ஒலிம்பிக்கில் இலங்கை தயாரிப்பும், போட்டியாளர்களின் நிலையும்

தற்போது உலக அரங்கில் கொரோனா ​​தொற்றுக்கு மத்தியில் ஒலிம்பிக் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று 08 ஆம் போட்டிகள் நடைபெற்றவண்ணமுள்ளன. அதில் இலங்கையின் 09 வீரர்கள் போட்டியிடுவதுடன் பேஸ் போல் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பேஸ்போல்கள் இலங்கையில் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் எட்டாவது நாள் முடிவில் சீனா 21 தங்கப் பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. ஜப்பான் 17 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 16 தங்கம், 17 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. தொடர்ந்து ரஷ்யா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, தென் கொரியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.

இம்முறை ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக 09 வீரர்கள் பங்குபற்றுகின்றனர். மறுபுறம் அவர்களுக்காக 60 அதிகாரிகள் சென்றுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற பதிவுகள் உள்ளன. அது எப்படி இருந்தாலும் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றின் படி ஒரு விளையாட்டு வீரருக்கு இருவர்  என்ற அடிப்படையில் இம்முறை ஒலிம்பிக்கில் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், அதிகாரிகள் என 27 பேர் பங்குபற்றவுள்ளதுடன், இவர்களுக்காக 38 மில்லியன் ரூபா நிதி விளையாட்டுத்துறை அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் விசேட அழைப்பாளர்களாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அமைச்சின் செயலாளர் மற்றும் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் தனது தனிப்பட்ட செலவில் ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்று ஆரம்ப விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபற்றினார் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போதும் அங்குதான் உள்ளார்.

மேலும் அங்கு ​ சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பேஸ்போல்களை அறிமுகப்படுத்தியதுடன் அது தொடர்பான வாழ்த்துக்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

தற்பொழுது டோக்கியோவில் நடைபெற்று வரும் 2020 ஒலிம்பிக் போட்டித் தொடரின் பேஸ் போல் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பேஸ்போல் இலங்கையில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து பெட்மிண்டன் வீரர் நிலூக கருணாரத்ன, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை டெஹானி எகொடவெல, நீச்சல் வீராங்கனை அனிக்கா கபூர், ஜுடோ வீரர் சாமர நுவன் தர்மவர்தன, நீச்சல் வீரர் மெதிவ் அபேசிங்க, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கெஹானி, குதிரைச் சவாரி வீராங்களையான மெதில்டா கார்ல்சன், குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன மற்றும் மெய்வல்லுனர் வீராங்கனை நிமாலி லியனஆராச்சி ஆகியோர் பங்கு பற்றினர்.

என்றாலும் இம்முறை ஒலிம்பிக் முடிவுகளில் இலங்கை வீரர்களின் முடிவுகள் எதிர்பார்த்த விதத்தில் அமையவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். அவர்கள் எதிர்பார்த்த இலக்கை அடையாவிட்டாலும் அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கவையாகும்.

விளையாட்டு வீரர்கள் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை ஆனால் அவர்களுக்காக 38 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஐப்பான், ஜமேக்கா  உட்பட பல நாடுகளின் வீரர்கள் தமது நாட்டுக் கொடி உட்பட வீரர்களின் பெயர் அடங்கிய சீருடைகளுடன் போட்டிகளில் களமிறங்கியிருந்தனர். ஆனால் இலங்கை வீரர்கள் தமது நாட்டு உத்தியோகபூர்வ சீருடைகளுடன் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இதிலும் வேடிக்கை என்னவென்றால் விளையாட்டு அமைச்சர் தனது ட்வீட்டரில் விளையாட்டு ஆடை மற்றும் ஆடைத் கைத்தொழிலில் புகழ்பெற்ற இலங்கை. தற்போது இன்னொரு படி முன்னோக்கி விளையாட்டுப் பொருளாதாரத்தில் மற்றொரு மைல்கல்லாக டோக்கி​யோ 2020 ஒலிம்பிக்கில் போட்டிகளில் பயன்படுத்தப்படும் உத்தியோகப்பூர்வ பேஸ்பால்  பந்துகளை தயாரித்துள்ளனர் என்று குறிப்பிட்டதாகும்.

அத்துடன் சில வீரர்கள் உரிய தயார்படுத்தல்கள் இன்றி போட்டியில் பங்கேற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தன. அதாவது வீரங்கனையொருவர் தம் நாட்டுக் கொடிகள் உள்ள சீருடைகள் இன்றி, பொருத்தமான விதத்தில் தனது பெயர் அட்டையை ஆடையில் இணைக்காமல், இறுதிச் சந்தர்ப்பத்தில் அவசரத்தில் ஏதோ கைக்கு கிடைத்த பூட்டூசி மற்றும் குண்டூசிகளை இணைத்து பெயரை காட்சிப்படுத்தியதாகவும் குறித்துக் காட்டப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்காக விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கும் இலங்கையில் தன்னாட்டு வீர்களுக்கும் சீருடைகள் வழங்குவது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

Ibnuasad