பசிலுக்கு ஆதரவாக 113 எம்.பிக்கள் கையெழுத்து – அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமா?

  • 16

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பசில் ராஜபக்‌ஷவை தேசிய பட்டியலூடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து அவருக்கு உகந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கட்சியின் 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 113 பேரும் கையெழுத்திட்டுள்ள கடிதத்தை ஜனாதிபதியை சந்தித்து அவரிடம் கையளித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை கட்டியெழுப்புவதற்கு மாபெரும் பங்களிப்பை வழங்கிய நபரென்ற வகையில் இன்னமும் பசில் ராஜபக்‌ஷ, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லையாயின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பெரும் தடையாக இருக்குமென ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

தமது குழுவினர் சமர்ப்பித்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி சாதகமான சமிக்ஞைகளை தெரிவித்ததாகவும் பசில் ராஜபக்‌ஷ தரப்பில் முன்பிருந்தளவுக்கு எதிர்ப்பு அலைகள் இல்லையெனவும் வெகு சீக்கிரமேயே தங்களது எதிர்பார்ப்பு நிறைவேறிவிடுமென தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நேற்றைய (29.06.2021) அமைச்சரவை முடிவுகளை  அறிவிக்கும் மாநாட்டிலும் பசிலின் பாராளுமன்ற பிரவேசம் மற்றும் அமைச்சரவை மாற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

பசில் ராஜபக்‌ஷவை எம்.பியாகவோ அமைச்சராகவோ நியமிப்பது கட்சியின் உள்ளக விடயம். இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியே இறுதி முடிவு எடுப்பாரென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பசில் ராஜபக்‌ஷ எப்பொழுது பாராளுமன்றம் வருவார் என்பதும் எத்தகைய அமைச்சு பதவி வகிப்பார் என்பதும் முழுமையாக கட்சி உள்ளக விடயமாகும். அது தொடர்பில் முடிவு எடுக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு அறியவரும். தற்பொழுது அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

என்ன நடைபெறுகிறது என்பது தொடர்பில் சமூகத்திலும் ஊடகங்கள் மத்தியிலும் அதிக ஆர்வம் காணப்படுகிறது. கட்சி மட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட பின்னர் இது தொடர்பில் அறிவிக்கப்படும்.

அமைச்சரவை மாற்றமொன்று நடைபெற இருக்கிறதா?

ஆரம்பத்திலே நான் சொன்னது போல இது கட்சி உள்ளக விவகாரம். இது தொடர்பில் முடிவு எடுக்கப்பட்ட பின்னர் அனைத்தும் தெரியவரும். பத்திரிகைகளில் வெளியானவற்றையும் கற்பனையாக பேசப்படுபவற்றையும் வைத்து எதனையும் கூற முடியாது,

கடந்த காலங்களிலும் அமைச்சுக்களின் முக்கியத்துவத்திற்கமைய நியமனங்கள் நடைபெற்றன. அதற்கான முறைகளும் உள்ளன. கற்பனையாக சிந்தித்து பதில்வழங்க முடியாது. சில நியமனங்கள் தொடர்பில் விமர்சனம் இருக்கும்.

பசில் ராஜபக்‌ஷவை எம்.பியாக நியமிப்பது தொடர்பில் இது வரை முடிவு எடுக்கப்படவில்லையா?

பதில்:- இல்லை இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

கேள்வி:- எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெற இருக்கிறதா?

பதில்: அது தொடர்பில் ஜனாதிபதி தான் முடிவு செய்வார். அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குத் தான் உள்ளது.எனவே அவர் தான் அது தொடர்பில் தீர்மானிப்பார். அந்த தீர்மானத்தை எடுத்த பின்னர் எமக்கு அறிவிப்பார். கற்பனையாக செயற்பட முடியாது. TK, LNN Staff

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பசில் ராஜபக்‌ஷவை தேசிய பட்டியலூடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து அவருக்கு உகந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கட்சியின் 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பசில் ராஜபக்‌ஷவை தேசிய பட்டியலூடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து அவருக்கு உகந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கட்சியின் 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து…