ரிஷாத்தை தொடரும் அரசியல் நெருக்கடிகள்

எம்.எஸ்.தீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இலங்கையில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்கொள்ளாத நெருடிக்கடியில் உள்ளார்.

இவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியானது அரசியல் பின்னணியைக் கொண்டதாகும்.

முஸ்லிம் காங்கிரஸிற்கு பலத்த போட்டிக் கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வளர்ந்து கொண்டு வந்த நிலையில், ரிஷாத் பதியுதீன் ஆட்சியாளர்களை தீர்மானிக்கின்றதொரு அரசியல் சக்தியாகவும் மாற்றமடைந்தார்.

ரிஷாத் பதியுதீன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை பௌத்த மதம் சார்ந்த கடும்போக்காளர்கள் முன்வைத்திருந்தார்கள். அந்தக் குற்றச்சாட்டுக்கள் தான் தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்குரிய அத்திவாரமாகவும் அமைந்தது.

ரிஷாத் பதியுதீன் தற்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது விடுதலைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களில் சிலரும், அவரது சட்டத்தரணிகளும் சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற போதிலும், ரிஷாத் பதியுதீனின் கைது குறித்தோ, அவரை விடுதலை செய்ய வேண்டுமென்றோ அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுக்காதிருக்கின்றார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், முஜிபுர்ரஹ்மான், நளின் பண்டார போன்றவர்கள் பாராளுமமன்றத்தில் அடிக்கடி ரிஷாத் பதியுதீனுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சித் தலைவர் குறித்து பேசாமல் இருப்பதற்கு பிரதான காரணம், அவர்கள் அமைச்சர் பதவிகளில் கண் வைத்துள்ளார்கள்.

ரிஷாத் பதியுதீனுக்காக குரல் கொடுக்கும்போது அமைச்சர் பதவி கிடைக்காது போய்விடும் என்று எண்ணுகின்றார்கள். ஆகவே அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று சொல்லி பெருமைப்படும் நிலையில் தற்போதைக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

மாறாக அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் என்று நிருபிப்பதற்கே செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதிலும், பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், அப்துல் ரஹீம் அலிசப்ரி ஆகியோர்கள் மிகவும் தெளிவாக தாங்கள் அரசாங்கத்தினரோடு இணைந்து கொள்வதற்கு முடிவு செய்து விட்டோம். அதில் மாற்றங்களில்லை என்று உயர்பீடக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தாம்  கட்சியோடு உள்ளதாகவும், கட்சிக்கும், தலைமைக்கும் துரோகம் செய்யமாட்டேன் என்றும், தன்னுடைய தலைவர் ரிஷாத் பதியுதீன் தான் என்றும் உயர்பீடத்திலும், கட்சியின் ஆதரவாளர்களிடையேயும் தெரிவித்துள்ளார்.

ஆயினும், அவரது நடவடிக்கைகளில் அத்தகையதொரு உறுதிப்பாட்டைக் காண முடியாதுள்ளது. அவர் கட்சியோடும், அரசாங்கத்தோடும் பயணிப்பதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்.

தலைவரின் விடுதலைக்காக தந்திரமாக நகர்வதாகவும் தெரிவித்துக்கொண்டிருக்கின்றார். ஆயினும், அவரது தந்திரம் கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் நல்ல பிள்ளையாக இருக்கவேண்டுமென்பதாகவே அமைந்துள்ளது.

ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் தமது பேச்சு திறமையை காட்டி பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளார். அவர் தன்னை ரிஷாத் பதியுதீனின் விசுவாசியாகக் காட்டுவதனை அதிகாரத்தரப்பினர் விரும்பவில்லை.

அவர் ஆட்சியாளர்களின் விசுவாசியாக மாத்திரம் இருக்கவேண்டுமென்பதே ஆளும் தரப்பினரின் விருப்பமாகும். இதனை நிறைவேற்றுவதற்காகவே பாராளுமன்றத்தில் தலைவருக்காகவும், சமூகத்திற்காகவும் பேச முடியாத நிலையில் இருக்கின்றார்.

அதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களை விடவும், தாங்கள் அரசாங்கத்திற்கு விசுவாசமானவர்கள் என்று காட்டுவதற்கே தயாராகி உள்ளனர்.

இதனால்தான் உதயகம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்கள்.

இதன் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்பும் தம்மோடில்லை என்பதை ரிஷாத் பதியுதின் உணர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை எடுத்துக்கொண்டால் அதில் இணைந்து கொண்டவர்கள் பெரும்பாலும் பிரமுகர்களாகவே இருந்து வருகின்றார்கள். இதனால், கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டும் வந்துள்ளார்கள்.

சமூகத்தில் ஏதோவொரு அடிப்படையில் பிரபல்யம் பெற்றவர்களை கட்சியில் இணைத்துக் கொள்ளவும், அத்தகையவர்கள் தேர்தலில் போட்டியிடவும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டும் வந்துள்ளன.

அவ்வாறு தேர்தலுக்காக கட்சியில் இணைந்து கொண்ட பிரமுகர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் அல்லது ரிஷாத்பதியுதீன் வகித்த அமைச்சர் பதவிகளின் மூலமாக உயர்பதவிகளை வகித்து, அதன் மூலமாக வளர்ந்ததன் பின்னர் ரிஷாத் பதியுதீனை பிரிந்து மாற்றுக் கட்சிகளில் இணைந்து செயற்பட்டே வந்திருக்கின்றார். தற்போதும் அவ்வாறே செயற்பட்டக்கொண்டு வருகின்றார்கள்.

பிரமுகர்களை இணைத்துக் கொள்வதனால் ஏற்படும் கசப்பான அனுபவங்கள் காணப்படுகின்ற போதிலும், ரிஷாத் பதியுதீனும், அவரது கட்சியின் உயர்பீடமும் இன்னமும் படிப்பினையை பெற்றதாக தெரியவில்லை.

கட்சி மற்றும் சமூக விசுவாசத்திற்கு முன்னுரிமை கொடுக்காது மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றவர்கள் என்ற தகுதியை மாத்திரம் கவனத்திற்கொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்குரிய வாய்ப்பும், வசதிகளும் தொடர்ந்தும் கொடுக்கப்படுகிறது.

இதேவேளை, ரிஷாத் பதியுதீன் கைது மற்றும் அவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மூலமாக உண்மையான விசுவாசிகள், போலிகள், கட்சியின் நிலை, பாராளுமன்ற உறுப்பினர்களின் குட்டிக் கரணங்கள், என்று அத்தனை விடயங்களையும் கட்சியின்  ஆதரவாளர்களுக்கும், தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கும் வெகுவாகவே உணர்த்தி இருக்கின்றன.

20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று தீர்மானத்தை நிறைவேற்றியதுடன், அதனை நடைமுறைப்படுத்தியமையும் ரிஷாத் பதியுதீனுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மற்றொரு காரணமாகும்.

அத்துடன் தற்போதுள்ள அதிகாரத் தரப்பினருக்கு 52 நாள் அரசியல் நெருக்கடியின் போது ரிஷாத் பதியுதீன் எடுத்த முடிவு பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது.

ரிஷாத் பதியூதீன் தங்களை ஏமாற்றியதாகவே அவர்கள் எண்ணுகின்றார்கள். இந்த மனோநிலையும் அவரின் தற்போதைய நிலைமைக்கு ஒரு காரணமாகவே உள்ளது.

அதன் பின்னர் ஈஸ்டர் தாக்குதலுக்கும் ரிஷாத் பதியுதீனுக்கும் தொடர்புகள் உண்டு என்ற குற்றச்சாட்டுக்களும், விசாரணைகளும் நடைபெற்றன.

ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களை பஸ்ஸில் கொண்டு செல்வதற்காக அரசாங்கத்தின் நிதியை தவறாகக் கையாண்டார் என்ற குற்றச்சாட்டும், கைதும் நடைபெற்றது.

பின்னர் அதிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் அரசியல் உள்ளதென்று புரிந்து கொண்டு இராஜதந்திரமாக அவர் செயற்பட்டிருக்க வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு தங்களின் விசுவாசத்தைக் காட்டவும், கட்சிக்கு ஒழுங்கும், கட்டுப்பாடும் உள்ளதென்று காட்டவும் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் ரிஷாத் பதியுதீன் மீதான நெருக்கடிகளை மென்மேலும் அதிகரிக்கவே செய்திருக்கின்றது.

இந்தநிலையில் கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றியமைக்க வேண்டுமென்ற நடவடிக்கைகளும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

கட்சியின் தலைவர் சிறையில் உள்ள நிலையில் கட்சியின் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கட்சியின் சார்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரையே தற்காலிக தலைவராக தெரிவு செய்ய வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட ஆதரவாளர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத்பதியுதீனுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடிகள் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக சூழ்ந்து கொண்டே இருக்கின்றன.