அமைச்சரவை முடிவுகள் – 2021.08.09

  • 6

09.08.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

  1. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கோவன் பல்கலைக்கழகத்திற்கும் (Edith Cowan University, Australia இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்
  2. இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  3. அரச வர்த்தகங்களை வலுவூட்டுவதற்காக (Re-Energize) சலுகை முறையிலான நிபந்தனைகளின் கீழ் செயற்பாட்டு மூலதனக் கடன்வசதி முறையை நடைமுறைப்படுத்தல்
  4. நிலைபேறான விவசாயத்துறைக்கான நிபுணர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளல்
  5. மாகாண சபைகள் மற்றும் மாவட்ட மட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டரங்குகளை மேம்படுத்துதல், தொழிற்படுத்துதல் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை முறைமைப்படுத்தல்
  6. 1980 ஆண்டு 31 ஆம் இலக்க தொண்டர் சமூக சேவைகள் நிறுவனங்களை (பதிவு செய்தல் மற்றும் கண்காணித்தல்) சட்டத்தைத் திருத்தம் செய்தல்
  7. இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தை பட்டம் வழங்கும் நிறுவனமாகத் தரமுயர்த்துவதற்காக 2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் சட்டத்தை திருத்தம் செய்தல்
  8. வெளிநாடுகளில் இடம்பெறும் விவாகரத்து, மண நீக்கம் அல்லது சட்ட ரீதியான திருமண முறிவுகளை இலங்கையில் ஏற்றுக்கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகளை வகுத்தல்
  9. 2003 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகாரசபைச் சட்டத்தை திருத்தம் செய்தல்
  10. 2021/2022 பெரும் போகத்திற்கான சேதன உரம் மற்றும் இயற்கைக் கனிமங்கள் மற்றும் கிலேடட் நுண்தாவர ஊட்டக் கூறுகளை இறக்குமதி செய்தல்
  11. ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவை நியமித்தல்
  12. சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாடு

01. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கோவன் பல்கலைக்கழகத்திற்கும் (Edith Cowan University, Australia இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

இருதரப்பினர்களிடையே பரஸ்பரமாக உடன்பாடு எட்டப்படும் துறைகளில் ஆராய்ச்சிகளுக்கான ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல், இருதரப்பினர்களின் தேவைகளுக்கமைய மாணவர் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல், விருந்தோம்பல் பண்பு தொடர்பான நிர்வாகக் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல், பாடவிதானங்கள் மற்றும் பாடநெறிகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கூட்டு முனைவர் பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்தும் நோக்கங்களுக்காக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கோவன் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருதரப்பும் கைச்சாத்திடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் குறித்த பாடநெறிகளைப் பயின்று தகைமைகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு எசெக்ஸ் பல்கலைக்கழகப் பிரவேசத்தைப் பெற்றுக் கொள்ளல், பரஸ்பர விருப்பின் பிரகாரம் பங்கேற்பு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், மாணவர்கள் மற்றும் பீடங்கள் மற்றும் ஊழியர்கள் பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்குபடுத்தல் போன்ற நோக்கங்களுக்காக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் எசெக்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருதரப்பும் கைச்சாத்திடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. அரச வர்த்தகங்களை வலுவூட்டுவதற்காக (Re-Energize) சலுகை முறையிலான நிபந்தனைகளின் கீழ் செயற்பாட்டு மூலதனக் கடன்வசதி முறையை நடைமுறைப்படுத்தல்

கொவிட்-19 தொற்று நிலைமையால் சந்தைப் பொறிமுறை சரியான வகையில் இடம்பெறாமையால் தற்போது இயங்கிவரும் அரசாங்கத்திற்குச் சொந்தமான 282 முழுமையான அல்லது பகுதியளவிலான வர்த்தக நடவடிக்கைகள் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அதனால் குறித்த வர்த்தகங்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான செயற்பாட்டு மூலதனத்தை வழங்குவதில் சிரமங்கள் தோன்றியுள்ளன. 2020 ஆம் ஆண்டு இறுதியில் நாடளாவிய ரீதியில் கொவிட் 19 தொற்று நிலைமை பரவியமையால் சிறிய மற்றும் நடுத்தரத் துறைகளுக்குத் தேவையான செயற்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் அரசாங்கம் ‘கொவிட் 19 இலிருந்து மீண்டெழும் சௌபாக்கிய வசதி’ எனும் பெயரிலான சலுகை அடிப்படையிலான கடன் வசதி முறையை நடைமுறைப்படுத்தியதுடன், குறித்த கடன்வசதி முறையின் கீழ் 53,200 தொழில் முயற்சியாளர்களுக்கு அண்ணளவாக 156 பில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய,

குறித்த கடன்வசதி முறையின் கீழ் அரச வர்த்தகங்களுக்கான செயற்பாட்டு மூலதனத்தைப் பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. நிலைபேறான விவசாயத்துறைக்கான நிபுணர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளல்

‘சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில்’ குறிப்பிட்டவாறு ஆரோக்கியமானதும் பயனுள்ளதுமான பிரஜைகளை உருவாக்கும் நோக்கில் நஞ்சற்ற உணவு வேளையை மக்களுக்கு வழங்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக உள்ளூர் விவசாயத்துறையில் முழுமையாக சேதன உரப் பாவனையைப் பயன்படுத்தும் சவாலை வெற்றி கொள்வதற்காக விவசாய அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இச்செயன்முறையை மேலும் முறையாக மேற்கொள்வதற்காக குறித்த அனைத்துத் தரப்பினரின் பங்களிப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கும், கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், தேவையான வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் விவசாயம் தொடர்பான பேராசிரியர் பிரியந்த இந்திரலால் யாபா அவர்களின் தலைமையில் குறித்த துறைசார் நிபுணர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. மாகாண சபைகள் மற்றும் மாவட்ட மட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டரங்குகளை மேம்படுத்துதல், தொழிற்படுத்துதல் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை முறைமைப்படுத்தல்

நாடளாவிய ரீதியில் காணப்படும் விளையாட்டரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் பலவற்றின் பராமரிப்பு சரியான வகையில் இடம்பெறாமையால் அவற்றைப் பயன்படுத்தும் விளையாட்டு வீர வீராங்கனைகள் எதிர்பார்க்கின்ற பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இயலாதுள்ளமை தெரியவந்துள்ளது.

விளையாட்டுத் துறையில் எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை அடைவதற்காக, குறிப்பாக மாவட்ட மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் திறமைகளை வெளிப்படுத்தும் வீர வீராங்கனைகளுக்குத் தேவையான வசதிகளுடன் கூடிய விளையாட்டரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்களைப் பேணுவது  அவசியமாகும்.

அதற்கமைய தனியார் துறையினரின் பங்களிப்புடன் அவ்வாறான விளையாட்டரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்களை நடாத்திச் செல்வதற்கான முறையான பொறிமுறையை அறிமுகப்படுத்துவதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. 1980 ஆண்டு 31 ஆம் இலக்க தொண்டர் சமூக சேவைகள் நிறுவனங்களை (பதிவு செய்தல் மற்றும் கண்காணித்தல்) சட்டத்தைத் திருத்தம் செய்தல்

தொண்டர் நிறுவனங்களைப் பதிவு செய்வதற்காக தற்போது காணப்படும் 1980 ஆண்டு 31 ஆம் இலக்க தொண்டர் சமூக சேவைகள் நிறுவனங்களை (பதிவு செய்தல் மற்றும் கண்காணித்தல்) சட்டத்தில் காணப்படும் சட்ட ஏற்பாடுகள், சமகாலத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லாமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, 1980 ஆண்டு 31 ஆம் இலக்க தொண்டர் சமூக சேவைகள் நிறுவனங்களை (பதிவு செய்தல் மற்றும் கண்காணித்தல்) சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தக் கூடிய வகையில் சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

07. இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தை பட்டம் வழங்கும் நிறுவனமாகத் தரமுயர்த்துவதற்காக 2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் சட்டத்தை திருத்தம் செய்தல்

2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் அடிப்படை பாடநெறிகளையும் முகாமைத்துவப் பாடநெறிகளையும் நடாத்தி வருகின்றது.

தற்போது குறித்த பாடநெறிகளுக்குச் சமமான மட்டத்திலான பாடநெறிகள் ஒரு சில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டாலும், குறித்த பாடநெறிகள் கோட்பாட்டு ரீதியாக மாத்திரம் காணப்படுவதால் துறைசார் ரீதியான போதுமானளவு செயன்முறைப் பயிற்சிகள் குறித்த பாடநெறிகள் மூலம் பெற்றுக் கொள்வதற்கு இயலாது.

அதனால், சுற்றுலாத்துறையில் போதுமானளவு துறைசார் களச் செயன்முறைப் பயிற்சிகளுடன் கூடிய பட்டப்படிப்பை இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தால் மேற்கொள்வது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேவையான சட்ட ரீதியான ஏற்பாடுகளை ஆராய்வதற்கும், இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தை மூன்றாம் நிலை உயர்கல்வி நிறுவனமாக உருவாக்குவதற்கும் இயலுமான வகையில் 2005 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. வெளிநாடுகளில் இடம்பெறும் விவாகரத்து, மண நீக்கம் அல்லது சட்ட ரீதியான திருமண முறிவுகளை இலங்கையில் ஏற்றுக்கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகளை வகுத்தல்

இலங்கையில் திருமணம் செய்து பின்னர் வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கையர்கள் குறித்த நாடுகளில் திருமண வழக்குகளைப் பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் தீர்ப்புக்களை இலங்கையில் அங்கீகரிக்காமையால், அவ்வாறானவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

எமது நாட்டில் அவ்வாறான வழக்குத் தீர்ப்புக்களுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாயின், அவர்கள் மீண்டும் இலங்கையில் விவாகரத்து வழக்குத் தொடர வேண்டியுள்ளது.

அதனால், வெளிநாடுகள் இடம்பெறும் விவாகரத்துக்கள், மண நீக்கங்கள் மற்றும் சட்ட ரீதியான திருமண முறிவுகளை அங்கீகரிக்கக் கூடிய வகையில் சட்ட ஏற்பாடுகளை வகுத்தல் பொருத்தமானதென நீதி அமைச்சர் அவர்களால் நியமிக்கப்பட்ட குடும்பச் சட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.

அதற்கமைய, வெளிநாடுகளில் இடம்பெறும் விவாகரத்துக்கள், மண நீக்கம் மற்றும் சட்ட ரீதியான திருமண முறிவுகளை எமது நாட்டில் அங்கீகரிப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை விதிப்பதற்கு இயலுமான வகையில் சட்ட மூலமொன்றைத் தயாரிப்பதற்காக சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. 2003 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகாரசபைச் சட்டத்தை திருத்தம் செய்தல்

2003 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகாரசபைச் சட்டத்தின் 60 ஆம் உறுப்புரையின் கீழ் 5 ஆம் உப உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக 2021 யூலை மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களை ஒரு சில வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலையில் விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்துவதற்காக இத்திருத்தங்கள் மூலம் தேவையான சட்ட ஏற்பாடுகளை வகுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளதுடன், குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10.                 2021/2022 பெரும் போகத்திற்கான சேதன உரம் மற்றும் இயற்கைக் கனிமங்கள் மற்றும் கிலேடட் நுண்தாவர ஊட்டக் கூறுகளை இறக்குமதி செய்தல்

உள்ளூர் சேதன உர உற்பத்தியாளர்களுக்குப் பூர்த்தி செய்ய முடியாத 2021/2022 பெரும் போகத்திற்குத் தேவையான உரத்தை போட்டித்தன்மையான பெறுகை முறையைப் பின்பற்றி இறக்குமதி செய்வதற்காக 31.05.2021 அன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனிக்கும் தேவையான உரத் தொகையை விநியோகிப்பதற்காக சர்வதேசப் போட்டி விலைமனுக் கோரப்பட்டுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த பெறுகையை வழங்குவதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவை நியமித்தல்

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகள் பற்றி மேலெழுந்துள்ள நிலைமைகள் தொடர்பாக அமைச்சரவை விரிவாகக் கலந்துரையாடியுள்ளது.

அதற்கமைய, இவ்விடயத்திற்குரிய அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு இப்பிரச்சினை தொடர்பாக மேலதிக விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்களை உள்ளடக்கியதான அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

  • கௌரவ டளஸ் அழஹப்பெரும அவர்கள்

மின்சக்தி அமைச்சர்

  • கௌரவ விமல் வீரவங்ச அவர்கள்

கைத்தொழில் அமைச்சர்

  • கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள்

சுற்றாடல் அமைச்சர்

  • கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள்

சுற்றுலாத்துறை அமைச்சர்

12. சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாடு

தற்போது உள்ளூர் சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாடு தொடர்பாக அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து உள்ளூர் சந்தையில் பால்மா விலையை அதிகரிக்காமல், தற்போதுள்ள பால்மா இறக்குமதிக்கான வரி விகிதத்தை திருத்தம் செய்வதன் மூலமோ அல்லது வேறு பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமோ போதியளவு பால்மாவை உள்ளூர் சந்தையில் விநியோகிப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

09.08.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கோவன் பல்கலைக்கழகத்திற்கும் (Edith Cowan University, Australia இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்…

09.08.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கோவன் பல்கலைக்கழகத்திற்கும் (Edith Cowan University, Australia இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்…