கல்முனையில் 270 மில்லியன் பெறுமதியான விளையாட்டரங்கு நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்

  • 9

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் மேற்கொள்ளப்படும் உள்ளக விளையாட்டரங்கின் நிர்மாணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் அமில எதிரிசூரியவினால் குறித்த நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு கடந்த ஜுன் 22ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தாங்கேணி மைதானத்தின் எல்லைகள் சட்டவிரோதமாக  ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை, காணியின் உரிமம் இதுவரை உறுதிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கல்முனை பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு எழுத்து மூல  முறைப்பாட்டொன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தது.

இதற்கமையவே, சுமார் 270 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் சந்தாங்கேணி மைதானத்தில் மேற்கொள்ளப்படும் உள்ளக விளையாட்டரங்கின் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானம் தொடர்பில் காணப்படும் அனைத்து சர்ச்சைகளுக்கும் தீர்வு காணப்பட்ட பின்னர் இதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என விளையாட்டு பணிப்பாளர் நாயகத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் மற்றும் கல்முனை மேயர் ஆகியோருக்கு இந்த கடிதத்தின் பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த செயற்திட்டத்திற்காக விளையாட்டு அமைச்சினால் கடந்த வருடம் முற்பணமாக வழங்கப்பட்ட மூன்று  மில்லியன் ரூபாவுக்கு இதுவரை என்ன நடந்தது என்பது தொடர்பாக உடனடி விசாரணை மேற்கொள்ளப்படும் என விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உறுதயளித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்திற்கான விஜயமொன்றினை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா, அமைச்சரை சந்தித்து இந்த மைதான விடயம் தொடர்பில் கலந்துரையாடினார்.

இதன்போது, சந்தாங்கேணி மைதான அபிவிருத்திக்காக கடந்த வருடம் முற்பணமாக ஒதுக்கப்பட்ட மூன்று மில்லியன் ரூபா தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் மேற்கொள்ளப்படும் உள்ளக விளையாட்டரங்கின் நிர்மாணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் அமில எதிரிசூரியவினால் குறித்த நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும்…

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் மேற்கொள்ளப்படும் உள்ளக விளையாட்டரங்கின் நிர்மாணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் அமில எதிரிசூரியவினால் குறித்த நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும்…