15 வயது சிறுமி இணையதளத்தில் விற்பனை விவகாரம்

  • 65

ஆபாச வலைத்தளங்களை தடை செய்யுமாறு நீதிமன்றம் அறிவிப்பு

தாய் உட்பட வௌிநாட்டு, உள்நாட்டு பிரபலங்கள் 34 பேர் கைது

கடந்த ஜூன் 7 ஆம் திகதி  இணையத்தளம் ஊடாக, சிறுமியொன்று விளம்பரப்படுத்தப்பட்டு, பலருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக, கல்கிசை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல்கள் கிடைத்தன.

இணையத்தளம் ஊடாக பாலியல் செயற்பாடுகளுக்காக குறித்த சிறுமி ஏற்கனவே 3 மாதங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், அதாவது 10 ஆயிரம் 15 ஆயிரம் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணத்துக்காக குறித்த சிறுமி விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

அதனைத்தொடர்ந்து 15 வயதான சிறுமியை இணையத்தில் விற்பனை செய்தமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகின.  இன்று காலை (06.07.2021) வரை தாய் உட்பட வௌிநாட்டு, உள்நாட்டு பிரபலங்கள் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் மேலும் பலர் கைது செய்யப்படலாம்.

பிள்ளையின் தாய் மற்றும் சிறுமியை விற்பனை செய்த நபரின் இரண்டாம் மனைவி.

சிறுமியை விற்பனைக்காக ஒவ்வொரு இடங்களுக்கும் கொண்டுச் சென்ற முச்சக்கர வண்டி சாரதிகள் இருவர், கார் சாரதி அத்துடன் சிறுமியை விற்க விளம்பரம் தயாரித்தவர். விளம்பரப்படுத்திய இணையதளம் ஒன்றை நடத்திச் சென்ற இணையதளத்தின் உரிமையாளர், மற்றும் நிதிக் கட்டுப்பாட்டாளர், பலாத்தகார நடவடிக்கைகளுக்கு அறை வழங்கிய ஹோட்டலின் முகாமையாளர் மற்றும் காசாளர் விற்பனை நடவடிக்கைக்களுக்கு உதவிய ஒருவர்.

மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதி தவிசாளர், மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர், கப்பல் கெப்டன், பொலிஸ் உத்தியோகத்தர், பிக்கு ஒருவர், மாணிக்கக் கல் வர்த்தகர், விசேட வைத்தியர் (இருதய சிகிச்சை நிபுணர்) உள்ளிட்ட சமூகத்தில் பல்வேறு மட்டங்களை சேர்ந்தோர் உள்ளடங்குகின்றனர்.

மேலும் இதுவரையில் இந்த சம்பவம் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்த, ஏற்கனவே கண்டறியப்பட்ட இணையத்தளத்துக்கு மேலதிகமாக மேலும் நான்கு இணையத் தளங்கள் தொடர்பிலும்  தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

விசாரணை நடவடிக்கைகள்

இந்த விவகார விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் தர்ஷிகா குமாரியின் நேரடி கட்டுப்பாட்டில், அவரது ஆலோசனைக்கு அமைய  சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரநாயக்க,  தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விசாரணைகளுக்கு சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவூடாக விசாரணைக்கு அவசியமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்தும் வட கொழும்பு போதனா வைத்தியசாலையின் 33 ஆவது சிகிச்சை அறையில் வைத்தியர்களின் கண்காணிப்பில்  உடலியல் மற்றும் மானசீக சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற நடவடிக்கை

தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் பின்னணியில் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி நடத்தப்படுவதால் குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகக்கூடும் என கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம நேற்று (05.07.2021) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த சிறுமியை இணையத்தில் பாலியல் விற்பனைக்கு விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் இதை சுட்டிக்காட்டியிருந்தார்.

விசாரணைக்கு இடையில், பாடசாலைகள் ஆரம்பிக்கும் வரை குழந்தைகள் ஆபாச வலைத்தளங்களை அணுகுவதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யுமாறு சி.ஐ.டி மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் பணியகத்திடம் நீதவான் கோரிக்கை விடுத்தார்.

கைப்பேசிகள் அல்லது கணினிகள் குழந்தைகளின் கைகளுக்கு கிடைப்பதை தடுக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய நீதவான் பெற்றோர்கள் பணிக்காக வீட்டிலிருந்து சென்றிருக்கும் போது குழந்தைகள் இந்த சாதனங்களை கல்வி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறினார்.

இதுபோன்ற சூழ்நிலையில், குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகலாம் என்றும் நீதவான் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துடன் கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.ஐ.டி மற்றும் சிறுவர்கள் பணியகத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

Ibnuasad

ஆபாச வலைத்தளங்களை தடை செய்யுமாறு நீதிமன்றம் அறிவிப்பு தாய் உட்பட வௌிநாட்டு, உள்நாட்டு பிரபலங்கள் 34 பேர் கைது கடந்த ஜூன் 7 ஆம் திகதி  இணையத்தளம் ஊடாக, சிறுமியொன்று விளம்பரப்படுத்தப்பட்டு, பலருக்கு விற்பனை…

ஆபாச வலைத்தளங்களை தடை செய்யுமாறு நீதிமன்றம் அறிவிப்பு தாய் உட்பட வௌிநாட்டு, உள்நாட்டு பிரபலங்கள் 34 பேர் கைது கடந்த ஜூன் 7 ஆம் திகதி  இணையத்தளம் ஊடாக, சிறுமியொன்று விளம்பரப்படுத்தப்பட்டு, பலருக்கு விற்பனை…