உயர் மட்டத்திற்கு நிவாரணம் கீழ் மட்டத்திற்கு பட்டினி – ரணில்

  • 10

அமைச்சர் பந்துல குணவர்ந்தனவின் ​பேச்சைக் கேட்கும் போது ஒரு விடயம் நினைவிற்கு வந்தது ஆம் இந்த அரசாங்கம் வரி நிவாரணம் அளித்துள்ளது. பெரியவர்களுக்கு வரி நிவாரணம் சிறியவர்களுக்கு பட்டினியை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்றைய தினம் (23.06.2021) நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஆற்றிய கன்னி உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடரந்தும் உரையாற்றுகையில்,

‘100 கோடி டொலர் கடன் செலுத்த இருக்கிறது. இதனை எப்படி செலுத்துவது என்பது அரசாங்கத்திற்கு தெரியவில்லை. அதற்கான திட்டமும் இல்லை. தற்போது சர்வதேச நாணயம் நிதியத்துடன் பேச்சு நடத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்திடம் 78 கோடி  டொலர்கள் கிடைக்கும். சார்க் நிதியத்திடமிருந்து 40 கோடி  டொலர் கிடைக்கும். பங்களாதேஸ் 20 கோடி டொலர் கிடைக்கும்.

எனினும், முழுமையாக கடன் பொறியில் இருந்து மீள முடியாது. எனவே, இதிலிருந்து மீள்வதற்கான என்ன வழி இருக்கிறது. ஒரே வழி சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல் நடத்த வேண்டும். இதில் இணங்கவில்லை என்றால் என்ன வழி என்று கூறவேண்டும்.

உரம், எரிபொருள், கல்வி ஆகிய பிரச்சினைகள் இன்று பெருமளவில் தலைதூக்கியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், அரசாங்கம் மட்டுமல்ல நாடாளுமன்றமும் இல்லாமல் போகும். கொவிட் தான் இதற்குக் காரணம் என்று அரசாங்கம் கூறுகிறது. எனினும், இதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எந்தத் திட்டம் இல்லை.

நாடு பாரதூரமான ஓர் நிலையில் காணப்படுவதாகவும் வெறும் புள்ளி விபரங்களை நாடாளுமன்றில் ஒப்புவிப்பதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவை சரி செய்வதற்கு நாம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட விரும்பாவிட்டால் மாற்று வழி என்ன என்பதனை நாடாளுமன்றில் தெரிவிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பிரதான மூன்று கட்டமைப்புக்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை, நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசியல் அதிகாரம், அமைச்சரவை செயலாளர்கள் உள்ளிட்ட சிவில் அதிகாரம் மற்றும் இராணுவ அதிகாரம் என்பனவே அவையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்பொழுது நாட்டில் இராணுவ அதிகாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கோவிட் ஒழிப்பு குறித்த தேசிய செயலணி நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளில் நிபுணர்களைக் கொண்டே கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இலங்கையில் மட்டுமே இராணுவத் தளபதியிடம் இந்த நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தடுப்பு விசேட படைப் பிரிவு முழுமையாக தோல்வியடைந்துள்ளது. இப்படி முன்நோக்கி செல்ல முடியாது. எமது அரசியலமைப்பின் ஊடாக அமைச்சரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் இதற்கு பொறுப்பு இருக்கிறது. பிரதமரும் இருக்கிறார். அமைச்சர்களும் இருக்கின்றனர். பிரதமர் இதனைப் பொறுப்பேற்க வேண்டும்.

உங்களுக்கு பிழைத்தால், நாடாளுமன்றத்தில் அதனை நாம் சுட்டிக்காட்டுவோம். ஆனால் ஒரு திணைக்களத்தின் தலைவர் ஒருவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அவருக்கு இருக்கும் தகுதி என்ன? இராணுவத் தளபதியால் இதனை செய்ய முடியாது.

எனவே பிரதமர் இதனைப் பொறுப்பேற்க வேண்டும். இராணுவம் நாட்டை நிர்வகித்து வருகிறது. இது பிழையானது.

முதலீட்டாளர்களுடனான கூட்டத்திலும் இராணுவத் தளபதி வந்து அமர்ந்து கொள்வதாகவும் அவ்வாறான கூட்டங்களில் நிதி அமைச்சர் ராஜாங்க அமைச்சர் பங்கேற்பது நியாயம் என்ற போதிலும் இராணுவத் தளபதிக்கு அங்கு வேலையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கூட்டங்களில் இராணுவத் தளபதி வந்து அமர்ந்து கொண்டால் வரும் முதலீட்டாளர்களும் ஓடி விடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலீட்டுச் சபை மாநாட்டில் இராணுவத் தளபதி உரையாற்றுகிறார். இதனால் வந்த முதலீட்டாளர்களும் சென்றிருப்பார்கள். இது பிழையான முன்னுதாரணம் இராணுவத் தளபதியும் எனது நண்பர். நானும் அவருக்கு உதவி செய்துள்ளேன். ஆனால் இதனை இராணுவமயப்படுத்த முடியாது. இதனை சரிசெய்ய வேண்டும்.

நாட்டை இராணுவ மயமாக்கல் நோக்கி நகர்த்துவதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அமைச்சரவை, நாடாளுமன்றம் தீர்மானங்களை எடுக்கவும் அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் குறித்து பேசுவதற்கு விவாதம் ஒன்றைப் பெற்றுத் தருமாறு நேரம் ஒதுக்கித் தர வேண்டும். என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அமைச்சர் பந்துல குணவர்ந்தனவின் ​பேச்சைக் கேட்கும் போது ஒரு விடயம் நினைவிற்கு வந்தது ஆம் இந்த அரசாங்கம் வரி நிவாரணம் அளித்துள்ளது. பெரியவர்களுக்கு வரி நிவாரணம் சிறியவர்களுக்கு பட்டினியை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்…

அமைச்சர் பந்துல குணவர்ந்தனவின் ​பேச்சைக் கேட்கும் போது ஒரு விடயம் நினைவிற்கு வந்தது ஆம் இந்த அரசாங்கம் வரி நிவாரணம் அளித்துள்ளது. பெரியவர்களுக்கு வரி நிவாரணம் சிறியவர்களுக்கு பட்டினியை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்…