வாட்ஸ்அப் க்ளாசும் வளரும் மாணவிகளும்

  • 22

அவள் பெயர் ரஹ்மா. சாதரண தரப்பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருக்கும் மாணவி. சிங்களம் பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பேராவலில் அவளது தோழி அனுப்பிய சிங்கள வகுப்பில் வாட்ஸ்அப் மூலம் இணைந்து கொண்டாள்.

முக்கியமாக அது பெண்களுக்கான வகுப்பு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் இணைய முன்னர் அவளது பெயர், ஊர், வயது, கல்வி தகைமை என்பன தனிப்பட்ட முறையில் அட்மினுக்கு குரல் பதிவிட (Voice clip) வேண்டும் என்று கட்டளை இடப்பட்டதை அடுத்து அவளும் கேட்கப்பட்ட விபரத்தை பதிவேற்றாள்.

அதன் பிறகு ஐவர் கொண்ட ஒரு குழுவில் அவள் இணைக்கப்பட்டாள். அதென்ன ஐவர் மட்டும் தான் உறுப்பினர்களா? என்று கேட்டால் ஆம் உண்மை தான்! மாணவிகள் தயங்காமல் தனது சந்தேகங்களை, சுதந்திரமாக கேட்டு தீர்க்கவே அப்படி ஒரு புதிய ஏற்பாடு என்று அந்நபர் கூற அவளும் அமைதியானாள்.

அதன் பிறகு அவளுக்கு அந்த இலக்கத்தில் இருந்து ஒரு அழைப்பு வரவே பதறிப் போனவள் சிறிது நேரம் கழித்து அழைப்புக்கு பதில் அளித்தாள்.

மறுமுனையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிய நபரை இவள் சேர் என்று நினைத்து அவர் கேட்ட கேள்விகளுக்கு தட்டுத்தடுமாறி பதிலளித்தாள். அவளது தனிப்பட்ட குடும்ப விபரங்களை மறுமுனையில் பேசும் நபர் கேட்டதால் பயந்து போனவள், தொடர்பு துண்டிக்கப்படாத என ஏங்கி, பொய் சாட்டு கூறி அத்தொடர்பை துண்டித்தாள்.

அழைப்பை துண்டித்தவளுக்கு இதயம் திக்கென்று இருந்தது. இருந்தாலும் அவள் அப்போது அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. அடிக்கடி அவளுக்கு தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி அழைப்பும் மெசேஜூம் வந்த வண்ணம் இருந்தது.

திடீரென அவள் அந்தக் குழுவில் இருந்து நீக்கப்பட்டிருந்தாள் (removed). ஏன் எதற்கு என்று புரியாமல் இருந்தவள் குறித்த சேருக்கு மெசேஜ் அனுப்பி காரணம் கேட்கும் போது அந்நபர் அளித்த பதில் இவளை ஆச்சரியம் ஊட்டியது. இவள் அந்நபரின் அழைப்புக்கு பதில் அளிக்காததால் தான் அவள் நீக்கப்பட்டிருந்தாள். அதனால் கோபமடைந்தவள்.

“Sir! நீங்க Group ல தானே படிச்சு குடுக்கனும். அப்ப எதுக்கு கோல் எல்லாம்?” என்று கேட்க, அவனோ “உங்களுக்கு நிறைய ப்ரக்டிஸ் (practice) தந்து சிங்களம் பேச பழக்க வேண்டும்” என்று பதிலளித்திருந்தான்.

பிறகு குழுவில் இருந்து நீக்கியதற்கு மன்னிப்பு கேட்டு விட்டு, மீண்டும் அவளை குழுவில் இணைத்து கொண்டான். மீண்டும் மீண்டும் அவன் அவளுக்கு அழைப்பு எடுத்தும் அவள் பதில் தரவில்லை.

அவளோ குழுவில் மெசேஜ் போட்டு சிங்களம் குறித்து தனது சந்தேகங்களை கேட்டும் அவன் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இத்தனைக்கும் அவள் குழுவில் இணைந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் எவ்வித பாடங்களும் நடந்தபாடில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் தான் அன்றிரவு அவன் அவளுக்கு ஆபாசமான ஒரு புகைப்படத்தை அனுப்பி விட்டு, தவறுதலாக வந்து விட்டதாகவும் மெசேஜ் அனுப்பி இருந்தான்.

அவள் அவனது மெசேஜை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவளுக்கு கோல் எடுக்கவே அவள் அதை கட் பண்ணி விட்டு வந்து என்னவென்று மெசேஜை பார்த்தவளுக்கு சீ… என்றிருந்தது.

கோபத்தின் உச்சத்தை அடைந்தவள் தாறுமாறாக அவனுக்கு திட்டி தீர்த்தவள் அவனை Block பண்ணி விட்டு, பிறகு தனது தாய்க்கு இது குறித்து தெரிவிக்கவே, பொங்கி எழுந்த அத்தாய் ரஹ்மாவின் தந்தையுடன் சென்று மறுநாள் காலையிலேயே இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடு செய்தார். பின்னர் இது குறித்து குறித்த அக்குழுவில் பதிவேற்றினாள்.

சிங்களம் படிக்கும் ஆர்வத்தில் தான் நான் இந்த குழுவில் இணைந்து கொண்டேன். ஆனால் இதுவரை படித்தது எதுவும் இல்லை. குழுவில் கேட்கக் கூடிய சந்தேகங்களுக்கும் எவ்வித பதிலும் இல்லை. இப்படி இருக்கும் போது தனிப்பட்ட மெசேஜ் கோல். அதிலும் குறிப்பாக நேற்று இரவு கொஞ்சம் கூட வெட்கம் இன்றி ஆபாசமான photo அனுப்பினது மட்டும் அன்றி வீடியோ கோலும் எடுத்து என்னை தொந்தரவு செய்தான்.

இதனை எனது பெற்றோருக்கும் காட்டிய பின்னர், இன்று காலை பொலிஸில் முறைப்பாடு செய்தனர் எனது பெற்றோர்.

இப்படி பாடம் சொல்லி கொடுக்கிறேன் என்ற பெயரில் பித்தலாட்டம் நடத்தும் இவனைப் போன்றவர்களை நிச்சயம் சட்டம் தண்டிக்க வேண்டும். உங்களுக்கும் ஏதாவது தவறான மெசேஜ் போட்டோ வந்திருந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள் அல்லது https://www.telligp.police.lk/index.php?option=com_complaint&view=complaint என்ற இணையதளத்தின் மூலம் முறைப்பாடு செய்யுங்கள்.

இது பல இளம் மாணவிகள் இவனது காம வலையில் சிக்காமலிருக்க ஒரு எச்சரிக்கை. நாம செய்கிற பெரிய தவறு இந்த மாதிரியானவர்களை பொலிஸில் முறைப்பாடு செய்யாமல் நொம்பர ப்லொக் பண்ணுவது.

என குழுவில் இருந்த ஏனைய மாணவிகளுக்கு விழிப்புணர்வு பதிவொன்றை இட்டாள்.

அதன் பின்னர் அவனைப் பற்றி விசாரித்ததில் தெரிய வந்ததாவது, உண்மையில் அவன் ஒரு ஆசிரியன் அல்ல என்றும் அவன் கிளாஸ் செய்கிறேன் என்ற பெயரில் வெறும் பித்தலாட்டம் செய்து அவனது காம வலையில் இளம் வயது பெண்களை சிக்க வைக்க முயற்சித்திருக்கிறான் என்றும் சுமார் 15 ற்கும் மேற்பட்ட மாணவிகளின் புகார் தகுந்த ஆதாரங்களுடன் கிடைத்திருப்பதாகவும், குறிப்பாக இவன் 17,18 வயது மாணவிகளையே குறிவைத்து வகுப்பு நடத்துகிறான் என்றும் தெரிய வந்தது.

சிந்தியுங்கள் சகோதரிகளே தாய்மார்களே!

17, 18 வயது என்பது பக்குவம் இல்லாத பிஞ்சு பருவம். அந்த வயது மாணவிகளுக்கு சமூகம் பற்றியோ; வாழ்க்கை பற்றியோ பாரதூரம் தெரியாது. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் பருவம் அது. அப்படிபட்ட தூர நோக்கற்ற சிந்தனையில் இருக்கும் உங்கள் பிள்ளைகள் குறித்து அவதானமாக இருங்கள். மொட்டுக்கள் மலரும் முன்னமே சிதைந்து போக இடமளிக்காதீர்கள். குறிப்பாக பெண்களுக்கு மட்டும் என்று வரக்கூடிய வகுப்புகள் தொடர்பாக எச்சரிக்கையாக இருங்கள். உண்மையில் வகுப்பு நடத்துபவன் ஒரு ஆசிரியனா இல்லை காமசூத்திரனா என்று தீர விசாரித்து பின்னர் வகுப்புகளில் இணைய உங்கள் மகளுக்கு அனுமதி கொடுங்கள்.

மேலும் உங்களுக்கும் யாரவது தேவையற்ற புகைப்படம் காணொளிகள் அனுப்பினால், கட்டாயம் அது குறித்து பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் தெரிவியுங்கள்.

குறிப்பு; இது ஒரு உண்மை சம்பவத்தின் சாரம்சமே. இது எல்லா ஆசிரியர்களையும் குறித்து பதிவிடும் பதிவல்ல. பசுந்தோல் போர்த்திய புலிகளுக்கானது.

Noor Shahidha
SEUSL
Badulla

அவள் பெயர் ரஹ்மா. சாதரண தரப்பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருக்கும் மாணவி. சிங்களம் பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பேராவலில் அவளது தோழி அனுப்பிய சிங்கள வகுப்பில் வாட்ஸ்அப் மூலம் இணைந்து கொண்டாள். முக்கியமாக…

அவள் பெயர் ரஹ்மா. சாதரண தரப்பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருக்கும் மாணவி. சிங்களம் பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பேராவலில் அவளது தோழி அனுப்பிய சிங்கள வகுப்பில் வாட்ஸ்அப் மூலம் இணைந்து கொண்டாள். முக்கியமாக…