சிதைந்த கனவால் சரிந்ததோர் ஆலமரம் தொடர் 01

மலர்கள் தம் மென்னிதழ்களை விரித்து மணம் பரப்பும் ரம்மியமான காலைப் பொழுதினிலே வானை ஆட்சி செய்து கொண்டிருந்த சூரியனின் இளங் கதிர்கள் யன்னலினூடாக அவள் கன்னத்தை முத்தமிட சிறு சோம்பலுடன் விழித்தெழுந்தாள். யன்னலூடாக எட்டிப் பார்த்தவள் குளிரின் உரசலினால் சற்று விலகிக் கொண்டாள். உடலைப் போலவே அவளது உள்ளமும் குளிர்ந்து கொண்டிருந்தது. இன்ப அலைகள் உளமெனும் கரையைத் தொட்டுச் சென்றன. ஆம் இன்று முதல் தடவையாக அவளைப் பெண் பார்க்க வருகின்றனர். இதுவே அவளது மகிழ்ச்சிக்கான அத்திவாரம். அவள் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.

“மகள்…. ஆஸியா…. கொஞ்சம் இங்க வந்து ஒதவி செய்ங்கம்மா. நெறய வேலகள் ஈக்கி….” பலகாரம் செய்து கொண்டிருந்த தாயின் குரல் கேட்டு புள்ளி மான் போல துள்ளிக் குதித்து அடுக்களைக்குள் நுழைந்தாள். ஆஸியா பெற்றோருக்கு ஒரேயொரு செல்லப் பிள்ளை. சுமாரான அழகி தான், என்றாலும் பார்ப்பவர்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய கவர்ச்சி அவள் வதனத்தில் குடிகொண்டிருந்தது.

“எங்க உம்மாடேம் மகள்டேம் சத்தமே இல்ல…. அந்தி ஆகக்காட்டி பொறுக்கேலாம ரெண்டு பேரும் மாப்புள ஊட்டுக்கு போய்ட்டீங்களா….???” என்ற அன்பு கலந்த நக்கலுடன் வீட்டினுள் நுழைந்தார் தாவூத் நானா. “ஆஹ் வந்துட்டீங்களா….??? வாங்க வாங்க நாங்க ஒரு எடமும் போகல்ல. இங்க தான் நிக்கிய” என்று புன்னகை தவழ தன் துணைவனுக்கு பதிலுரைத்தார் மைமூனா தாத்தா. ஆஸியாவின் பெற்றோருக்கு மட்டில்லா மகிழ்ச்சி. தாம் பெற்றெடுத்த செல்வத்தின் சந்தோஷத்துக்காய் தம்மால் இயன்றளவு சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

காலச் சக்கரம் காற்றாய் சுழல செவ்வாய் கொண்ட சூரியன் தன் இடம் ஒதுங்கி சந்திரனுக்கு வழி கொடுக்கத் தயாராகிக் கொண்டிருந்தது. ‘பீப் பீப்…பீப் பீப்….’ காரின் ஹோர்ன் ஓசை மூவரினதும் காதைக் கிழித்துக்கொண்டு சென்றது. தாவூத் நானா ஓடோடி வந்து முன் முற்றத்தில் இறங்கி மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்றார். “வாங்க… உள்ள வாங்க… லேட் ஆகிட்டு போல. எங்க வரமாட்டீங்களோ எண்டு நெனச்சி பயந்துட்டு ஈந்த நாங்க” என்று உள்ளத்தில் உள்ளதை குழந்தைத் தனமாய் உரைத்தார் தாவூத் நானா. “இல்ல எடேல கார் டயர் பஞ்சர் ஆகிட்டு. அது தான் வர லேட்” இது மாப்பிள்ளையின் தந்தை. “ஆ மெய்யா? சரி சரி இரீங்கோ இப்பிடி. மைமூனா…. இந்தா மாப்புள ஊட்டாக்கள் வந்தீக்கி. இவங்கள உள்ள கூட்டிட்டு போங்க” “இந்தா வந்துட்டேன்… உள்ள இந்த காம்பரக்கி வாங்க….” சிரித்துக்கொண்டே பெண்களை வரவேற்றார் மைமூனா தாத்தா.

சிறிது நேரத்தில் பலகாரப் படலம் ஆரம்பித்தது. வெளியே முன் வாயிலுக்கும் உள்ளறைக்குமாய் தட்டுக்கள் மாறி மாறி ஒரு விதமாக அப்படலம் முடிந்தது. மாப்பிள்ளை வீட்டாருக்கு வயிறு முட்ட உண்ட திருப்தி. சற்றுக் கூடுதலாக உண்டிருந்தால் வந்த காரணத்தையே மறந்திருப்பர் போலும். “சரி சரி பொண்ண கூட்டிட்டு வாங்க…. மாப்புளக்கி பொறுக்கேலவாம்” என்று விஷயத்துக்கு வந்தார் புரோக்கர் ஹாமித் நானா. மாப்பிள்ளையை சிறிது வெட்கமும் தொட்டுச் சென்றது.

ஆஸியா அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவளது வசீகரத்தால் அணிந்திருந்த சொற்ப ஆபரணங்கள் கூட அழகு பெற்று ஜொலித்தன. குனிந்த தலை நிமிராதவளாய் முதலில் அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டாள். மாப்பிள்ளையின் தாய்க்கு அவளின் அழகில் பூரண திருப்தி. பின் அவரே பெண்ணைக் கையால் பிடித்துக்கொண்டு முன் வாயிலுக்கு அழைத்துச் சென்று தன் மகனுக்கும் காண்பித்தார். மாப்பிள்ளைக்குப் பார்த்தவுடனே பெண்ணைப் பிடித்து விட்டது. பெண்ணும் கனவுலகில் மிதக்கத் தொடங்கி விட்டாள். சிறிது நேரத்தின் பின் பெண்ணை உள்ளே அனுப்பி விட்டுத் தன் மகனருகில் உட்கார்ந்து கொண்டார். ஆஸியாவினதும் அவளது பெற்றோரினதும் இதயங்களில் மாப்பிள்ளை தனக்கென ஓர் இடம் பிடித்துக்கொண்டான்.

தொடரும்….

ILMA ANEES
SEUSL
2ND YEAR
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

Author: admin

2 thoughts on “சிதைந்த கனவால் சரிந்ததோர் ஆலமரம் தொடர் 01

  1. Superb… காட்சிகளை கண் முன்னே கொண்டு வந்து சிறிது நேரம் தன்னையே மறக்க வைக்கும் கற்பனைத் திறன்…
    ??

Comments are closed.