அமைச்சரவை முடிவுகள் – 2021.07.12

  • 19

2021.07.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

  1. துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய பிள்ளைகளின் சாட்சிகளை ஒளிப்பதிவு செய்யும் ஒன்பது (09) அலகுகளை மாகாண மட்டத்தில் நிறுவுதல்
  2. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகமும் சீனாவின் செங்டு விவசாயக் கல்லூரிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்
  3. பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் மெய்ஜோ பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுதல்
  4. இலங்கையில் இலத்திரனியல் வாகனப் பாவனையை அதிகரித்தல்
  5. பரிஸ் ஒப்பந்தத்திற்கமைய ‘தேசிய ரீதியில் நிச்சயிக்கப்பட்ட பங்களிப்புக்கள்’ ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான சட்டகப்படுத்தப்பட்ட சமவாயத்திற்கு சமர்ப்பித்தல்
  6. இலங்கைக்கான டிஜிட்டல் சுற்றுலாப் பயணிகளுக்கு நட்புமிகுந்த பயணத்தை மேம்படுத்துவதற்காக நீண்டகால வீசா அனுமதியொன்றை அறிமுகப்படுத்தல்
  7. விளையாட்டுத் துறையின் பங்களிப்புக்களை பலப்படுத்துவதற்காக இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்
  8. 1964 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க நீர்வளச் சபைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
  9. நீர்த் துறை சமகாலத்திலும் எதிர்காலத்திலும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
  10. ஆண்டின் நடுப்பகுதிக்கான நிதி நிலைமை தொடர்பான அறிக்கை
  11. 2021/2022 பெரும்போகத்திற்கான நெற் செய்கையில் விவசாயிகள் உரத்தைத் தயாரித்து பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டம்

2021.07.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

01.    துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய பிள்ளைகளின் சாட்சிகளை ஒளிப்பதிவு செய்யும் ஒன்பது (09) அலகுகளை மாகாண மட்டத்தில் நிறுவுதல்

பல்வேறு வகையில் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய பிள்ளைகளால் வழங்கப்படும் குறித்த சம்பவத்திற்குரிய சாட்சிகள் மிகவும் முக்கியமானவையாகும். எனினும், அவ்வாறு பாதிக்கப்பட்ட பிள்ளையொருவர் நீதிமன்றத்தில் திறந்த அரங்கில் சாட்சி வழங்கும் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க நேரிடுவதால், குறித்த சாட்சிகள், ஒளிப்பதிவு செய்து பெற்றுக் கொண்டு சமர்ப்பிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் 1999 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க சாட்சியங்கள் (விசேட ஏற்பாடு) சட்டத்தின் மூலம் இலங்கையின் நீதித்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, 2001 ஆம் ஆண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் காணொளிப்பதிவு செய்யும் அலகொன்றைத் தாபித்து சாட்சிகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது கொழும்பில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றது. குறித்த வசதிகளை மாகாண மட்டத்தில் ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஒன்பது (09) மாகாணங்களை உள்ளடக்கியதாக மருத்துவமனை சார்ந்த சாட்சியங்களை ஒளிப்பதிவு செய்யும் ஒன்பது (09) அலகுகளை நிறுவுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02.    ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகமும் சீனாவின் செங்டு விவசாயக் கல்லூரிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

இரு தரப்பினருக்குமிடையில் கல்வி மற்றும் விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிகள் தொடர்பான தரவுகள் மற்றும் தகவல்கள் பரிமாற்றம், பணிக்குழாம் மற்றும் மாணவர் பரிமாற்றம், ஒருங்கிணைந்த பாடவிதான அபிவிருத்தி மற்றும் பகிர்ந்து கொள்ளல், தேயிலை மற்றும் மூலிகைப் பயிர்கள் தொடர்பான ஒருங்கிணைந்த ஆராய்ச்சிகளை நடாத்துதல் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03.    பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் மெய்ஜோ பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுதல்

மாணவர்கள் மற்றும் பணிக்குழாம் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்குபடுத்தல், பொதுவாக ஆர்வம் காட்டும் துறைகளின் கல்வி வெளியீடுகள் மற்றும் கற்றல் உபகரணங்களைப் பரிமாறிக் கொள்ளல், ஒருங்கிணைந்த கற்றல்கள் மற்றும் விஞ்ஞான ரீதியான செயற்பாடுகள் தொடர்பான விரிவுரைகள், மாநாடுகள் மற்றும் செயலமர்வுகளை ஒழுங்குபடுத்தல் போன்ற நோக்கங்களை உள்ளடக்கியதாக பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் மெய்ஜோ பல்கலைக்கழகத்திற்கும் இடையில் உயர்கல்வி ஒத்துழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04.    இலங்கையில் இலத்திரனியல் வாகனப் பாவனையை அதிகரித்தல்

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுகளுக்கமைய 2020 ஆம் ஆண்டிறுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 08 மில்லியன்களைத் தாண்டியுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்களவு வாகனங்கள் 10 வருடங்களுக்கும் அதிகமாக பழைய வாகனங்கள் ஆவதுடன், அவ்வாறான பழைய வாகனங்கள் சரியான வகையில் பராமரிக்கப்படாமையால் நச்சு வாயுக்கள் வெளியிடப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையின் வாயு மாசடைதலில் 60மூ வீதமானவை மோட்டார் வாகனங்களால் இடம்பெறுவதாக மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் இதர நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீள்பிறப்பாக்க எரிசக்தித் திட்டங்களைத் துரிதமாக மேற்கொள்வது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாக அமைவதால், மோட்டார் வாகனப் போக்குவரத்திற்கு மீள்பிறப்பாக்க எரிசக்தியைப் பயன்படுத்துதல் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, இலத்திரனியல் வாகனப் பாவனையை ஊக்குவிப்பதற்காக மூலோபாயத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05.    பரிஸ் ஒப்பந்தத்திற்கமைய தேசிய ரீதியில் நிச்சயிக்கப்பட்ட பங்களிப்புக்கள்ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான சட்டகப்படுத்தப்பட்ட சமவாயத்திற்கு சமர்ப்பித்தல்

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான சட்டகப்படுத்தப்பட்ட சமவாயத்தில் அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை 1993 ஆம் ஆண்டு தொடக்கம் செயலாற்றி வருகின்றது. அதற்கமைய, இலங்கை 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பரிஸ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதுடன் அந்த வருடம் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி குறித்த ஒப்பந்தத்தை தேசிய ரீதியாக உறுதிசெய்துள்ளது. உலக வெப்பமயமாதல், தொழிற் புரட்சிக்கு முன்னிருந்த மட்டத்துடன் ஒப்பிட்டு வெப்பநிலையை 02 செல்சியஸ்களுக்குக் குறைவாகப் பேணுதல், குறித்த வெப்பநிலையை 1.5 செல்சியஸ் மட்டத்திற்குச் செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதே பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமாகும். குறித்த நோக்கங்களை அடைவதற்காக பங்காளர்களாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் ‘தேசிய ரீதியில் நிச்சயிக்கப்பட்ட பங்களிப்புக்கள்’ என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2020-2030 காலப்பகுதியில் இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கு அடையாளங் காணப்பட்டுள்ள முதலாவது ‘தேசிய ரீதியில் நிச்சயிக்கப்பட்ட பங்களிப்புக்கள்’ அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான சட்டகப்படுத்தப்பட்ட சமவாயத்திற்கு 2016 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரதான 14 துறைகளின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த பங்களிப்புக்கள் 05 வருடங்களுக்கு ஒருமுறை காலத்தோடு தழுவியதாக மேம்படுத்தி மேலும் திட்டவட்டமான இலக்குகளுடன் மீளத்தயாரித்து சமர்ப்பித்தல் வேண்டும். 2020 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் நடாத்தப்படவிருந்த பங்காளர்களுக்கான 26 ஆவது கூட்டத்தொடர் குறித்த மேம்படுத்தப்பட்ட பங்களிப்புக்களைச் சமர்ப்பிப்பதற்கு நிச்சயிக்கப்பட்டிருப்பினும், கொவிட் தொற்று நிலைமையால் குறித்த கூட்டத்தொடர் 2021 நவம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த துறைகளின் பங்காளி நிறுவனங்களின் பங்குபற்றலுடன் அரசாங்கத்தின் சமகாலக் கொள்கைகளுக்கமைய மீண்டும் மேம்படுத்தப்பட்டுள்ள ‘தேசிய ரீதியில் நிச்சயிக்கப்பட்ட பங்களிப்புக்கள்’ ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான சட்டகப்படுத்தப்பட்ட சமவாயத்திற்கு சமர்ப்பிப்பதற்கும், குறித்த பங்களிப்புக்கள் வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை தொடர்பாக கண்காணிப்பதற்கான நடவடிக்கைக் குழுவொன்றை அமைப்பதற்கும் சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06.    இலங்கைக்கான டிஜிட்டல் சுற்றுலாப் பயணிகளுக்கு நட்புமிகுந்த பயணத்தை மேம்படுத்துவதற்காக நீண்டகால வீசா அனுமதியொன்றை அறிமுகப்படுத்தல்

வாழ்வாதாரத்திற்காக டிஜிட்டல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தும், சுற்றுலாப் பயணிகளாக நாடு நாடாக பயணித்து வாழ்ந்து வரும் நபர்கள் டிஜிட்டல் சுற்றுலாப் பயணிகள் என அழைக்கப்படுவர். அவ்வாறான சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகளை வழங்கல் சுற்றுலாத் துறையின் போக்காக அண்மைக்காலத்தில் வளர்ந்து வருகின்றது. டிஜிட்டல் சுற்றுலாப் பயணிகள் கூடுதலாக உணவு விடுதிகள், பொது நூலகங்கள் மற்றும் அவ்வாறான இடங்களில் பொழுதுபோக்காக வாகனங்களில் இருந்து கொண்டே இணையத்தள வசதிகளுடன் உபகரணங்களைப் பயன்படுத்தி மெய்நிகர் (online)) வழியாக சில சேவைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். தொடர்பாடலுக்காக அதிதுரித இணையத்தள வசதிகள் இருத்தல், நீண்டகால வீசா அனுமதிப்பத்திரம், இலாபகரமான தங்குமிட வசதிகள், வருமான வரிகளை விடுவித்தல் போன்றவை அவ்வாறான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதற்கு ஏதுவான காரணிகளாக அமையும். டிஜிட்டல் சுற்றுலாப் பயணிகளை எமது நாட்டுக்குக் கவர்ந்திழுத்தல், அதிக காலம் எமது நாட்டில் தங்கி வைத்திருப்பதற்கான வசதிகளை வழங்குவதன் மூலம் அதிகமான அந்நிய செலாவணியை எமது நாட்டுக்குப் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கமைய டிஜிட்டல் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதற்காக இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும், டிஜிட்டல் சுற்றுலாப் பயணிகளுக்கு நீண்டகால (ஒரு வருடம் வரை) வீசா அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்காகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07.    விளையாட்டுத் துறையின் பங்களிப்புக்களை பலப்படுத்துவதற்காக இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் விளையாட்டுத்துறையில் பங்களிப்புக்களை பலப்படுத்துவதற்காக இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், மெய்வல்லுனர் விளையாட்டுக்கள், நீச்சல், ஜிம்னாஸ்ரிக், கைப்பந்து, பாரம் தூக்கல், குத்துச்சண்டை, வாள் சண்டை, காற்பந்து மற்றும் ஸ்கொஷ் போன்ற விளையாட்டுத் துறைகளுக்காக விளையாட்டுப் போட்டிகள் நிறுவனம், உயர்கல்வி விளையாட்டு நிறுவனம், விளையாட்டு சம்மேளனம் மற்றும் இதர அங்கீகாரம் பெற்ற விளையாட்டு அமைப்புக்களுக்கிடையிலான நிகழ்ச்சித்திட்டங்கள், அனுபவங்கள் மற்றும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08.    1964 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க நீர்வளச் சபைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

மட்டுப்பாடற்ற வகையில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக நிலத்தடி நீரைப் பயன்படுத்தலைக் கட்டுப்படுத்தல் மற்றும் நீர் மாசுபடுவதைத் தடுக்கும் நோக்கில், அவ்வாறான செயற்பாடுகளை நீர்வளச் சபையின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளுக்காக 1964 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க நீர்வளச் சபைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய குறித்த கட்டளைகள் 2017 மார்ச் மாதம் 16 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும், அது தொடர்பான குற்றங்கள் மற்றும் அவற்றுக்கான தண்டனைகளை விதிப்பதற்குப் போதுமான ஏற்பாடுகள் நீர்வளச் சபைச் சட்டத்தில் காணப்படாமை கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் குறித்த கட்டளைகளுக்கமைய நீர்வளச் சபையின் கீழ் பதிவு செய்யப்படாத சட்டவிரோத ஆழ்துளை இயந்திரங்களை வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், குறித்த கட்டளைகளை மீறும் போது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போதுமானளவு சட்ட ஏற்பாடுகள் தற்போது நீர்வளச் சபைச் சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. அதனால், மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளுக்காகவும் குறித்த சபையால் சேவைகளை வழங்கும் போது எதிர்கொள்ள நேரிட்டுள்ள ஏனைய சவால்களுக்கும் தேவையான சட்ட ஏற்பாடுகளை தயாரிப்பதற்காக பொருத்தமான சட்ட ரீதியான ஏற்பாடுகளைக் குறித்த சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்துவதற்காக நீர் வழங்கல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09.    நீர்த் துறை சமகாலத்திலும் எதிர்காலத்திலும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

1974 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தேசிய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தற்போது 331 நீர் வழங்கல் முறைகளை நடைமுறைப்படுத்தி 2.4 மில்லியன் வீட்டு அலகுகளுக்கான இணைப்புக்கள் மற்றும் 207,000 வர்த்தக ரீதியான இணைப்புக்களையும் செயற்படுத்தி வருகின்றது. அதன்கீழ் நாட்டின் மொத்தமான 93.8% வீதமான பாதுகாப்பான குடிநீர் வழங்கலில் 43.8மூ வீதத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனாலும் கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வரும் துரித நகரமயமாதல், காலநிலை மாற்றங்கள், நீருக்கு அதிகரித்துள்ள நுகர்வோர் கேள்வி மற்றும் நீர்த்துறை நடவடிக்கைகளுக்காக டிஜிட்டல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தல் போன்ற விடயங்களுக்கு எதிர்காலத்தில் முகங்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறித்த செயற்பாடுகளை எதிர்கொள்வதற்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைச் சட்டம் திருத்தப்பட்டிருந்தாலும், சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் குறித்த சட்டத்தை மேலும் திருத்த வேண்டியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக அரச மற்றும் தனியார் துறையினரின் பங்காளர்களிடம் யோசனைகளையும் பரிந்துரைகளையும் பெற்றுக் கொண்டு அடிப்படைச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு நீர் வழங்கல் அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்காக நீர் வழங்கல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10.    ஆண்டின் நடுப்பகுதிக்கான நிதி நிலைமை தொடர்பான அறிக்கை

2003 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க அரச நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தின் 10 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய ஆண்டின் நடுப்பகுதியில் நிதி நிலைமை தொடர்பான அறிக்கை நிதி அமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் யூன் மாத இறுதியில் சமர்ப்பிக்க வேண்டியதுடன், பின்னர் குறித்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு யூன் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கான நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11.    2021/2022 பெரும்போகத்திற்கான நெற் செய்கையில் விவசாயிகள் உரத்தைத் தயாரித்து பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டம்

2021/2022 பெரும்போகத்திற்காக 800,000 ஹெக்ரயர்கள் அளவில் நெற் செய்கைக்கான சேதன உரத்தைத் தயாரித்துக் கொள்வதற்காக கமத்தொழில் அமைச்சு வேலைத்திட்டமொன்றைத் தயாரித்துள்ளது. அதன் கீழ் பிரதானமாக கமநல சேவைகள் திணைக்களத்தின் வழிகாட்டலின் பிரகாரம் விவசாயிகள் தரமான சேதன உரத்தைத் தயாரிப்பதற்கும், அனுமதிப்பத்திர உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளையின் அளவுகளை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய, சேதன உரத்தைத் தயாரிக்கும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக சேதன உரத்தைத் தயாரித்து தமது விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஹெக்ரயர் ஒன்றுக்கு 12,500/= ரூபா வீதம் உயர்ந்தபட்சம் 02 ஹெக்ரயர்களுக்கு (05 ஏக்கர்கள்) அதிகரிக்காமல் ஊக்குவிப்புக் கொடுப்பனவை செலுத்துவதற்காக கமத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

2021.07.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய பிள்ளைகளின் சாட்சிகளை ஒளிப்பதிவு செய்யும் ஒன்பது (09) அலகுகளை மாகாண மட்டத்தில் நிறுவுதல் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகமும் சீனாவின் செங்டு விவசாயக்…

2021.07.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிய பிள்ளைகளின் சாட்சிகளை ஒளிப்பதிவு செய்யும் ஒன்பது (09) அலகுகளை மாகாண மட்டத்தில் நிறுவுதல் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகமும் சீனாவின் செங்டு விவசாயக்…