பயணத்தடை காரணமாக வீதியில் பயணிக்க (முடியாமல் தடை)ப்பட்டுள்ள வாகனங்களின் புகைப்படமொன்றை இன்று சமூகவளைத்தளங்களில் காணக்கிடைத்தது. மேலும் பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தை என்பவற்றை திறப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கமைய பேலியகொடை மெனிங் சந்தை நேற்று திறக்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படங்களும் வௌியாகியுள்ளன.
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன. மே மாதம் 21ஆம் திகதியன்று அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள், அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதற்காக, மே. 25ஆம் திகதியன்று தளர்த்தப்பட்டது.
அதன்பின்னர், வாரத்துக்கு வாரம் நீடிக்கப்பட்டு, ஜூன் 21ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டது. அன்றையதினம் அதிகாலை 4 மணியளவில் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆனால், பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருந்த காலப்பகுதியில் விசேடமாக கொழும்பில் பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தன மற்றும் சந்தையில் மக்கள் நிரம்பி வழியும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் காணக்கிடைத்தன. இந்தப் படம், கொழும்பின் பிரதான வீதியொன்றில் வாகனங்கள் இன்று (18.06.2021) வரிசையாக பயணிப்பதை மட்டும் மெனிக் சந்தையில் வியாபார நடவடிக்கைகளுக்கு மக்கள் கூடியிருப்பதை காண்பிக்கிறது.
ஒருபுறம் இராணுவத்தளபதி கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பயணத்தடையை நீடிக்கிறார். மறுபுறம் ஜனாதிபதியும் நாளுக்கு நாள் அத்தியவசிய சேவை என்று வர்த்தமானி வௌியிட்ட வண்ணமுள்ளார். இதனால் பலரும் அத்தியவசிய சேவை என்று வீதிக்கு இறங்குவதே வாகான நெரிசலுக்கு காரணமாகும்.
இதற்குள் எவ்வாறு பயணத்தடையின் பிரதிபலனை நாடு அனுபவிக்க முடியும். அதுதான் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் எண்ணிக்கை 1500 இற்கு மேல் பதிவாகின்றது.
நோய்க்கும் பொருளாதாரத்திற்குமான போராட்டத்தில் இலங்கையர் சிக்கித்தவிப்பதே இதற்கான மேலுமொரு காரணமாகும். அதாவது வீட்டில் இருந்தால் வருமானமின்றி பட்டினி கிடக்க வேண்டும் வீதிக்கு இறங்கினால் பலரையும் சந்திப்பதால் நோயில் சிக்க வேண்டும்.
நாம் சுய உள் நாட்டுப் விவசாயப் பொருளாதாரத்தை புறந்தள்ளி வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் சார்ந்த பொருளாதாரமொன்றை நோக்கி போருக்கு பின்னர் சென்றோம். அதுதான் இன்று சுற்றுலாப் பயணிகள் குறைவால் பொருளாதாரம் தாண்டவமாடுகிறது.
புகைப்படத்தை பார்க்கும்போது மாத்திரமல்ல கிராமத்தில் பிரதான வீதியை பார்க்கையிலும் “நான் மாத்திரமா வீட்டில்? அனைவரும் வீதியிலா?” என்று எண்ணத்தோன்றுகின்றது.