பேசி வாயிலாக பரப்பியுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் இந்திய உள்துறை அதிகாரி தெரிவித்தார்.

வழக்கமாக உள்நாட்டுக்குள்ளே சில இடங்களைக் குறிப்பிட்டு வெடிகுண்டு உள்ளது, ஆயுத கடத்தல் நடக்கிறது என தவறான தகவல்களை விஷமிகள் பரப்புவார்கள். ஆனால், இம்முறைதான் இலங்கையில் இருந்து அந்நாட்டு கடற்படை உதவியுடன் இந்தியாவுக்கு ஆயுத கடத்தல் நடப்பதாக தவறான தகவல் பரப்பியுள்ளனர்.

இவர்களின் செயல்பாட்டால், தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளின் உளவு அமைப்புகள் மற்றும் கடற்படைகளும் அதிர்ச்சியடைந்துள்ளன. LNN Staff

காணிப் பிரச்சினையை நாட்டுப் பிரச்சினைகளாக மாற்றிய விஷமிகள் கடந்த வார இறுதி நாட்களில் (12,13.06.2021) இலங்கை மற்றும் இந்தியாவை பதற்றமடையச் செய்த ஒரு ஊடக அறிக்கையே இலங்கையைச் சேர்ந்த ஆயுதக்கழு ஒன்று இந்தியாவிற்குள் புக…

காணிப் பிரச்சினையை நாட்டுப் பிரச்சினைகளாக மாற்றிய விஷமிகள் கடந்த வார இறுதி நாட்களில் (12,13.06.2021) இலங்கை மற்றும் இந்தியாவை பதற்றமடையச் செய்த ஒரு ஊடக அறிக்கையே இலங்கையைச் சேர்ந்த ஆயுதக்கழு ஒன்று இந்தியாவிற்குள் புக…