ஆப்கானின் உத்தியோகபூர்வ ஆட்சியாளர்களாக தாலிபான்கள் – இலங்கை அரசிலும் தாக்கம் செலுத்துமா?

இப்னு அஸாத்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வௌியேற்றம்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் உத்தியோகபூர்வமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வௌியேறத் தொடங்கியுள்ளன.

நிலையான யுத்தம் என ஜோ பைடன் குறிப்பிட்ட போரின் முடிவுக்கான ஆரம்பமாக இது கருதப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ளன.

ஆப்கான் பாதுகாப்பு படைகளுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில், அமெரிக்க படைகளின் வௌியேற்றம் எதிர்வரும் செப்ரெம்பர் 11 ஆம் திகதி வரை தொடரவுள்ளது.

இதனிடையே, சர்வதேச படைகளை இலக்கு வைக்காதிருப்பதற்கான எந்தவொரு வரையறையும் தமக்கில்லையென தலிபான் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காபூலை கைப்பற்றிய தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் கைப்பற்றிய தாலிபன்கள், தலைநகர் கபூலில் அனைத்து பக்கங்களில் இருந்தும் நுழைவதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று (15.08.2021) தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலைக் கைப்பற்றியிருக்கும் தலிபான்கள் “வெற்றி பெற்றதாக” அறிவித்துள்ளனர். இதனால் அங்கு அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகளின் கட்டுப்பாடு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

சட்டென ஒரே நாளில் சூழல் மாறிவிட்டதால், காபூல் முழுக்க குழப்பம் நிலவி வருகிறது. குடிமக்களும், வெளிநாட்டினரும் காபூலை விட்டு வெளியேறிவிட முயற்சி செய்து வருகிறார்கள்.

அல் ஜசீரா தொலைக்காட்சியில் அதிபர் மாளிகை தாலிபன்களால் முற்றுகையிடப்படும் காட்சிகள் வெளியாகின.

விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியுள்ளதால் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. கவுன்டர்களில் ஊழியர்கள் இல்லை. மக்கள் விமானங்களை நோக்கி முண்டியடித்துக் கொண்டு ஓடுவதாக நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.

பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய பிறகு தலைநகரான காபூலை தாலிபன்கள் அதிரடியைகக் கைப்பற்றினர். முதலில் நகர எல்லைக்கு வெளியே தங்கியிருந்த தங்களது படைகளை நகருக்குள் நுழையுமாறு தாலிபன் இயக்கம் உத்தரவிட்டது.

பல மாதங்களுக்கு முன்னரே ஆப்கானிஸ்தானைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி தொடங்கிவிட்டாலும் கடந்த சில நாள்களில் தாலிபன்களின் வேகம் தீவிரமடைந்தது. வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கே இது அதிர்ச்சியாக இருந்தது.

அமெரிக்கப் படைகள் வெளியேறினாலும், ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் சில காலத்துக்குத் தாக்குப் பிடிப்பார்கள் என்று அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் கருதியிருந்தன. ஆனால் சில நாள்களிலேயே எந்தத் தடையும் இல்லாமல் முக்கிய நகரங்கள் அனைத்தையும் தாலிபன்கள் கைப்பற்றியிருக்கிறார்கள்.

அதிலும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் தலைநகர் காபூலையும், அதிபர் மாளிகையையும் கைப்பற்றியது பலராலும் நம்பமுடியாத பேரதிர்ச்சியாக இருக்கிறது. ஏற்கெனவே பெரும்பாலான வெளிநாட்டுப் படைகள் வெளியேறிய பிறகு மிக வேகமாக பல நகரங்களை தாலிபன்கள் கைப்பற்றினர்.

அமெரிக்க ராணுவத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறுவதை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தீவிரமாக வலியுறுத்தி வந்தார். வேறொரு நாட்டின் உள்நாட்டுப் போருக்கு நடுவே முடிவற்ற அமெரிக்கத் தலையீட்டை நியாயப்படுத்த முடியாது என்று அவர் கூறியிருந்தார்.

ஆப்கானிஸ்தான் மக்கள் “பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழத் தகுதியானவர்கள்” என்றும், பாதுகாப்பு மற்றும் சிவில் ஒழுங்கு உடனடியாக மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 60 க்கும் மேற்பட்ட நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

தலிபான்களை விட்டு வெளியேற விரும்பும் எவரையும் அனுமதிக்கவும், சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் எல்லைகளைத் திறந்திருக்கவும் உலக நாடுகள் அழைப்பு விடுத்திருக்கின்றன.

காபூலுக்குள் தாலிபன்கள் புகுந்தது முதலே அதிபர் கானி எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் கானி வெளியேறிய பிறகுதான் தாலிபன்கள் காபூலுக்குள் நுழைந்திருக்கிறார்கள். அவர் அண்டை நாடான உஸ்பெகிஸ்தானில் தாஷ்கண்ட் நகருக்குச் சென்றிருக்கலாம் என்று அல்ஜசீரா தொலைக்காட்சி கூறியது.

நாட்டில் ரத்தம் சிந்தப் படுவதைத் தவிர்ப்பவதற்காகவே இந்தக் கடினமான முடிவை எடுத்ததாக தனது பேஸ்புக் பதிவில் அவர் கூறியுள்ளார்.

“வாள் மற்றும் துப்பாக்கியைக் கொண்டே தாலிபன்கள் வெற்றி பெற்றுள்ளனர். மக்களின் மரியாதையைக் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது” என்று அவர் கூறினார்.

ஆனால் நாட்டைக் கைவிட்டு அவர் வெளியேறிவிட்டதாக பிற அரசியல்வாதிகள் அஷ்ரப் கானியை விமர்சித்து வருகின்றனர்.

இலங்கையரை திருப்பி அழைக்கவுள்ள இலங்கை அரசாங்கம்

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் தற்போதைய மோதல்களுக்கு மத்தியில் பணியமர்த்தப்பட்ட இலங்கையர்களை திரும்ப பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

காபூலில் தற்போது சுமார் 50 இலங்கையர்கள் வேலை செய்வதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கான் தலைநகரை தலிபான் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள நிலையில், தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலிபான் படையினர் ஆப்கானிஸ்தானின் அதிகார மையத்தை சூழ்ந்தன, ஆனால் ஒப்படைப்பு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்ததால் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று உறுதியளித்துள்ளனர்.

தாலிபானுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இல்லை  பௌத தலங்களும் பாதுகாப்பு

 ‘தலிபான்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்   எவ்விதத் தொடர்பும் இல்லை‘ எனத் தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன்  தெரிவித்தார்

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன் வழங்கியுள்ள விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

எங்களுடைய இயக்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் ஒரு சுதந்திரமான விடுதலைப் படை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக தமது நாட்டின் ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காக வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தலிபான்களை பயங்கரவாதிகளாக இலங்கை கருதக்கூடாது என்றும் தங்கள் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய இலங்கையின் முன்னோர்களைப் போல தாங்கள் ஆப்கானிஸ்தானின் சுதந்திரப் போராளிகள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் தலிபான் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்கள் ஆபத்தில் இருக்காது என்று ஷாஹீன் வலியுறுத்தினார் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாலிபான் – சீனா அதிகாரிகளின் புகைப்படமும் – கீர்த்தி ரத்நாயக்க கைதும்

15 ம் திகதி இந்தியாவின் சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. வலயத்தில் தலிபான் தீவிரவாத அமைப்பினரின் செயற்பாடுகள் அதிகரித்து செல்வதும் அதன் பின்னணியில் இருந்து கொண்டு சீனா நாடானது இலங்கையில் அமைதியான முறையில் சுதந்திரமாக முன்னெடுத்துச் செல்லும் சதித் திட்டங்கள் குறித்து விழிப்புடன் இருக்கும் கீர்த்தி ரத்நாயக்க, இந்திய சுதந்திர தினத்தன்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தக் கூடும் என ஆய்வுத் தகவல் வௌியிட்டு இது குறித்து அவதானமாக இருக்குமாறு இந்திய துதரகத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சீன மற்றும் தலிபான் தீவிரவாத அமைப்புக்கு இடையில் காணப்படும் உறவுகளை வௌிக் காட்டும் புகைப்படம் ஒன்றையும் கீர்த்தி ரத்நாயக்க வௌியிட்டிருந்தார். (அந்த புகைப்படம் இங்கு தரப்பட்டுள்ளது)

இது குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் உடனடியாக புதுடில்லிக்கு அறிவித்ததை அடுத்து அங்கிருந்து உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பெடுத்து கொழும்பில் உள்ள தமது தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பிண்ணனியில் லங்கா ஈ நியூஸ் இணையத் தளத்தின் பிராந்திய அரசியல் மற்றும் பதுகாப்பு விவகார எழுத்தாளரான கீர்த்தி ரத்நாயக்க என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தடுப்புக்காவலின் கீழ் அவரிடம் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. லங்கா ஈ நியூஸ் இணையதளம் 

கீர்த்தி ரத்நாயக்க என்பவர் இலங்கை விமானப் படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரி ஆவார். தற்போது அவர் இராணுவத்தில் இருந்து விலகி உள்ளதுடன் வலயத்தில் காணப்படும் பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இது தொடர்பில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி கீர்த்தி ரத்நாயக்க லங்கா ஈ நியூஸ் இணையத்தில் வௌியிட்டுள்ளார்.  (https://www.lankaenews.com/category/48)

ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இலங்கையில் குண்டு வெடிப்புகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வாறு நடந்தால் அது தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது ஐஸ் ஐஸ் அமைப்புகள் பொறுப்பு அல்ல எனவும் அது கோட்டாபய குழுவின் சாக்கு விளையாட்டு எனவும் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்திருந்தார். அது அவ்வாறே நடந்தது.

இலங்கையில் சுமார் 3 லட்சம் சீன பிரஜைகள் இருப்பதாக கீர்த்தி ரத்நாயக்க தகவல் வௌியிட்ட போது அதனை மறுத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இலங்கையில் வெறும் 28,000 சீன பிரஜைகளே இருப்பதாகக் கூறினார். ஆனால் அண்மையில் இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு செலுத்தவென சீன அரசாங்கம் இலங்கைக்கு 6 லட்சம் சினோபாம் தடுப்பு ஊசிகளை அனுப்பி வைத்திருந்தது. அதன் ஊடாக சீன பிரஜைகள் 3 லட்சம் பேர் இலங்கையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இராணுவ பயிற்சி பெற்ற சுமார் 500 சீன பிரஜைகள் இலங்கையில் இருப்பதாக கீர்த்தி ரத்நாயக்க தகவல் வௌியிட்டார். திஸ்ஸ வாவி புனரமைப்பு விடயத்தில் அதுவும் உறுதி செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கொஸ்கொட தாரக்க அன்றைய தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட உள்ளதாக “தேசபந்துவின் ஹிட் ஸ்கொட் பிரிவு இன்று இரவு கொஸ்கொட தாரக்கவை கொலை செய்ய முயற்சி ” என்று அன்றைய தினம் நண்பகல் கீர்த்தி ரத்நாயக்க தகவல் வௌியிட்டார்.  அதுவும் அவ்வாறே நடந்தது.

எனவே கீர்த்தி ரத்நாயக்க வௌியிட்ட இவ்வாறான முக்கிய தகவல்களில் அநேகமானவை அவர் கூறியது போலவே நடந்துள்ளது. வலய பாதுகாப்பு மற்றும் அரசியல் குறித்து கீர்த்தி ரத்நாயக்க வௌியிடும் தகவல்கள் 84% நம்பக் கூடியது என லங்கா ஈ நியூஸ் அல்ல சர்வதேச ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

சர்வதேச எதிரிக்கு எதிரி நண்பன் உறவுகள்

இலங்கைக்கும் சீனாவிற்கும் உள்ள நட்புறவு போல் சர்வதேச அரசியலில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் முருகலான உறவே உள்ளது. அவ்வாறே இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் சர்வதேச அரங்கில் இலங்கைக்கும் – அமெரிக்காவிற்கும் இடையிலும் ஒரு முருகலான உறவே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

அதேபோன்று ஆசியா நாடுகளாக இருந்தாலும் இந்தியா சீனா இடையில் முருகலான உறவு மற்றும் அமெரிக்கா இந்தியா நட்புறவு என சர்வதேசத்தில் தமது நலவுகளுக்காக நட்புறவு மட்டும் எதிர் உறவு என்பன பேணப்படுகின்றது.

இப்பிண்ணனியில் அமெரிக்கா படையின் வௌியேற்றத்துடன் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைது செய்ய எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாட்டின் படி சீனா மறைமுக உதவிகள் வழங்கியிருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

அவ்வாறே தாலிபான்களிடம் இருந்து இலங்கையின் இந்தியா உயரஸ்தானிகரத்திற்கு அச்சுறுத்தல் உள்ளதாக தகவல் வௌியிட்டு உள்நாட்டில் விசாரணைகள் ஆரம்பித்துள்ள நிலையில்,

சர்வதேச ஊடகமொன்றில் ஆட்சியைக் கைப்பற்றும் தருணத்தில் இலங்கை குறித்து பேசி அதிலும் விடுதலைப்புலிகளுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் பௌத தலங்கள் பாதுகாக்கப்படும் என்ற கருத்துக்கள் இலங்கையின் உள்நாட்டு வௌிநாட்டு அரசியலில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

குறிப்பு இக்கட்டுரை சர்வதேச இணையதள ஊடகங்களில் வௌியாகிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது.