கறுப்பு ஏப்ரல்

  • 1

2018.04.12 அன்று தான் என் வாழ்வை இருட்டாக்கிய, இல்லை இல்லை எம் வாழ்க்கையிற்கே கறுப்புப் புள்ளி இட்ட நாள்.

2018.04.11 வழமை போன்று அன்றைய நாளும் விடிந்தது. அது ஒரு புதன் கிழமை, பாடசாலை முதலாம் தவணையின் இறுதி நாள்; அனைத்து அரச பாடசாலைகளும் விடுமுறை வழங்கும் நாள்…
அன்று தன் தந்தையிற்கு மட்டும் தான் பாடசாலை இருந்தது (அவர் ஒரு பிரதி அதிபர் என்பதால்). மற்றவர்கள், தங்கைக்கும், 2 சகோதர தம்பிகளுக்கும் முன்னேற்ற அறிக்கை (Progress report) வழங்கப்பட்டு செவ்வாய்க்கிழமை பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டது. புதன் கிழமை அனைவரும் வீட்டில், ஒரு சகோதரன் மற்றும் விடுதியில் தங்கி கல்வி கற்பதனால், அவருக்கும் புதன் கிழமை தான் விடுமுறை.

வாப்பா பாடசாலை செல்ல ஆயத்தமாகிறார், என் உம்மா வாப்பாவிடம் கேட்கின்றார்..

“ஏய் நீங்க இன்டைக்கு கட்டாயம் ஸ்கூல் போகனுமா?”

என்று ஒரு ஏக்கத்துடன் கேட்டது இப்போது கூட என் காதுகளில் ஒலிக்கிறது. அப்போது வாப்பா கூறினார்.

“ஓஹ் கமர், நா இன்டைக்கி கட்டாயம் போகனும். இன்டைக்கு last day நெறைய வேல இரிக்கி, நான் half-day ல வாரேன்”

என்று கூறி விட்டு பாடசாலை நோக்கி சென்றவருக்கு மனதிற்கு ஏதோ ஒரு சஞ்சலம். பாடசாலை சென்ற உடனே, உம்மாவின் தொலைபேசி அலரியது. அது வாப்பாவின் அழைப்பு, என் மூத்த சகோதரி தான் அவ்வழைப்பை எடுத்துப் பேசினாள். வாப்பா கேட்டார்,

“உம்மா சாப்பிட்டாங்களா? இப்ப என்ன செய்றாங்க? நீங்க எல்லாரும் என்ன செய்றீங்க?”

என்று வாப்பா கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார். ஒவ்வொன்றிற்காக பதில் கூறி விட்டு நாங்களும் இப்ப தான் சாப்பிட போறோம் என கூறிவிட்டு அழைப்பிற்கு விடை கொடுத்தார்.

நாங்கள் அனைவரும் காலை உணவை சாப்பிட ஆரம்பித்தோம், சாப்பிட்டு முடியும் வரை உம்மாவைப்பற்றிய பேச்சு தான். காலை உணவை முடித்து விட்டு, பகலுணவு சமைப்பதற்கு வழமையாக உம்மா தான் உதவிகள் செய்து கொடுப்பார். அன்று உம்மா கூறினார்,

“நான் இப்டி chair இருந்து பாத்துக்கொண்டு இரிக்கிறேன், நீங்க தா(dha)த்தாக்கு help பண்ணுங்க”

என்று கூறியதும் நாங்களும் சரி என்று; மூத்த சகோதரிக்கு சமைப்பதற்குரிய உதவிகளை செய்து கொடுத்தோம். சமைத்து முடிந்ததும் உம்மாவிற்கு சுடச்சுட தீத்தி விட்டார் என் மூத்த சகோதரி.

சொன்னது போன்றே half-day இல் வாப்பாவும் வந்தார், நாங்களும் வாப்பாவுடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்தோம்.

உம்மா, வாப்பா நாங்கள் அனைவரும் குடும்பமாக இருந்து கதைத்துக் கொண்டு இருந்தோம். வாப்பாவிற்கு அவசரமாக கொழும்பிற்கு செல்வதற்கான தேவைப்பாடு இருந்தது. ஆதலால் உம்மாவிடம் கூறினார்.

“கமர் நான் இப்ப கொஞ்சம் அவசரமா கொழும்புக்கு போகனும். நான் பெய்த்து சுருக்க வாரேன்.”

என் மூத்த சகோதரியின் பெயரைக் கூறி.

“நீங்க கொஞ்சம் உம்மாவ பாத்துக்கொங்க”

என்று கூறி விட்டு,

“கமர் நா பெய்த்து வாரேன்”

என்று உம்மாவைப் பார்த்து வாப்பா கூறியதும், உம்மா;

“ஏய், இன்டைக்கி அப்டி என்ன அவசரம், நாளைக்கி போங்களேன்”

என்று கூறியதும்; எங்களுக்கே மனதிற்கு ஒரு மாதிரி தான் இருந்தது; இருந்தும் வாப்பா கொழும்பிற்குச் சென்றார்.

அன்று புதன் கிழமை பாடசாலை முடிந்ததும், வாப்பாவின் பாடசாலை அதிபர் (மேடம்) உம்மாவை பார்ப்பதற்காக வந்திருந்தார். ஆனால் உம்மா அவருடன் கதைக்கவில்லை, கதைக்கக்கூடிய சூழ்நிலையில் இல்லை. என் மூத்த சகோதரி தான் கதைத்துக் கொண்டிருந்தார்.
நேரங்கள் உருண்டோட, மாலை ஐந்து மணிக்கு இடி முழக்கத்துடன் பாரிய மழை, நேரம் போகப் போக உம்மாவிற்கு வருத்தம் கூடிக்கொண்டே செல்கிறது. நடக்க முடியவில்லை, மூத்த சகோதரி மற்றும் மூத்த சகோதரனின் உதவியுடன் தான் Washroom சென்றார். இரவு 7.00 அளவில் வாப்பாவும் வந்து விட்டார். உம்மாவுடன் கதைத்து விட்டு மஹ்ரிப் தொழுது விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு தொழுகைக்காக சென்று விட்டார்.

தொழுது விட்டு மீண்டும், உம்மா சாய்ந்து கொண்டிருந்த கட்டிலில் வாப்பாவும் சாய்ந்து கொண்டு, நாங்களும் சுற்றுவர இருந்து கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போது, உம்மா; வாப்பாவிடம் கூறிய சில வார்த்தைகள்,

“நீங்க ஒன்டும் யோசிக்க வானாம், மூத்த சகோதரியின் பெயரைக் கூறி அவ ஒங்கள நல்லா பாத்துக்கொள்வா, time க்கு மருந்து தருவா, ஸ்கூல் வேல எல்லாம் சரியா செஞ்சி தருவா, நான் இல்லாட்டியும் பரவல்ல.

கடைசித் தம்பியின் பெயரைக் கூறி.

“ஸபீக் அ நல்லா படிக்க வைச்சி அவன்ட ஆச மாயே அவன doctor க்கு படிக்க வைங்க”

சகோதரியின் (தங்கையின்) பெயரைக் கூறி.

“அவளையும், அவள்ட ஆச மாயே university அனுப்புங்க, நீங்க எல்லாரும் கடைசி வரைக்கும் ஒற்றுமையா இரீங்க”

hostel இல் இருக்கும் இரண்டாம் சகோதரனின் பெயரைக் கூறி, hostel இல் இருக்கும் இரண்டாவது மகனுடன் உம்மாவுக்கு அலாதி அன்பு

“அவன் இன்னம் வரல்லையா? அவன் எப்ப வருவான்? அவன் இன்டைக்கு வருவானா?”

என்று நிறையவே. எமக்கு அழுவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. அப்போது; ஏன் இப்படி எல்லாம் உம்மா சொல்றாங்க ன்னு கூட தெரியாது. எங்களுக்கு எந்தவித அனுபவமும் இல்லை, புரிந்து கொள்ளும் அளவு பெரியவர்களும் இல்லை, அது இப்போது தான் தெரியும் உம்மாவின் இறுதி ஒசியத் “மரண சாசனம்” என்று. அனுபவம் ஓர் ஆசான் என்பதை அன்றிலிருந்து இன்று வரை அறிந்து கொண்டோம்.

இரண்டாவது சகோதரனும் மழையோடு மழையாக வந்துவிட்டார். அவர் உம்மாவுடன் கதைக்க கதைக்க உம்மா ஒரு வார்த்தை கூட கதைக்கவில்லை. நாங்க உம்மா கிட்ட சொன்னோம்.

“உம்மா பாருங்க. இரண்டாம் சகோதரனின் பெயரைக் கூறி, இவர் வந்தீக்கிறாரு பாருங்க உம்மா”

என்று கூறியதும்; உம்மா பதிலுக்கு,

“அவனுக்கு தெரியுது தானே எனக்கு என்ன ன்னு”

இப்படி கூறியதும் சகோதரனுக்கு கண்ணீரை கட்டுப்படுத்த முடயவில்லை. தேம்மித் தேம்பி அழுகின்றார்.

அன்றைய இரவு எல்லோரும் உம்மாவின் பக்கத்தில் இருந்து கொண்டே இருக்கின்றோம். ஏதோ எல்லோருக்கும் மனதிற்கு திருப்தி இல்லாத நிலை. ஆனால், உம்மா சொன்னாங்க,

“எல்லாரும் பெய்த்து தூங்குங்க; ஏன் எல்லாரும் முழிச்சு நிக்கிறீங்க”

என்று கூறினார். ஆனால் யாருக்கும் தெரியாது அது தான் உம்மாவின் கடைசி வார்த்தை என்று உம்மா அப்படி கூறியும் யாருக்கும் தூங்க முடியவில்லை. ஒருத்தர் மாரி ஒருத்தர் உம்மாவின் பக்கத்தில் இருந்து கொண்டே இருந்தோம்.

இது மரணத்தின் வலி என்று அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

12.00 யைத் தாண்டியதும் நானும் எனது மூத்த சகோதரியும் கொஞ்சம் rest எடுத்துட்டு வாரோம் என்று கூறி விட்டு, மூத்த சகோதரனையும், இரண்டாம் சகோதரியையும் உம்மாவிடம் நிற்குமாறு கூறி விட்டு, நாம் இருவரும் தூங்குவதற்காக சென்றோம்.

கண் மூடி உருண்டு புரண்டும் தூக்கம் வரவில்லை. எப்படியோ கண் அசந்த கொஞ்ச நேரத்தில், நடுநிசி 1.00 அளவில், இரண்டாம் சகோதரி தாdhaத்தாவை எழுப்பாட்டும் சத்தம் என் செவிகளில் சங்கமம் செய்கிறது. தாdhaத்தா (ஆ… ஆ.. ஆ.. ) என்று ஏதோ ஒரு அதிர்ச்சியில் பேசும் சத்தம் கேட்டு நானும் உடனே எழுந்து நின்றேன். அப்போது தான் என் அடி வயிற்றில் இடி விழுந்தாற் போல் இருந்தது.

அவ தாdhaத்தாவிடம் சொன்னாள், அவசரமா வாங்க தாdhaத்தா. உம்மா milk ஊத்தி கேட்டாங்க, நா ஊத்தி எடுத்துட்டு வந்து உம்மா உம்மா என்டு பேசுறன் ஆனா உம்மாட வாய்ல இருந்து பேச்சி வரல்ல. நா spoon ஆல தான் ரெண்டு தடவ பருக்கினேன் மூனாவது spoon வாய்ல போகல்ல. என்று சொல்லிக்கொண்டே அவளும் அழுகின்றாள். அப்போது தான் உம்மாவின் மூச்சு நின்றுள்ளது. அது எங்களுக்கு தெரியாது. வாப்பாவும் நாடி நரம்புகளை பரிசோதித்து பார்க்கின்றார்.

அனைவரும் கண்ணீரும் கதறளுமாய் பக்கத்தில் உள்ள பெரியப்பா வீட்டிற்கு மூத்த சகோதரன் போய் விடயத்தை கூறி அவர்களையும் அழைத்து வந்தார். உம்மாவை எவ்வளவு தட்டிப் பார்த்தும் உம்மா எழும்புவதாக இல்லை. மூத்த சகோதரன் வைத்தியரை அழைத்து வர சென்றிருந்தார். அந்நேரத்தில் ஒரு வைத்தியரும் இருந்திருக்கவில்லை. மிச்சம் கஷ்டப்பட்டு ஒரு வைத்தியரின் வீட்டிற்கு சென்று அவரை எழுப்பாட்டி அழைத்து வந்தார் 1.30 மணியளவில். அப்போது அவரும் சொன்னார்.

“இவங்கட ரூஹ் பெய்த்து one hour ஆகுது”

என்று கூறியதும் எங்களால் தாங்க முடியவில்லை. சின்னவனிற்கு வெறும் 11வருடங்கள் தான் அவன் மனம் தாங்கியிருக்குமா? hostel இல் இருந்து வந்த சகோதரனுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும்? எங்களுக்கு எவ்வளவு மனவேதனையாக இருந்திருக்கும்?  வாப்பாவிற்கு எவ்வளவு சோகம் இருந்திருக்கும்? எமக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்க வேண்டும் என்று எவ்வளவு கவலைகள் இருந்திருக்கும்?

அந்நேரம் உம்மாவிற்கு வெறும் 46 வயது தான். இளம் வயதிலே எங்களை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற ஏக்கம் எல்லோர் மனதிலும் இருக்கத்தான் செய்தது.

விடிந்தும் விடியாமலும் குடும்பங்கள், நண்பர்கள், அசல், ஆசிரிய வட்டாரம், பழைய மாணவர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டனர். வீடு முழுவதும் விரல் நுழைக்க முடியாத அளவு சனங்கள், யாருடனும் பேசக்கூடிய தைரியம், தெம்பு, சக்தி எதுவுமே எம்மிடம் இருக்கவில்லை.

“ஆறுதல் சொல்ல ஆயிரம் உறவிருந்தாலும் நம் தாய் போல் வருமா?”

2018.04.12 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு தர்கா நகர் பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் சகல பாவங்களையும் மன்னித்து ஜென்னதுள் பிர்தௌஸ் எனும் சுவன வாயிலில் நுழையச் செய்வாயாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

“ஏசினாலும் பேசினாலும் தாயன்பிற்கு ஈடாகுமா?

மகள்களில் ஒருத்தி; இவள்,
ஷஹ்னா ஸப்வான்
தர்கா நகர்

2018.04.12 அன்று தான் என் வாழ்வை இருட்டாக்கிய, இல்லை இல்லை எம் வாழ்க்கையிற்கே கறுப்புப் புள்ளி இட்ட நாள். 2018.04.11 வழமை போன்று அன்றைய நாளும் விடிந்தது. அது ஒரு புதன் கிழமை, பாடசாலை…

2018.04.12 அன்று தான் என் வாழ்வை இருட்டாக்கிய, இல்லை இல்லை எம் வாழ்க்கையிற்கே கறுப்புப் புள்ளி இட்ட நாள். 2018.04.11 வழமை போன்று அன்றைய நாளும் விடிந்தது. அது ஒரு புதன் கிழமை, பாடசாலை…

%d bloggers like this: